விடிந்தும் விடியாத அதி காலை நேரத்தில், ஆதவன் தன் கடமை ஆற்ற வருவதற்கு முன்பே தன் அன்றாட கடமையை ஆற்ற தொடங்கி இருந்தாள் ஆதவி.
முகத்தில் என்றும் மாறாத அமைதியான ஆடம்பரமில்லாத ஒரு புன்னகை, சின்னஞ்சிறிய ஆயிரம் கதை சொல்லும் கண்கள் , புருவ மத்தியில் சிறிய பொட்டு, நெற்றியில் திருநீறு என அமைதியான அழகி ஆதவி. மாநிறத்திற்கும் சற்று குறைவான நிறம், சராசரி பெண்களை விட சற்று அதிக உயரம், மெலிந்த தேகம் என்று பார்ப்பவர்களை நிறுத்தி திரும்ப பார்க்க வைப்பவள் ஆதவி.
பதின்ம வயதில் தாய் தந்தையரை ஒரு விபத்தில் இழந்து தனது சித்தியின் வீட்டில் தஞ்சம் புகுந்தவள். உடன் பிறந்தவர்கள் என யாரும் இல்லாததால் தனது சித்தியின் மகளையே தனது உடன் பிறப்பு என பார்ப்பவள் .சிறு வயதிலேயே தனது நிலையை உணர்ந்து படிப்பு மட்டுமே தனது ஆதாரம் என்று உணர்ந்து தனது சித்தியை தொந்தரவு செய்யாமல் உதவி தொகையிலும் பகுதி நேர வேலை செய்தும் உளவியலில் பட்டய படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறாள். உளவியல் ஆதவியின் முதன்மை பாடமாக இருப்பினும் கணிதத்தில் முதுநிலை படிப்பை தொலைதூர கல்வியில் முடித்துள்ளாள்.
ஆதவன் உதிக்கும் முன்பே எழுந்து சமையல் வேலையை முடித்து விட்டு வாசல் தெளித்து கோலம் இட்டுக்கொண்டிருந்தாள் ஆதவி. தலைகுளித்து தலையில் கட்டிய துண்டுடன் எளிய காட்டன் புடவையில் தேவதை எனவே இருந்தாள். குனிந்து கோலம் இடுவதிலேயே கவனமாக இருந்தவள் வீட்டு வாசலின் முன் சைக்கிள் மணி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் ஆதவி.
“ஆதவி அக்கா…. தேவதை கணக்கா அம்சமா இருக்கீங்க க்கா…” என்று பாலும் பேப்பரும் போடும் செந்தில் நின்று கொண்டிருந்தான்.
அதற்கு எதுவும் கூறாமல் அமைதியான புன்னகையுடன் பேப்பரையும் பால் பாக்கெட்டையும் வாங்கி கொண்டே, “சாய்ந்திரம் டியூஷனுக்கு டிமிக்கி குடுக்காம வந்துரு செந்தில்” என்றாள் ஆதவி.
“அதெல்லாம் ஆதவி அக்கா டியூஷனுக்கு கரக்ட்டா வந்துருவேன். குட் மார்னிங் யக்கோவ்… வரேன் க்கா…” என்று சைக்கிளில் அடுத்த வீட்டிற்கு பால் பேப்பர் போட பறந்து விட்டான் செந்தில்.
“குட் மார்னிங் டா தம்பி…” என்ற ஆதவியின் வார்த்தை காற்றில் தான் கரைந்தது, அதை கேட்கத்தான் செந்தில் அங்கு இல்லையே.
பத்தாம் வகுப்பு பயிலும் செந்தில், பால் பேப்பர் போட்டு அந்த வருமானத்தில் தனது படிப்பு செலவினை பார்த்து கொள்கிறான். பெற்றோருக்கு கஷ்ட்டம் கொடுக்காமல் தனது சிறு சிறு செலவை தானே பார்த்து கொள்ள வேண்டும் என்று இந்த வயதிலேயே உழைப்பவன். அதனாலோ என்னவோ ஆதவிக்கு செந்திலின் மேல் தனிப்பிரியம்.
“போனோமா… கோலத்த போட்டோமா வீட்டுக்குள்ள வந்தோமா னு இல்லாம…அங்க என்னடி அரட்டை? ” என்ற சித்தி கோமளத்தின் கத்தலை கேட்டு புன்னகை மாறாமல் உள்ளே வந்த ஆதவி, “இருங்க சித்தி காபி போட்டு எடுத்து வரேன்..” என்று சமையல் அறைக்குள் சென்றாள்.
சித்தி கோமளம் எப்போதும் இப்படித்தான். ஆதவியிடம் சிடுசிடுத்துக் கொண்டே இருப்பாள். அதற்காக பாசம் இல்லை என்று கூற முடியாது. அதை அவருக்கு வெளிப்படையாக காட்ட தெரியாது. சித்தப்பா செல்வம் கண்டிப்பான அன்பானவர். ஒரு ப்ரைவேட் கம்பேனியில் வேலை பார்த்து வருகிறார். செல்வம் -கோமளம் இவர்களின் ஒரே புதல்வி இந்துமதி. இப்பொழுது தான் செந்திலுடன் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறாள்.
சித்தி சித்தப்பாவிற்கு காபி போட்டு குடுத்து விட்டு தனக்கும் தன் தங்கை இந்துமதிக்கும் மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆதவி.
“அக்கா…. குட் மார்னிங்…. ஹார்லிக்ஸ் குடு…. “என்று தூக்க கலக்கத்துடன் பின்னாலிருந்து ஆதவியை கட்டிக்கொண்டாள் இந்துமதி.
“ஹே… வாலு… போய் முதல்ல ப்ரஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வா… அப்ப தான் ஹார்லிக்ஸ்… ” ஆதவி.
“ஹூம்.. ஹூம்… போ க்கா… பிரஷ் பண்ணிட்டு குடிச்சா டேஸ்ட்டா இருக்காது… ப்ளீஸ் க்கா… குடேன்… இன்னக்கி மட்டும்… ” மதி.
“நோ மை டியர்… இப்ப போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வர்றீயா… இல்ல… சித்திய கூப்பிடட்டுமா? “என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் ஆதவி.
“ஹூம்… ஹூம்… நீ ரொம்ப மோசம் க்கா… நீ அம்மா கிட்ட சொல்லி…. அம்மா பாடுற பாட்ட கேக்குறதுக்கு… நான் தும்பை செடில தூக்கு மாட்டிக்கலாம்…போறேன்… போயி… பிரஷ் பண்ணிட்டு… குளிச்சுட்டு வர்றேன்… “என்று சிணுங்கி கொண்டே சென்றாள் இந்துமதி.
“வாலு …”என்று தனக்குள் சிரிப்புடன் முனுமுனுத்துக்கொண்டே ஒற்றை ஆளாய் வீட்டு வேலை அனைத்தும் முடித்து தான் பயிலும் கல்லூரிக்கு கிளம்பினாள் ஆதவி.
பி. எச். டி படிப்பதால் தனது கெய்ட் இன் வகுப்புகளுக்கும் பாடம் நடத்த செல்ல வேண்டும். அதற்கு ஏற்ப என்றும் சாதாரண காட்டன் புடவையிலேயே கல்லூரி செல்வாள் ஆதவி. இந்த வருடத்துடன் ஆதவிக்கு பி. எச். டி முடிகின்றது. அதற்காக தீஸீஸ் வேலை அதிகம் இருப்பதால் சீக்கரமாகவே கல்லூரிக்கு கிளம்பினாள் ஆதவி.
“சித்தி… நான் காலேஜ்க்கு கிளம்பிட்டேன்.. எப்போதும் போல சாய்ந்திரம் 5 மணிக்கு வந்துருவேன்.லேட் ஆனா ஃபோன் பண்ணி சொல்லிர்றேன். உங்களுக்கு தோசையும் சித்தப்பாக்கு இட்லியும் செஞ்சுட்டேன். மதிக்கு எது வேணுமோ சாப்பிட சொல்லுங்க. அவளுக்கும் சித்தப்பாக்கும் மதிய சாப்பாட்ட பாக்ஸ் ல பேக் பண்ணி வச்சுட்டேன்…” என படபடவென பொறிந்த ஆதவியை தண்ணீர் குடுத்து ஆசுவாசப்படுத்தினாள் மதி.
“நீ காலேஜ்க்கு கிளம்புக்கா… இங்க நாங்க பாத்துக்கிறோம்….” மதி.
” ஹே… என்னமோ நீதான் இங்க எல்லாத்தையும் தலையில தூக்கிட்டு இருக்குற மாதிரி பண்ணாத…. போ போ….என் குடும்பத்த எனக்கு பாத்துக்க தெரியும்…போடி உன் வேலைய பாத்துட்டு….” என வழக்கம் போல சிடுசிடுத்தாள் கோமளம்.
“யம்மாவ்…நீ சத்த வாய மூடுறியா…. அக்கா இல்லனா இங்க ஒரு வேலையும் நடக்காது…நீ கிளம்புக்கா… உனக்கு லேட் ஆகிருச்சு….” மதி.
“பஸ் க்கு காசு இருக்கா? நான் தரவா டா ஆதவி? ” செல்வம்.
“இல்ல சித்தப்பா… என் கிட்ட இருக்கு… நான் போய்ட்டு வர்றேன் சித்தி சித்தப்பா… வரேன் மதி…” என்று புன்னகை முகமாகவே விடைபெற்றாள் ஆதவி.
“ஹூக்கும்… அவ தான் சம்பாதிக்கிறாளே….நீங்க எதுக்கு அவ கிட்ட கேக்குறீங்க… போய் கம்பெனிக்கு கிளம்புற வேலைய பாருங்க…” என்று சிடுசிடுத்துக் கொண்டே சாப்பாடு எடுத்த வைக்க சென்றாள் கோமளம்.
பஸ் ஸ்டாண்டில் வந்து நின்ற ஆதவி பஸ் வருதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அந்த வழியாக சென்ற சில பைக் ஆசாமிகள் ஆதவியை பார்த்து விட்டு திரும்ப பஸ் ஸ்டாண்ட் க்கு வந்தனர்.
” யாஹூ…. ஹே… ப்யூட்டி….பஸ் வரலயா பேபி… நாங்க வேணுனா லிப்ட் குடுக்குறோம்… “என்று ஒருவன் சொல்ல.. மற்றவர்கள் ,”கமான் பேபி….கம் வித் அஸ்… “என்று கூச்சலிட்டனர். பஸ் ஸ்டாண்டில் இருந்த ஒரு சிலரும் பயந்து பின் வாங்கி செல்ல, ஆதவி தனியாக சிக்கிக்கொண்டாள்.
“இல்ல… பஸ் இப்ப வந்துரும்… நோ தேங்க்ஸ்… ” என மெல்லிய குரலில் கூறினாள் ஆதவி.
“ஹே…யூ போரிங் பேபி… பைக் ல போகலாம்.. ஜாலியா இருக்கும் பேபி…கமான்… “என அந்த கூட்டம் கோரஸ் பாடியது.
இதற்கு மேல் தனக்கு பாதுக்காப்பு இல்லை என உணர்ந்து, அந்த இடத்தை விட்டு ஆட்டோ புடிக்க நகர்ந்து செல்ல முடிவு எடுத்தாள் ஆதவி.
ஆதவி எப்பொழுதும் இப்படித்தான்… பிரச்சனையை எதிர்த்து நிற்க மாட்டாள்.. விலகி சென்றுவிடுவாள்… அதுவே அவளுக்கு எதிர்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்த போவதை அறியவில்லை இப்பேதை.
ஆதவியின் எண்ணத்தை அறிந்து கொண்ட அக்கூட்டம், “ஹேய்… ப்யூட்டி…. வேர் ஆர் யூ கோ? வீ ஆர் வெயிட்டிங் ஃபார் யூ பேபி…. ” என ராகமிட்டபடியே அவளை சுற்றி வளைத்தது.
அவர்களின் நடுவே மாட்டிக் கொண்ட ஆதவி, யாராவது உதவிக்கு வருவார்களா? என சுற்றிலும் ஒவ்வொரு முகமாக தவிப்புடன் ஆராய்ந்தாள்.
அனைவரும் சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, தங்களுக்குள் ஆதவிக்காக பரிதாப பட்டார்களே ஒழிய எவரும் அக்கூட்டத்தை தட்டி கேட்க முன் வரவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அவர்களை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டு திரும்பி பார்க்காமல் ஆட்டோ புடிக்க வேகமாக நடந்தாள் ஆதவி.
ஆதவியை பின் தொடர முயன்ற கூட்டத்தை ஒரு கை தடுத்தது…
ஆட்டோ எதுவும் பக்கத்தில் கிடைக்காததால் சிறிது தொலைவு சென்ற ஆதவி, உள்ளுணர்வு உந்த…திரும்பி பஸ் ஸ்டாண்டை பார்க்க….அங்கு அந்த கூட்டத்தை ஒரு உருவம் அடித்து துவைத்துக் கொண்டிருந்தது.
இது ஆதவிக்கு புதிது அல்ல… பழகிய ஒன்று தான்… எப்பொழுதெல்லாம் ஆபத்து அவளை நெருங்கி வருகிறதோ… அப்பொழுதெல்லாம் இந்த உருவம் தான் காப்பாற்றும். அது ஆணா பெண்ணா என்று கூட ஆதவிக்கு தெரியாது…தெரிந்து கொள்ள முயன்றால் ஏதேனும் ஒரு தடை வந்து விடுகிறது.
தொலைவில் தெரிந்த அவ்வுருவத்தை யாரென பார்க்க அருகில் சென்றாள் ஆதவி… ஆதவி செல்ல செல்ல அந்த உருவத்தின் பின்புலம் தெரிய வந்தது. தெரிய வந்த அடுத்த நொடி அதிர்ச்சி ஆகி அப்படியே நின்றாள். ஏனெனில் அங்கு அந்த பைக் கூட்டத்தை அடித்து துவைத்துக் கொண்டிருப்பது ஒரு பெண்.
குட்டியான ஸ்பிரிங் முடி… ஃபுல் ஹேண்ட் சர்ட்… ஜீன்ஸ் பேண்ட்…ஆணுக்கு நிகரான உயரத்துடன் அடித்து உதைத்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் முகத்தை பார்த்து விட வேண்டும் என்ற உந்துதலோடு முன் சென்றாள் ஆதவி….யார் அவள்? தனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? தனக்கு இடர் வரும் நேரத்தில் அவள் ஏன் உதவ வேண்டும்? தனக்கு இடர் வருவதை அவள் எப்படி தெரிந்து கொள்கிறாள்? அப்படியெனில் அவள் நம்மை பின் தொடர்கிறாளா? என்ற எண்ணற்ற கேள்விகளுடன் அவள் முகத்தை காண வேகமாக முன்னேறினாள் ஆதவி….
(வருவாள் பாரதி மகள்…)
-பாரதியின் பைத்தியம் ✍️
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings