in ,

தல போற வேல (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     “டாடி… கொஞ்சம் ஸ்பீடா போங்க டாடி!”

      பைக்கின் பில்லியனில் அமர்ந்திருந்த என் மகன் தர்ஷன் என்னை அவசரப்படுத்த,

      “ரசிகர் மன்ற ஷோ ஏழு மணிக்குத்தாண்டா!… இப்ப மணி ஆறு நாப்பதுதான் ஆச்சு!”

       “அய்யோ டாடி! உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது… இது தல படம்!… அதுவும் முதல் நாள்! முதல் ஷோ!.. ரசிகர்களெல்லாம் நேத்திக்கு ராத்திரில இருந்தே காத்திட்டிருப்பாங்க!…”

      என் மகன் தர்ஷன் அஜீத் ரசிகன் என்பதால், ஆபீஸ் பாய் முருகனை அனுப்பி, அடுத்த நாள் ரிலீஸாகும் அஜீத் படத்தின் காலை ஏழு மணி ஷோவுக்கான ரசிகர் மன்ற டிக்கெட்டை, டபிள் ரேட் கொடுத்து வாங்கினேன். அதைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அவன் முகத்தில் மத்தாப்பு சிதறல்கள்.

      அதிகாலை அஞ்சு மணிக்கே எழுந்து வந்து என்னை உசுப்பி, “எந்திரிங்க டாடி!.. கிளம்பலாம்!” துடித்தான்.  விடிய விடிய தூங்கியே இருக்க மாட்டான் போலிருந்தான்.

      நான் நிதானமாக எழுந்து, நிதானமாக கிளம்பி, ஆறரைக்குத்தான் பைக்கையே ஸ்டார்ட் செய்தேன்.

      சீராக சென்று கொண்டிருந்த எங்கள் பைக்கின் முன்னால் ஒரு அழகான நாயொன்று, வெள்ளை வெளேரென்று மின்னும் ரோமத்தோடு, கழுத்தில் விலையுயர்ந்த பட்டை, மற்றும் மினுமினுக்கும் செயினோடு வந்து, முன் சக்கரத்தில் மோதப் பார்த்து, தப்பித்து மறுபுறம் ஓடியது. ஓடிய வேகத்தில் ஒரு காரில் சிக்கப் போய், அதிலும் தப்பித்து, வேறு பக்கம் ஓடியது. அங்கும் ஒரு ஆட்டோவில் அடிபட இருந்து அதிலும் தப்பித்து, மொத்தத்தில் எல்லா வாகன ஓட்டுனர்களையும் களேபரப் படுத்திக் கொண்டிருந்தது.  அதன் முகத்திலோ மரண பீதி.

      எனக்கு அந்த நாய அப்படியே அங்கு விட்டு விட்டுப் போக மனமில்லை.

       “டேய்.. தர்ஷன் பாவம்டா அந்த நாய்… எங்கியோ பணக்கார வீட்டுல செல்லமா வளர்ந்த நாய் போலத் தெரியுதுடா!”

       “சரி.. அதுக்கு என்ன?” அவன் அவசரம் அவனுக்கு.

       “இல்லடா… நாம இப்படியே விட்டுட்டுப் போயிடோம்னா இன்னும் கொஞ்ச நேரத்துல இது நிச்சயமா ஏதோ ஒரு வண்டில அடிபட்டுச் செத்திடும்டா!… ஏன்னா இந்த ரோட்டுல இனிமேல்தாண்டா டிராபிக்கே அதிகமாகும்!… அதனால… இதைப் பிடிச்சிட்டுப் போய் கலெக்டர் ஆபீஸ்கிட்ட இருக்கற ப்ளூ க்ராஸ் ஆபீஸ்ல ஒப்படைச்சிடலாம்டா!… அவங்க விசாரிச்சு சேர்க்க வேண்டிய எடத்துல சேர்த்திடுவாங்கடா!” கெஞ்சலாய்க் கேட்டேன்.

      அவனுக்கு நான் பேசியதில் துளியும் இஷ்டமில்லை என்பதை அவன் முகமே காட்டியது.

       “கஷ்டப்பட்டு ரசிகர் மன்ற ஷோவுக்கு டிக்கெட்டு வாங்கிட்டு, அதைப் பார்க்க முடியாமப் பண்ணிடுவீங்க போலிருக்கே!” முன் நெற்றியில் அடித்துக் கொண்டு சொன்னான் தர்ஷன்.

       “ஜஸ்ட்… ஒரு கால் மணி நேரம்தான் ஆகும் அவ்வளவுதான்!… நேராப் போறோம்… நாயை குடுக்கறோம்… அப்படியே தியேட்டருக்குப் போயிடறோம்… டைம் சரியாயிருக்கும்!” சொல்லி வைத்தேன்.

       “என்னமோ பண்ணுங்க!” என்றவன் குரலில் கோபம், சோகம், அழுகை எல்லாம் கலந்திருந்தது.

      அந்த ப்ளூ க்ராஸ் ஆபீஸுக்குச் சென்ற பின்தான் உறைத்தது அது இந்த நேரத்தில் அது திறந்திருக்காது என்பது.  அங்கிருந்த காவலாளியை அணுகி விஷயத்தைச் சொல்லி, “இதைக் கொஞ்சம் வாங்கிங்கப்பா.. ஆபிஸர்ஸ் வந்ததும் குடுத்திடுப்பா” என்றேன்..

      என்னை ஏற, இறங்கப் பார்த்து விட்டு, “என்ன சார் பேசறீங்க?.. நான் எப்படி சார் வாங்கிக்க முடியும்?… நீங்கதான் முறைப்படி ஆபீஸரைப் பார்த்து உங்க பேரு.. அட்ரஸு… மொபைல் நெம்பரெல்லாம் எழுதிக் கொடுத்துட்டு நாயைக் குடுத்திட்டுப் போகணும்!” என்றான் அந்தக் காவலாளி படு கறாராய்.

        “நாங்க ரெண்டு பேரும் ஒரு அவசர வேலையா போய்க்கிட்டிருக்கோம்!… அதான்…” இழுத்தேன்.

       “அய்யய்ய… வாய்ப்பேயில்லை சார்!… ஏற்கனவே என் மேல ரெண்டு மூணு பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு… அது பத்தாதுன்னு இது வேறயா?” அவன் ஒரேயடியாய் கை விரிக்க,

      நாயை என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினேன்.

      “டாடி… இந்த நாயை.. இப்படியே… இங்கியே விட்டுட்டுப் போயிடலாம்!” தர்ஷன் கெஞ்சினான்.

       “நோ… நோ… அது அதை விட ரொம்பப் பாவம்டா!… அட்லீஸ்ட் அந்த எடத்திலேயே விட்டுட்டு வந்திருந்தாலாவது இதோட ஓனர்கள் தேடிட்டு வந்திருப்பாங்க! இது சுத்தமாவே புது ஏரியா.. இங்க வரவே மாட்டாங்க!” சொல்லியவாறே மணி பார்த்தேன்.

சரியாக 7.00.

தர்ஷன் முகத்தைப் பார்த்தேன்.  கண்களில் நீர் உற்பத்தியாகியிருந்தது.

என் கோபத்தை அந்தக் காவலாளி மீது காட்டினேன். “யோவ்!… ஆபீஸ்ல கரெக்டா எத்தனை மணிக்கு வருவாங்க சொல்லுய்யா!” கடுகடு குரலில் கேட்டேன்.

 “ஏழரை… எட்டு ஆயிடும்!”

தர்ஷன் பக்கம் திரும்பி,  “கவலைப்படாதடா…. “ஏழு” ங்கறது கரெக்டா  “ஏழு” க்கேவா படம் போடுவான்!… எப்படியும் மெயின் பிக்‌ஷர் ஏழரைக்கு மேலதான் துவங்கும்… நாம அதுக்குள்ளார போயிடலாம்!” என்றேன். என் குரலில் இருந்த அவநம்பிக்கை எனக்கே தெரிந்தது.

அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

காத்திருந்தோம்.

ஏழரை…. ஏழே முக்கால்… எட்டு… யாருமே வரவில்லை.

எட்டு பத்துக்கு ஆடி அசைந்து வந்தான் ஒரு நரைத்த தலையன்.  “யார் நீங்க என்ன வேணும் உங்களுக்கு?” முந்திய இரவின் விஸ்கி அவன் மூச்சுக் காற்றில் இருந்தது.

நான் விபரத்தைச் சொன்னேன்.

கேட்டதும் அவன் முகம் இறுக்கமானது.  “ஏன் சார்… அதான் அவசரமாய்ப் போயிட்டிருந்தோம்னு சொல்றீங்கல்ல?.. அப்புறமென்ன போயிட்டே இருக்க வேண்டியதுதானே?… இதைப் பிடிச்சிட்டு வந்து எங்களை உசுரெடுக்கறீங்களே”

அவனின் அந்தப் பேச்சு என்னைக் கோபமாக்க, ஜீவகாருண்யத்தைப் பற்றி ஆவேசமாகப் பேச ஆரம்பித்தேன்.  என் பேச்சு அவனுக்கு ரொம்ப போரடித்ததோ என்னவோ  “சரி… சரி.. அதோ… அந்த டேபிள் கால்ல கட்டிட்டு… உங்க பேரு… மொபைல் நெம்பரையெல்லாம் அந்த நோட்டுல எழுதி வெச்சிட்டுப் போங்க!” என்றான்.

அவன் சொன்னபடி செய்து விட்டு, அங்கிருந்து வெளியேறி, பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன் வாட்சைப் பார்த்தேன். 08.30.

தியேட்டரை நோக்கி முறுக்கினேன்.

தியேட்டர் இருந்த ரோடு முழுதும் மனிதத் தலைகள். ராட்சத கட்அவுட்டுகள்… பேனர்கள்… தோரணங்கள்… மாலைகள்.

 “சார் முதல் ஷோ ஆரம்பிச்சாச்சா?” பைக்கில் அமர்ந்தபடியே ஒருவனிடம் கேட்டேன்.

அவன்  என்னை மேலும், கீழும் பார்த்து விட்டு, “ஆரம்பிச்சு… ஒன்றரை மணி நேரமாச்சு… ஏழு மணிக்கு சார் முதல் ஷோ” என்றான்.

தர்ஷனின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூட தைரியமில்லை எனக்கு.  யோசித்தேன். “எப்படி இவனைச் சமாதானப்படுத்தறது?”

நேரே ஒரு ஷாப்பிங் மாலுக்கு வண்டியைச் செலுத்தி, அங்கிருந்த ரெஸ்டாரெண்டிற்கு அவனைக் கூட்டி சென்று, “என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்க!” என்றேன்.

முதலில் “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று பிகு செய்தவனை தாஜா பண்ணி, சாப்பிட வைத்து, வீட்டிற்குக் கூட்டி வந்தேன்.  “அப்பாடா…  ஓரளவுக்கு சமாதானம் ஆயிட்டான்”

மதியம் இரண்டு மணியிருக்கும், மொபைல் ஒலித்தது. ப்ளூ க்ராஸிலிருந்து அழைத்தார்கள்.  தர்ஷனையும் உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

இரண்டு இளைஞர்கள் காத்திருந்தனர்.  என்னைக் கண்டதும், தாங்க்ஸ் சொல்லி, என் கைகளைப் பிடிக்க,

 “ஏம்பா இப்படியா பொறுப்பில்லாம இருப்பாங்க?… நாங்க இங்க கொண்டு வரலேன்னா இன்னேரம் அது செத்திருக்கும்” கோபமாய்ச் சொன்னேன்.

 “இல்ல சார்…. காலைல எங்க டாடி வாக்கிங் கூட்டிட்டுப் போகும் போது நழுவ விட்டுட்டார்… அது ஓடிடுச்சு… அவரால துரத்திப் பிடிக்க முடியாம எங்களை அனுப்பிச்சாரு” ஒரு இளைஞன் சொன்னான்.

 “ஆனா… நீங்க ரெண்டு பேருமே அங்கே வந்த மாதிரியோ… தேடின மாதிரியோ தெரியலையே!” நான் கேட்க,

 “ஆமாம் சார்… நாங்க அங்க வரவும் வரலை!… தேடவும் இல்லை!…  எங்களுக்கு வேற ஒரு முக்கிய வேலை இருந்திச்சு… அதான் அப்பாகிட்ட “சரி… பிடிச்சிட்டு வர்றோம்”னு சொல்லிட்டு அந்த வேற வேலையைப் பார்க்கப் போயிட்டோம்!”

 “அது என்ன அவ்வளவு முக்கியமான தல போற வேலையா?” கேட்டேன் எரிச்சலாய்.

 “இல்ல சார்… அது… வந்து”

அவர்களின் தயக்கத்தில் ஒரு திருட்டுத்தனம் இருப்பதாய் எனக்குப் பட, “உண்மையச் சொல்லுங்க உங்க அப்பாவை ஏமாத்திட்டு… நாயைப் பிடிக்காம எங்க போனீங்க?” மிரட்டினேன்.

 “வந்து… சார்… இன்னிக்கு எங்க தலைவர்… தல படம் ரிலீஸ்!… முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி வெச்சிருந்தோம்… அதான் அதை விட முடியாம இதை விட்டுட்டோம்!”

எனக்கே என்னை ஓங்கி அறைந்து கொள்ளலாம் போலிருந்தது.

தர்ஷன் எங்கோ பார்த்து, நக்கலாய்ச் சிரித்தான்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    என்பும் உரியர் பிறர்க்கு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை