ஒரு பெண் தன் தந்தையிடம், “எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது, தினம் தினம் போராட்டமாகவே இருக்கிறது. ஒரு பிரச்சனையை சரி செய்து சற்று நிமிர்ந்தால், மற்றொன்று வரிசையில் நிற்கிறது. எப்படி என் வாழ்க்கையை வாழப் போகிறேன் என்றே தெரியவில்லை, சாகும் வரை எனக்கு விடிவில்லை” என வருந்தினாள்
சமையல் வல்லுனரான அந்த பெண்ணின் தந்தை, மகளை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றார்
பின், மூன்று பாத்திரங்களில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் ஏற்றி அடுப்பைப் பற்ற வைத்தார்
தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும், ஒன்றில் உருளைக் கிழங்கையும், அடுத்ததில் முட்டையையும், மற்றொன்றில் காபி கொட்டைகளையும் போட்டார்
மகளிடம் எதுவும் பேசாமல், மூன்று பாத்திரத்தின் பதார்த்தங்களும் நன்கு வெந்து வருவதை பார்த்தபடி அமர்ந்திருந்தார் தந்தை
அந்த பெண் பொறுமையிழக்க தொடங்கினாள்
ஆனாலும், தந்தை தன் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என அறிய, பொறுமையை இழுத்துப் பிடித்து அமர்ந்திருந்தாள்
இருபது நிமிடங்களுக்கு பின், அடுப்பை அணைத்த தந்தை, உருளைக்கிழங்கை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்தார். அதே போல், வெந்த முட்டையையும் இன்னொரு பாத்திரத்தில் வைத்தார்
அதன் பின், காபியை வடித்து ஒரு கோப்பையில் ஊற்றினார். பின் மகளிடம் திரும்பியவர், “மகளே, உன் கண்களுக்கு இங்கு என்ன தெரிகிறது?” எனபுன்னகையுடன் கேட்டார்
“வேறென்ன, உருளைக்கிழங்கு முட்டை காபி” என்றாள் பெண் சலிப்பாக
“நன்றாக கவனி ” என்றவர், “இந்த உருளைக்கிழங்கை தொட்டுப் பார்” என்றார்
தொட்டுப் பார்த்த பெண், அது மிகவும் மிருதுவாய் வெந்து இருந்ததை உணர்ந்தாள்
அதன் பின் முட்டையை எடுத்து ஓட்டை உடைக்கச் சொன்னார். உடைத்ததும், அது நன்கு வெந்து இறுகி இருப்பதை உணர்ந்தாள் மகள்
இறுதியாய், தந்தை தன் மகளிடம் காபியை அருந்தி பார்க்கச் சொன்னார். அது மிகவும் சுவையாய் இருக்க, அவள் முகத்தில் புன்னகை விரிந்தது
இதன் மூலம் தந்தை தனக்கு எதையோ உணர்த்த முயல்கிறார் என அப்போது தான் உணர்ந்த மகள், “இதற்கு என்ன அர்த்தம் அப்பா?” என்று கேட்டாள்
அதற்கு தந்தை, “உருளைக்கிழங்கு, முட்டை, காபிக் கொட்டை மூன்றையும் நான் ஒரே போல் கொதிக்கும் தண்ணீரில் தான் வேகச் செய்தேன். ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு எதிர்வினைகளை காட்டி இருக்கிறது
கடினமான உருளைக்கிழங்கு தன் தன்மையை மாற்றி மிருதுவாகி உள்ளது. உள்ளே இருக்கும் கருவை சன்னமான ஓட்டால் காத்து வந்த முட்டை, கடினமாக ஆகி இருக்கிறது
ஆனால், காபி கொட்டைகள் தனித்துவமானவை. தான் இடப்பட்ட தண்ணீரை சுவையான பானமாக மாற்றி விட்டது” என சற்று நிறுத்தியவர்
“இப்போது சொல் மகளே, நீ யார்? துன்பம் உன் கதவைத் தட்டும் போது, நீ எப்படி எதிர்வினை ஆற்றுவாய்? உருளைக் கிழங்கை போலவா, முட்டையை போலவா அல்லது காபி கொட்டையை போலவா?” என்ற கேள்வியை புன்னகையுடன் முடித்தார் தந்தை
அந்த கேள்வியிலேயே தனக்கான பதில் இருந்ததை உணர்ந்த மகள், வாழ்வை பற்றிய புதிய புரிதலுடன், தந்தையை புன்னகையுடன் ஏறிட்டாள்
உங்களுக்கு அந்த தந்தையின் கேள்வியில் இருந்த பதில் புரிந்ததா? நிச்சயம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்
அதாவது, எந்த சூழ்நிலைக்கு உட்படுத்தப்பட்டாலும், நாம் அதற்கு காட்டும் எதிர்வினையே, நாம் எந்த அளவிற்கு அந்த சூழ்நிலையின் தாக்கத்திற்கு ஆளாகிறோம் என்பதை தீர்மானிக்கிறது என்பதே இந்த கதையின் நீதி
இது மேற்கத்திய நாட்டில் சொல்லப்படும் கதை என்றாலும் எல்லோருக்கும் பொருந்தும்
தோல்வி நிலையல்ல (Defeat is not Permanent)
“தோல்வி நிலையென நினைத்தால்,
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து,
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்,
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த,
கனவை மறக்கலாமா?
விடியலுக்கு இல்லை தூரம்,
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்,
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?
யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்!
பாதை மாறலாமா?
இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்!
கொள்கை சாகலாமா?”
1986ல் வெளி வந்த ‘ஊமை விழிகள்’ என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் இந்த பாடலின் வரிகள் மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டவை, கேட்போரை மனம் நெகிழச் செய்யும்
அதற்குக் காரணம், வாழ்வின் பல கட்டங்களில், நாமும் அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல், தோல்விகளையும் ஏமாற்றங்களையும் தாண்டியே வந்திருப்போம்.
“அந்த தோல்வி நிலையானது அல்ல, காலங்களும் காட்சிகளும் மாறும், விடியல் வரும்” என்ற நம்பிக்கையுடன் முயற்சியை தொடர்வோர், வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.
மாறாக சிலர், “நான் என் சக்திக்கு மீறி உழைப்பு பணம் எல்லாம் முதலீடு செய்தும், எனக்கு மட்டும் ஏன் எப்போதும் எல்லாம் தோல்வியில் முடிகிறது” என மனம் நோவார்கள்
நிச்சயம் மிகவும் வருத்தமான விசயம் தான். ஆனால், உண்மையை சொல்ல வேண்டுமெனில், உங்களுக்கு மட்டும் இந்த நிலை என்றில்லை, உங்களை சுற்றி உள்ள பலரின் நிலையும் இதுவே
நீங்கள் எப்படி யாரிடமும் உங்கள் தோல்விகளை பகிர்வதில்லையோ, அதேப் போல் மற்றவர்களும் அவர்கள் தோல்வியை உங்களிடம் பகிர்வதில்லை, அதனால் உங்களுக்கு தெரிவதில்லை. அது தான் நிதர்சனம்
தோல்வி முயற்சிக்கு தான் – உங்களுக்கு அல்ல
இன்னும் சிலர், “பிசினெஸ் செஞ்சா அது ரெம்ப ரிஸ்குனு தான் வேலைக்கு போனேன், தெரியாத வேலையையும் கூட. கஷ்டப்பட்டு கத்துக்கிட்டு நேரம் காலம் பாக்காம வேலை செஞ்சேன். அங்கேயும் இன்டெர்னல் பாலிடிக்ஸ். ஆள் குறைப்புனு வந்தப்ப, முதலாளிக்கு வேண்டியவங்களை மட்டும் வெச்சுக்கிட்டு, எங்களை வேலைய விட்டுத் தூக்கிட்டாங்க”னு வருத்தப்படுவாங்க
மிகவும் வேதனையான தருணம் தான். அந்த சூழ்நிலையை கையாள்வது மிகவும் சிரமமே, நான் மறுக்கவில்லை. பொருளாதார ரீதியாய் மிகவும் கொடுமையான காலகட்டமும் கூட
ஆனால் உங்கள் உழைப்பும், திறமையும், நீங்கள் கற்றுக் கொண்ட விஷயங்களும் என்றும் வீணாகாது என்பதை நீங்கள் உணர வேண்டும்
அது நமக்கான புத்தி கொள்முதல், நம்மிடமிருந்து யாரும் அதை தட்டிப் பறிக்க இயலாது
என்றேனும் ஒரு நாள், உங்களுக்கு அது வெற்றிக்கான மூலதனமாய் மாறும் என்பதில் ஐயமில்லை
செய்த தொழிலில் நீங்கள் தோற்றிருக்கலாம், அல்லது இருந்த வேலையை இழந்திருக்கலாம். ஆனால் மனோதிடத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்காத வரை, நமக்கு தோல்வி என்பதே இல்லை
மனிதனாய் பிறந்த எல்லோருமே, தோல்வியையும் ஏமாற்றங்களையும் ஏதேனும் ஒரு தருணத்தில் கடந்து வந்து தான் ஆக வேண்டும். இன்றில்லாவிடில் நாளை, அல்லது சில காலம் கழித்தேனும் அதை நாம் சந்திக்க நேரும்
உங்களை வேண்டாம் என ஒதுக்கும் உறவாக இருந்தாலும், முதலாளியாக இருந்தாலும், உங்களை இழந்ததில் நஷடம் அவர்களுக்கே என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின் தோல்வியை பற்றிய உங்கள் கண்ணோட்டமே மாறி விடும்
தோல்வியின் முடிவு வெற்றிக்கான ஆரம்பம்
அத்தகைய தோல்விகளை தாங்க இயலாமல், சிலர் வாழ்வையே போக்கிக் கொள்ளும் தவறான முடிவுக்கு செல்கிறார்கள்
சமீபத்தில், M.S.Dhoni திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற, சுஷாந்த் சிங் ராஜ்புட் என்ற இளம் நடிகரின் மரணம், திரை உலகை மட்டுமின்றி, மற்றவர்களையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது
தொடர் ஏமாற்றங்களும், துரோகங்களும் அப்படி ஒரு முடிவை எடுக்க செய்தது என காரணம் சொல்லப்பட்டாலும், உயிரை மாய்த்துக் கொள்வது எந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வல்லவே
எந்த துறையில் இல்லை போட்டியும் பொறாமையும், தம்மை தள்ளிவிட்டு ஓடும் கூட்டமும்
அதற்கெல்லாம் சாக வேண்டுமென்றால், உலகில் பாதி மக்கள் தொகை உயிர் வாழ இயலாது
ஒருவர் ஜெயிக்கிறார் என்றால், அங்கு போட்டியிட்ட மற்றவர் எல்லாம் தோற்கிறார் என்று தானே அர்த்தம். அது தானே “Game of Life”
நமக்கும் ஒரு நாள் வரும், அதுவரை காத்திருப்போம். அதற்காக. வெற்றி நம்மை தேடி வரும் என சோர்ந்திருக்கலாகாது
நம்மால் ஆன முயற்சியை செய்து கொண்டே இருக்க வேண்டும், நமக்கான நொடியில் நம் வெற்றி கொடியை நாட்டலாம்
தற்கொலை முடிவு சுயநலமானது
என்னை பொறுத்தவரை, வெற்றிக்காக காத்திருக்கும் பொறுமையின்றி தற்கொலை முடிவை எடுப்பவர்கள் தான் உலகிலேயே மிகவும் சுயநலமானவர்கள் என்பேன்
கடன் தொல்லையை தீர்க்க முடியவில்லை என்றோ, வேலை பறிபோய் விட்டதென்றோ, அந்த முடிவை எடுக்கிறீர்கள் என்றால், உங்கள் மேல் உயிரையே வைத்திருக்கும் குடும்பத்தை பற்றி யோசிக்காமல் எடுக்கும் அந்த முடிவு சுயநலமானது தானே
உங்களால் சுமக்க முடியாத அந்த சுமையை, உங்களுக்கு பின் உங்கள் மனைவியோ / கணவனோ தனியாக எப்படி சுமப்பார் என ஏன் யோசிக்கத் தவறுகிறீர்கள்?
உங்களையும் இழந்து, கடனையும் தீர்க்க அவர் என்ன பாடுபடுவார்? அதோடு, உங்கள் பிள்ளைகளை தனியே எப்படி வளர்ப்பார் என்ற அக்கறை இன்றி, தான் தப்பித்தால் போதுமென எடுக்கும் அந்த முடிவு, சுயநலமானதன்றி வேறென்ன
உறவுகளை எண்ணிப் பாருங்கள்
நீங்கள் வீட்டுக்குள் நுழையும் முன்னே “அப்பா” அல்லது “அம்மா” என ஓடி வந்து உங்கள் காலைக் கட்டிக் கொள்ளும் உங்கள் பிள்ளைகளின் முகத்தை கண் முன் கொண்டு வந்து பாருங்கள்
நீங்கள் கவலையோடு இருந்தால், “விடுப்பா பாத்துக்கலாம், எல்லாம் சரியாயிடும், டென்சன் ஆகாத, நான் இருக்கேன் உனக்கு” என அனுசரணையாய் பேசி, உங்கள் சுக துக்கத்தில் பங்கெடுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணையை எண்ணிப் பாருங்கள்
உங்கள் முகம் சற்று வாடினாலும், “போனா போகட்டும் விடு. காசு தான சம்பாதிச்சுக்கலாம். நீ நல்லா இருக்கியே அதே போதும்” என சமாதானம் சொல்லும் உங்கள் பெற்றோரை எண்ணிப் பாருங்கள்
உங்களை சுற்றியே தங்கள் உலகத்தை அமைத்துக் கொண்ட இவர்களையெல்லாம் விட்டு போக மனம் வருமா என்ன?
பணம், பதவி, அந்தஸ்து எதுவும் நிலையானதல்ல. இதற்கு முன் நாம் சம்பாதித்தது தானே அது. நாம் நினைத்தால் மறுபடியும் அந்த இலக்கை அடைய முடியாதா?
எல்லாவற்றிக்கும் மேலாய், “வாழ்வில் தோற்றதால் என்னை பெற்றவர் வாழ்வை முடித்துக்கொண்டார்” என்பது, என்ன மாதிரியான படிப்பினையை உங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்
மாறாக, “எத்தனை பிரச்சனைகள் வந்த போதும், அத்தனையும் சமாளித்து, உன்னையும் ஆளாக்கி, இன்று இந்த நிலையில் இருக்கிறேன் பார்” என வாழ்ந்து காட்டுவது தானே, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் தரும் மிகப் பெரிய சொத்து
ஒரு நாள் ICU வாயிலில் நின்று பார்த்தீர்களானால், உயிரின் மதிப்பு என்ன என்பதை, உங்களால் உணர இயலும்
நேர்மறை சிந்தனை
காலுக்கு செருப்பில்லை என அழுதவன் காலே இல்லாதவனை பார்த்து மனதை சமாதானம் செய்து கொண்ட கதைகளை, நாம் சின்ன வயதில் இருந்தே கேட்டு வளர்ந்து இருக்கிறோம்
நம்மிலும் கீழோர் எத்தனையோ பேர் என்பதை நம் மனம் உணர்ந்தால், நம் பிரச்சனை ஒன்றுமில்லை என்பதை உணர முடியும்
பிசினஸில் நஷ்டம் என மனம் வருந்துகிறீர்களா? உங்களுக்கேனும் முயன்றோம் என்ற ஆறுதல் இருக்கிறது. அப்படி முயலக் கூட வழியில்லாதவர்களை பற்றி யோசித்து பாருங்கள். நம் நிலை மேல் அல்லவா
பிரச்சனைகள் இன்று வரலாம் நாளை போகலாம். ஆனால் உயிர் என்பது விலை மதிப்பில்லாதது
இன்று பெரிய பிரச்சனையாய் தோன்றும் ஒன்று, பின்னாளில் நினைத்துப் பார்க்கும் போது, “இதுக்கா இத்தனை டென்ஷன் ஆனோம்” எனத் தோன்றும்
அல்லது, “அதிலிருந்து மீண்டு வரும் மன வலிமை நமக்கு எங்கிருந்து வந்தது?” என நமக்கு நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் நிலையும் வரலாம். நம் அனுபவங்கள், இன்னொருவருக்கு வாழ்க்கை பாடமாகலாம்
வெற்றியாளர் பிறப்பதில்லை – உருவாகிறார்
யாரும் பிறக்கும் போதே வெற்றியாளராய் பிறப்பதில்லை. அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் அவரை வெற்றியாளராய் மாற்றுகின்றன
வைரம் மதிப்பில் மிகவும் அதிகம், ஆனால் அது அந்த விலை உயர்ந்த கல்லாய் மாற, எத்தனை ஆண்டுகள் எத்தனை சோதனைகளை தாண்டி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அதுமட்டுமின்றி, வைரம் மிகவும் கடினமானது என்பதால், அதை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும் என்பார்கள். அப்படிப் பார்த்தால், நம் மதிப்பு உயர்வது என்பது நம் கையில் தானே இருக்கிறது
இன்று வேண்டுமானால், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு சாதகமாய் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் ஜெயிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மனதில் உருவேற்றிக் கொள்ளுங்கள்
இன்றைய நிலை மாறும்
இன்று உலகம் முழுதும் கொரோனா தாக்கத்தால், சிறு குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை
பெரும் முதலாளிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மீண்டு வரும் பலம் இருக்கிறது, முன்னவருக்கு அது இல்லை. அது தான் வித்தியாசம். மத்தியத்தர வர்க்கத்தினர் பலர் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கிறார்கள்
எத்தனையோ பேரிடர்களையும், இயற்கை சீற்றங்களையும், உயிர் கொல்லி நோய்களையும் தாங்கி இந்த உலகம் மீண்டிருக்கிறது
இப்போதும் அப்படி மீண்டு வருவோம் என நம்புவோம். அதுவரை சற்று பொறுமையாய் காத்திருப்போம்
வாழ நினைத்தால்…
“வாழ நினைத்தால்
வானமே எல்லை
வாழ்ந்து பார் – அந்த
வானமேகூட உன்வசமாகும்“
சில வருடங்களுக்கு முன் சற்று மன வருத்தத்தில் இருந்த ஒரு தருணத்தில், என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்ள எழுதிய வரிகள் தான் இவை
எழுதியதோடு நில்லாமல், அதை என் செல்போன் Screen Saverஆக வைத்து, அடிக்கடி பார்த்துக் கொள்வேன். எனக்கு இது பெரிய டானிக்காக இருந்தது
நீங்களும் முயன்று பாருங்கள். இந்த நான்கு வரிகளை உங்கள் screen saver ஆக வைக்க முடியுமெனில் செய்யுங்கள்
இல்லையேல், எளிமையாய் ஒரு பேப்பரில் பெரிய எழுத்துக்களில் எழுதி, நீங்கள் தினமும் முகம் பார்க்கும் கண்ணாடியிலோ, அல்லது உங்கள் கண் படும் இடத்திலோ வையுங்கள்
தினமும் இரண்டு முறையேனும் அந்த வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்து, வாய் விட்டு மனதில் பதியும் படி சற்று சத்தமாக வாசியுங்கள்
உங்கள் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் மறைந்து, வாழ்வில் வெளிச்சம் பிறக்கும்
வாழ்ந்து பாருங்கள்
வானம் வசமாகாவிடினும்
வாழ்க்கை வசமாகும்!!!
அது போதும் நமக்கு
வானமே எல்லை என்பது கூட ஒரு பதத்திற்காய் சொல்லப்படுவது தான். வானையும் தாண்டி விண்ணில் கால் பதித்து காட்டி இருக்கிறார்களே
எனவே, உங்கள் எல்லையை வகுக்க சரியான ஆள் நீங்கள் மட்டுமே . உங்கள் திறன் உணர்ந்து, சூழ்நிலை புரிந்து, எட்ட முடியும் சவால்களை மைல் கல்களாய் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தை இன்று தொடங்குங்கள்
All the best for your success
இந்த பதிவு சுயமுன்னேற்ற கட்டுரை தொடரின் முதல் பகுதி. இனி தொடர்ந்து கட்டுரைகள் வெளியிடப்படும்
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
Well said Bhavani. Excellent start. All the very best
Thank you Subha