in

தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 6) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3  பகுதி 4  பகுதி 5

ன்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தியாகுவும், வேதமும், திரும்பவும் மனநல ஆலோசகர் உதவியை நாடினர். டாக்டர் சினேகா மிகவும் திறமைசாலி… நந்தினியை முதலிலிருந்து பார்த்து வருவதால் அவள் பிரச்சனை எளிதில் புரிய, நந்தினியிடம் நிறைய பேசினாள்.

ஆண் வர்க்கத்தின் மேலேயே நந்தினிக்கு ஒரு வெறுப்பு இருப்பது புரிந்தது. அதன் வெளிப்பாடே மயக்கமும், பிட்ஸ்ஸூம் வருகிறது என்பதை வேதா, தியாகு இருவருக்கும் விளக்கினார்.

திரும்பத் திரும்ப, டாக்டர் சினேகா கவுன்சிலிங் கொடுத்த பிறகு நந்தினியின் போக்கில் சற்று மாறுதல் ஏற்படத் தொடங்கியது. வினோத்தை வெறுப்பான கண்களோடு பார்ப்பதை நிறுத்தினாள். அவன் அருகில் வந்து பேசும்போது முகம் சுழிக்காமல், ஓரிரு வார்த்தைகள் பேச பழகிக் கொண்டாள்.

நந்தினியின் இந்த மாற்றமே வினோத்துக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது. நந்தினியிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது புரிய, அவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகைச்சுவையாக பேசி, அவளை சிரிக்க வைப்பான். சற்று இறுக்கமாக இருந்த நந்தினி அவனுடைய நட்பால் கலகலப்பாக மாறினாள். வேதாவுக்கே அவளுடைய மாற்றம் சற்று ஆறுதலை கொடுத்தது.

கல்லூரி படிப்பு முடிந்ததும், ஒருவழியாக வேலை கிடைக்க, நந்தினி சென்னையிலேயே வேலை பார்க்க ஆரம்பித்தாள். வினோத்துக்கு டில்லியில் வேலை கிடைக்க, அவன் வடக்கே பயணமானான்.

ஒரு நல்ல நண்பனை பிரிந்த வருத்தம் நந்தினிக்கு இருந்தது. “வரும்போதெல்லாம் வீட்டுக்கு வா” என்று அழைக்கும் அளவு நந்தினி மனம் மாறி இருந்தாள்.

வேலைக்குப் போய் வருடம் இரண்டாகி விட மெல்ல கல்யாணப் பேச்சை ஆரம்பித்தாள் வேதா. சற்று இறுக்கம் தளர்ந்திருந்த நந்தினி கல்யாணப் பேச்சை எடுத்ததும் பழையபடி சோர்வானாள்.  கண்டிப்பாக கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது என்று கூறிவிட வேதம் மனமுடைந்து போனாள்.

தினமும் கோவில் கோவிலாக ஏறி இறங்கி, எல்லா தெய்வத்தையும் கும்பிட ஆரம்பித்தாள். என்ன சொல்லியும் மகள் பிடிவாதத்தை தளர்த்த மறுத்தாள்.

“அம்மா… நான் கடைசி வரைக்கும் உங்களுக்கே மகளா  இருந்திடுறேன். தயவுசெய்து எனக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்காதீங்க, என்னால திருமண பந்தம் என்ற பெயரில இன்னொரு ஆணுடன் சேர்ந்து வாழ முடியாது. என்னை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சுமையாகத் தோன்றினால்,  ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கி கொள்கிறேன்” என்று கூற, பதறிப் போனாள் வேதா.

தன் வாழ்க்கையில் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று கண்டிப்பாக நந்தினி கூறிவிட என்ன செய்வது என்று திகைத்தார் தியாகு. திரும்பவும் டாக்டர் சினேகாவின் உதவியை நாட, வேதமும் தன் பங்குக்கு அவ்வப்போது நந்தினியிடம் பேசி மனதை மாற்ற முயற்சி பண்ணிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் சஞ்சய் அவள் வீட்டிற்கு எதிரே குடி வந்தான். அவன் அப்பாவும், அம்மாவும் குடிவந்த வந்த புதிதில் வேதாவிடம் உதவிகளை கேட்க… வெகுவிரைவில் இருவரும் நண்பர்களாயினர்.

நாட்கள் உருண்டோட சஞ்சயின் நல்ல குணங்கள் நந்தினிக்கு அவன் பேரில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. தினந்தோறும் பார்க்கும் போது அவன் மற்றவர்களுக்கு செய்யும் சின்னச் சின்ன உதவிகள்… பெண்களை ஏறிட்டு பார்க்காதது… இவ்வளவு ஏன் நந்தினியிடம் கூட ஒரு புன்னகையோடு சரி… பேச வேண்டுமென்று முயற்சிப்பதில்லை.

வேதாவுக்கும் மகள் மனதில் சஞ்சய் பெயரில் ஒரு மரியாதை இருப்பது புரிய, தியாகுவிடம் “ஏங்க சஞ்சய்யை  நம்ம நந்தினிக்கு கேட்டா என்ன?” என்றாள்.

இது தெரிந்த நந்தினி குதி குதி என்று குதித்தாள். “ஒருவன் அழகாக இருக்கிறான், பண்பாக இருக்கிறான், மற்றவர்களுக்கு உதவி செய்கிறான் என்றால், உடனே அவனை கல்யாணம் பண்ணிக்கோ என்பீர்களா?” என்று கேட்டாலும், இதுவரை தான் சந்தித்த ஆண்களில் வினோத்திற்கு பிறகு சஞ்சய் மட்டுமே  நல்லவனாக அவள் மனதிற்கு தென்பட்டான்.

சஞ்சய் வீட்டில் நந்தினியை பெண் கேட்டு வர, வேதாவும் தியாகமும் மகிழ்ச்சியில் திளைத்தார்.

“நந்தினி… அவர்களாக விரும்புகிறார்கள். தயவு செய்து வேண்டாம் என்று சொல்லிடாதே. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்மா. நாங்கள் எத்தனை நாளைக்கு உன்கூட வர முடியும், உனக்கென்று ஒரு குடும்பம்,  கணவன், குழந்தைன்னு  இருந்தால் தான் உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு தடவை பட்ட கஷ்டத்தையே திரும்பவும் நினைச்சிகிட்டிருந்தா  வாழ்க்கையில எந்த பலனும் இருக்கப் போவதில்லை. நீ நல்ல தைரியமான, தன்னம்பிக்கையான பெண். நீ ஏன் உன்னுடைய பிடிவாதத்தை மாற்றிக் கொண்டு சஞ்சய்யை கல்யாணம் பண்ணிக்க கூடாது? சஞ்சய் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு லண்டன் போகப் போறான். நல்ல வாய்ப்பை இழந்திடாதே… உன் வாழ்க்கை. உன் கையில..” என்றாள் வேதா.

“ரெண்டு நாள் எனக்கு டைம் கொடும்மா” என்றாள் நந்தினி. முதல் தடவையாக மகள் யோசிக்கிறாள் என்பதே வேதாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த ரெண்டு நாளில் சஞ்சய்யை நந்தினி தனியாக காபி-டே ஹோட்டலுக்கு வரச் சொன்னாள். சஞ்சய்க்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. திருமணப் பேச்சு நடக்கும் நேரத்தில் நந்தினி ஏன் தன்னை தனியாக பார்க்க பிரியப்படுகிறாள் என்று யோசித்தான்.

காபி ஷாப்பில் சந்தித்தபோது, நந்தினி தன் வாழ்க்கையின் இருண்ட பகுதியை  சஞ்சய்யிடம் விளக்கிக் கூறி, தன்னுடைய ஆரோக்கிய பிரச்சனையையும் கூறினாள்.

“என்னிடம் உண்மையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது நந்தினி. இது நீ அறியா பருவத்தில் நடந்த சம்பவம். அது முடிந்து போன கதை. இனி நம்ம வாழ்க்கை, நம்முடைய சந்தோஷம்  நம்மகிட்ட தான் இருக்கு. நாம ஏன் பழச பத்தி யோசிச்சு நம்மள வருத்தப்படுத்திகணும். புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம், சந்தோசமா வாழ்வோம். பழசையெல்லாம் நீ நினைக்காம இருந்தா  போதும் நந்தினி” என்றான் சஞ்சய்.

டாக்டர் சினேகாவும் அவளுடைய உடல்நிலை, மனநிலை பற்றி சஞ்சய்க்கு விளக்கமாக  எடுத்துக் கூற, சஞ்சய்க்கு அவளை மணக்க வேண்டும் என்ற எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

சீக்கிரத்தில் அவர்கள் திருமணம் நல்லபடியாக முடிய கல்யாணமான ஒரு மாதத்திலேயே லண்டன் கிளம்பினாள் நந்தினி.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எழுத்துகளே இவரின் சுவாசம்… எழுதுபவரின் ஏக்கம் தீர்க்கும் ஆம்பல்…

    கற்கை நன்றே (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு