in

தாத்பர்யம் (நவராத்திரி சிறப்புச் சிறுகதை) – எழுதியவர் : சுபாஷினி பாலகிருஷ்ணன்

தாத்பர்யம் (சிறுகதை)

“என்னமோ போடி நந்தினி, இந்த வருஷம் உங்க அப்பாவோட சத்தமும் சண்டையும் இல்லாம நவராத்திரி பொம்மை கொலு வெச்சது, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் ரகுவின் மனைவி சுதா

ரகுவிற்கு பண்டிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ரகுவின் நினைவுகள் மனதில் நிழலாட, மனைவி சுதாவும், மகள் நந்தினியும் கண் கலங்கினார்கள்

பணியில் டிரான்ஸ்பர் காரணமாய், இரண்டு மாதம் முன்பு சென்னைக்கு இடம் பெயர்ந்திருந்தார் ரகு. பிள்ளைகள் படிப்பு காரணமாய், குடும்பம் உடன்  செல்ல முடியாமல் போனது

சென்ற வருட நவராத்திரி சமய நிகழ்வுகள், சுதாவின் கண் முன் படமாய் விரிந்தது

பண்டிகைகளில் ரகு செய்யும் அலப்பறைகள் ஏராளம்

பொம்மை கொலு அழகென்றால், கொலு வைப்பதற்கு முன் அதற்கென எடுத்துக் கொள்ளும் பிரயத்தனம் இருக்கிறதே, அப்பப்பா… சொல்லில் அடங்காது

ஒவ்வொரு  வருடமும் நவராத்திரி பண்டிகை முடிந்ததும், பொம்மை பெட்டிகளை பரணில் வைத்து விட்டு, இந்த வருட நவராத்திரிக்கு அதை எடுப்பதே ஒரு சுவாரசிய அனுபவம் தான்

நவராத்திரிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே வீடு களைகட்டி விடும்.

பரணிலிருந்து யார் பொம்மை பெட்டிகளை இறக்குவது, காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகளை யார் எடுத்து பிரித்து துடைப்பது, யார் படிக்கட்டு கட்டுவது, யார் படிகளில் ஏறி பொம்மைகளை அடுக்குவது என, பொம்மை கொலு அலப்பறைகள் ஏராளம்

கொலு படிக்கட்டுகளில் ஏறி பொம்மைகளை அடுக்கி வைக்க ஏங்கும் மனம், ஏனோ மீதி வேலைகளை எடுத்துக் கட்டி செய்ய அடம்பிடிக்கும்

சுதாவும் ரகுவும் குழந்தைகளும் உட்கார்ந்து பேசி, வேலைகளை ஒருவழியாக பிரித்துக் கொண்டனர். பட்ஜெட் விவாதங்களை விடவே இந்த விவாதங்கள் காரசாரமாக இருக்கும்

அமாவாசை தினம் எப்போதும் விட சுறுசுறுப்புடன் விடிந்தது.

அதிகாலை எழுந்து தலை குளித்து அமாவாசை தர்ப்பண சமையலுக்குள் சுதா மூழ்க, குளித்து பட்டையிட்டு பஞ்சகச்சத்துடன் தர்ப்பணத்தை முடித்தான் ரகு

“காக்கைக்கு சாதம் ரெடியாச்சா?” என ரகு கேட்க

“டேபிளில் தட்டில் தயாரா இருக்கு. பக்கத்துல பித்தளை சொம்புல ஜலமும் இருக்கு. சீக்கிரம் காக்கைக்கு வெச்சூட்டு வாங்கோ” என்று சமையலறையில் இருந்து கொண்டே கூறினாள் சுதா

“சாப்பிட்டுட்டு நவராத்திரி வேலைகளை தொடங்கணும்” என்றார் ரகு

மாடிக்குச் சென்று சொம்பு ஜலத்தில் பாதி விட்டு, அங்கிருந்த பாத்திரத்தை அலம்பி காக்கைக்கு சாதத்தை வைத்து விட்டு, அருகிலுள்ள பாத்திரத்தில் மீதி ஜலத்தை விட்டு விட்டு திரும்பினார்

அதன் பின், வழக்கம் போல் நால்வரும் வட்டம் கட்டி உட்கார்ந்து கொண்டு, அரட்டையுடனே உணவை உண்டு முடித்தனர்

“பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு படியை கட்ட ஆரம்பிக்கணும்” என சுதா கூற

“கிருஷ்ணா நீ பரணிலிருந்து பொம்மை பெட்டிகள் எல்லாவற்றையும் எடுத்து தரணும் டா” என மகனிடம் அவனுக்கு ஒதுக்கப்பட்ட வேலையை நினைவூட்டினார் ரகு

“அப்பா பிரெண்ட்ஸ் விளையாட கூப்பிட்டா, நான் போகணும்” என கிருஷ்ணா கூற

“பொம்மை பெட்டிகள கீழே இறக்கி வெச்சுட்டு அப்புறமா நீ கொஞ்ச நாழி விளையாடிட்டு வாடா” என்றாள் சுதா சிறிய அதட்டலுடன்

பரணிலிருந்து கிருஷ்ணா பொம்மை பெட்டிகளை இறக்க, அதை ரகு வாங்கி மகள் நந்தினியிடம் கொடுக்க, அவள் அவற்றை கீழே அடுக்கினாள்

சுதா ஒவ்வொரு பெட்டிகளையும் திறந்து, பொம்மைகளை காகிதத்தில் இருந்து பிரித்து, துணி கொண்டு அழுக்குகளை துடைத்து வைத்தாள்

“செட்டு செட்டா பிரிச்சு வெச்சா தான் கொலு வைக்க  சரியா இருக்கும், பாத்து வை” என்றார் பண்டிகை பிரியர் ரகு

பிரித்த காகிதங்களை அந்தந்த பெட்டிகளில் அழகாக விரித்து, பெட்டியின் கயிறுகளை சுற்றி அதனுள்ளேயே போட்டு, காலி பெட்டிகளை கட்டிலின் அடியில் அழகாக அடுக்கி வைத்தான் கிருஷ்ணன்

“என்ன சுதா வரவாளுக்கு கொடுக்க வேண்டிய கிப்ட்ஸ் எல்லாம் வாங்கியாச்சு தானே?” என்று ரகு கேட்க

“எல்லாம் ரெடி அப்பா” என கோஷ்டியாக கூறினர் நந்தினியும் கிருஷ்ணாவும்

அந்த கணமே போட்டி போட்டுக் கொண்டு அறைக்குள் ஓடிய பிள்ளைகள், வாங்கிய பரிசுப் பொருட்களை காண்பித்து, அவற்றில் பாதியை அவர்களுக்கு என பிரித்துக் கொண்டனர்

மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு, மை, வளையல்கள், பரிசுப் பொருட்கள் என வீடு பண்டிகை கொண்டாட்டமாக இருப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தது

“எல்லோரையும் நவராத்திரிக்கு கூப்பிடணும், யாரையும் விட்டுடக் கூடாது. இப்ப பண்டிகையில் தான் எல்லோரையும் பார்க்க முடியும். மீதி நாட்களில் அவா அவா வேலையிலேயே மூழ்கீடுவா” என்று தன்னுடைய ஆசையை கூறினான் ரகு

“சந்தோஷமா நல்லபடியா நவராத்திரியை கொண்டாடுவோம், எல்லாம் நல்லபடியாக நடக்கும், கவலைப்படாதீங்கோ” என்றாள் சுதா

“அப்பா, வாங்கின பரிசுப் பொருட்கள் பத்தலைன்னா, நடுவில் நானும் அம்மாவுமா  மார்க்கெட் போய் வாங்கீண்டு வந்திடுவோம்” என்றாள் நந்தினி உற்சாகமாய்

“என்னமோ பண்ணுங்க, என்ன சொன்னாலும் கேட்க போறதில்ல” என்று ரகு கூற, அதன் பின் படிக்கட்டு கட்டுவதற்கு  தயாரானது டீம்

ஸ்டீல் படிக்கட்டு என்பதால், “பிளேட் எடு, 14 ஹோல்ஸ் தள்ளி போல்ட் ஸ்குரூ போடு, நீ ஆங்கிளப் பிடி” என ஏகத்திற்கு மெக்கானிக் வேலை செய்து, படிக்கட்டுக் கட்டி முடிக்க, மாலை நாலு மணி ஆனது

“தலை வலிக்கிற மாதிரி இருக்கு, காபி குடிச்சூட்டு அப்புறமா பொம்மை அடுக்குவோம்” என ரகு கூற, ஃபர்ஸ்ட் டிகாக்க்ஷன் காபியோடு வாழைக்காய் உருளைக் கிழங்கு பஜ்ஜியும் சேர்ந்தே வந்தது

தீபாவளி போனஸை கையில் வாங்கிய திருப்தி போன்று, புன்முறுவலுடன் ருசித்தனர் ரகுவும், குழந்தைகளும்

சுதாவும் ரகுவும் அவர்கள் குழந்தைகளாக இருந்த போது, அவரவர் வீட்டில் வைத்த கொலு அனுபவங்களை ஆசையாக குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ள, காபியும், பஜ்ஜியும் போன இடம் தெரியவில்லை

சொல்லுவதற்கு நகைப்பாக இருந்தாலும், நவராத்திரி கொலு வைப்பது என்பது ஒரு டீ ட்வென்டி மேட்ச்சுக்கு சமமானது

தசாவதாரமும், அஷ்ட லக்ஷ்மியும், சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன் என எல்லா தெய்வங்களும் எந்த எந்த படிகளில் உட்காருகிறோம் என்ற ஆவலில் இருப்பது போன்று ரெடியாக இருந்தனர்

படிக்கட்டுகளில் பளிச்சென்று விரிக்க பத்து நாட்களுக்கு முன்பே கரை வேஷ்டிகள் வெள்ளாவி போட்டு தயாராக இருக்க, இரண்டு படிக்கு ஒரு வேஷ்டியும், பக்கவாட்டில் இரண்டு வேஷ்டி சகிதம் கொலு படிக்கட்டு கல்யாண மாப்பிள்ளை போன்று ஜொலித்தது

பக்கத்தில் நயமுடன் உட்காரும் மணமகளாய், பொம்மைகள் அழகு கொஞ்ச தயாராக இருந்தன

“நான் பொம்மைகளை அடுக்கறேன்” என்று ரகு முறுக்கிக் கொண்டு சொன்னாலும் கூட, வைத்த 7 படிக்கட்டுகளில் முதலில் இருந்து ஒவ்வொரு படியாக ஏறி, இரண்டாவது படியில் உட்காரும் வரையில், டி20 ஃபைனல் மேட்ச் கடைசி ஓவர் டென்ஷன் தான்

ஏழாம் படியில் கிருஷ்ணர் அம்சமாய் அமர, அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் பட்டாபிஷேகம், அறுபடைவீடு, மீனாட்சி-சுந்தரேஸ்வரர், பண்டரிபுர ஜெகன்நாதர், கல்யாண செட், செட்டியார் தம்பதிகளின் கடை, வீடு, தோட்டம், கோவில், ஆடு, மாடு, நாய், பூனை, புலி, சிங்கம், புல் பூண்டுகளும் அழகழகாய் படிக்கட்டுகளில் அமர, நவராத்திரி பொம்மை கொலு தெய்வாம்சத்துடன் தயாரானதில், இரவு மணி 9 ஆனதே தெரியவில்லை

ஆரவாரத்துடன் ஆரம்பித்த பொம்மை கொலு வைக்கும் வைபவம், வைத்து முடித்த களைப்பில் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள கூட தெம்பில்லாமல் அமைதியாயினர்

சுதாவின் இஞ்சி, பச்சை மிளகாய் உப்புமாவுடன் இரவு டிபன் முடிய, களைப்பில் பாயை விரித்து ஆளுக்கு ஒரு மூலையில் உறங்கினர்

நவராத்திரி முதல் நாள்…

காலை எழுந்தவுடன் வாசலிலும், ஸ்வாமி இடத்திலும், மனை பலகையிலும் கோலமிட்டு விளக்கேற்றி ஊதுபத்தி பற்ற வைக்க, செல்போனில் எம்.எஸ்.அம்மாவின் லலிதா சகஸ்ரநாமம் வீடெங்கும் பக்தி மணம் கமழ ஒலித்துக் கொண்டிருந்தது

தொடர்ந்து, பித்தளை கலசத்தில் தேங்காய் மஞ்சள் காசிட்டு, அம்பாள் முகம் வைத்து அலங்காரம் செய்து பூச்சூட்ட, பச்சை புடவைக்காரி துர்கா, எழில் கொஞ்சும் அழகுடன் நவராத்திரிக்கு தயாரானாள்

விநாயகர் அஷ்டோத்திரம், துர்கா அஷ்டோத்திரம், பாமாலை பல பாடி, குடும்பப் பாட்டான குறையொன்றுமில்லை பாடி, பால் பாயசம், வெண் பொங்கல் நெய்வேத்தியத்துடன் கற்பூர தீபாராதனை ஆனது

அன்னையைப் பிராத்தித்து கண்களில் நீர் மல்க நால்வரும் வணங்க, மூன்று தேவிகளும் நேரில் நிற்பது போன்ற ஆனந்தம். சொல்லில் விவரிக்க முடியாத தருணம் அது

பண்டிகைகள், பிரார்த்தனைகளை கடவுளின் காலடியில் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் தருணங்கள். இதுவும் ஒருவகையில் சரணாகதி நிலையே

பண்டிகைகள் உறவுகளை இணைக்கும் பாலம், அது சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் நெறிமுறைகளைக் கொண்டது.

இன்னும் சொல்லப் போனால். பண்டிகைகள் உருவாக்கப்பட்டதன் தாத்பர்யமே, உறவுகளை இணைப்பதும், மக்களின் நெறிப்படுத்துவதும் தான் எனலாம்

நாம் நம்மை அறிவதற்கான அணுகுமுறையும் நம் பண்டிகைகளே. நாம் நம் வழி அறிந்து, அறம் செய்வோம், மனிதம் காப்போம்

(முற்றும்)

சுபாஷினி பாலகிருஷ்ணன் பற்றி:- 

இந்தச் சிறுகதை, சுபாஷினி பாலகிருஷ்ணன் எழுதிய முதல் சிறுகதை

அன்பான இல்லத்தரசி, தோழமையுடன் பிள்ளைகளை வளர்க்கும் அன்னை, பாட்டு டீச்சர் என பன்முகத்தன்மை கொண்டவர் சுபா

எனக்கு நினைவு தெரிந்து நான் சுபாவை சரியாய் அறிந்தது, எட்டாம் வகுப்பின் ஒரு நாளில், எங்கள் பள்ளியில் நடந்த பாட்டுப் போட்டியில் தான்

“கலைவாணி நின் கருணை தேன்மழையே” என பிரவாகமாய்  சுபா பாட

“நாம இந்த போட்டில இனி பாடறது வேஸ்ட்”னு அப்போதே எனக்குப் புரிந்து விட்டது. இருந்தாலும், “விடுவேனா” எனப் பாடினேன் என்பது வேறு கதை 😊

போட்டி முடிந்ததும், “அந்தப் பாட்டு எனக்கு எழுதித் தர்றியா?” என நான் கேட்க

“இதை நீயே வெச்சுக்கோ” என கையில் இருந்த காகிதத்தை என்னிடம் கொடுத்து விட்டாள் சுபா

இன்றும், அந்த பாட்டை எங்கு கேட்டாலும் அந்த நிகழ்வும், சுபாவின் முகமும் கண் முன் வரும் எனக்கு. சிறு வயதின் எல்லா நிகழ்வுகளும் இப்படி மனதில் பதிவதில்லை, சிலது மட்டும் இப்படி ஒன்றி விடும். சுபாவின் தோழமையின் ஆழம் தான் அதற்கு காரணமோ என்னமோ

திருமணத்திற்கு பின் தொடர்பின்றி போக, மூன்று வருடம் முன்பு தேர்வு எழுத சென்ற இடத்தில், அத்தனை கூட்டத்தில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது தெய்வ சங்கல்பம்  என்று தான் எனக்குத் தோன்றுகிறது

பதின்ம வயதில் ஆரம்பித்த எங்கள் நட்பு, இன்றும் அதே அன்புடன் தொடர்கிறது, என்றும் தொடரும்

முதல் சிறுகதையை, சஹானா இணைய இதழுக்காக பகிர்ந்தமைக்கு, எனது நன்றிகள் சுபா❤

இனி தொடர்ந்து நிறைய கதைகள் எழுதி, இந்த துறையில் முத்திரை பதிக்க, என் தோழி சுபாவுக்கு, உங்கள் எல்லோரின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை பதிவு செய்கிறேன்

#ad

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

நவராத்திரி (நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் நாட்கள்) – வழிப்பட்டு முறை மற்றும் நிவேதன ரெசிபிக்களும் பகிரப்பட்டுள்ளது – எழுதியவர்: கீதா சாம்பசிவம்

லலிதா ஸகஸ்ரநாமத்தில் அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)