in

சிதம்பர ரகசியம் (சிறுகதை) – ✍சியாமளா வெங்கட்ராமன்

சிதம்பர ரகசியம் (சிறுகதை)

‘ஆனந்த பவனம்’ என்ற இந்த வீட்டின் முன், படி கோலம் போட்டு காவி இடப்பட்டு, மாவிலைத் தோரணம் கட்டி மங்களகரமாய் காட்சியளித்தது

வீட்டின் உள்ளே இருந்து நெய் மணக்க சக்கரை பொங்கல் வாசனை, தெருவில் போவோர் வருவோரை திரும்பிப் பார்க்க வைத்தது

அங்கு கல்யாணமோ வேறு விசேஷமோ இல்லை. அந்த வீட்டின் வாரிசுகள் இன்று அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள்

அதற்கு ஏன் இவ்வளவு அமர்க்களம் என்று கேட்க தோன்றும்

‘ஆனந்த பவன்’ வீட்டின் சொந்தக்காரரான சுந்தரம் ஜானகி தம்பதியரின் ஒரே வாரிசு சதீஷ்

சதீசுக்கு பூமிகாவிற்கும் திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை, போகாத கோவில் இல்லை பார்க்காத வைத்தியமில்லை

பூமிகாவின் கர்ப்பபை பலவீனம் காரணமாய், டெஸ்ட் டியூப் பேபி முறையும் பயனளிக்கவில்லை. அதனால் அவர்கள் குடும்பம் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தது

உறவினர்களின் ஆலோசனைப்படி, வேறு ஒரு பெண்ணை சதீஸுக்கு இரண்டாவது திருமணம் செய்யவும் மனம் வரவில்லை. ஏனென்றால் பூமிகா அவர்களுக்கு பிடித்த மருமகள். 

குழப்பமான நிலையில் பூமிகாவிடம் இது பற்றி பேச, கனத்த மனதுடன் கணவரின் மறுமணத்திற்கு சம்மதித்தாள்

ஆனால் சதீஷ் அதை ஏற்கவில்லை. பேசிப் பேசி சதீஷை சம்மதிக்கச் செய்தாள் பூமிகா

பூமிகாவும் சதீஷும் மிகவும் அன்யோன்யமான தம்பதி என்பதால், இது மிகவும் கடினமான ஒரு முடிவாக தான் இருந்தது. 

பெற்றோரின் மகிழ்ச்சிக்காக இருவரும் சட்டபூர்வமாக பிரிவதென முடிவெடுத்தனர்.

சீனியர் வக்கீல் ராகவாச்சாரியை காணச் சென்றனர் 

முதலில் சதீஷ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும், “என் பெயர் பூமிகா சதீஷ்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் பூமிகா 

“சரி… என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என வக்கீல் கேட்க

இருவரும் ஏக காலத்தில், “எங்களுக்கு டைவர்ஸ் வேணும்” என்றனர் 

அன்யோன்யமான தம்பதிகளாய் தோன்றியவர்கள் அப்படி கேட்கவும், வக்கீல் சிரித்துக் கொண்டே, “என்ன? உங்களுக்கு டைவர்ஸ் வேணுமா?” எனக் கேட்டார்  

“ஆமா” என இருவரும்  ஒரே குரலில் கூறினார்கள்

“விளையாடாம விஷயத்துக்கு வாங்க, நீங்க சொல்லுங்க சதீஷ்” என சீரியஸாக கேட்டார் வக்கீல் 

“சார்… எனக்கும் பூமிகாவுக்கும் கல்யாணமாகி எட்டு வருஷமாகுது, குழந்தை இல்ல. போகாத கோவில் இல்ல பார்க்காத டாக்டர்கள் இல்ல.  பூமிகாவின் சரி செய்ய முடியாத பிரச்சனை காரணமா வாய்பில்லனு டாக்டர்கள் சொல்லிட்டாங்க

அம்மா அப்பா பேரக் குழந்தைகள் இல்லனு வருத்தப்படறாங்க. பூமிகாகிட்ட நிறைய பாசம் வேற, பூமிகாவுக்கும் அவங்ககிட்ட அன்பு அதிகம்

சுத்தி இருக்கற எல்லாரும் சொல்லி சொல்லி, இப்ப அம்மா அப்பாவும் வாரிசுக்காக எனக்கு வேற கல்யாணம் செய்யணும்னு நினைக்கிறாங்க. அதுக்கு பூமிகாவும் தலையாட்றா. எனக்கு இஷ்டமில்ல, பூமிகாவ விட்டு பிரிய சுத்தமா சம்மதமில்ல. ஆனா, இவங்க தொந்தரவு தாங்காம உங்ககிட்ட வந்திருக்கேன்” என பெருமூச்சுடன் கூறி முடித்தான் சதீஷ் 

“நீ என்னமா சொல்ற?” என பூமிகாவிடம் கேட்க 

“எனக்கு பூரண சம்மதம் சார். பெத்த பொண்ணு மாதிரி தான் என் மாமனார் மாமியார் என்னை பாத்திருக்காங்க. இதுவரை அவங்க என்கிட்ட எதுவும் கேட்டதில்ல. பேர பிள்ளைகள் வேணும்னு நினைக்கறது அவங்களோட  நியாயமான ஆசை தான. என் மூலமா அதுக்கு வாய்ப்பு இல்லேங்கும் போது, அவங்க சந்தோஷத்துக்காக இதை செய்ய எனக்கு சம்மதம்” என்றாள் 

“இப்படியொரு மருமகளை நான் பாத்ததில்ல” என வக்கீல் கேலியாய் கூற 

“அவங்களை நீங்க சந்திச்சதில்ல சார், ஒரு முறை அவங்களோட பேசினா, நான் எடுத்த முடிவு சரினு நீங்களே சொல்லுவீங்க” என்றாள் 

இப்படி ஒரு கேஸ் இதுவரை அவரிடம் வந்ததில்லை என்பதால், யோசிக்க சற்று நேரம் வேண்டுமென்ற யோசனையுடன், சிறிது நேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார் ராகவாச்சாரி 

பிறகு “நாளைக்கு வாங்க, முடிவெடுப்போம்” என அனுப்பி வைத்தார் 

அவர்கள் சென்ற பின், ‘இத்தனை அருமையான தம்பதிகளை எப்படி பிரிப்பது?’ என வருத்தத்துடன் யோசனையில் மூழ்கினார் ராகவாச்சாரி

றுநாள், குறித்த நேரத்திற்கு சதீஷ் பூமிகா தம்பதி, வக்கீல் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் 

“நீங்க ஏன் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்க கூடாது?” எனக் கேட்டார் ராகவாச்சாரி

“அம்மா அப்பா பேர் தெரியாத குழந்தையை தத்தெடுக்க என் மாமனார் மாமியார் ஒருநாளும் சம்மதிக்க மாட்டாங்க” என்றாள் பூமிகா 

“அந்த காலத்து ஆளுங்க அப்படித் தான் இருப்பாங்க, சொல்லி புரிய வைங்க”

“முயற்சி செஞ்சு பாத்துட்டோம் சார்” என்றான் சதீஷ் வருத்தமாய் 

“இது நீங்க கணவன் மனைவி சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. பெத்தவங்களை மதிக்க வேண்டியது தான், ஆனா இது உங்க வாழக்கை இல்லையா?”

“நீங்க சொல்றது சரி தான் சார், சராசரி பெற்றோரா இருந்தா நாங்களும் அவங்களை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வெச்சுருப்போம். ஆனா, இவங்க ரெம்ப நல்லவங்க, சென்சிடிவ் ஆனவங்களும் கூட. நிறைய ஹெல்த் இஸ்யூஸ் வேற இருக்கு. நாங்க அவங்களை மீறி செஞ்சு, அவங்களுக்கு எதுனா முடியாம போய்டுமோனு பயமா இருக்கு” என்றாள் பூமிகா 

“நிஜமா சொல்றேம்மா, இந்த காலத்துல இப்படி ஒரு பெண்ணை பாக்கறது அபூர்வம். உன்னை மியூசியத்துல தான் வெக்கணும்” என ராகவாச்சாரி பெருமூச்சுடன் கூற 

“அவங்க என் மேல காட்டின நேசத்தை தான், நான் திருப்பி காட்றேன் சார்” என்றாள் பூமிகா 

“அது சரி தான்… ஆனா…” என சற்று நேரம் யோசித்தவர், “அப்ப அவங்களுக்கு தெரியாம தத்து எடுக்கலாமே” எனவும், இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர் 

“அதெப்படி சார்?” என விழித்தான் சதீஷ் 

“நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க. நீங்க ரெண்டு பேரும் வேற ஊருக்கு, முடிஞ்சா யூ.எஸ் மாதிரி தூர தேசத்துக்கு வேலைய மாத்திட்டு போங்க. ஐ மீன், நிரந்தரமா இல்ல, கொஞ்ச காலத்துக்கு. அதுக்கு முன்னாடி, இங்க இருக்கற நல்ல ஆசிரமங்களுக்கு போய் தத்தெடுக்க குழந்தை வேணும்னு பதிவு செஞ்சுட்டு வெச்சுட்டு போங்க 

நீங்க கேட்டபடி குழந்தை கிடைச்சா, உங்களுக்கு விவரம் தெரிவிக்க சொல்லிட்டு போங்க. அங்கிருந்தபடியே வீடியோ கால்ல குழந்தையை பாத்து விவரம் எல்லாம் தெரிஞ்சுட்டு, இந்தியா வந்து குழந்தையை தத்து எடுத்துட்டு யூ.எஸ் போய்டுங்க

அதுக்கு முன்னாடி இருந்தே கர்ப்பம் சீமந்தம் எல்லா நாடகமும் நடத்துங்க. குழந்தை கிடைத்ததும், குழந்தை பிறந்தாச்சுனு தெரிவிச்சு, குழந்தைய வீடியோ மூலம் உங்க அம்மா அப்பாவுக்கு காட்டுங்க. பிள்ளைக கொஞ்சம் வளைந்தும் இந்தியா வாங்க, அவ்ளோ தான். இந்த விஷயம் உங்க ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச சிதம்பர ரகசியமா இருக்கட்டும்” என திட்டத்தை கூறி முடித்தார் ராகவாச்சாரி 

பெற்றவர்களை ஏமாற்றுகிறோமே என முதலில் சற்று தயங்கினாலும், தாங்கள் பிரிவதை விட இது பெரிய வேதனை இல்லை என்ற எண்ணத்தில், ராகவாச்சாரி சொன்ன திட்டத்தை செயல்படுத்துவதென முடிவு செய்தனர் இருவரும் 

பணம் தான் பெரிதென நினைக்காமல், தங்கள் பிரிவை தடுத்த வக்கீலுக்கு நன்றி கூறி விடைபெற்றனர் 

டுத்த ஒரு மாதத்திற்குள், சதீஷ் கேட்டபடி அவன் பணி செய்யும் நிறுவனம், இரண்டு வருட ப்ரொஜெக்ட் ஒன்றிற்காக யூ.எஸ் அனுப்ப சம்மதம் தெரிவித்தது 

பெற்றவர்களிடம், இந்த இரண்டு வருடத்திற்குள் நல்லது நடக்கவில்லையெனில், மறுமணம் செய்வதாய் வாக்குறுதி அளித்தான் சதீஷ்

அமெரிக்க செல்ல ஏற்பாடுகள் செய்து, அங்கு தங்குமிடம் உறுதியானதும், ஆசிரமங்களுக்கு சென்று அமெரிக்க முகவரி கொடுத்து தத்தெடுக்க குழந்தை வேண்டி பதிவு செய்தனர் 

அமெரிக்கா சென்ற சில வாரங்களிலேயே, கருவுற்று இருப்பதாக பெற்றவர்களுக்கு தெரிவித்தனர் 

ட்டு மாதங்களுக்கு பின், ஒரு ஆசிரமத்தில் இருந்து பிறந்து ஒரு சில நாட்களே ஆன இரட்டை குழந்தைகள்  வந்துள்ளதாக தகவல் வந்தது

குழந்தைகளின் தாயார் உறவுகள் யாருமற்றவள் என்றும், பிறந்த சில மணி நேரங்களில் இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர் 

பிள்ளைகளின் தகப்பன் அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு, வேறு திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண்ணின் தோழி தெரிவித்ததை மருத்துவனை விவரங்கள் மூலம் உறுதி செய்து கூறினார்கள்

அதோடு, ஆசிரம நிர்வாகமே, அந்த பெண்ணின் கணவனிடம் ‘பிள்ளைகளுக்கு எந்த காலத்திலும் உரிமை கோர மாட்டேன்’ என எழுத்து வடிவில் உறுதி கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தனர் 

அங்கிருந்தபடியே அனைத்து விவரங்களையும் கேட்டு, குழந்தைகளையும் வீடியோ காலில் பார்த்தார்கள். 

குழந்தைகள் இரண்டும் அழகாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்க, இரட்டை பிள்ளைகளை பிரிக்க மனமின்றி, இரண்டையும் தத்தெடுக்க பூமிகாவும் சதீஸும் முடிவு செய்தனர் 

அடுத்த சில நாட்களில், இந்தியா வந்து ஒரு ஹோட்டலில் தங்கி, தத்தெடுத்து, குழந்தைகளுக்கும் விசா பெற்று, அமெரிக்கா திரும்பினர் 

அங்கிருந்தபடியே குழந்தைகளைப் வீடியோ காலில் காட்டி, குழந்தை பிறந்து விட்டதாய் கூறி, பெற்றோரை மகிழ்வித்தனர் 

குழந்தைகளுக்கு ஒரு வயது ஆன சமயம், சதீஷின் ப்ரோஜெக்ட் முடிவுக்கு வர, இந்தியா வந்து ஆண்டு நிறைவைக் கொண்டாட திட்டமிட்டார்கள். 

தன்படி இன்று குழந்தைகளுடன் ‘ஆனந்த பவனம்’ வருவதால் தான், அந்த வீடு கல்யாண களை கட்டியுள்ளது 

குழந்தைகளை காண உறவினர்கள் வீட்டில் குழுமியிருந்தனர் 

விமான நிலையம் எல்லாம் வந்து அலைய வேண்டாமென சதீஷ் கண்டிப்பாய் கூறி இருந்தமையால், நிமிடத்துக்கு ஒருமுறை சுந்தரமும் ஜானகியும் வாசலுக்கு வந்து பார்த்த வண்ணம் இருந்தனர்

கார் வந்து நிற்க, மூச்சிரைக்க ஆர்த்தி தட்டுடன் ஓடி வந்தாள் ஜானகி

சதீஷும் பூமிகாவும் ஆளுக்கு ஒரு குழந்தையுடன் வாசலில் நின்றார்கள். ஆர்த்தி எடுத்து விட்டு குழந்தைகளை வாங்க சுந்தரமும் ஜானகியும் ஆவலாய் கையை நீட்ட, குழந்தைகள் இவர்களிடம் சிரித்தபடி தாவியது, 

சுந்தரம் தன்னிடமிருந்த பேத்தியை பார்த்து “ஜானகி… பட்டம்மா உன்ன மாதிரியே இருக்கா” என்று கூற 

தன்னிடமிருந்த பேரனை பார்த்து, “பட்டப்பா உங்க ஜெராக்ஸ் காபி தான்” என சொல்லி, வெட்கத்துடன் சிரித்தாள் ஜானகி 

இதைக் கேட்ட சதீஷும் பூமிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ‘சிதம்பர ரகசியம்’ என வாயசைத்து சிரித்தார்கள் 

தக்க சமயத்தில் நல்ல தீர்வு கூறிய, வக்கீல் ராகவாச்சாரிக்கும் மானசீகமாக நன்றி கூறினர்

பொய்மையும் வாய்மை இடத்து நன்மை பயத்து, அவர்களின் வாழ்வில் வசந்தம் மலரச் செய்தது 

#ad

       

               

#ad 

              

          

(முற்றும்)   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. இது ஏற்கெனவே படிச்சிருக்கேனே! அதுவும் இவங்க எழுதியே! எங்கள் ப்ளாகிலே போட்டாங்களோ? நல்ல கதை. குழந்தை இல்லாத்தம்பதிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும் படிப்பினை சிறப்பு.

  2. ஹ்ம்ம். எல்லாருக்கும் இந்த மாதிரி வாய்ப்புக் கிடைப்பதில்லை. கதைகளில் இந்த மாதிரி நேர்மறை சிந்தனைகள் குறைந்து வருகிறது. இலக்கிய தரமா எழுதறேன்னு நம்மை ஒரு வழி பண்றங்க. இந்த மாதிரி கதைக்கு வாழ்த்துகள்

  3. தலைப்பை வித்தியாசமான முறையில் கையாண்டுள்ளார்!! சிறப்பு ..!

கரிசல் காட்டில் பூத்த பருத்திப் பூ ❤ (கவிதை வடிவில் ஒரு கரிசல் காட்டுக் கதை ) – பகுதி 1 – ✍ சசிகலா எத்திராஜ்

ஆழியின் காதலி ❤ (பகுதி 5) -✍ விபா விஷா