எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வனஜா, ”இன்னிக்கு சாயந்திரம் சீக்கிரம் வாங்க,வெளில போகணும்.”
ரவீந்திரன் தன் காதல் மனைவி கேட்டு எதையும் மறுத்ததில்லை.
“ரெண்டு நாள் தாங்குமா உன் முக்கியமான வேலை, சனிக்கிழமை போகலாம்”
“ஏய் மக்குப் புருஷா, சனிக்கிழமை என்ன நாள் மறந்துட்டீங்களா?”
“ஓ என் பர்த்டே இல்ல, சரி சரி ஏதாவது பொய் சொல்லிட்டு சீக்கிரம் ஓடி வந்துடறேன் தயாரா இரு.”
“ஆமாம் பொய் சொல்ல உங்களுக்கு சொல்லியா தரணும்? பொய் பொய்யா சொல்லித் தானே என்னை கல்யாணமே பண்ணிக்கிட்டீங்க”
ரவியின் முகம் சட்டென வாடியதை கவனித்து அருகில் நெருங்கி வந்தாள்.
“ஏய் என்ன கோவமா, சும்மா சீண்டினேன்பா, என் உயிராச்சே நீ, இப்ப ஆபீசுக்கு சமத்தா போவயாம், நைட் உன் கோவத்தை சரி பண்ணிடுவேனாம் ஓகே?”
சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டான், கன்னத்தோடு கன்னம் இழைத்தவனை கொஞ்சம் செல்லமாய் பிடித்துத் தள்ளினாள் வனஜா.
“போதும் சீக்கிரம் ஆபீஸ் போயிட்டு வாங்க” சிரித்துக் கொண்டே விலகினாள்.
அவன் ஆபீஸ் போனவுடன், விழுப்புரத்தில் இருக்கும் அம்மாவுக்கு ஃபோன், ஏதேதோ பேச்சு தாய்க்கும் மகளுக்கும். கடைசியில் அம்மாகிட்ட சொன்னாள், ”உன் மாப்பிள்ளைக்கு பர்த்டே வருதும்மா, கல்யாணம் ஆனவுடனே இதை சேஃப்டிக்கு வச்சிக்கோ யாருக்கும் தெரிய வேண்டாம்னு ஒரு பெரிய தொகை கொடுத்தார்.”
அம்மா, ”எனக்கும் சொன்னார்,பத்திரமா வச்சிக்கோ சமயத்துக்கு உதவும்”
“இதுவரை அவருக்கு நான் எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை, இந்த பர்த்டேக்கு கோல்ட்ல ஏதாவது வாங்கித் தரணும்னு நினைக்கறேன்”
“செய்டா செல்லம், இப்ப மாப்பிள்ளையே தங்கம்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே.”
பெட்டில தன் முகூர்த்த பட்டுப்புடவை மடிப்புக்குள் இருந்த பணத்தை எடுத்து ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.
அன்று மாலை ரவீந்திரனை அவசரப்படுத்தி அந்த பிரபல நகைக் கடைக்குள் நுழைந்தாள் வனஜா.
“ஏய் வனு, என்ன திடீர்னு இந்த கடைக்குள்ளே,என் கிரெடிட் கார்டு கூட கொண்டு வரலை.”
“சும்மா வாங்க ஒரு கார்டும் வேண்டாம் இன்னிக்கு முத தடவையா நான் பர்சேஸ் பண்ணப் போறேன் உங்களுக்காக”
“விளையாட்டா இருக்கா, தங்கம் ஒரு கிராம் என்ன விலை தெரியுமா இன்னிக்கு? ஒரு பவுன் வாங்கணும்னாலே கிட்டத்தட்ட என் ஒரு மாச சம்பளம் பூரா வேணும்”
“பரவாயில்லை வாங்க பயப்படாம” உள்ளே சேல்ஸ் கவுன்டர் பொண்ணு கிட்ட, “இவருக்கு ஏத்த மாதிரி பிரேஸ்லெட் காட்டும்மா”
வரிசையா இருந்த கண்ணாடிப் பெட்டிகள் எதிர்ல உக்காந்திருந்த ரவீந்திரன் ஒன்றும் பேசாமல் மனைவியின் முகத்தையே வாத்சல்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன என் முகத்தைப் பாக்கறீங்க, எது பிடிச்சிருக்கு சொல்லுங்க”
அந்த சேல்ஸ் கேர்ல், ”சாரோட ஜிம் பாடிக்கு இந்த 20 கிராம் பிரேஸ்லெட் சூட் ஆகும் மேடம்”
தலை நிமிர்ந்து அவளை முறைத்த வனஜா, ”இது வேண்டாம் வேற எடுத்துட்டு வா போ” கொஞ்சம் முரட்டுத்தனமாகவே சொன்னாள்.
ஒரு வழியா 72 ஆயிரம்னு டேக் மாட்டின பிரேஸ்லெட்டை எடுத்து அவன் கையில் அணிவித்து அழகு பார்த்தாள். பில் போட்டு அதையே செலக்ட் பண்ணியாச்சு. கேஷ் கொடுத்து அதை வாங்கிய வனஜாவை வியப்புடன் பார்த்துக் கொண்டே நின்றான் ரவீந்திரன்.
“சரி வாங்க போகலாம் கொஞ்சம் கூட வெக்கம் இல்லை, இப்படியா எல்லார் எதிர்லயும் வெறிக்க வெறிக்க பாக்கறது? கல்யாணம் ஆயி ஒரு வருஷமா பாத்த முகம்தானே இது.?” அவள் குரலில் பொங்கிய பெருமையை வார்த்தையில் எழுதறது ரொம்ப கஷ்டம்.
பர்த்டே ஆச்சு புது பிரேஸ்லெட் கைல ஏறியாச்சு, அதுக்கு தேங்ஸ் கிவிங் ஃபங்ஷனும் வனஜா சந்தோஷத்தில் திணறத் திணற முடிஞ்சது.
“அச்சோ பாருங்க என் உடம்பெல்லாம், பிராஸ்லெட் கீரல் இனிமே படுத்துக்கறப்ப இதைக் கழட்டிடணும்.”
“கவலைப் படாதே எல்லாத்தையும் கழட்டிடுவோம்”
“சீ பேச்சைப் பாரு முரடு, இப்ப பேசாம தூங்குங்க”
திங்கக்கிழமை ஆபீஸ் புறப்படறப்ப ‘ஏய் வனு, இந்த பிரேஸ்லெட் ரொம்ப லூசாத் தெரியுது ஆனா கழட்ட மனசில்லை.”
ஆபீஸ்ல இருந்த கெடுபிடி வேலைல பிரேஸ்லெட் மறந்து போச்சு.
வீடு திரும்பறப்ப அனிச்சையா மணிக்கட்டை தடவின போது, ஐய்யோ பிரேஸ்லெட்டை காணலை. ஆபீஸ் வாஷ்ரூம்ல விழுந்திருக்குமோ. வழில, இல்லை டிரெயின் ஏறரப்ப நடந்து வரப்ப எங்கேயாவது விழுந்திருக்குமா?
எப்படித் தேடறது, எங்கே தேடறது. பர்த்டேக்கு கைல கட்டி விட்டு கைல முத்தமிட்டாளே, இப்ப என்ன பதில் சொல்லப் போறேன்? எவ்வளவு அஜாக்கிரதை எனக்கு.
போச்சே அவ கஷ்டப்பட்டு சேத்து வச்ச பணமோ, வீடு போய் வனஜா முகத்தை எப்படிப் பாக்க? எட்டரை மணி வரை அந்த பூங்கால உக்காந்திருந்து விட்டு தயக்கமாய் ஒன்பது மணிக்கு வீட்டை அடைந்தான்.
அவன் தயங்கித் தயங்கி சொல்வதற்குள், ”உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை 72ஆயிரம் ரூபா பொருளை இப்படியா அலட்சியமா ஹால்ல உள்ள டேபிள்ல கழட்டி வச்சிட்டுப் போறது?”
ரவீந்தரன் நெஞ்சுல அப்ப பொங்கி எழுந்த அந்த உணர்வுகளை எப்படி சொல்றது.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings