எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கணவன் மகேந்திரன் அந்த தகவலை சொல்லிவிட்டு வேலைக்கு போனதில் இருந்து, பாமாவுக்கு ‘கொடு,கொடு’வென்று இருந்தது.
அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வந்த செய்தியை திரும்ப, திரும்ப பார்த்து ஊர்ஜிதம் செய்து கொண்டாள். இதை எப்படியாவது உடனடியாக நம் தோழிகளுக்கு சொல்லி ஆக வேண்டுமே! என மனம் பதைபதைத்தது.
இருந்தாலும் சம்பந்தபட்டவரிடமே ஒரு தடவை ஃபோனில் முதலில் பேசி பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில், காலை பத்து மணிக்கெல்லாம் தன் ஓரகத்தி பூமாவை அழைத்தாள்.
அலைபேசியில் பெயரைப் பார்த்த பூமா.. ‘என்னைக்கும் இல்லாத திருநாளா இவ எதுக்கு கூப்பிடுறா..?’ என யோசித்தபடியே..
“சொல்லு பாமா.. எப்படி இருக்கே?’ என சாதாரணமாக பேச்சை ஆரம்பித்தாள்.
“எங்களுக்கென்ன..? இருக்..கோம்.. ஆனா புதுசா நகை வாங்கிற அளவுக்கு வசதியா இல்ல.. அப்படியே வாங்கினாலும் உங்ககிட்ட சொல்லாம இருக்க மாட்டோம்..” இது பாமா.
இப்போது பூமாவுக்கு புரிந்து விட்டது. ‘நேத்து நகைக் கடைக்கு போய்ட்டு வந்ததை எப்படியோ தெரிஞ்சிட்டு வந்து தான் பேசுறா..’
“மகளுக்கு கல்யாண வயசு வருதேனு நேத்து ஒரு நாலு பவுன் சங்கிலி வாங்கினேன்.. இதை நான் சொல்லலைனா என்ன..? அது தான் என் வீட்டுக்காரரு அங்கே நேத்து நைட்டே சொல்லிட்டாரு போல..”
“ம்க்கும்.. அவரு எங்கே சொன்னாரு..? பேப்பர்ல பார்த்து நாங்க தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.. இன்னைக்கு தினசெய்தி பேப்பர்ல, மொத பக்கம் மொத நியூஸ் இது தான்..” என்றபடி டொக் கென்று ஃபோனை கட் செய்தாள்.
‘நாலு பவுன் தங்கம் வாங்கினது அவ்வளவு பெரிய நியூஸ்ஸா? நாம இன்னைக்கு இன்னும் பேப்பர் பார்க்கலையே?’ என யோசித்த jபூமா தினசெய்தி பேப்பரை எடுத்துப் பார்த்தாள்.
“தங்கம் விலை சரிந்தது” என்ற கொட்டை எழுத்து தலைப்பு செய்திக்கு கீழே ஒரு புகைப்படம். பூமாவும், மகளும் கடையில் நகையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்திருக்க (அவர்களுக்கே தெரியாமல்) எடுத்த புகைப்படமும், அதன்கீழ் உள்ள குறிப்பில் நகை வாங்க வந்த மக்களில் ஒரு பகுதியினர் என்ற வாசகமும் இருந்தன!
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings