in , ,

சிங்கார வேலவன் வந்தான் (நாவல் – பகுதி 3) – வைஷ்ணவி

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திரும்பி பார்க்காமலேயே பாட்டை பாடியது யார் என்று ஊகித்தாள். அக்குழுவில் சுமார் பத்து இளைஞர்கள் இருப்பார்கள். அவர்களும் ஈரோடு கோயம்புத்தூர் பாசஞ்சரில் வருபவர்கள் தாம். காலையும் சரி, இரவு திரும்பும் போதும் சரி இக்குழு ஏதாவது பாட்டு பாடிக் கொண்டும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டும் வருவார்கள்.

அதனால் தான் இவர்களுடனே இப்பெட்டியில் ஏறினாள். ஆனால் ஏறிய பின்தான் அது ரிசர்வேசன் கோச் என கவனித்தாள். அய்யோ! இதென்னடா வம்பா போச்சே என பயந்தாள். இவள் மட்டுந்தான் பயந்து கொண்டிருந்தாள். இவளுடன் ஏறிய அக்கும்பல் மிக சாதாரணமாக இருந்தார்கள்.

டிக்கெட் பரிசோதகர் வந்து விடுவாரோ என ஒவ்வொரு நொடியும் திக் திக் என்றிருந்தது. சிறிது நேரத்தில் இந்த பாட்டுக் குழுவிலுள்ள இளைஞர்கள் இப்பெட்டியிலும் தங்கள் கச்சேரியை ஆரம்பித்தனர்.

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே, என் மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா?” இவனுங்க சம்பந்தம் இல்லாம பாட மாட்டானுங்களேனு சுற்றிலும் பார்த்தாள்.

மேல் பர்த்தில் சுடிதார் அணிந்த  நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அவரைத் தான் இந்த இளைஞர்கள் சைட் அடித்துக் கொண்டிருந்தனர். வண்டி ஈங்கூர் சமீபம் வருகையில் மேல் பர்த் பெண்மணி கீழிறங்க ஆரம்பித்தார். கீழே இறங்கிய அவர் நேராக அந்த இளைஞரை நோக்கி வந்தார்.

“இது ரிசர்வேசன் கோச்னு தெரியாதா?” எனக் கேட்டார்.

“நாங்க வரதுக்குள்ள வண்டி கிளம்பிடுச்சு. அதான் டக்குனு இதுல ஏறிட்டோம்.”

“டிக்கெட்ட காட்டுங்க”

“அது எதுக்கு உங்களுக்கு?”

அந்த பெண்மணி சுற்றியிருந்த மற்ற ரிசர்வ் செய்யாத பயணிகளிடம் எல்லாம் டிக்கெட் கேட்டார்.

“டேய்! வாய வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? அந்த ஆண்ட்டிய பார்த்து பாட்டெல்லாம் ஏன்டா பாடின?”

“எனக்கென்னடா தெரியும் அந்தம்மா ப்ளையிங் ஸ்குவாடுனு?”

“நான் பாடலன்னாலும் அந்தம்மா செக் பண்ணிருப்பாங்க”

அந்த ப்ளையிங் ஸ்குவாடு எல்லாரது சீசன் டிக்கெட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறபெட்டிகளையும் ஆய்வு செய்து தலைக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றார். எல்லாரும் எவ்வளவு கெஞ்சியும் பரிசோதகர் கறாராக சொல்லி விட்டார்.

“மேடம் ! நாங்களே ஊர் விட்டு ஊர் வந்து சம்பாதிக்கிறோம். மாசக் கடைசில தலைக்கு இரண்டாயிரத்து ஐநூறுக்கு எங்க போறது?”

“நானா உங்கள ஊர் விட்டு ஊர் வர சொன்னேன்? நானா ரிசர்வேசன் கோச்ல ஏற சொன்னேன்?”

“ப்ளீஸ்  மேடம்! ஏதாவது பார்த்து பண்ணுங்க”

எல்லாரும் சேர்ந்து கெஞ்சியும் பயனில்லை.

கடவுளே! பேசாம ஒரு காபி குடிச்சிட்டு தலைவலி மாத்திரை போட்ருந்தா வேலை முடிஞ்சிருக்கும். எதுக்கு இவ்வளவு அவசரமா இந்த வண்டில ஏறினேனோ என தன்னையே நொந்தாள்.

ஒரு வழியாக டிக்கெட்  பரிசோதகர் மனமிறங்கி வந்தார். வண்டியும் ஈரோடு வந்து விட்டது. இவர்கள் எல்லாரையும் அந்த பரிசோதகர் இரயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அவளுக்கு ரொம்ப பயமாக போய் விட்டது. வெளியில் இருந்த இரும்பு பெஞ்சில் அமர்ந்து இருந்தாள். அப்போது தான் அந்த எதிர்பாரா அதிசயம் நடந்தது.

தூரத்தில் மகேஷ் யாருடனோ பேசியபடியே வந்துக் கொண்டிருந்தான். இவளை ரயில்வே போலீஸ் ஸ்டேசன் அருகே பார்த்ததும் குழப்பமாய் அவளை நோக்கி வேகமாக வந்தான்.

“இங்க என்ன பண்றீங்க?”

“அவசரத்துல தெரியாம ரிசர்வ்ட் கோச்ல ஏறிட்டேன். செக்கிங்ல  மாட்டிக்கிட்டோம். ரொம்ப கெஞ்சின பின்னாடி, நாலு ஃபைனா போட்டு பன்னெண்டு பேர பிரிச்சுக்க சொல்லிட்டாங்க. அப்பாக்கு போன் பண்ணுனா நாட் ரீச்சபிள்னு வருது”

“தலைக்கு எவ்ளோ வருது?” மகேஷூடன் வந்தவன் கேட்டான்.

“நாலு ஃபைன் பத்தாயிரம். தலைக்கு  எட்நூத்தி முப்பத்தி மூணு ரூவா வருது, ஃபைனை கொடுத்திட்டு சீசன் டிக்கெட் வாங்கிக்க சொல்லிருக்காங்க”.

உடனே அந்த இளைஞன் யோசிக்காமல் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவள் பணத்தை வாங்க தயங்குவதை பார்த்த மகேஷ், “வாங்கிக்கங்க, எனக்கு தெரிஞ்சவர் தான். ஃபைனை கட்டிட்டு சீசன் டிக்கட் வாங்கிட்டு வாங்க”

“ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்றபடியே பணத்தை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள். சிறிது நேரத்தில் சோர்வாக வந்தாள்.

“என்னாச்சுங்க?”

“இன்னும் ரெண்டு பேருக்கு பணம் பத்தலையாம். அவங்க ப்ரெண்ட்ஸ் கொண்டு வராங்களாம். அதான் பணம் கொடுக்காம வந்துட்டேன்” என தலையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

அதற்குள் மகேஷின் நண்பன் மூவருக்கும் சேர்த்து டீ வாங்கிக் கொண்டு வந்தான். அவளின் தலைவலிக்கு இதமாக இருந்தது.

“மணி எட்டரையாச்சு, உங்களுக்கு நேரமாகலயா?”

“பரவால்ல நாங்க வெயிட் பண்றோம்” என்றான் மகேஷ்.

“இறங்குன வண்டி சேலமே போயிருக்கும். இவனுங்க என்ன பண்றானுங்க இன்னும்? வாங்க பாக்கலாம்” என்றபடி மகேஷும் அவன் நண்பனும் ஸ்டேஷன் உள்ளே சென்றார்கள். பின்னாடியே அவளும் சென்றாள்.

“என்னப்பா இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”

“அண்ணா! இன்னும் ரெண்டு பேருக்கு பணம்  பத்தலை. ப்ரெண்டு கொண்டு வரான்”

“அவன் எப்ப வருவான்?”

“அண்ணா! அவன் கே.கே. எக்ஸ்பிரஸ்ல வந்துருவான்”

அதிர்ச்சியான மகேஷ், “டேய்! அது பத்து மணிக்கு தானடா வரும்? நீங்க பணம் கொடுத்தா தான  எல்லாரையும் விடுவாங்க? லேடிஸ் எல்லாம் இருக்காங்களே?” மீதி இரண்டு பேருக்குமான பணத்தையும் மகேஷின் நண்பனே கட்டிவிட்டு, எல்லாருடைய சீசன் டிக்கெட்களையும் வாங்கி அவரவர்களிடம் கொடுத்தான்.

“தேங்க்ஸ் அண்ணா!”

“ஒன்ற தேங்க்ஸ நீயே வெச்சுக்க. வண்டி டியூக்கான பணம்டா அது, நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள கொடுத்துடு”

“சரிண்ணா!”

“ஓகே பாஸ்! நான் பார்சல் ஆபிஸ்கிட்ட வண்டி நிறுத்திருக்கேன். இப்படி குறுக்கால போயிடறேன். நீங்க வெளில போய் பஸ் ஏறிக்கறீங்களா?”

“இல்லைங்க மகேஷ், சனிக்கிழமை வேற இந்நேரத்துக்கு  ஸ்டேன்டிங்கா இருக்கும். நான் பஸ் ஸ்டாண்டே போய்க்கறேன்”

“நான் ட்ராப் பண்ணவா?”

“வேணாம், நீங்க கிளம்புங்க”

“நான் உங்கள  ட்ராப் பண்ணவா?” அவள் கேட்டாள்.

அவன் தயங்கவே, “என்னால தான லேட் ஆச்சு. பரவால்ல வாங்க” என்றாள்.

அவனும் சம்மதிக்கவே வண்டி, பஸ் ஸ்டாண்டை நோக்கி பறந்தது. வழி நெடுக இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

“உங்க வீடு எங்க இருக்கு?”

“சின்னியம்பாளையம். கொடுமுடி போற வழி”

“கரூர் ரேக்ல நிறுத்தவா?”

“சரிங்க”

ஒரு கரூர் பேருந்து  புறப்படும் தருவாயில் இருந்தது. அதனருகே வண்டியை நிறுத்தினாள். நன்றி கூறியவாறு இறங்கினான் அவன்.

“உங்க பேரு என்னங்க?”

“வைத்தீஷ்வரி. உங்க பேரு?”

“சிங்கார வேலவன்”

இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விதி (ஒரு பக்க கதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    சிங்கார வேலவன் வந்தான் (நாவல் – பகுதி 4) – வைஷ்ணவி