sahanamag.com
சிறுகதைகள்

தலைப்பில்லா காவியம் (சிறுகதை) – ✍ திருதர் தாசன், சிவகங்கை மாவட்டம் (பனிரெண்டாம் வகுப்பு)

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

திடீரென “பேரான்டி” என்ற பாசக்குரல். அச்சத்தத்தை கேட்டவுடன், மகிழ்ச்சியால் மனம் நிறைய, தாத்தாவை நோக்கி கால்கள் படையெடுத்தன.

அம்மா உடை மாற்ற கட்டளையிட்டார். உடை மாற்றி வீட்டு பாடங்களை முடிப்பதில் கவனம் கொண்டிருந்தேன்.

இரவு எட்டு மணி இருக்கும் போது, அரிசியும் உளுந்தும் கலந்த மாவின் வாசமும், நெய்யின் வாசமும் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தன.

வீட்டு பாடம் கூட முடிக்கவில்லை. கையில் தட்டு, வாயில் தோசை புதினா சட்னியுடன் சுவைத்து கொண்டிருந்தேன். நன்றாக உணவருந்தினால் சொல்லவா வேண்டும், உடனே உறக்கமும் வந்ததே.

புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு உறங்க சென்ற போது, துருப்பிடித்த சாளரத்தின் வழியே கண்ட காட்சி கண்களை கர்ந்தது. வானம் வெண்ணிலாவுடன் கைகோர்த்த காட்சி, அப்படியே உறங்க ஆரம்பித்தேன்.

கண்களை மூடியது  தான் தெரியும். அப்படியே உறங்கி விட்டேன். நடுச்சாமம் பனிரெண்டு மணி இருக்கும் ஊரின் நடுவே அழுகை குரல்

“ஐயோ அம்மா… காப்பாத்துங்க” என்று கேட்டது.

படக்கென்று எழுந்து கொண்டேன். யாருக்கு என்ன ஆயிற்று என்று ஆராய சத்தத்தின் இருப்பிடத்தை அறிய கூர்ந்து கேட்டேன்.

 யாரும் எதிர்பார்க்காமல், திடீரென தாத்தா, “இவனுங்களுக்கு வேற வேல இல்லை, குடிச்சு சொத்தை அழிக்கறது, கடைசில செத்து போறது” என்று அரைதூக்கத்தில் கூறினார்

சற்று பயத்துடன் இருந்த நான், சில நிமிடங்களிலே உறங்கி விட்டேன். கனவுகளில் நான் ஆழ்ந்து கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் ஒரு சப்தம். அது கொஞ்சம் வேறுபட்டு இருந்தது 

விழித்துப் பார்த்தால்  படுத்திருந்தவர் ஒருவர் கூட அருகில் இல்லை. ஏனென்றால், விடிந்து விட்டது. அச்சப்தமானது, ஆதிப்பறை இசையும், மங்கள இசையான நாதஸ்வரமும் ஆகும்.

துள்ளி குதித்து எழுந்து, மகிழ்ச்சியுடன் அந்த நாளை கழிக்க தொடங்கினேன். செய்திதாள் வாசிப்பில் மூழ்கி கிடந்த தாத்தாவிடம், “தாத்தா… என்ன எங்கேனும் விசேஷமா? மங்கள சப்தங்கள் ஒலிக்கிறதே” என்று கேட்டேன்

“இல்ல பேராண்டி. உன் கூட படிப்பானே மரியான், அவன் அப்பன் பிச்சைமுத்து நேத்து இரவுல வயித்து வலியில செத்துட்டான்னு பேசிக்குறாங்க. எல்லாத்துக்கும் சாராயம் தான் காரணம்.

பிச்சைமுத்து அப்பன் எவ்வளவு சொத்து சேத்து வச்சுருந்தான். எல்லாம் இந்த பயலுக்குத் தான், இவன் குடிச்சே அழிச்சு புட்டான். இனி அவன் குடும்பம் கஷ்டப்படப் போகுது” என்று இரக்கத்துடன் கூறினார்.

‘என் நண்பனுக்கா இவ்வளவு கஷ்டமும்’ என்று சோகமானேன்

அப்போது தான் அப்புவின் நியாபகம் வந்தது. அப்பு இருக்கும் இடத்திற்கு சென்று, அவனிடம் விளையாடிய பின், மனம் சற்று சமாதானமானது போல் உணர்ந்தேன்

பள்ளி செல்ல நேரம் ஆனதால், பள்ளி செல்ல தயாராகி விட்டேன்.

ஒரு வாரம் கழித்து மரியான் பள்ளிக்கு வந்தான்

அவனிடம் சென்று, “நண்பா… நீ ஒரு வாரம் கிழித்து வந்திருக்கிறாய். நடத்திய பாடங்களை விளக்கி கூறுகிறேன் கேளு” என ஒரு மணிநேரம் கல்வி பற்றிய கலந்துரையாடல் முடிந்தது.

நான் அவனிடம், “அப்பா எவ்வாறு இறந்தார்” என்று கேட்டேன்

அவனோ “எல்லாம் சாராயம் தான்” என்றான்

அந்த இரண்டு சொற்கள் வாயிலாக, அவனின் ஒட்டு மொத்த துக்கத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவன் இன்னும் அப்பா இறந்த துக்கத்தில் இருந்து மீளவில்லை என்பதையும் அவன் முகம் உணர்த்தியது

ஆதலால் அவனிடம் அதைப் பற்றி மேலும் பேசி வருத்த விரும்பாமல் பேச்சை மாற்றினேன்

ஆனாலும்  அப்பாவை  இழந்த சோகத்தில் இருந்து அவன் நிறைய நாட்கள் மீளவில்லை. ஏனென்றால், மரியானின் அப்பா அவன் மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பார்

அதை நான் அவன் வீட்டிற்கு சென்றபோதெல்லாம் பார்த்து இருக்கிறேன்.  அவன் எதை  கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுவார், நல்ல  குணம் கொண்டவர்

பள்ளி முடிந்து வீடு  திரும்பும் போது  என் நண்பன்  மரியான் மட்டும் குறிப்பிட்ட இடம் (சரியாக கூற வேண்டும் என்றால் அது ஒரு காடு) வந்தவுடன், பிரிந்து சென்றான்.

எல்லாரும் பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில்  காலடி எடுத்து வைத்தோம். கல்லூரி படிப்பிற்காக, நான் கோயம்புத்தூர் சென்று விட்டேன். மரியான் ஊரின் அருகிலுள்ள கல்லூரிலேயே சேர்ந்து விட்டான்

முதல் வருடத்தை முடித்து வந்த  விடுமுறையை, நூலகத்தில் கழிக்க விரும்பினேன். ஆதலால் கல்லூரி விடுதியிலேயே தங்க  வேண்டியதாய் இருந்தது.

என்னை தொடர்பு கொள்ள பல்வேறு சாதனங்களும் முறைகளும் இருந்தால் கூட, கடிதத்திற்கு ஈடான ஒன்று இல்லை என்பது  தாத்தாவின் கருத்து. ஆதலால், அவருக்கு என் நினைவு வந்தால், கடிதம் எழுத தொடங்கிவிடுவார்.

நானும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தாத்தாவிற்கு பதில் கடிதம் எழுதி  விடுவேன். ஒருநாள், எப்பொழுதும் கடிதம் கொண்டு வரும் அண்ணன் பழனிமுத்து அன்றும் வந்தார்.

எனக்கான கடிதத்தை விடுதி காப்பாளரிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். ஏதோ அவசரமான வேலை போல என எண்ணிக் கொண்டே கடிதத்தை பெற்று அறைக்கு சென்றேன் 

கடிதம் படிக்க தொடங்கிய போது தெரியவில்லை, எனக்கொரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது  என.

கடிதத்தில் தாத்தா கூறியதாவது, “உன் கூட படிச்சானே பிச்சைமுத்து மவன் மரியான், அவன போலீஸ் புடுச்சுட்டு போய்ட்டாங்க. என்னனு தெரியல பேராண்டி, ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா பேசிக்குறாங்க. அவன் திருடிட்டானு கூட பேசிக்குறாங்க. ஊர் தலைவரெல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்காங்க.

நீ எப்புடி இருக்க பேரான்டி. நான் நல்லா இருக்கேன், அப்பு தான் கொஞ்சம் முடியாம இருக்கு. இப்போ கொஞ்சம் பரவால்லை. ஏரியூர் டாக்டர் வந்து ஊசி போட்டுட்டு போனாரு.

மாரியம்மம் கோவில்  திருவிழா வருது, உன் வேலையெல்லாம் முடுச்சுட்டு சீக்கிரம் வந்துரு பேராண்டி” என்றதுடன்  கடிதத்தை முடிந்து இருந்தார்  தாத்தா.

ஆனால் நான் அதிர்ச்சியில் இருந்து இன்னும் விலகவில்லை. பள்ளியில் அமைதியாக இருக்கும் மரியானா போலீஸ் பிடித்து போயிருக்காங்க என்று ஒரே ஆச்சர்யம்.

அப்படி என்ன செய்து விட்டான் என ஆராய முற்பட்ட போது, கைபேசியை எடுத்து பார்த்தேன். அதிலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதிலும் எங்கள் ஊர் பேச்சு தான்.

 எங்கள் ஊரில் மது அருந்திய சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மதுவில்  பெயர் அறியா விஷங்கள் உள்ளது  என்பது தெரிய வந்துள்ளதாம் 

மது பிரியர்கள் உயிர் பயத்தில் நடுங்கி கொண்டிருந்தனர். எப்படி அதில் விஷம் வந்தது என்பது  பலருக்கும் புரியா புதிராகவே இருக்க, விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தக்க விவரங்கள் வெளிவந்தன

மது சேமிப்பு கிடங்கில், இருபது வயது மதிக்கத்தக்க நபர் யாரோ அதில் ஏதோ திரவத்தை கலக்குவது CCTV காட்சிகளில் தெரிந்தது

அவரின் கைரேகைகளையும் அந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை பிடித்து விட்டனர்.

19 வயது தான், உடம்பிலோ 45 கிலோ சதையை கொண்டு, பார்ப்பதற்கு செல்வந்தரின் மகன் போல இருந்தான் அந்த ஆள். அது வேறு யாரும் அல்ல, என் நண்பன் மரியான் தான்

இவனா அந்த செயலை செய்துருப்பான் என அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர் 

விசாரித்த போது அவன் கூறியதாவது, “நான் பல நாட்களாக, எங்கள் ஊரில் உள்ள காடுகளுக்கு சென்று பல விஷ மருந்துகளை சேகரித்து வந்தேன். மது குடித்து பல அண்ணன்களும் பெரியவர்களும் அடிமையாகி இறந்து, அதன் முலம் பல்வேறு குடும்பங்கள் நடுத்தெருவிலும் வறுமையிலும் தத்தளிக்கின்றனர். இது போன்று யாருக்கும் நிகழக்கூடாது என எண்ணியே, சேகரித்த விஷங்களை அவற்றில் கலந்து விட்டேன்” என்றான்

இதைக் கேட்ட பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதைக் கேள்விப்பட்ட மது  பிரியர்கள், உயிர் பயத்தில் மதுக் கடை பக்கம் கூட செல்லவில்லை.

சிலர் அறியாமையில் குடித்து விட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், 75 விழுக்காடு மது பிரியர்கள் மது பழக்கத்தை கை விட்டனர். மது குடிக்கலாம் எனும் எண்ணத்தையும் சேர்ந்தே அழித்துவிட்டான் மரியான்.

“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

                 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!