sahanamag.com
சிறுகதைகள்

தாமரைச்செல்வி (சிறுகதை) – ✍ வெங்கட்டரமணி 

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ம்மா மணிமேகலைக்கு இரண்டு நாட்களாக ஜுரம்.  இருமலும் சளியும் சேர்ந்து இருக்கவே, ரகுவை கொரோனா பயம் தொற்றிக் கொண்டது. 

“ஏம்மா இந்த சமயத்துல நீ கடை போடணுமா.. எவன் எவன் வருவான்னே தெரியாது..  ஒன்னு கிடைக்க ஒன்னு ஆச்சுன்னா என்னம்மா செய்யறது?” என்று அம்மாவை சத்தம் போட்டான் ரகு.

“உனக்கும் மூணு மாசமா வேலை இல்லை, அப்பறம் சோத்துக்கு என்ன வழி? அதான் விடாம கடை போடறேன்.  எப்பவும் வர்ற சளி காய்ச்சல் தான், எல்லாம் சரியாயிடும் பயப்படாத” என்றாள் மணிமேகலை.  

“அம்மா, காய்ச்சல் குறைய மாட்டேங்குதே அதான் கொஞ்சம் பயமாயிருக்கு. எதுக்கும் இன்னும் ரெண்டு நாளைக்கு காய்ச்சல் மாத்திரையைப் போடு, சரியாகலன்னா கொரோனா டெஸ்ட் எடுத்திறலாம்” என்றான் ரகு. 

அடுத்த இரண்டு நாட்கள் காய்ச்சல் குறையவில்லை.  அதோடு, வறட்டு இருமலும் அதிகமாகவே, அம்மாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் ரகு.  

இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தவர்கள், பரிசோதனை முடிவுகள் அடுத்த நாள் தான் வரும் என்றும், அதுவரை அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளச் சொன்னார்கள். 

கொரோனா நிலவரத்தை தினந்தோறும் தொலைக்காட்சியில் பார்த்த ரகுவுக்கு, மனம் பதைபதைப்பாக இருந்தது.  முடிவு நல்லதாய் இருக்க வேண்டுமே என்று அவன் வணங்கும் தெய்வம் தேவி கருமாரியம்மனை வேண்டிக் கொண்டான்.

மறுநாள் ரகு, மணிமேகலை இருவருக்குமே கொரோனா பாசிட்டிவ் என்று சொன்னாலும், ரகுவுக்கு ஆரம்பநிலை பாதிப்பு என்பதால் அவனை வீட்டிலேயே இருந்து மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். 

மணிமேகலையை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அவர்கள் வீட்டு வாசற்கதவில், கொரோனா எச்சரிக்கைச் சுவரொட்டிகளை ஒட்டி விட்டுச் சென்றனர். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிமேகலையை, நீல நிற பாதுகாப்பு உடைகளை அணிந்த செவிலியர்களும் மருத்துவர்களும் கவனித்துக் கொண்டனர்.  

மருத்துவமனைக்குப் போகும் போது மிக தைரியசாலியாகப் போன மணிமேகலை, அங்கிருந்த சக நோயாளி மரணமடைந்ததைப் பார்த்ததும், சற்றே கலக்கமடைந்தாள். 

“கொரோனாவிலிருந்து மீண்டு வருவேனா?  ரகுவை மீண்டும் பார்க்க முடியுமா?” என்று பயந்தாள்.  

அவளுடைய கணவன் அவளையும் ரகுவையும் தவிக்க விட்டு விட்டு, வேறு ஒருத்தியுடன் போய் இருபத்தைந்து வருடங்களாகிறது. அதன் பின் அவன் எங்கிருக்கிறான் என்று இன்று வரை தெரியாது.    

தெருவோரம் காய்கனிக் கடை நடத்தி ரகுவை வளர்த்தாள். 

பத்தாம் வகுப்பு வரை தட்டுத் தடுமாறி படித்த ரகு, பக்கத்து வீட்டு எலெக்ட்ரிசியன் மனோகரனுடன் சேர்ந்து எலக்ட்ரிகல் வேலையைப் பழகிக் கொண்டான்.  இந்தக் கொரோனா காலத்தில், வீட்டோடு முடங்கிக் கிடக்கிறான்.  

அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தாள்.  ஆனால் நிச்சயமான அவனது கல்யாணம் இரண்டு மாதங்களுக்கு முன், பாதியிலேயே நின்று விட்டது. 

இப்போது மருத்துவமனையில் இருக்கும் மணிமேகலைக்கு அது தான் பெரிய கவலையாக இருந்தது.   தனக்குப் பிறகு ரகுவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலைப்பட ஆரம்பித்தாள். 

அப்போது தான் மணிமேகலைக்கு தாமரையின் ஞாபகம் வந்தது.   தாமரை இந்த மருத்துவமனையில் தானே செவிலியராக வேலை பார்ப்பதாகச் சொன்னாள்.

‘யாராக இருக்கும்’ என்று போகின்ற வருகின்ற செவிலியப் பெண்களை எல்லாம் பார்த்தாள்.   ஆனால், அனைவருமே நீல நிற உடையில் இருந்ததால், அவளால் தாமரையை அடையாளம் கண்டுகொள்ள  முடியவில்லை.   

அப்போது அவளருகில் வந்த ஒரு செவிலியரிடம், “ஏம்மா, இங்க தாமரைன்னு ஒரு பொண்ணு வேலை பாக்குதா?” என்று கேட்டாள். 

அதற்கு அந்த செவிலியப் பெண், “ஏம்மா கேக்கறீங்க?” என்று கேட்டாள்.

“இல்லம்மா, அந்தப் பொண்ணு எனக்குத் தெரிஞ்ச பொண்ணு.  அதான் கேட்டேன்” என்றாள் மணிமேகலை.   

அதற்கு மணிமேகலையை உற்று நோக்கிய அந்த செவிலியப் பெண், “இல்லம்மா தாமரைங்கற பேர்ல இந்த வார்டுல யாரும் இல்லம்மா. என்னோட பேரு செல்வி.  அந்த தாமரை எப்படிப் பார்த்துப்பாங்களோ, அதே மாதிரி நான் உங்களை கவனிச்சுக்கறேன்.  முதல்ல எதையும் நினச்சு பயப்படாதீங்கம்மா” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள் செல்வி. 

செல்வி தனிப்பட்ட முறையில் மணிமேகலையை கவனித்துக் கொண்டாள். அவளுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பதும், மாத்திரைகள் கொடுப்பதும், உடல் வெப்ப நிலை பரிசோதிப்பதும் என எல்லா வேலைகளையும் செல்வியே கவனித்துக் கொண்டாள்.   

“செல்வி, நீ என்னை நல்லா கவனிச்சுக்கரம்மா.  அங்க என் பையன் தான் என்ன செய்யறான்னு தெரியல” என்றாள் மணிமேகலை. 

“ஏம்மா, உங்க பையனுக்கு என்ன?” என்றாள் செல்வி. 

“அவனுக்கும் கொரோனான்னு சொல்லிட்டாங்க.   ஆனா, அவனை வீட்டுலயே இருக்கச் சொல்லி மருந்தெல்லாம் குடுத்தாங்க.   அவன் அதெல்லாம் போடறானான்னு தெரியல.   அதோட சாப்பாட்டுக்கு என்ன செய்யறான்னு தெரியல.  நான் வேற இங்க வந்து படுத்துட்டேனா. அவனுக்கு ஆக்கிப் போட யாரிருக்கா?” என்றாள் மணிமேகலை.

“உங்க பையன் என்ன சின்னப் பையனா?  சாப்பிடறதுக்கும் மாத்திரை போடறதுக்கும் சொல்லிக் கொடுக்கணுமா?” என்றாள் செல்வி.  

“அவனுக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு வைச்சிருந்தேன்னா நான் ஏன் அவனைப் பத்திக் கவலைப்படப் போறேன்.  இப்ப ஹோட்டல் எல்லாமே மூடியிருக்கறதால, கவலைப்படறேன்.  சாப்பாட்டுக்கு அவன் எங்க போவான்?” என்று மணிமேகலை சொல்லி முடிப்பதற்குள்,‘ஆ அம்மா, முடியலையே’ என்று ஒருவர் கூச்சலிட, செல்வி, ஓடினாள்.   

மறுநாள், செல்வி வந்த பார்க்கும் போது மணிமேகலைக்கு உடல் வெப்ப நிலை சீராகியிருந்தது. 

காலையில் சூடாக இட்லியும் சாம்பாரும் கொண்டு வந்து கொடுத்தாள் செல்வி.  சாப்பாடு சுவையாக இருந்ததாக உணர்ந்தாள் மணிமேகலை. 

“மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு செல்வி.  நான் இங்க ராணியாட்டம் இருக்கேன்.  பாவம் என் பையன் என்ன செய்யறானோ?” என்று சொல்ல,

“உங்க பையன் அங்க நல்ல இருப்பார், கவலைப்படாதீங்க” என்று சொன்னாள் செல்வி. 

“செல்வி அவன் ஒரு கிறுக்குப் பய.  மூணு  மாசம் முன்னால அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து நிச்சயம் பண்ணினேன்.  அவளும் உன்னைப் போல ஒரு நர்ஸ் தான்.  அதுக்குள்ளே பாழாய்ப் போன இந்த கொரோனா வந்துசேர்ந்துச்சு.   

நீயே சொல்லு செல்வி, கொரோனா நோயாளிகளைப் பார்த்துக்கிட்டா உங்களுக்கும் அது தொத்திக்குமா?   நர்ஸ் வேலையை விட்டாத் தான் அவளைக் கல்யாணம் பண்ணுவேன்னு ஒரே பிடிவாதமா சொல்லிட்டான்.  இதனால அவன் கல்யாணம் நின்னு போச்சு” என்றாள் மணிமேகலை.  

“அம்மா, நாங்க எங்களைப் பாதுகாக்கத் தான் இந்த உடையைப் போட்டிருக்கோம். அதையும் மீறி யாருக்காச்சும் வரலாம்.   அதுக்கு பயந்து எல்லாரும் இந்த வேலையை விட்டுட்டுப் போனா, உங்களைப் போல வரவங்களை யார் பார்த்துக்குவாங்க?” என்று கேட்டாள் செல்வி. 

“சரியாச் சொன்ன செல்வி.   இதை என் பையனுக்கு யார் சொல்லிப் புரிய வைக்கறது?” என்று புலம்பினாள் மணிமேகலை.  

அப்போது செல்வியின் கைபேசி ஒலித்தது.  அவளது பிரத்யேக உடையில் வைத்திருந்த கைபேசியை எடுத்து யாரென்று பார்த்தவள், என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். 

“ஏம்மா, போன் அடிக்குது… எடுத்துப் பேசாம என்ன யோசனை செய்யற?” என்று மணிமேகலை கேட்டதும், வேறு வழியின்றி பேசினாள். 

“ஹலோ, நான் ரகு பேசறேன்” என்று மறுமுனையில் பேசியவன், சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “என்னை ஞாபகம் இருக்குங்களா?” என்றான். 

“ம்ம்ம்.  சொல்லுங்க” என்றாள் செல்வி.    

“எங்கம்மாவுக்கு கொரோனான்னு அங்க கூட்டிகிட்டு போனாங்க.  அம்மா எப்படி இருக்காங்கன்னு எனக்குத் தெரியல.   அம்மாகிட்ட போனும் இல்ல.   எனக்கும் யாரைக் கூப்பிடறதுன்னு தெரியலை. அதான் உன்னை….உங்களைக் கூப்பிட்டேன்” என்றவன்

“அம்மா பேரு மணிமேகலை.   எப்படி இருக்காங்கன்னு கேட்டு சொல்ல முடியுமா?”  என்றான்.  

மணிமேகலையைத் திரும்பிப் பார்த்த செல்வி, “உங்கம்மா நல்லாயிருக்காங்க. சீக்கரம் வீட்டுக்கு வந்துடுவாங்க” என்று மெல்லிய குரலில் சொன்னாள். 

“அது போதுங்க.   ரொம்ப நன்றிங்க.   அம்மாவை நல்லாப் பார்த்துக்குங்க” என்று சொல்லி போனை வைத்தான் ரகு.  

மணிமேகலையின் உடம்பு சீராக முன்னேறியதால், மறுநாள் பூங்கொத்து மற்றும் நிவாரணப்  பொருட்களை வழங்கி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.   

வீட்டிற்கு வந்த மணிமேகலை, பையனும் குணமாகி இருப்பது கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தாள்.   

“அம்மா, தேவி கருமாரி, உனக்கு சீக்கரம் பொங்கல் படைக்க வரோம்மா” என்று தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெய்வத்திடம் தெரிவித்தாள்.   

“ரகு இங்கிருந்து ஆஸ்பத்திரி போறப்ப தைரியமாத் தான் போனேன் ஆனா உள்ள போய் அங்கிருக்கற நோயாளிகளைப் பாத்ததுக்குப் பிறகு, பயம் வந்துடுச்சு. அதோட நான் போய்ச் சேர்ந்த அன்னிக்கு, ஒருத்தர் இறந்து போயிட்டார்.   

அதைப் பார்த்த பின்னால, நான் உசுரோட திரும்பி வந்து உன்னைப் பார்ப்பேனா அப்படிங்கற பயம் வந்துடுச்சு.   நல்ல வேளையா சாமியே செல்விங்கற பொண்ணு வடிவத்துல வந்து எனக்கு தைரியம் சொன்னா. அதோட, நான் வீட்டுக்கு வர வரைக்கும், என்னை நல்லாப் பார்த்துக்கிட்டா. 

அந்தப் பொண்ணு இல்லன்னா, நான் இவ்வளோ சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வந்திருப்பேனான்னு தெரியல.   அந்தப் பொண்ணோட போன் நம்பரை வாங்கிட்டு வந்திருக்கேன்டா.  நமக்குத் தெரிஞ்சவங்க யாருக்காச்சும் கொரோனான்னா, இந்தப் பொண்ணுகிட்ட சொன்னா போதும்.   நல்லாப் பார்த்துக்கும்.   இந்தா.. அந்தப் போன் நம்பரை உன் போன்ல குறிச்சு வெச்சிக்க” என்று ஒரு துண்டுச் சீட்டை அவனிடம் நீட்டினாள்.   

அந்தப் போன் நம்பர் ஏற்கெனவே அவனது போனில் ‘தாமரைச் செல்வி’ என்ற பெயரில் பதிவாகி இருந்தது. 

“அப்ப அம்மாவை இவ்வளவு நாள் பார்த்துக்கிட்டது தாமரை தானா?”  என்று வியந்தான்.  

சற்று நேரம் அப்படியே யோசனையில் மூழ்கிய ரகு,  “அம்மா, நீ அந்த தாமரைகிட்ட பேசறயா?” என்றான்.

“தாமரைகிட்டயா?  எதுக்கு?” என்றாள் மணிமேகலை.   

“அம்மா, நான் ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்மா.  நோயாளிகளை எல்லாம் கவனிச்சுட்டு வீட்டுக்கு வந்தா, நமக்கு கொரோனா வந்திடுமோன்னு பயந்து தான் அவளை வேலையை விட சொன்னேன்.   

இப்படி எல்லாருமே சுய நலமா இருந்திருந்தா…. இன்னிக்கு உன்னை யாரும்மா கவனிச்சிருப்பாங்க?   இந்த வாரமோ அடுத்த வாரமோ, ஒரு நல்ல நாளாப் பார்த்து கல்யாணத்தை வச்சுக்கலாமான்னு கேக்கறயா?”  என்றான் ரகு.   

“டேய், இப்பவே பேசறேன்… ஆனா, அந்தப் பொண்ணு செல்வியையும் கல்யாணத்துக்கு கட்டாயம் கூப்பிடணும்டா” என்றாள்.   

“அம்மா, செல்வியில்லாம கல்யாணமே நடக்காதும்மா” என்று சிரிப்புடன் கூறியவன், செல்வியின் நம்பரைக் கூப்பிட்டு, அம்மாவிடம் கைபேசியைக் கொடுத்தான் ரகு.  

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

2 thoughts on “தாமரைச்செல்வி (சிறுகதை) – ✍ வெங்கட்டரமணி 
  1. வெங்கட்ரமனியின் ‘தாமரைச்செல்வி’ , பலரின் மனமாற்றத்திற்கு வழி செய்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை .கருத்தாழமிக்க கதை. வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!