in

தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – இறுதிப்பகுதி) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6

திருமணமாகி இலண்டன் வந்ததும், வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பிரமிப்பாக இருந்தது நந்தினிக்கு. அவளுள் காணாமல் போயிருந்த குழந்தைத்தனம் மீண்டும் எட்டிப் பார்க்க, குதுகலமாக ஒவ்வொரு இடத்தையும் ரசித்தாள். சஞ்சய் அவளுக்கு ஏற்கனவே அறிமுகமானவனாக இருந்ததால் கணவன் என்ற பயம் அதிகம் இல்லாமல் பழக முடிந்தது.

மிக எளிதாக அயல்நாட்டு வாழ்க்கையைப் பழகிக் கொண்டாள் நந்தினி. வாரக்கடைசியில் பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குப் போய் வந்தார்கள். நந்தினியிடம் எவ்வளவு மாற்றம் இருந்தாலும், தாம்பத்திய வாழ்க்கை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

சஞ்சய் தான் எப்பேர்ப்பட்ட ஜென்டில்மேன்…. ஒரு வருட காலம் அவள் குடும்ப  வாழ்க்கைக்கு மனதளவில் தயாராகும் வரை அவளை நெருங்கக் கூட இல்லை.

பலதடவை கவுன்சிலிங் போய் வந்தார்கள். மிகவும் பொறுமையாகவும் ஆதரவாகவும் இருந்தான். தனக்கு ஒரு கொடுமை இழைக்கப்பட்டாலும், அதை புரிந்து கொண்டு, ஆதரவாக, அன்பாக, பழையதை சுட்டிக்காட்டாமல் இருக்கும் கணவன் எத்தனை பேருக்கு வாய்ப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள் நந்தினி.

விஜய் போன்ற அயோக்கியர்கள் இருக்கும் ஆண்வர்க்கத்தில் தான் சஞ்சய்… வினோத்… போன்ற கண்ணியமான ஆண்களும் இருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.

சஞ்சனா பிறந்த போது வாழ்க்கையின் வசந்தத்தின் கதவு திறந்தது போல் இருந்தது. அதையொட்டி சஞ்சயின் அம்மாவும், அப்பாவும் வந்து அவளுடன் சில மாதங்கள் இருந்த போது, அவளுக்கு தைரியமாகவும், ஆதரவாகவும் இருந்தது.

பிரசவ நேரத்தில் வேதாவும், தியாகுவும் லண்டன் போக… சஞ்சய் அவர்களை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் கவனித்துக் கொண்டான். தன்னால் முடிந்தவரை பக்கத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் அழைத்துக் கொண்டு போய் சுற்றிக் காட்டினான். நந்தினிக்கு அது மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.

சஞ்சனா கொஞ்சம் வளர்ந்ததும் வருடம் ஒரு முறை இந்தியா போய்விட்டு வருவார்கள். நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என எல்லாவற்றையும்  சஞ்சனாவுக்கு  எடுத்துச் சொல்லுவாள்.

சஞ்சனாவுக்கு இப்போது அதே ஒன்பது வயதாகிறது, எட்டு வயதிலிருந்தே அவளுக்கு ‘குட் டச் பேட் டச்’ என தொடுகையின் எல்லா விபரமும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். தற்காப்புக் கலையான கராத்தேயில் பிளாக் பெல்ட். எந்த சூழ்நிலையிலும், எந்த சோதனை வந்தாலும், தைரியமாக எதிர்கொள்வாள் சஞ்சனா.

‘அம்மா… உன்னைப் போல ஒரு சூழ்நிலை எனக்கு வரக் கூடாது. நீ எவ்வளவு தான் என்னை தைரியமான, தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக வளர்த்தாலும், எனக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அம்மா நீ அன்று விஜய் போன்ற அயோக்கியனை சுலபமாக விட்டது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உன்னை சொல்லியும் குற்றமில்லை, ஒருவேளை போலீஸ் என்று போனால் என்னுடைய வாழ்க்கை இன்னும் பாதிக்கப்படும் என்று நீ பயந்திருக்கலாம்.

இது போன்ற ஒரு சூழ்நிலை என் பெண்ணுக்கு வரக் கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த சமுதாயத்தில், பெண்கள்…  பெண் குழந்தைகள்… தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலையை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றுதான் சஞ்சனாவை கராத்தே கற்றுக் கொள்ள வைத்தேன்.  சஞ்சனாவை தைரியமான பெண்ணாக வளர்க்கிறேன்’.

நந்தினியின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

சில மாதங்களுக்கு பின், பனிப்பொழிவு குறைந்து, இளவேனிற் காலம் ஆரம்பிக்க… தெருக்கள் எங்கும் மலர்கள் நிறைந்த மரங்கள் கண்ணுக்கு விருந்தாய். வெளியே போய் நாளாகிவிட்டது என்று தோன்ற சஞ்சய், சஞ்சனாவுடன் அந்தத் சுற்றுலா தலத்திற்கு வந்திருந்தாள் நந்தினி.

சஞ்சனா ரூமில் தூங்கிக் கொண்டிருந்தாள். ரம்மியமான அந்த இளங்காலைப் பொழுதில் சற்று நேரம் நடந்து விட்டு வருவோம் என்று  நந்தினியும், சஞ்சய்யும்  கைகோர்த்தபடி நடந்து கொண்டிருக்க, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் நின்றிருந்த 45 வயது மதிக்கத்தக்க இந்தியன், நந்தினி அவள் கணவனுடன் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

ரூமைப் பூட்டிய நந்தினி சாவியை ரிசப்ஷனில் கொடுக்க… அங்கு நின்றிருந்தவன் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் ஏதோ கேட்பது போல கேட்டுக் கொண்டே தன்னுடைய சாவியை வைத்து விட்டு நந்தினியின் ரூம் சாவியை எடுத்துக் கொண்டான்.

சத்தமில்லாமல்  லிப்ட்டில் ஏறி  வந்து, சாவியால் நந்தினியின் ரூமை  திறந்து, உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சஞ்சனாவை அணுகினான். அவளருகில் அமர்ந்ததும், ஏதோ ஒரு உணர்வில்  கண்விழித்த சஞ்சனா ஒரு நிமிடம் அன்னியன் ஒருவனைப் பார்த்து அதிர்ச்சியாக, “மை டியர் இந்தியன் பேபி… ஐ வில் கிவ் யூ கம்பெனி” என்றவாறு சஞ்சனாவை அணைக்க முயற்சிக்க… இடியாய் விழுந்தது ஒரு அடி அவன் முகத்தில்.

ஒரு சிறு பெண்ணிடமிருந்து இதை எதிர்பார்க்காதவன் மேலும் முரட்டுத்தனமாக அவளை நெருங்க, தன்னுடைய இரண்டே அடியில் அவனை மயங்கி சாய வைத்தாள் சஞ்சனா. பின் அவசர போலீஸ் உதவிக்கு நம்பரை அழுத்த, அடுத்த பத்து நிமிடத்தில் போலீஸ் வந்து சேர்ந்தது. அதே நேரத்தில் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த நந்தினியும், சஞ்சய்யும் ரூமுக்கு ஓடினர்.

“டோன்ட் ஒரி டேட், நத்திங் ஹேப்பெண்ட் (Don’t worry dad, nothing happened). ரெண்டு பஞ்சுக்கு (Punch) கூட தாங்கல மயங்கி விழுந்துட்டான். போலீஸ கூப்பிட அவங்க உடனே வந்துட்டாங்க, என்ன மம்மி பயந்துட்டியா?” அதிர்ந்து நின்ற அம்மாவை அணைத்துக் கொண்டாள் சஞ்சனா.

நந்தினி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அவள் யாரை வாழ்நாளில் மறக்க எண்ணினாளோ, அவனை…  அந்த விஜய்யை…  இத்தனை வருடத்திற்கு பின்… அதுவும் வெளிநாட்டில்…  பார்த்தது சொல்ல முடியாத அதிர்ச்சியென்றால்… அவன் தன்னை தெரிந்துகொண்டு, தன் மகளுடன் விளையாட நினைத்தது மேலும் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. 

அந்த கயவன் இன்னும் மாறவில்லை, இவனுக்கு சரியான பாடம் புகட்டிய தன் மகளை நினைத்து ஒரு கணம் மனம் பெருமையால் நிறைந்தது. லண்டன் போலீஸ் அவனை சும்மா விடாது, இனி நந்தினியும் அவனை சும்மா விட மாட்டாள்.

பழைய பயந்த சுபாவம் உள்ள நந்தினியல்ல அவள் இப்போது… தன்னம்பிக்கை மிக்க சஞ்சனாவின் தாய்.. அந்த தைரியம் அவளுக்குள் ஒன்றியிருந்தது. நந்தினிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய நிம்மதி மனதில் வந்தமர்ந்தது.

நந்தினியின் மனதில் ஏற்பட்ட நிம்மதி. இனி அவளை சஞ்சய்யுடனும், சஞ்சனாவுடனும் நிம்மதியாக வாழ வைக்கும். அந்த நிறைவுடன்  நாம் நந்தினியிடமிருந்து விடைபெறுவோம். வணக்கம்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 1) – ✍ சியாமளா கோபு

    அசையும் காற்று (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை