இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இந்த ஃபோன் இருக்கே இது எப்பவும் நாம குளிக்கறப்ப, பாதி சாப்டுண்டு இருக்கறப்ப, ரெஸ்ட் ரூம் போறப்ப இல்லை மாடில இந்தப் புடவையை காயப் போட்டுட்டு வந்துடுங்கோனு சுசிலா சொல்லி, கை நிறைய துணிகளோட போறப்பதான் டிரிங் டிரிங்னு அலறும். அவசரமா ஓடி வந்தா நின்னுடும்.
அதே கதைதான் இன்னிக்கும்.
“மூலைக்கு மூலை பேப்பரும், புஸ்தகமும் தேவையில்லாத அட்டை டப்பாக்களும் கிடக்கே பழைய பேப்பர் காரனை கூப்பிடுங்கோ லீவுதானே இன்னிக்கு தீபாவளிக்கு முன்னால வீட்டை கொஞ்சம் கிளீன் பண்ணிடுவோம்” சுசிலா மூணாவது தடவையா சொன்னா.
சரி வேற வழியில்லை இந்த வேலை பண்ணிதான் ஆகணும்னு தீர்மானம் பண்ணி தலைல ஒரு துண்டை முண்டாசா கட்டிண்டு வேலைல இறங்கினேன். ஃபிரிட்ஜ் மேல இருந்து 2 இன்ச் தூசியோட நியூஸ் பேப்பரை ரெண்டு கைலயும் எடுத்துண்டு நகரறப்ப உள் ரூம்ல இருந்து ஃபோன் சத்தம்.
தொப்புனு கைல இருந்து எல்லாம் விழுந்தது, வீடு பூராவும் தூசி பரவ,ஹச் ஹச்னு தும்மலோட ஃபோனை நோக்கி ஓடினேன் வழக்கம் போல நின்னு போச்சு. எதாவது வீடு வாங்கறயா, கடன் வாங்கறயானு விளம்பர ஃபோனா இருக்கும்னு திரும்ப என் வேலையை கர்மசிரத்தையா பாக்க வந்தேன். டெலிஃபோன்ஸ்ல பொறுப்பான வேலை பாக்கறதால டிபார்ட்மென்ட் வச்சிட்டு போன ஃபோன். உபயோகமா கொஞ்சம், உபத்திரவமா நிறையனு வீட்ல கர்வமா உக்காந்திருக்கு.
திரும்ப அவசரமா ஃபோன் சத்தம்.ஓடிப் போய் பிடிச்சிட்டேன், ”யாரு ஶ்ரீதரனா?”
“ஆமாம் நீங்க யாரு தெரியலையே”
“எப்படித் தெரியும், பெரிய எழுத்தாளனாயிட்டே எங்களையெல்லாம் ஞாபகம் இருக்குமா”
அட ராமாமிருதம், வெண் சங்கு பத்திரிகை ஆசிரியர். “சார் நமஸ்காரம் நீங்க ஃபோன் பண்றப்ப வேற ரூம்ல இருந்தேன் வேலையா அதான் முதல்ல எடுக்கலை, உங்க குரல் வேற தொண்டை கட்டின மாதிரி இருந்ததா அடையாளம் தெரியலை.”
“சரி விடும் விஷயத்துக்கு வரேன். வெண்சங்கு தீபாவளி மலர் போடலாம்னு இருக்கேன். அதுல ஒரு 10 சின்னஞ்சிறு கதைகள் போடறதா உத்தேசம், உன் வீட்டுக்கு ஒரு படம் அனுப்பறேன். ஆபீஸ் பாய் எடுத்துண்டு வந்துண்டிருக்கான். அதைப் பாரு, அதுக்கு ஏத்தா மாறி ஒரு கதை 100 வார்த்தைல வேணும்.101 வார்த்தை கூடாது, நூத்துக்குள்ளே தான். உனக்கு தெரிஞ்ச ரைட்டர்ஸ்கிட்டயும் எழுதி வாங்கி மொத்தம் 10 கதைகளுக்கு ஏற்பாடு பண்ணு. புரிஞ்சதா. 3 நாளைக்குள்ளே வந்தா நல்லது.” ஃபோனை வச்சிட்டது வெண்சங்கு.
சொன்ன மாதிரி ஒரு கவர்ல போட்டு படம் வந்தது. அந்தப் படத்தை பாத்தேன், ஏதோ பல கலர் டப்பாக்களை காகிதத்துல கவுத்தா மாதிரி விளங்காம ஒரு படம். இதுக்கு என்ன கதை எழுத முடியும், குடிகாரன் எடுத்த வாந்தி மாதிரி இப்படி ஒரு படம்.இதையே நினைச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தேன்.
எனக்கு ஒரு யோசனை வந்தது பெரிய பெரிய எழுத்தாளர்களைப் பாத்து இந்த சவாலை கொடுக்கணும், எப்படி எழுதறாங்க பாப்போம்.
முத டார்கெட் வாத்யார் சுஜாதாதான். சரினு ஸ்கூட்டரை கிளப்பிண்டு அடையாறு வந்து சேந்தேன்.ஒரு ஃபோன் கூட பண்ணாம வரோமேனு இருந்தது, நான் ஃபோன் பண்ணி அவரும் எதாவது தூசி தட்டிண்டிருக்கப்ப இடைஞ்சல் பண்ணாம நேராவே போகலாம்னு வந்துட்டேன்.
காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தது சுஜாதா மேடம்தான். “வாங்க ஶ்ரீதர் ரொம்ப நாளாச்சே, வாங்க சார் இருக்கார்”.
இந்தத் தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings