in

சுந்தர தெலுங்கு மனசுக்காரர்கள் – ✍ மீரா ஜானகிராமன்

சுந்தர தெலுங்கு மனசுக்காரர்கள்

ன்றும் என் மகள்கள் வழக்கம் போல வீட்டு வாசலில் தெருவில் பாட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாடும் குழந்தைகளிடம் தெருவில் போவோர் வருவோரில் சிலர் பேச்சுக்கொடுப்பது வழக்கம் தான். அதே போலத் தான் அந்த பெரியவரும் அன்று அவர்களிடம் பேச்சுக்கொடுத்திருக்கிறார்.

ஆனால், என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்றால் அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாது. எங்களுக்கு அவர் மொழியான தெலுங்கு தெரியாது.

குழந்தைகளுக்கு தெரிந்த ஆங்கிலமும் அவரால் சரளமாக பேச முடியவில்லை. ஆனாலும், சைகைகளும், ஆங்கிலமும், தெலுங்கும் கலந்து பெயர் என்ன?  என்ன படிக்கிறீர்கள்? நானும் விளையாட வரவா? என்னை சேர்த்துக்கொள்வீர்களா? என்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

குழந்தைகளும் சரி தாத்தா கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு போகட்டும் என்று சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அங்கு தான் ஒரு தவறு இருந்திருக்கிறது. அவர் உருவத்தில் தான் தாத்தாவே தவிர வேகத்தில் அல்ல. குழந்தைகளுக்கு ஈடு கொடுத்து அவரும் பறந்து பறந்து கார்க் அடித்ததை கண்டு மிரண்டு விட்டார்கள் பெண்கள்.

பின்னர் வீட்டுக்கு போகும் போது, “எங்கள் வீடு  இதே தெருவில் கடைசியில் இருக்கிறது. நாங்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். என் மகனுக்கு இங்கே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை. சமீபத்தில் தான் திருமணமானது, நானும் என் மனைவியும் இன்னும் இரண்டொரு நாட்களில் சொந்த ஊருக்கு சென்றுவிடுவோம். அவ்வப்போது வந்து என் மருமகளுடன் பேசி கொண்டிருங்கள். அவளுக்கு இங்கே யாரையும் தெரியாது.” இவ்வளவையும் சைகை + உடைந்த ஆங்கிலம் + தெலுங்கில் சொல்லிவிட்டு சென்றிருந்தார்.

அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் ஏதோ சிறுவர்கள், “விளையாட வரியாடா?” என்று கேட்பது போல்  மாலை வேளைகளில் வீட்டு வாசலில் வீதியில் நின்று என் மகள்களின் பேரை சொல்லி சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்.

ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், பஞ்சகஜ வேஷ்டி, மேல் சட்டை, குடுமி, நெற்றியில் சாற்றிய திருமண், தோளில் கதாயுதத்தை ஆஞ்சநேயர் வைத்திருக்கும் போஸில் தாங்கிய பாட்மிட்டன் ராக்கெட் என்ற மிரட்டல் கெட்டப்பில் வந்து அவர் கூப்பிட்ட போது மிகவும் அச்சமாக இருந்தது.

ஜன்னல் வழியே நான் எட்டிப்பார்க்க  என்னைப்பார்த்து,”குழந்தைகளை விளையாட அனுப்பு. சின்ன வயசில் ஓடியாடி விளையாடினால் தான் அவர்களுக்கு நல்லது.” என்று முந்தைய பாராவில் சொன்ன மொழி பார்முலாவில் மிரட்டினார்.  

அவர்களுக்கு பரீட்சை என்று நானும் அவரின் பிரத்யேக மொழியில் சொல்லியும் பயனில்லை. சரியென்று அனுப்பி வைத்தேன்

விளையாடும் போது,”உங்கள் அம்மாவின் அனுமதி பெற்று எங்கள் வீட்டுக்கு வாருங்கள். பாட்டியும் உங்களைப்பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார்” என்று கேட்டுள்ளார்

அந்நியரான ஒரு ஆணை நம்பி குழந்தைகளை அனுப்ப பயமாக இருந்தது. இருந்தாலும், ஒரு வயதானவர் கேட்கும் போது மறுக்க முடியவில்லை. இருவரையும் அனுப்பி வைத்தேன்

நான் பயந்தது போலல்லாமல் நல்ல குடும்பமாகவே இருந்தார்கள். அந்த மாமிக்கு இவருக்கு தெரிந்த அளவுகூட ஆங்கிலம் தெரியவில்லை. வெறும் சைகை பாஷைதான். அந்த தாத்தா, பாட்டி, அவர்கள் மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து கேரம் விளையாடினார்கள். மகனும், மருமகளும் மெத்த படித்தவர்களாக இருந்தார்கள்.

இரண்டு நாட்கள் இப்படி சென்ற நிலையில் பெரியவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள். மருமகள் மட்டும் அவ்வப்போது வந்து குழந்தைகளுடன் பாட்மிட்டன் விளையாடுவாள்.

இவர்களை பார்க்கும்போதெல்லாம் அவள் கணவன், “அக்கா கூட அப்பப்போ வந்து விளையாடுங்க. நானும் ஆபீஸ் போயிடுவேன். பாவம் தனியா இருக்கா” என்று கேட்டுக் கொண்டானாம்.

பின்னர், அடிக்கடி விஜயவாடாவிலிருந்து வரும்போதெல்லாம் அந்த பெரியவர் குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டிற்கு அழைத்து சென்று மகன், மருமகள், மனைவியுடன் உரையாட வைப்பது என்று சென்றது.  ஊரிலிருந்து  வரும்போதெல்லாம் தமிழ்நாட்டு கோவில்களுக்கு படையெடுப்பதை ஒரு வாடிக்கையாக வைத்திருந்தனர் அந்த பெரியவர்கள்.

மகனுக்கு தமிழ்நாட்டில் வேலை கிடைத்துள்ளது இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்து விட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவது புரிந்தது. இந்த வயதான காலத்தில் எப்படி இவர்களால் இப்படி அலைய முடிகிறது?, என்று எனக்கு வியப்பாக இருந்தது. அவர்களோ சளைக்காமல் சுற்றிச்சுற்றி சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார்கள்.

இதற்கிடையில்,   என் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அதற்கு வாட்சாப்பில் ஜிலேபியை பித்து போட்ட எழுத்துக்களில் டெக்ஸ்ட் மெசேஜ்களும், சாமி படங்களுமாக அனுப்பி தள்ள ஆரம்பித்தார். புரியாத பாஷை மெசேஜ்க்கு நான் என்ன பதில் போடுவது?  பதில் போடாவிட்டாலும் பெரியவர்களை அவமதித்தது போலாகி விடும். சில காலம் கும்பிடு படம் மட்டும் போட்டுப் பார்த்தேன். அவரோ சளைக்காமல் அனுப்பிக் கொண்டே இருந்தார்.

ஒரு நாள் இரவு பத்து மணிக்கு அந்த பையனிடமிருந்து போன்,”நாங்க இப்போ உங்க வீட்டுக்கு வரலாமா ஆண்டீ?” என்று கேட்டு

எதற்கு இந்த நேரத்தில் என்று புரியவில்லை. குழப்பத்துடன் சரி என்றேன். அடுத்த சில நிமிடங்களில் அந்த பையனும் அவன் மனைவியும் வந்தார்கள். கையோடு கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்ஸை என் கையில் கொடுத்து விட்டு, ”அப்பா அம்மாவோட திருவண்ணாமலை போயிட்டு இப்ப தான் வந்தோம்.

இன்னிக்கி எங்களுக்கு பர்ஸ்ட் அன்னிவர்சரி ஆண்ட்டீ அப்பா அம்மா உங்களுக்கு நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிட்டு வர சொன்னாங்க” என்று என்னையும் என் கணவரையும் நிற்க வைத்து நமஸ்காரம் செய்தார்கள் இருவரும்

நாங்கள் அதிர்ச்சி விலகாமல் இருந்தோம். அந்த பையனோ, ”இவ்ளோ லேட் நைட் அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் நான் சொன்னேன். அப்பா அம்மா தான் பெரியவங்கள மதிச்சு அவங்க ஆசிர்வாதம் வாங்கித்தான் ஆகணும்ன்னு சொல்லிட்டாங்க. காலையில விடியறத்துக்கு முந்தியே திருவண்ணாமலைக்கு கிளம்பி போயிட்டோம் அதான் காலையில வர முடியல” என்று விளக்கம் கொடுத்தான்.

இது நடந்து சில மாதங்களில் அவர்கள் தண்ணீர் பிரச்சனை, இடம் பற்றாக்குறை ஆகிய காரணக்களால்  வேறு வீடு பார்த்து சென்று விட்டார்கள். எனினும் வாட்சாப்பில் மெசேஜ் வருவது மட்டும் நிற்கவில்லை.

இந்த அன்புத் தொல்லை தாங்காமல் மெசேஜ்களுக்கு பதில் போடாமல் புறக்கணிக்க ஆரம்பித்தேன். சிறிது நாட்களில் மெசேஜ்கள் வருவது நின்று விட்டது. பெரியவருக்கோ அவர் மனைவிக்கோ புரியாவிட்டாலும் அவர் மகனுக்கும் மருமகளுக்கும் புரிந்திருக்கும். நிச்சயம் நம் மீது கோபமாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சமீபத்தில் சூப்பர் மார்கெட்டில் அந்த பையனை பார்த்தேன். குற்றஉணர்வோடு,“என்னப்பா எப்படியிருக்க, வொயிப், அப்பா அம்மா எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்றேன்

அவனோ என்னை பார்த்து மிகவும் உற்சாகமாகி, “எல்லோரும் நல்லா இருக்கோம் ஆண்ட்டீ. அப்பா அம்மா ஊருல இருக்காங்க. எப்பவும் நம்ம பழைய வீட்டு கிட்ட எல்லாரும் எப்படியிருக்காங்கன்னு கேட்டு கிட்டே இருக்காங்க ஆண்ட்டீ” என்றான்.

வீட்டு அடையாளமெல்லாம் சொல்லி வாங்க என்று சொன்னான். சரி என்று சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் போனை எடுத்து பார்த்தால் ஒரு புது நம்பரிலிருந்து பிய்த்து போட்ட ஜிலேபியாய் ஒரு சின்னஞ் சிறிய எஸ்.எம்.எஸ் வந்திருந்தது

அது நிச்சயம் “ஹலோ” தான் என்று புரிந்து விட்டது. இருந்தாலும் உறுதிபடுத்திக் கொள்ள அந்த டெக்ஸ்ட்டை கூகுள் தெலுங்கு டு இங்கிலீஷ் டிரான்ச்லேட்டரில் காப்பி செய்தேன்

“Hello” என்று காட்டியது. நான் கடையிலிருந்து திரும்பி வருவதற்குள் அந்த பையன் ஊரில் இருக்கும் அவன் பெற்றோருக்கு சொல்லி அவர்கள் இந்த மெசேசை  அனுப்பியிருக்கிறார்கள்.

அட… நம்பர் மாற்றியிருக்கிறார்கள் அதனால் தான் நாம் மெசேஜ்களுக்கு பதில் சொல்லாததை கண்டு கொள்ளவில்லை.

ஒன்று மட்டும் புரிந்தது அவர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பது நட்பு மட்டும் தான். அதை மொழி புரியவில்லை என்ற ஒரே காரணத்தை காட்டி அதை நிராகரிப்பது சரியில்லை. தமிழ் டு தெலுங்கு கூகுள் ட்ரான்ஸ்லேட்டரில் “யுகாதி நல்வாழ்த்துக்கள்” என்று டைப்படித்தேன். மொழிப்பெயர்ப்பாக வந்த டெக்ஸ்டை  காப்பி செய்து அந்த புதிய நம்பருக்கு அனுப்பி வைத்தேன்.

அனைவருக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்

சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. நல்லதொரு அனுபவம். பாடம் கற்க முடிந்தது. பொதுவாக அனைவரும் நல்லவர்களே! சூழ்நிலையும், வாழ்க்கை முறையும் தான் மனிதர்களை மாற்றி விடுகிறது. எங்கள் சார்பாக அவங்களுக்கு யுகாதி வாழ்த்துகளைச் சொல்லி விடுங்கள்.

நானும் புத்தன் தான் – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன்

“Sound Healing – ஒரு அறிமுகம்” – By Kala Sriram (Founder of Shakthidhaara Healings)