எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வனாஜாவுக்கும் சேர்த்து மூன்று புடவைகள் வாங்கியிருந்தாள் தாமரை. ஆனால் அவளோ, திடீரென்று காலையில் கூப்பிட்டு புடவை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். டென்ஷனாகிப் போனாள் தாமரை.
போனமாதம் பேச்சுவாக்கில், ‘ எங்க காலனில ஒரு அம்மா பொட்டீக் நடத்துறாங்க…. சேலை சுடிதார்னு எல்லாத்தையும் மொத்த விலைக்கு வாங்கி, சில்லறைல விற்கறதால சேலையெல்லாம் ரொம்ப குறைஞ்ச விலைக்கே தர்றாங்க… நான் கூட போன மாசம் ரெண்டாயிரம் ரூபா புடவையை ஆயிரத்து ஐநூறுக்கே வாங்கினேன்… ’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, உற்சாகமடைந்த அவள், ‘ அப்படியா அத்தை, அப்போ அடுத்த தடவை நீங்க புடவை வாங்கும்போது எனக்கும் சேர்த்து ஒரு புடவை வாங்கிடுங்க… ‘ என்றாள்.
நேற்று புடவைகள் வாங்கினாள் தாமரை. அப்போது வனஜாவுக்கும் சேர்த்து ஒரு புடவை வாங்கிவிட்டாள். காலையில் கூப்பிட்டு அவளிடம் தான் புடவை வாங்கியிருக்கும் விபரத்தைச் சொல்லும்போதுதான் தனக்கு ஏற்கனவே இரண்டு புடவைகள் அவளது அம்மா வீட்டில் இருந்து வந்துவிட்டதாக சொல்லிவிட்டு, ‘ அத்தை… கோவிச்சுக்காதீங்க… எனக்கு புடவை வேண்டாம்… ‘ என்றுவிட்டாள். ‘ எவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டாள் இவள்… ‘ என்று பொங்கினாள் தாமரை.
‘ அம்மா வீட்டிலேர்ந்து புடவை வந்திருந்தா, உடனே நம்மளைக் கூப்பிட்டு புடவை வாங்கிடாதீங்க அத்தைனு முன்னாடியே சொல்றதுக்கென்ன… ‘ என்று கறுவிக்கொண்டவள் வேறுவிதமாகவும் யோசித்தாள். ‘ நாமும் வாங்கறதுக்கு முன்னாடி அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமோ… ‘
‘ இப்போ இந்த சேலையை என்ன செய்யறது. ஆயிரத்தைன்னூறை அதுல போட்டாச்சே… ‘ என்றும் யோசிக்க ஆரம்பித்தாள். ஆனாலும், கோபம் குறையவில்லை. ‘ அதென்ன… அவள் வாங்கச் சொன்னதால்தானே வாங்கினோம்… அதுவும் அவளுக்குப் பிடிச்ச கலர், டிஷைன்ல… இப்போ வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்… கிறுக்கி… கிராதகி… ’
யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தபோதுதான் பவானியின் போன் வந்தது.
‘ அக்கா… தம்பி ரெண்டு மிக்ஸர் கிரைண்டர் கொண்டு வந்திருக்கான்… நீங்க சொல்லிட்டிருந்தீங்கள்ல… உங்களுக்கும் ஒன்னு வேணும்னு… தனியா எடுத்து வச்சிடவா… ‘ என்றாள் அவள்.
அவளது சித்தப்பா பையன் ஒருவன் கம்பெனிகளில் இருந்து நேரடியாக வாங்கி குறைந்த விலைக்கு கொடுக்கிறான். அதைப் பற்றி ஒருநாள் அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, ‘ கடை ரேட்டை விடை இ்வளோ குறைவா இருக்கே… ‘ என்று வியந்து போன தாமரை, ‘ எங்க வீட்டு மிக்ஸி கூட கெட்டுப் போயிடுச்சு பவானி… நாங்க மிக்ஸி போட்டா, சத்தம் ஊருக்கே கேட்குது… நானும் ஒன்னும் வாங்கணும்… ‘ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
இப்போது பவானி அதைப் பற்றி சொல்லவும், தாமரைக்கு திடீரென்று ஒரு யோசனை. பவானியிடம் கூட இவள் அடிக்கடி சேலை வாங்குவது பற்றி சொல்லியிருக்கிறாள். அவளும் குறைவான விலையைக் கேட்டு வியந்திருக்கிறாள். அவளிடமே இந்தப் புடவையை தள்ளிவிடலாம் என்று யோசித்துக்கொண்டு, ‘ சரி பவானி… எனக்கும் மிக்ஸி வேணும்தான்… இப்போ ஃபிரீயாத்தான் இருக்கேன்… இதோ கொஞ்ச நேரத்துல கிளம்பி வந்துடறேன்… ‘ என்று சொல்லிவிட்டு அந்தச் சேலையையும் எடுத்துக்கொண்டு கிளம்பியும்விட்டாள்.
போய் சேர்ந்தவுடனேயே தான் புடவை வாங்கிய விபரத்தை சொல்லிக்கொண்டே பைக்குள்ளிருந்து புடவையை எடுத்த பவானி, ‘உனக்குப் கண்டிப்பா பிடிக்கும் பாரேன்… ‘ என்றாள். ஏதோ அவளுக்காகவே வாங்கி வந்ததுபோல முகம் மலர்ந்து புடவையை வாங்கிய பவானி, அதை விரித்து விரித்துப் பார்த்து பரவசமாகிப் போனாள். சேலையை நெஞ்சோடு போர்த்தி அப்படியும் இப்படியும் திருப்பி… திரும்பி… பார்த்துக்கொண்டாள்.
‘ எவ்வளவுக்கா நான் தரணும்… ‘ என்றாள் பவானி.
‘ நீ எதுக்கு பணம் தர்றே… ‘ என்று தாமரை கேட்க, ஒரு கணம் திகைத்துதான் போனாள் பவானி. உடனே சமாளித்தபடி, ‘ நீதான் மிக்ஸர் கிரைண்டர் தரப் போறீயே… அதுல கழிச்சிக்கிட்டாப் போச்சு… ‘ என்று தாமரை சொல்ல சிரித்துக்கொண்டாள் பவானி.
பேசிக்கொண்டே உள்ளே போய் மிக்ஸி பெட்டியை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து தாமரையிடம் கொடுத்தாள் அவள். பரவசத்துடன் அதை வாங்கிக்கொண்டு எல்லா பக்கங்களையும் உற்று உற்று பார்த்தாள் தாமரை. அதன் விலையைதான் பார்க்கிறோம் என்று பவானிக்கு தெரியாதபடியும் பார்த்துக்கொண்டாள்.
தாமரைக்கு கொஞ்சம் கூடுதல் ஆர்வம், இரண்டு மிக்ஸிகள் வந்திருப்பதாகத்தானே சொன்னாள், அந்த இன்னொன்றையும் பார்த்துவிடலாமே என்று.
‘ எங்கே பவானி… ரெண்டு மிக்ஸி வந்திருக்குன்னு சொன்னியே… ‘ என்று இழுத்தாள்.
புரிந்து கொண்ட பவானி உள்ளே போய் இன்னொரு பெட்டியையும் தூக்கிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தாள்.
‘ ரெண்டுமே ஒரே கம்பெனி… ஒரே மாடல்தாங்க்கா… ‘ என்றாள் அவள்.
ஆனால் இரண்டு பெட்டிகளின் டேப்பும் பிரித்து ஒட்டியிருந்தது. டேப்பின் மேல் தாமரை கைவைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த பவானி, ‘ அக்கா டேப் கிழிஞ்சிருக்கேன்னு பார்க்கறீங்களா… அதைத் திறந்தாதானே உள்ளே இருக்கற கியாரண்ட்டி கார்டுலே சீல் அடிக்க முடியும்… அதான் தம்பி சீல் அடிச்சே வாங்கிட்டு வந்துட்டான். கார்டு உள்ளே இருக்குதுக்கா… ‘ என்றாள்.
‘ சரி… விலையை சொல்லு பவானி… நான் ஜீ.பே. பண்ணிடறேன்… ‘ என்று சொல்லிக்கொண்டே தாமரை மொபைலை எடுக்க, ‘ அக்கா… எம்.ஆர்.பி. ஆறாயிரத்து முன்னூறு… நமக்கு விலை நாளாயிரத்து அறுநூறுதான்க்கா ‘ என்றாள். நொடிப்பொழுதில் மணக்கணக்கு போட்ட தாமரை, ‘எப்படியும் நமக்கு நல்ல லாபம்தான்… ‘ என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள் தாமரை.
உடனே, ‘ அக்கா… சேலைக்காசை கழிச்சிக்கிட்டு போடுங்கக்கா… ‘ என்று பவானி சொல்ல, ‘ சேலைக்கு ஆயிரத்து அறுநூறு போக மூவாயிரம் போடறேன்… ‘ என்றுவிட்டு மடமடவென பணத்தை மாற்றினாள். உடனே பவானியின் மொபைல் சிணுங்கியது. ஓடிப்போய் எடுத்துப் பார்த்தாள். மூவாயிரம் வரவு வந்ததற்கான குறுஞ்செய்தி வந்திருந்தது.
பவானி டீ போட்டுக் கொடுக்க குடித்துக்கொண்டே கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துட்டு பிறகு மிக்ஸி பெட்டியுடன் கிளம்பிவிட்டாள் தாமரை.
‘ அக்கா பை ஏதாவது தரட்டுமா… ‘ என்று பவானி கேட்க… ‘ இவ்ளோ பெரிய சைஸுக்கு நீ எங்கே போய் பை தேடுவே… நான் மொபெட்லதானே வந்திருக்கேன்… முன்பக்கம் வச்சிக்கமாட்டேனா… ‘ என்று சிரித்தபடி பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டாள்.
கொஞ்ச நேரத்தில் பவானியின் மகள் டைப்பிங் கிளாஸ் போய்விட்டு திரும்பினாள். ‘ ஏன்மா… இந்தப் பெட்டி இங்கே இருக்கு… ‘ என்று அவள் கேட்க, பவானி நடந்த விபரத்தை சொல்ல. உடனே, ‘ ஏம்மா… நாளாயிரத்து அறுநூறுதான்னா நாளாயிரத்து அறுநூறேத்தான் வாங்கனுமா… நூறு… இருநூறு… சேர்த்து வாங்கக் கூடாதா… அவங்க என்ன பில்லை கொண்டு வான்னு கேட்டு செக் பண்ணவாப் போறாங்க… நமக்கும் கொஞ்சம் லாபம் கிடைக்குமில்லையா… ‘ என்றாள் அவள்.
சிரித்துக்கொண்டே. ‘ அடி போடி பைத்தியக்காரி… அப்படி விற்று தான் நாம் கோடீஸ்வரியாகப் போறோமாக்கும்… ‘ என்று பவானி சொல்ல, இவளோ, ‘ ஹூம்… பொழைக்கத் தெரியாதா அம்மா… ‘ என்றுவிட்டு உள்ளே போய்விட்டாள்.
xxxxxxx
வீடு வந்து சேர்ந்தாள் தாமரை. அவளது பையன் ஆவலுடன் ஓடி வந்து பெட்டியை வாங்கினான். ‘ புது மிக்ஸியாம்மா… இனிமே ஊருக்கே கேட்காதுல்லே, நம்ம மிக்ஸி சத்தம்… ‘ என்று சிரித்தான்.
பெட்டியை கீழே வைத்தபடி ‘ எவ்ளோமா… ‘ என்றான்.
‘ ஒரிஜினல் விலை ஆறாயிரத்து முன்னூறுடா… நமக்கு கிடைச்சது நாளாயிரத்து அறுநூறுக்கு… ‘ என்றாள்.
‘ பரவாயில்லையே… குறைச்சு வாங்கிட்டியே… ‘ என்று அம்மாவை பாராட்டியபடி நகர்ந்தான்.
ஆனால் உட்கார்ந்து யோசித்தாள் தாமரை. ‘ நாம ஆயிரத்து ஐநூறுக்கு புடவை வாங்கி நூறு ரூபா லாபம் வச்சி அவகிட்டே ஆயிரத்து அறுநூறுக்கு வித்தோம்… அதுபோல அவளும் நானூறு ஐநூறு கூட வச்சித்தான் நமக்கு இந்த மிஷியை வித்திருப்பாளோ… ‘ என்று நினைத்துக் கொண்டாள்.
தாமரையின் ( வியாபார ) தந்திர மூளை அப்படித்தானே அவளை யோசிக்க வைக்கும்… !
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings