in ,

சாந்தி வீடு (சிறுகதை) – ரேவதி பாலாஜி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

“பாபு வீடு எதுங்க?” தபால்காரர் விசாரித்தார்.

“பாபுவா? அப்படி யாரையும் இங்க தெரியாதே..”

“இது மாரிமுத்து தெரு தான?”

“ஆமாங்க”

“இந்த தெரு அட்ரஸ் தான் போட்ருக்கு”

“இல்லைங்க பாபுன்னு யாரையும் தெரியாது”

பக்கத்து வீட்டு அக்கா இப்படி கூறுவதை கேட்டுக்கொண்டே வெளியே வந்தேன்.

“எங்க மாமனார் பேர் தான்க்கா பாபு” என்றேன் இருவரையும் பார்த்து

“ஓ.. சாந்தி அக்கா வீடுன்னு கேட்டா தெரியும், உன் மாமனார் பேரு எனக்கு தெரியாதே” சிரித்துக் கொண்டே கூறினார் பக்கத்து வீட்டு மஞ்சு அக்கா

ஆமாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான், என் மாமனார் வெளியே வந்தால் தானே தெரியும். காலையில் தயாராகி அலுவலகத்திற்குச் சென்றால் மீண்டும் இரவில் தான் வருவார். வந்ததும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூங்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும்.

ஞாயிற்றுகிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அன்றும் வெளியில் வந்து அதிகம் பிறரோடு பேச மாட்டார். ஒரு சண்டை என்றாலோ சத்தம் வந்தாலோ கூட வெளியே வர மாட்டார்.

என் அத்தை சாந்தியோ அதற்கு நேர்மாறாய் முன்னே வந்து நிற்பார். சாமி ஊர்வலம் வந்தால் என் மாமனாரை வெளியே வரச் சொல்லுவார் அவ்வளவு தான். அதனால் தான் எங்கள் தெருவில் சாந்தி வீடு என்றால் தான் தெரியும். பாபு என்று தபால்காரர் என்  மாமனாரை கேட்டதும் அவருக்குத் தெரியவில்லை.

தபாலை வாங்கிக்கொண்டு உள்ளே போனேன். என் அத்தை வீட்டிற்குள் இல்லை. பின் வீட்டில் இருந்து அவர் பேசும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டிற்கு குழம்பு கொடுக்க போயிருக்கிறார். அவர்கள் நேற்று வந்து வெண்பொங்கல் கொடுத்துவிட்டுச் சென்றனர். அதற்கு வெறும் பாத்திரத்தை திருப்பித் தரக் கூடாது என்பதற்காக குழம்பு கொடுக்கப் போயிருக்கிறார்.

உண்மையில் அவருடைய இப்படிப்பட்ட குணத்தை கண்டு எனக்கு ஆச்சர்யம் தான். எப்படி இந்த காலத்தில் சுற்றி இருப்பவர்களிடம் இப்படி நட்பு பாராட்ட முடிகிறதோ

முதலில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்ணில் படும்பொழுதெல்லாம் சிரிக்க வேண்டும். பதிலுக்கு அவர்களும் சிரிப்பார்கள். பின் உணவு ஆச்சா என்று மெல்ல பேசத் தொடங்க வேண்டும்

“வீட்டில் என்ன சமையல் வாசனை இங்கே வரை மணக்கிறது” என்பார்.

“என்னது குடைமிளகாய்ல குருமாவா.. அது எப்படிக்கா செய்விங்க?” என்று பக்கத்துவீட்டு அக்கா மாமியாரிடம் கேட்பார்

“கறுப்பு கவுனி அரிசில கஞ்சி காச்சுவீங்களா அதெப்படி செய்விங்க?” என்று என் மாமியார் அவரிடம் விசாரிப்பார். பின் இந்த விசாரிப்பில் இருந்து பண்டமாற்றம் தொடங்கும்.

“குச்சிகிழங்கு வேக வெச்சேன்.. நீங்க ரெண்டு சாப்பிடுங்க” இங்கிருந்து அங்கே போகும்

“வேர்க்கடலை செஞ்சேன்.. இந்தாங்க” அங்கிருந்து இங்கே வரும்

உணவு பரிமாற்றங்களோடு வீட்டு புராணங்களும் மெல்ல மெல்ல பரிமாறப்படும். அப்படியே அடுத்த வீட்டுப் புராணமும்.

“என்ன சுதா முட்டை வாசனை வருது அமாவாசை அதுவுமா?”

“எல்லாம் பின்னாடி வீட்ல தான்க்கா.. நாள் கிழமைல பாக்க மாட்டாங்க.. எப்போனாலும் கவிச்ச சேர்த்துக்குராங்க”

“பாவம் அவருக்கு வீசிங் இருக்குல்ல அதுக்கு சேர்த்துப்பாங்க.. சரி விடு நீ என்ன செஞ்ச?” இப்படி பக்கத்து வீட்டு வாசத்தை கூட விவரித்து விடுவார்கள்

“உங்க வீட்டுல கந்த சஷ்டி கேட்ட தான் 6 மணி ஆச்சுன்னு தெரியுது பிரேமா” பக்கத்து வீட்டு பாட்டுக்கும் அர்த்தம் வைத்திருக்கிறார் என் அத்தை

வீட்டில் காய்கறி இருந்தாலும் காய்கறிகாரர் வரும்பொழுது தெருவே சுற்றி நின்று கொண்டு எந்த காய்கறி என்ன விலை என்று அன்றைய விலைவாசியை விசாரிப்பார்கள்.

“காளான் நாலு பாக்கெட் நூறு ரூபாயாம் மஞ்சு.. நல்லவா இருக்கும் சமைச்சா”

“கொஞ்சம் வேஸ்ட் ஆகும் கா.. கொஞ்சம் கிளீன் பண்ணிட்டு சமைச்சா நல்லாத்தான் இருக்கு”. பொருட்களின் தரங்களையும் விசாரித்து வாங்குவார்.

மாலைப் பொழுதில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வாசலில் அமர்ந்து கொள்வார்.

உள்ளே தனிமையில் நேரம் எனக்கு பிடிக்கும். தொலைக்காட்சி பார்க்க பாட்டு கேட்க அப்படிப்பட்ட சுயநேரம் வேண்டும் என நினைப்பேன். ஆனால் என் அத்தை அப்படி இல்லை. பத்து நிமிடங்கள் தனியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தால் அவருக்கு சலித்துவிடும். யாராவது இருந்தால் பேசலாம் என்று தான் நினைப்பார்.

வாசலில் அமர்ந்து தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்.

நான்கு வீடு தள்ளி இருக்கும் ஒரு வீட்டிற்கு தினமும் உணவு ஆர்டர் செய்து வரவழைக்கப்படுகிறது. எதிர்வீட்டு பெண்ணிற்கு ஐந்து மணிக்கு பள்ளி முடிந்து ஆட்டோவில் வந்து இறங்குகிறாள். தூரத்தில் ஒரு பெண் தன் கை குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.

“இந்த தெரு பெண் போல் இல்லையே, ஒருவேளை பக்கத்து தெருவாக இருக்கலாம்” என்று என்னிடம் கூறிக்கொண்டே இதையெல்லாம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்.

சில நேரங்களில் சிறு பிள்ளை போல் வண்டி செல்வதை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார்.

கூடையில் பழம் கொண்டு செல்லும் பாட்டியிடம் பழம் வாங்கவில்லை என்றால் கூட சும்மா இரண்டு வார்த்தை பேசி வைப்பார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து குடிக்கச் சொல்லுவார்.

அன்று ஒரு நாள் மதியம் மூன்று மணி இருக்கும் அப்பொழுது என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

“உங்க மாமியாருக்கு சுகர் கம்மியாகி உடம்பு முடியாம இருக்காங்க.. டாக்டர் கூட்டிட்டு வந்து செக் பண்ணோம். இப்போ கொஞ்சம் பரவால்ல.. நீ வேலைய முடிச்சிட்டு சீக்கிரம் வாம்மா” பக்கத்து வீட்டு சுதா அக்கா என்னை அழைத்து கூறினார்.

என் கணவர் சென்னை சென்றிருக்க என் மாமனார் வேலைக்கு சென்றிருக்க வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருக்கு இப்படி உடம்பு கெட்டுவிட்டதே. அலுவலக வேலை முடித்துவிட்டு சீக்கிரம் கிளம்பினேன்.

வீட்டிற்குள் நுழையும்பொழுதே நான்கு ஐந்து ஜோடி செருப்புகள் வெளியே. தெருவே எங்கள் வீட்டில் தான் இருந்தது. சுதா அக்கா, மஞ்சு அக்கா, பிரேமா அக்கா, உமா அக்கா, எல்லாரும் சுற்றியிருக்க என் மாமியார் படுத்திருந்தார்.

“கொஞ்சம் வெடவெடன்னு இருக்குன்னு சொன்னாங்க.. அதான் டாக்டர் கூப்பிட்டு சுகர் பிபி செக் பண்ணோம்” என்றார் சுதா அக்கா

“இப்போ நல்லாதான் இருக்காங்க.. ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க டாக்டர்” என்றார் உமா அக்கா

“சுகர் இருந்தா டைம்க்கு சாப்பிடணும்.. நேரத்துக்கு சாப்பிட சொல்லுமா” என்றார் பிரேமா அக்கா

“நைட்க்கு டிபன் நான் செஞ்சி குடுத்து விடுறேன்.. அத்தைய சிரமபடுத்த வேணாம்” என்றார் மஞ்சு அக்கா

எல்லோரும் சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினார்கள்.

பரவாயில்லை யாரும் இல்லாத நேரத்தில் இப்படி தனியாக இருந்த என் அத்தையை இவ்வளவு நன்றாக கவனித்து கொள்ள அருகிலேயே இத்தனை சொந்தங்கள் இருக்கின்றன என மனதிற்குள் நினைத்து குளிர்ந்து போனேன்.

ஒரு வாரம் கழித்து என் அத்தை இன்று மீண்டும் வாசலில் வந்து அமர்ந்தார். ஒரு வாரமாக அவர் முகத்தில் இல்லாத சந்தோசம் வாசலில் வந்து அமர்ந்ததும் மீண்டும் வந்ததாய் எனக்குத் தோன்றியது.

பக்கத்து வீட்டு சுதா அக்கா என் அத்தையை பார்த்தும் ஓடி வந்தார்.

“சாந்தி அக்கா எப்படி இருக்கீங்க.. தொந்தரவு பண்ண வேணாம்னு தான் ஒரு வாரமா வீட்டுக்கு வரல.. இப்போ பரவாலையா?”

“நல்லா இருக்கேன் சுதா.. உள்ள வா காபி குடிச்சிட்டு போலாம்”

“இப்போதான் குடிச்சேன்கா.. வேணாம்”

“ஒரு வாரமா யார்கிட்டையும் பேசாம மனசே சரியில்ல.. உள்ள வந்து காபி சாப்பிட்டு போயேன்”

சுதா அக்காவும் புரிந்து கொண்டு உள்ளே வந்து காபி குடித்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார்.

ஒரு வாரமாய் இல்லாத சிரிப்பு வீட்டிற்குக் கூப்பிட்டு காபி கொடுத்து நாலு வார்த்தை பேசிக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் என் அத்தை முகத்தில் பூத்தது. பிறரிடம் மனம் விட்டு பேசி வாய்விட்டு சிரிக்க எவ்வளவு கொடுப்பினை வேண்டும்.

அப்பொழுது எனக்கும் புரிந்தது சிலர் வாழ்க்கையின் அர்த்தமே மனிதர்களின் வாசம் அருகில் இருப்பது தான்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. என் மனைவி பெயர் சாந்தி என்பது மட்டுமல்ல, குணமும் நீங்க விவரித்தபடியே..

கமலி பாட்டியும் விமலி பேத்தியும் 😜 (அலட்டல் 2) – ராஜேஸ்வரி

இன்னும் இருக்கு மனிதாபிமானம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை