2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” என்று பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஜெபத்தை கடகடவென்று உச்சரித்துக் கொண்டிருக்க எப்படி சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டே கடைசியில் ”உன்னுடைய நாமம் ரச்சிக்கப்படுவதாக” என்ற வார்த்தையை மட்டும் ஒவ்வொரு முறையும் கடைசியாக சேர்த்துக்கொண்டு வந்தான் முருகன்.
சிலுவை எப்படி போடுவது என்று கூட தெரியாமல் பக்கத்தில் இருப்பவர்களை எட்டி எட்டி பார்த்து ஒரு வழியாக சிலுவை போட்டுக் கொண்டான். எல்லோரும் தங்களின் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு தேவாலயத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அவன் மட்டும் தூரத்திலிருந்த சிவன் கோயிலை பார்த்துக் கொண்டிருந்தான்.
கோயிலில் அவனுக்கு பிடித்த ”தோடுடைய செவியன்” என்ற சிவன் பாடல் ஒலித்து கொண்டிருந்தது. தனது சரியில்லாத கால்களை சரி செய்வதற்காக செய்யப்பட்ட பெரிதும் சிறிதுமான தனது செருப்புக்களை மெல்ல தடவிப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கினான் முருகன்.
எல்லோரும் நிம்மதிக்காக கோயிலுக்கு செல்வதைப் போல் முருகனும் நிம்மதியை தேடி கோயிலுக்கு செல்வான். கோயிலுக்குள் நுழையும் முன்பே சில மனிதர்களின் கேள்விகள் அவனது பழைய கவலைகளை மறக்க வைத்து புதிய கவலைகளை தந்துவிடும்.
ஏம்பா, ’செருப்பை கழட்டிட்டு கோயிலுக்குள்ள போப்பா’, ’கோயிலுக்குள்ள போகும்போது யாராவது செருப்பு போடுவாங்களா’ ’தம்பி செருப்பு போட்டுட்டு உள்ள வராத’ இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு மனம் நொந்து போய்விடும்.
எனக்கு என்ன ஆசையா, இதை கழட்டுனா என்னால நடக்க முடியாது, இது கூட இந்த கண்ணு இருக்கிற மனிதர்களுக்கு புரிய வைக்க முடியாத இந்த கடவுள்ட்ட நான் எதுக்கு போகணும் என்று கடவுளிடமே கோபப்பட்ட நாட்கள் நிறைய உண்டு, திருத்த முடியாத இந்த மனிதர்களிடம் கோபப்படுவதை விட கடவுளிடம் கோபப்படுவது எவ்வளவு எளிதாக இருந்தது முருகனுக்கு.
அரசாணை இருந்தும் என்ன பயன்? ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றி எல்லோரும் புகழ்ந்து கூற கேட்டு, சரி நாமும் சென்று பார்க்கலாம் என்று பல நூறு கிலோமீட்டர் பேருந்தில் பயணம் செய்து குடும்பத்தோடு போயிருந்தோம், அங்கும் இதே பிரச்சனை ஒரு காவல் அதிகாரி வாசலிலேயே நிறுத்தி செருப்பை கழட்டி வைத்து விட்டு தான் உள்ளே போக வேண்டும் என்று கூறினார்.
தைரியமாக நாம் பேசலாம் என்று முடிவு செய்யும் முன், என்னை நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருந்த எனது குடும்ப உறுப்பினர்கள் கூட, “சரிங்க… நீங்க கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருங்க, நாங்க உள்ள போய் சுத்திட்டு வர்றோம்” என்று எளிதாக கூறிவிட்டு கடந்து சென்று விட்டார்கள்.
சரி…. உட்காரலாம் என்று வாசல் படியில் உட்கார்ந்தால், என் முகத்தை பார்ப்பவர்களை விட கால்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். ’உச்’ கொட்டுவது, ’ஐயோ பாவம்’ என்று சொல்வது இப்படயெல்லாம் சொல்லி தங்களை கருணைமிக்கவர்களாக காட்டுவதற்கு நான் தான் இவர்களுக்கு கிடைத்தேன் பொல.
ஒருவருக்கும் என்னை உள்ளே அழைத்துச் செல்ல துணிவில்லை, குடும்ப உறுப்பினர் உட்பட. ஆனால் கருணை உள்ளவர்களைப் போல தங்களை காட்டிக் கொள்வதற்கு ஒன்றும் குறைவில்லை என்று மனசுக்குள்ளே திட்டிக் கொண்டேன். கருணையை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெறியாத இந்த மக்கள், தங்களை கருணையுள்ளவர்களாக காட்டிக்கொள்ள என்னை ஆயுதமாக்குகிறார்களோ என்று யோசித்தேன்.
சரி… துணிந்து அரசாணையை காண்பித்து காவல்துறை அதிகாரியிடம் பேசி நாம் உள்ளே செல்வோம் என்று முடிவெடுத்தேன்.
“செருப்பு போட்டுக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் கோயிலுக்குள் நுழையலாம் என்று அரசாணை உள்ளது. தயவுசெய்து என்னை உள்ளே விடுங்கள்” என்று துணிந்து அதிகாரியிடமே போய் நின்றேன்.
ஆனால் அவர் எதையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதாக தெரியவில்லை. “ஐயா, கூட்டம் நிறைய இருக்குது, எனக்கு உங்ககிட்ட பேச நேரம் இல்ல, தயவு செய்து கொஞ்சம் ஒதுங்கி போங்க, செருப்பு போட்டுட்டு உள்ள வரக்கூடாது அவ்வளவுதான்… இங்கே இருந்து கிளம்புறீங்களா” என்று கடுமையாக பேசி அவரது வேலைப்பளு தந்த எரிச்சலை என் மீதி திணித்தார்.
இங்கே யாருக்கும் பிறரது உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு நேரமோ, அவசியமோ இருப்பதே இல்லை. இவர்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம், குறைந்தது அவரவர் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு வழிவிட்டாலே போதும்., ஆனால் இங்கே அதற்கு கூட வழியில்லாமல் போய்விட்டது.
கோயிலை முழுமையாக சுற்றிவிட்டு வந்த குடும்ப உறுப்பினர்கள், “கோயில்ல இந்த இடம் நல்லா இருந்துச்சு, இந்த சிலை நல்லா இருந்துச்சு” என்று பேசும்பொழுது அதை சிரித்துக் கொண்டே நான் கேட்டுக் கொண்டிருந்தேன், வேறு என்ன செய்வது ?…
எனது உணர்வுகளை யாரிடம் சொல்ல… எப்படி சொல்ல…. இப்படியாக ஒவ்வொரு முறை கோயிலுக்குள் நுழையும்போதும் நிம்மதி தொலைத்த நாட்களே அதிகமாக இருந்தது முருகனுக்கு. மனநிம்மதியை தேடி எங்காவது போய் அமர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஒரு நாள் தேவாலயத்தின் முன்பு வந்த நின்றான்.
அங்குள்ள பாதிரியாரிடம் “ஐயா, இந்த கோயிலுக்குள்ள செருப்பு போட்டு வரலாமா?” என்று முதலில் கேட்டுக் கொண்டான்.
“தாரளமா வாங்க உங்களால முடியலன்னு தானே போட்டுட்டு வர்றீங்க, கர்த்தர் ஒன்னும் சொல்ல மாட்டார் உள்ள வாங்க” என்று இன்முகத்தோடு வரவேற்றார் பாதிரியார். அங்குள்ள யாரும் அவனது காலைப் பார்த்து பேசவில்லை அவனது முகத்தைப் பார்த்து பேசினார்கள். அவனுக்கு அது சற்று நிம்மதியை கொடுத்தது.
கடவுள் மேல எந்த தப்பும் இல்ல… எந்தக் கடவுளும் எந்த நிபந்தனையும் போடல, இந்த மனுஷங்க தான் அறிவில்லாம சம்பரதாயம், சடங்கு என்ற பெயரில் மனதை புண்படுத்துகிற வேலையை விதவிதமா செஞ்சுட்டு வராங்க. ஒவ்வொருத்தருக்கும் மதம் மாறுவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் நான் மதமாறினதுக்கு காரணம் என்ன தெரியுமா நீ தான்…. என்று யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதைப் போல முருகன் தன் செருப்பை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
மதத்தை சற்றே மறந்துவிட்டு செருப்பு உண்டாக்கும் தாக்கத்தை பார்த்தால்தான் முருகனின் வலி புரியும்…