எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
உக்காந்து இப்ப அசை போடறப்ப பழைய ஞாபகங்கள் ஒவ்வொண்ணா துரத்திண்டு வரது.
இப்போ மொபைல் ஃபோன் கைல எப்படி பளபளனு மின்னறது,இது அந்தக் காலத்துல இருந்திருந்தா என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும்.
நான் கல்லூரி படிப்பை முடிச்சிட்டு தீவிரமா வேலை தேடிட்டிருந்த நேரம்.என்ஜினியரிங் படிச்சா வேலைக்கு கொத்திண்டு போயிடுவாளாக்கும்னு மாமா சொன்னதைக் கேட்டு அம்மா அதைதான் படிக்கணும்னு அப்பா கிட்ட பிடிவாதம் பண்ணி தகுதிக்கு மேல செலவு
செஞ்சு படிக்க வச்சிட்டா. 6 மாசம் ஆச்சு யாரும் கொத்த வரலை
இது வரை. தினசரி லைப்ரரி போய் டைம்ஸ் ஆஃப் இண்டியால இருந்து வாண்டட் விவரம் குறிச்சிண்டு வரது மாங்குமாங்குனு பயோ டாடா
எழுதி போஸ்ட் ஆபீஸ் போய் தபால்ல அனுப்பறது இதுதான் இப்போதைக்கு வேலை.
அது ஒரு ஜனவரி மாச குளிர்க் காலை நேரம்.அம்மா ஏதோ சொல்லிண்டே இருக்கா, நான் இழுத்துப் போத்திண்டு கலையற தூக்கத்தை கட்டாயமா தொடர முயற்சி பண்றேன்.
பக்கத்து போர்ஷன் பரமேஸ்வரன் மாமா வீட்டு டெலிஃபோன் விடாம அடிச்சு என் தூக்கத்தை கலைக்கறது.பரமேஸ்வரன் மாமா டெலிஃபோன்ஸ்ல என்ஜினியரா இருக்கார், அவங்க போர்ஷன்ல மட்டும்தான் எங்க தெருவுலயே ஃபோன்.
அப்ப நாலு டிஜிட் நம்பர்தான், அவங்க நம்பர் 4343 இந்த தெருவுல எல்லாருக்கும் மனப்பாடம்.யாருக்கு வேணா ஃபோன் வரும், காத்திருந்து பேசலாம் பெரிய மனசு அந்த மாமாவுக்கும் மாமிக்கும்.
சோம்பல் முறிச்சிண்டு எழுந்தேன், அம்மா பிடிச்சிண்டுட்டா.
“ஏண்டா எது சொன்னாலும் காதுலயே போட்டுக்க மாட்டேன்றே,
நீ பானுவோட கல்யாணத்துக்கு வரயா இல்லையா அப்பா கேக்கச் சொன்னார், ரயில் டிக்கட் இன்னிக்கு போடப் போறார்”
“என்னம்மா, பத்திரிகை வந்தவுடனேயே சொன்னேனே, நானும் பாம்பே வருவேன்னு”
“சரி அடுத்த திங்கக் கிழமை புறப்படறோம், அப்பா ஏற்கனவே
உனக்கும் சேத்துதான் டிக்கட் போட்டிருக்கார்.”
தாதர் ஸ்டேஷன் ஒரே இரைச்சலா எங்கே பாத்தாலும் கூட்டம்,எங்கே பாத்தாலும் பரபரப்பு.ஏன் எல்லாரும் இப்படி ஓடறாங்க புரியலை. நம்ம திருச்சி எவ்வளவு அமைதியா இருக்கு இதை கம்பேர் பண்ணினா.
கூட்டத்துல வெளில நீந்தி வந்து ஒரு டாக்சி பிடிச்சு மாதுங்கானு
ஒரு இடத்துல கல்யாண மண்டபத்துக்கு வந்தோம். பம்பாய் நகரம் வியப்பா இருந்தது.
வசதியான கல்யாண மண்டபம்,எங்களுக்கு ஒரு அறை ஒதுக்கியிருந்தார் சித்தப்பா.பானு அவரோட ஒரே பொண்ணு.
சித்தி,சித்தப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம் நாங்க எல்லோரும் குடும்பத்தோட போனதுல.
முதல் நாள் ஜானவாசம், நம்ம ஊர் மாதிரி தடபுடல் டப்பா ஜீப்ல மாப்பிள்ளை அழைப்பெல்லாம் இல்லை. மண்டபத்துக்குள்ளே சின்ன வினாயகர் கோவில்ல இருந்து, நாதஸ்வரம், அது போக பேண்ட் வாத்யம் முழங்க ஹால் வரை. ஆனா அதுலயே அவ்வளவு அமக்களம்
அழகழகா டிரஸ் போட்டுண்டு பசங்க பொண்ணுங்க டான்ஸ் ஆடிண்டு
அமர்க்கள ஆச்சரியம். நான் “ஆட் மேன் அவுட்” எட்டுமுழ வேஷ்டி, முழுக்கை சட்டையோட.
திடீர்னு ஒரு சுடிதார் போட்ட அழகான ஒரு பொண்ணு, “ஏய் நீ பானுவோட அண்ணா ஶ்ரீதர்தானே, ஏன் ஒதுங்கி நிக்கறே வா கொஞ்சம் உன் ஆட்டத் திறமையை காமி, எம்.ஜி.ஆர் மாதிரி சிவப்பா இருந்தா போறாது, கொஞ்சம் சிரிச்ச முகமா ஆடணும்” பொறிந்து தள்ளி என் கையை பிடிச்சு இழுக்கறா.
நான் திகைச்சுப் போயிட்டேன்.ஒரு பொண்ணுக்கு இவ்வளவு தைரியமா. அவ விடல்லை, அந்த கூட்டத்தோட நானும் கொஞ்சம் கூச்சத்தோட ரெண்டு மூணு ஸ்டெப் போட்டவுடனதான் விட்டா.
அதுக்கப்பறம் ரிசப்ஷன் ஹால்ல எல்லாருக்கும் குளிர் பானம் கப்ல கொடுக்கறப்ப ஒரு புன்னகை,டைனிங் ஹால்ல பாக்கறப்ப ஒரு சின்ன புன்னகை, வேற என்ன அந்த வயசு என் மனசுல டக்னு உக்காந்துட்டா.
பேர் ஷர்மிளானு தெரிஞ்சிண்டேன்.பானுவுக்கு நெருங்கின தோழி, எங்களுக்கு ஏதோ தூரத்து உறவும் கூட.
அன்னிக்கு நைட், அந்த பெரிய ஹால்ல வட்டமா உக்காந்து அஞ்சாறு பேர் தாம்பூலப் பை போட்டிண்டிருந்தா. அதுல அந்த ஷர்மிளாவும். நான் பொதுவா நானும் ஹெல்ப் பண்ணலாமானு கேட்டேன். ஷர்மிளா புன்னகையோட கொஞ்சம் நகர்ந்து தன் பக்கம் இடம் கொடுத்தாள்.
கொஞ்ச நேரம் அமைதியா பையை ரொப்பி அடுக்கினோம்.l
கிசுகிசுப்பா நான் கேட்டேன், “நீ என்ன படிக்கிறே”
மெதுவே ரெண்டு பேரும் எழுந்து வெளியே வந்தோம்.
என் முகத்தை அருகில் பாத்து, “பி.எஸ்சி முடிச்சிட்டு வேலை வேட்டை.டெலிஃபோன்ஸ்ல வேலைக்கு இன்டர்வ்யூ கொடுத்திருக்கேன் கிடைச்சா, புனே,நாக்பூர் எங்கே வேணா போகணும்.”
“ஏன், திருச்சி பக்கம் கிடைக்காதா?”
“அச்சோ எனக்கு தமிழே சரியா வராது, மராட்டி ஹிந்திதான் ஃப்ளூயன்டா வரும். அதுவுமில்லாம அங்கே ஏன் வரணும்”
“எனக்காகத்தான்”
“பார்ரா பாத்து ஒரு நாள் முழுசா ஆகலை, இவருக்காக மெட்ராஸ் வரணுமாமே,இங்கே என் பிரண்ட்ஸ்,பேரண்ட்சை விட்டுட்டு”
“ஷர்மி எனக்கு உன்னை பிடிச்சிருக்கு,உன்னைப் பாத்துட்டே இருக்கணும் போல பேசிட்டே இருக்கணும் போல, என்னமோ நெஞ்செல்லாம் ஏதோ பொங்கி வழியறது,இதுதான் லவ்னா, ஐ லவ் யூ”
கொஞ்ச நேரம் என் முகத்தையே பாத்த அவ, “இது ரொம்ப சீக்கிரம்.
தெரியலை எல்லோர் கூடவும் சகஜமா பேசுவேன். நீ கொஞ்சம் ஸ்பெஷலாதான் தெரியறே. ஆனா பாப்போம், என்னை ரஷ் பண்ணாதே ஓகேயா”
அதோ அம்மா வரா, எங்களை பாத்துட்டா. பக்கத்துல வந்து,
”அட ஷர்மிளாவா என்னடியம்மா பண்றே ரொம்ப வருஷத்துக்கு
முன்னால உங்க பாட்டியோட ஶ்ரீரங்கம் வந்தே அப்ப பாத்ததுதான். படிக்கறயா எத்தனாவது? எங்க ஶ்ரீதரை பழக்கப் படுத்திண்டயா எப்படி, அவன் உம்மணா மூஞ்சி ஆச்சே யாராண்டையும் பேச மாட்டானே”
“இவரைப் பாத்தா அப்படித் தெரியலையே, தாம்பூலப் பை போடறப்ப பாத்தேன் நல்ல அம்பியா இருக்காரேனு பேசினேன்”
“சரி அம்மா அப்பாவோட ஒரு தடவை திருச்சிக்கு வா” என்னை
ஒரு மாதிரியா பாத்துண்டே அம்மா உள்ளே போயிட்டா.
அதுக்கப்பறம் பொதுவா எதோ பேசினோம், “நாளைக்கு முகூர்த்தம் முடிஞ்ச உடனே நாங்க கிளம்பறோம். ஷிர்டி போயிட்டு புனால இருந்து மெட்ராஸ்.அங்கேருந்து திருச்சி. நாளைக்கு பேச நேரம் இருக்குமா தெரிலை. சட்டைப் பைல இருந்த ஒரு துண்டுப் பேப்ர்ல 4343 டெலிபோன் நம்பரை எழுதிக் கொடுத்தேன்,”இது பக்கத்து போர்ஷன் நம்பர் முடிஞ்சா எப்பவாவது ஞாபகம் வந்தா கூப்பிடு.”
அதை மடிச்சு தன் சோளிக்குள்ளே வச்சிண்டா,அப்படியே என் கண்ணை உத்து ஒரு நிமிஷம் பாத்துட்டு உள்ளே ஓடிப் போயிட்டா.
அதுக்கப்பறம் பேச வாய்ப்பு கிடைக்கலை. முகூர்த்த டைம்ல அப்பப்ப கண்கள் பார்த்துக் கொண்டன. புறப்படறப்ப தேடினேன் கண்லயே படலை. மனம் பூரா ஒரு கனத்தோட புறப்பட்டேன்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings