ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
வந்தனாவின் மனமும் கரங்களும் ஒருசேர பரபரவென்று செயல்பட்டுக் கொண்டிருந்தன. நாளை மறுநாள் கிளம்பி விடுவார்கள் மகனும் மருமகளும் பேத்தியும்.
காரத்தட்டை அவர்களுக்கு மிகவும் பிடித்தது. வந்தனாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் தட்டைகள் அவள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம்.
“அம்மா நீ எப்படிம்மா இவ்வளவு டேஸ்டியா தட்டை பண்ணறே?” என்று 35 வயது மகன் மகேஷ் வந்தனாவின் கழுத்தை கட்டிக் கொண்டு கொஞ்சுவான்.
வந்தனாவும் சிரித்தவாறே “போடா” என்று பெருமிதத்துடன் செல்லமாக அவனை முதுகில் தட்டுவாள்.
அரிசிமாவில் பதமாக உப்பு, காரப்பொடி, பெருங்காயப்பொடி, எள்ளு வெண்ணெய், வறுத்த உளுத்த மாவு, சேர்த்து வந்தனா செய்யும் தட்டைகள் மிகவும் ருசியானவை.
பவுன் கலரில் உள்ளங்கை அகலத்தில் பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும். கரகர முறுமுறு என்று இருக்கும் இந்தத் தட்டைகள் நாவில் போட்டதுமே கரைந்து விடும்.
நான்கு வார விடுமுறையில் வந்திருந்தனர் மஞ்சு மகேஷ் மற்றும் பேத்தி ஸ்வேதா. அவர்கள் கிளம்புவதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில் ஸ்வேதா ஆசையுடன் பாட்டியிடம் வந்து “தட்டை பண்ணி தா பாட்டி என் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் கொண்டு கொடுக்கிறேன்” என்றாள்.
பேத்தி கேட்ட பிறகு அப்பீலும் உண்டோ? கனகுஷியுடன் களத்தில் இறங்கி விட்டாள் வந்தனா.
மருமகள் மஞ்சு “நானும் ஹெல்ப் பண்றேன் அம்மா” என்று வந்தாள். மருமகளை வேலை வாங்க வந்தனாவின் மனம் இடம் கொடுக்கவில்லை.
“நீ போய் பேக்கிங் வேலை பாரு ஏதாவது மறந்திட போற. வாங்க வேண்டியது ஏதாவது இருந்தா ஷாப்பிங் போயிட்டு வா. தட்டை பண்றது என்ன பெரிய கஷ்டம்? நானே பண்றேன்” என்றாள் வந்தனா வாஞ்சையுடன்.
தட்டை செய்ய தேவையான பொருட்களை மள மளவென்று சேகரம் செய்தாள் வந்தனா. உளுத்தம் பருப்பை பொன்வறுவலாக வறுத்து மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொண்டாள். எள்ளை அலசி வடிகட்டியில் நீர் வடிய வைத்தாள்.
வந்தனாவிற்கு சூடாக டீ அருந்தினால் தேவலை போலிருந்தது. பாலை சுட வைத்து டீ தயாரித்து வைத்துக் கொண்டாள். பேசினில் அரிசி மாவை மற்ற பொருட்களுடன் இட்டு வலது கையால் கலந்து கொண்டே இடது கையால் டீயையும் அருந்தினாள்.
“அப்பாடா இந்த சூடான டீக்கு தான் எவ்வளவு சக்தி” வந்தனாவின் உடல் முழுவதும் புத்துணர்வு வியாபித்தது. டீயை குடித்து முடித்துவிட்டு எவர்சில்வர் டபரா ஒன்றை கவிழ்த்து அதன் மீது தட்டைகளை தட்டி சூடான எண்ணையில் பொரிக்க தொடங்கினாள்.
கண்ணும் மனமும் கையும் ஒருசேர உழைத்தன. சுமார் ஒரு மணி நேரத்தில் 100 தட்டைகள் தயாராகி விட்டன. தட்டைகளின் மணம் அப்பார்ட்மெண்ட் வளாகம் முழுவதும் பரவியது.
“பாட்டி பாட்டி சூப்பர்” ஸ்வேதா பாட்டியை இறுக அணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தாள். மஞ்சுவும் மகேஷும் ரசித்து சிரித்தனர்.
“அம்மா டேஸ்ட் பிரமாதம்” மகேஷ் ஐந்தாறு தட்டைகளை கபளீகரம் செய்தான்.
“ஊருக்கு எடுத்துண்டு போறதுக்கு பாக்கி வைடா” வந்தனா செல்லமாக மகனை கடிந்து கொண்டாள்.
இதோ பிளைட் கிளம்பி விட்டது. வந்தனா ஆனந்தக் கண்ணீருடன் அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்து அமர்ந்தாள்.
பேத்தி அணைத்துக் கொண்ட சுவாசம் இன்னும் அவள் உடலில் மிச்சம் இருந்தது. முகம் கழுவ உடை மாற்ற மனமின்றி அப்படியே சோபாவில் அமர்ந்திருந்தாள்.
24 மணி நேரம் 24 நிமிஷங்கள் ஆக போய்விட்டதோ?
“அம்மா நாங்கள் சௌகரியமா வந்து சேர்ந்துட்டோம்” மகேஷின் போன்.
அவர்கள் கிளம்பிப் போய் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டன. ஸ்வேதா தட்டைகளை தன் சிநேகிதிகளுக்கு கொடுத்து மகிழ்ந்ததாக போனில் கூறியது கேட்டு வந்தனா ஆனந்தம் அடைந்தாள்.
“வந்தனா, தட்டை இரண்டு இருந்தா குடேன்”
கணவரின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் வந்தனா.
“அடடா தீர்ந்து போச்சுன்னா இதோ நிமிஷமா பண்ணி தரேன்”
“வேண்டாம் வேண்டாம் இப்போ சிரமப்படாதே. நாளைக்கு பண்ணிக்கலாம்.”
“கொஞ்சமா பண்றேன் “
கணவரின் ஆட்சேபணையை பொருட்படுத்தாமல் சமையலறைக்குச் சென்று மீண்டும் தட்டை செய்யும் பணியில் ஈடுபட்டாள் வந்தனா.
மேடையிலேயே மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடலாம் என்று எடுத்தாள். ஆனால், அதில் என்ன? ஏதோ கறுப்பாக அடியில்!!! வந்தனா விரல்களால் தொட்டுப் பார்த்தாள். எள். இந்த பாத்திரத்தில் எப்படி வந்தது எள்? ஏது எள்? குழம்பியது வந்தனாவின் மனம்.
குபீர் என்று நினைவிற்கு ஒரு விஷயம் வந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு தட்டை தயாரித்த போது டீ போட்டு சாப்பிட்டது நினைவிற்கு வந்தது. டீ வடிகட்டியில் எள் இருந்ததால் அதை பாத்திரத்தில் தட்டி மூடி வைத்து விட்டு அதே வடிகட்டியில் டீ வடிகட்டி இருக்கிறாள். இப்போது புரிந்தது. உடல் விதிர்விதிர்த்தது.
அந்த டீச்சக்கையை எள் என்று நினைத்துக் கொண்டு மாவில் கொட்டி பிசைந்து இருக்கிறாள். பாத்திரத்தை மூடி ஓரமாக வைத்து விட்டதால் கவனிக்கவில்லை. ஆனால் தட்டையில் எள் வாசனை ஏன் வரவில்லை என்று சந்தேகப்பட்டது நினைவிற்கு வந்தது வந்தனாவிற்கு.
தட்டை நன்னாருக்கு நன்னாருக்கு என்று சாப்பிட்ட பேத்தியையும் மகனையும் மருமகளையும் நினைத்து மனதிற்குள் மகிழ்ச்சியும் வருத்தமும் அடைந்தாள் வந்தனா.
“ஒருவருக்குமே கண்டுபிடிக்க தெரியவில்லையே. ஏன் பண்ணின நமக்கே தெரியவில்லையே”
வந்தனாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“டீ தட்டை நன்றாக இருந்ததா?” மகனையும் மருமகளையும் கேட்க நினைத்ததை தவிர்த்து விட்டாள் வந்தனா.
மாளாத அன்புடனும் பாசத்துடனும் செய்யும் எதிலும் சிறுகுறை இருப்பினும் அது வெளியில் தெரியாதோ?
ஏற்றுக் கொள்பவர்களும் மாசற்ற அன்புடன் இருப்பதால் தான் குறை அவர்களுக்கும் தெரிவதில்லை போலும். வந்தனாவின் மனம் நிறைந்து காணப்பட்டது.
அன்பிற்கும் பாசத்திற்கும் மாற்றுதான் உண்டோ?
(முற்றும்)
GIPHY App Key not set. Please check settings