இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை மணி ஆறு முப்பது இருக்கும். அந்த கருப்பு ஸ்கூட்டி மிதமான வேகத்தில் பைக் ஸ்டாண்டிற்குள் நுழைந்தது. அதை ஓட்டி வந்த அந்த யுவதி தனது ஸ்கூட்டியை நல்ல இடமாக பார்த்து நிறுத்தி விட்டு, பணம் செலுத்தும் இடத்திற்கு வந்தாள்.
பத்து ரூபாய் தாளை கல்லாவில் இருந்தவரிடம் தந்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில், “பாப்பா! ஒரு வாரமா பார்க்கறேன், தெனம் வந்து வண்டி நிறுத்தற. டெய்லி வர மாதிரி இருந்தா, மாச பாஸ் போட்டுக்கலாம்ல?” என்று அந்த பெரியவர் கேட்க
“அதுக்கு எவ்ளோ ஆகும்?”
“மாசம் இருநூறு ஆகும்”
யோசித்தவாறே, “இந்த மாசம் முடிய இன்னும் நாலு நாள் இருக்கே, ஒண்ணாம் தேதிலிருந்து வாங்கிக்கறேன்” என்றாள் அந்த யுவதி.
பைக் ஸ்டாண்டிலிருந்து வெளிவந்த அவள் அருகிலிருந்த பேக்கரியில் ஒரு செய்தி தாளை வாங்கினாள். அங்கே இருந்த இளைஞன் சினேகமாக சிரித்தான். ஒரு வாரமாக கண்ணில் படும் முகம். இவளும் சினேகமாக சிரித்தாள்.
” நீங்க எங்க வேலை பாக்குறீங்க?” என்று அந்த இளைஞன் கேட்டான்.
“ஒரு பையர் ஆபிஸ்ல எக்ஸ்போர்ட் கோ-ஆர்டினேட்டரா இருக்கேன்” என்றாள் அந்த யுவதி.
“நீங்க?” என்று பதிலுக்கு கேட்டாள்.
“ப்ரேம் சைசிங்கில் சீஃப் குவாலிட்டி கன்ட்ரோலரா இருக்கேன்”
இருவரும் பேசிக் கொண்டே,’ ’ஈரோடு சந்திப்பு” என வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவினுள் நுழைந்தனர்.
“ப்ரேம் சைசிங் எங்க இருக்குங்க?”
“இடுவம்பாளையத்துல இருக்கு”
“அவ்ளோ தூரமா? அப்புறம் ரயில்வே ஸ்டேஷன்லருந்து எப்படி போவீங்க?”
“கம்பெனி வண்டி திருப்பூர் ஸ்டேசன்ல நிறுத்திருப்பேன். அங்கருந்து போய்க்குவேன்.” இருவரும் நடைமேடை நான்கை அடைந்தனர்.
“சரி பார்க்கலாம்” என பரஸ்பரம் விடை பெற்ற இருவரும் “ஈரோடு – கோயம்புத்தூர்” பாசஞ்சரில் ஏறினர்.
கதாசிரியர் உரை:
இக்கதையின் நாயகனும் நாயகியும் தினமும் வேலை நிமித்தமாக ஈரோட்டிலிருந்து திருப்பூர் செல்லும் மின்சார ரயில் பயணிகள். ஒரு சாதாரண புன்னகையில் அறிமுகமாகி ஆரோக்கியமான நட்பான பின் வலுவான ஆழ்ந்த காதலாகிறது.
கதையின் சம்பவங்கள் பெரும்பாலும் மின்சார ரயிலிலும் பரபரப்பான திருப்பூர் சாலைகளிலும் நடக்கின்றன. என்னளவில் ஒரு மின்சார ரயில் என்பது “ஆரவாரமான நூலகம்” போல. நிறைய தகவல்கள், வாழ்க்கை படிப்பினைகள், எண்ணற்ற மனிதர்களையும் அவர்தம் எண்ணங்களையும் சுமந்து செல்கின்றது.ஏன் சிலருக்கு போதிமரம் போலவும் கூட.
கதைக்களம் திருப்பூர், ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களாக இருப்பதால் முடிந்தவரை அவ்வூர்களின் கோவில் திருவிழாக்களை பதிவு செய்ய முயற்சித்துள்ளேன். கொங்கு பேச்சு வழக்கினையும் ஆங்காங்கு உபயோகித்துள்ளேன்.
மேலும் இக்கதையில் மின்சார ரயில் பயணங்களில் பயணிகளுக்கிடையேயான நட்பு, துரோகம், வஞ்சம், குழுச் சண்டைகள், காதல் மற்றும் அதற்கான நீண்ட காத்திருப்புகள், திருமண உறவுக்கு வெளியே ஏற்படும் நட்புகளும் அதனால் ஏற்படும் உறவு சிக்கல்களும் என நுட்பமான மனித உணர்வுகளை கொண்ட ஒரு கலவையான கதையாக இருக்குமென நினைக்கிறேன்.
அடடா! மணி ஆறு அம்பெத்தட்டாய்டுச்சு பாருங்க. சரியா ஏழு மணிக்கு வண்டி கிளம்பிடும். சீக்கிரம் ஏறுங்க.
இனி கதைக்குள்:
வண்டியின் பின்புறம் இருந்த லேடிஸ் கம்பார்ட்மெண்டில் ஏறிய அந்த யுவதி சுற்றும் முற்றும் பார்த்தாள். வித விதமான தோற்றங்களில் பெண்கள் காட்சியளித்தனர்.
சரியாக மணி ஏழு அடிக்க அந்த மின்சார ரயில் நடைமேடை நான்கை விட்டு கிளம்ப தயாரானது.
அந்த காலை நேரத்திலும் முழு ஒப்பனையுடன் நேர்த்தியாக உடையணிந்த ஒரு சிலர். குளித்து உடை மட்டும் மாற்றிக் கொண்டு ஒரே பாய்ச்சலில் லேடிஸ் கம்பார்ட்மென்டில் தரையிறங்கிய பெரும்பாலோனோர்.
இந்த ஒரு வாரத்தில் அவள் கவனித்த வரையில், பெரும்பாலான பெண்கள் குளிப்பது மட்டும் வீட்டில். பின் தலை சீவுவது, காலை உணவு, சுடிதார் துப்பட்டாக்கு பின் செய்வது, புடவையை சீராக கட்டுவது என அனைத்தும் இந்த லேடிஸ் கம்பார்ட்மென்டில் தான்.
ஊத்துக்குளியில் வண்டி கிராசிங்க்காக நிற்கும் போது தான், உணவருந்தி, தலைவாரி தயாராவார்கள். வீட்டில் தொலைத்த உறக்கத்தை பெட்டியில் தொடர்பவர்கள் கண் விழிப்பதும் ஊத்துக்குளியில் தான்.
அவர்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருந்தது அந்த யுவதிக்கு .
“போதும் நிறுத்து அடுத்தவங்கள பார்த்து பரிதாபபட்டது. இங்க எல்லாரும் உன்னை மாதிரி தான். எல்லார்க்கும் விதவிதமான காரணம் இருக்கும். இவ்வளவு பரபரப்பா எதுக்கு ஓடறோம்னே தெரியாம ஓடிட்டிருக்கோம். செஞ்சு வெச்ச சாப்பாட சாப்பிடக் கூட முடியாம இங்க வந்து சாப்பிட்டுட்டு இருக்காங்க.”
“அமைதியா தெளிந்த நதியா போய்ட்டுருந்த உன் வாழ்க்கை இப்படி தலைகீழா மாறும்னு எதிர்பார்த்தியா? துடிச்சிட்டு இருக்கிற இதயத்தை அப்படியே அறுக்கற மாதிரியான சம்பவம் அது. அதுல இருந்து வெளி வந்து நீ சகஜமா இருக்கனும்னு தான இப்படி வேற ஊருக்கு வேலைக்கு வர” என அவள் உன் மனம் பேசியது.
கண்களை மூடினால் அந்த துயரமே மீண்டும் நினைவுக்கு வருவதால், பார்வையை வெளியில் சுழல விட்டாள். வண்டி ஈங்கூர் ஸ்டேசனில் நின்றது.
ஈங்கூர் ஸ்டேசனில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், ஒரு பெண்மணி ஏறுவார். அவரை ஈர்க்க ஜெனரல் கம்பார்ட்மெண்டில் உள்ள ஆண்கள் படாதபாடு படுவர். இவளும் அதை ரசித்து பார்ப்பாள்.
காற்று வேகத்தில் கலைந்த கேசங்கள் சீராக வாரப்பட்டன. முன் துருத்திக் கொண்டிருக்கும் தொந்திகள் சற்று நேரத்திற்கு தம் கட்டிய மூச்சால் சிறை வைக்கப்பட்டன. இதெல்லாம் வண்டி ஈங்கூர் கிராசிங்கில் நிற்கும் போது நடப்பவை.
இது சாதாரண ஒரு நிகழ்வு தான், இருப்பினும் அவளது அப்போதைய மனநிலைக்கு அது மனதை மாற்றும் ஒரு செயலாகப்பட்டது.
ரயில் திருப்பூர் நிலையத்தை அடைந்தது. அனைவரும் இறங்க ஆயத்தமாயினர். வெளியே நடைமேடையில் இரு மடங்கு கூட்டம் நின்று கொண்டிருந்தது. அனைவரும் கோவைக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் கல்லூரிக்கு செல்வோர் கூட்டமது. அந்த யுவதியும் கூட்டத்தோடு கலந்து கரைந்தாள்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings