in ,

சங்கிலி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையிலிருந்தே கையை அரித்துக் கொண்டிருந்தது சங்கிலிக்கு. இன்றைக்கு ஒன்றும் மாட்டவில்லையே என்ற கவலையுடன் தலையை சொரிந்து கொண்டான்.

திரும்பவும் கடையைப் பார்த்தான். கடை இன்னும் திறக்கவில்லை. திறந்தாலும் பாக்கெட் காலி. ஒரு கட்டிங்காவது போடா வேண்டும். யோசித்தபடியே பார்வையை சுழற்றினான்.

வங்கியின் வாசலில் ஒரு பெரியம்மா கையில் ஒரு மஞ்சள் பையுடன் யாருக்காகவே காத்திருப்பது போலவே தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள்.  ஏற்கனவே இரண்டு முறை அவளை பார்த்திருக்கிறான். அவள் அங்கேதான் நின்றிருக்கிறாள்.    

உற்றுப் பார்த்தான். காதில் பெரிய தண்டட்டி போட்டிருந்தாள். மூக்கில் ஒரு மூக்குத்தியும் மின்னியது. மொபாயைச் சொறிந்தபடி ரோடைத் தாண்டி பெரியம்மாவை நெருங்கினான்.   

‘ பெரியம்மா… ஏன் வெயில்ல நிக்கறீங்க… ‘ என்றான் கரிசனமாய்.

 ‘ தம்பி… நகை வச்சு லோனு எடுக்கணும்…  ஆசாரி பதினோரு மணிக்குதான் வருவாருன்னு சொன்னாங்க. ரெண்டு தடவை உள்ளே போய் பார்த்துட்டேன். அதான் வீட்டுக்கு திரும்பிடலாமான்னு யோசிச்சிக்கிட்டே நின்னிட்டிருக்கேன்… ‘

அவளது கையில் இருந்த மஞ்சப் பை சங்கிலியின் கண்களை உறுத்தியது. லோன் எடுக்க வந்திருக்கிறாள், நகைகளை அதில்தான்  போட்டு எடுத்து வந்திருப்பாள். விட்டுவிடுவதாவது. காதில் மூக்கில் கிடப்பதே லட்சக் கணக்கில் தேறும் போல இருகிறதே. அவனது கிரிமினல் மூளை வேகமாய் வேலை செய்ய ஆரம்பித்தது. டலாம்.

அந்த நேரம் பார்த்து உள்ளே ஆசாரி உள்ளே நுழைந்தார். அதே பேங்க்கில்தான் அவனும் கணக்கு வைத்திருக்கிறான்.  பெரியம்மா உள்ளே  நகர்ந்தாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் போல இருக்கே. தானும் கூடவே ஓடினான்.  

‘ பெரியம்மா… என்ன நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு உள்ளே வந்துட்டீங்க… ‘ என்றான் மறுபடியும் கரிசனத்துடன். ‘ ஆசாரி வந்துட்டாருப்பா… ‘ என்றாள்.

‘ தெரியும் பெரியம்மா… எனக்கும் தெரிஞ்சவர்தான். முதல்ல  உட்காருங்க… தண்ணி குடிங்க… ‘ என்றபடி தண்ணீர் பிடித்து தானும் குடித்துவிட்டு அவளுக்கும் நீட்டினான்.

 ‘ பெரியம்மா… எனக்கும் இங்கேதான் கணக்கு இருக்கு. ஆசாரியார் எனக்கு தெரிஞ்சவர்தான்… நான் கிராமுக்கு எவ்ளோ தர்றாங்க, மாச வட்டி எவ்ளோன்னு விவரம் தெரிஞ்சுக்கிட்டு வர்றேன்… நீங்க உட்கார்ந்திருங்க…. ‘ என்று நைஸாகப் பேசிவிட்டு ஆசாரியார் இருக்கும் கவுண்ட்டரைப் பார்த்து போனான்.

அவனது கிரிமினல் மூளை இப்போது வேறுவிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது. நைஸாகப் பேசி  நகைகளை வாங்கி நமது பெயரில் அடமானம் வைத்து பணத்தை சுருட்டி விடலாம்.

ஆசாரியாரிடம் பேசிவிட்டு திரும்பி வந்தான்.

‘ பெரியம்மா… நகைகளை முதல்ல டெஸ்ட் பண்ணிப் பார்க்கணுமாம்… அப்புறம்தான் எவ்ளோ கிடைக்கும்னு சொல்லமுடியுமாம்… நீங்க உட்கார்ந்திருங்க… பையைக் கொடுங்க…  ‘ என்று கையை நீட்டினான்.

‘ பேத்திக்கு கல்யாணம் வச்சிருக்கோம்பா… பணம் புரட்டனும். அதான் ரெண்டு சங்கிலி கொண்டு வந்தேன்.. அதோட சேர்த்து இந்தத் தண்டட்டியும் வைக்கணும்… ஆறுமாசம் ஒரு வருஷத்துல மீட்டுடுவேன்… ‘ என்றபடி மஞ்சப் பையைத் திறந்து சங்கிலிகளை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு, காதிலிருந்த தண்டட்டிகளையும் கழற்ற ஆரம்பித்தாள்.

சங்கிலிக்கு இன்ப அதிர்ச்சி தாங்கமுடியவில்லை. இன்றைக்கு நரி முகத்தில்தான் முழித்திருக்கிறோம்… நகைகளை வாங்கிக்கொண்டு, அவளை உட்கார்ந்திருக்கச் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

‘ தம்பி… ‘ என்றாள் அவள். திகீர் என்றது இவனுக்கு.  ‘ நானே போய்க்கறேன்… ‘ என்று பெரியம்மா எழுந்து வந்துவிடுமோ… வாய்க்கும் எட்டாமல் போய்விடுமோ… ‘

அந்தம்மாள் பேங்க் பாஸ் புத்தகத்தை நீட்டினாள். ‘ புக்கு கேட்பான்கப்பா… ‘

அதையும் வாங்கிக்கொண்டு நகர்ந்தான்.

ஆசாரியார் கணக்குப் போட்டு பார்த்துவிட்டு, ஆறே கால் லட்சம் கிடைக்கும் என்று சொல்ல உற்சாகம் கரை புரண்டது சங்கிலிக்கு. ஆசாரியார் ‘ பாஸ் புக்கை கொடுங்க.. ‘ என்று கேட்க, அவன் சட்டென கையிலிருந்த பாஸ் புத்தகத்தை அவசரமாய் மறைத்துக் கொண்டு தனது மொபைலைத் திறந்து, ‘ ஸார்… நான் புக் கொண்டு வரலை… அக்கவுன்ட் நம்பர் என்கிட்டே இருக்கு… ‘ என்றபடி மொபைல் கேலரியில் அவன் சேமித்திருந்த அவனது பாஸ் புத்தகத்தின் முதல் பக்க போட்டோவை காட்டினான்.

பெரியம்மாவுக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக திரும்பி, ‘ பொறுங்க… ‘ என்று ஜாடைக் காட்டிவிட்டு ஆசாரியாரைப் பார்த்தான்.  ஆசாரியார் அவனது மொபைலில் இருந்த விவரத்தைக் குறித்துக்கொண்டு நகை விபரங்களுடன் நகை லோன் அதிகாரியிடம் போனார்.

சங்கிலிக்கு லேசாய் பதட்டம். எங்கே இடையில் பெரியம்மாக்கு சந்தேகம் தட்டி எழுந்து வந்துவிடுமோ என்று. கடவுளை  வேண்டிக்கொண்டான்.

திரும்பி வந்த ஆசாரியார், பாரங்களில் ஆங்காங்கே புள்ளி வைத்து அந்த இடங்களில் கையெழுத்து போடச் சொன்னார். சங்கிலி கொஞ்சம் படபடப்புடனேயே தனது கையெழுத்துகளை போட்டான்.  திரும்பி பெரியம்மாவைப் பார்த்து,  ‘ கொஞ்சம் பொறுங்கள் ‘ என்பது போல சைகை செய்தான். உடனே அவரிடம், ‘ ஸார் எப்போ பணம் எடுக்கலாம்… ‘ என்றான்.   ‘ அரை மணி நேரம் ஆகலாம் ‘ என்றார் அவர்.

பணம் கணக்கில் ஏறி பணம் எடுக்கவேண்டுமானால் செக் புக் வேண்டும், அது வீட்டில் இருக்கிறது. இங்கேயே பணம் எடுக்க ஸ்லிப் கேட்கலாம். அதற்கு பாஸ்புத்தகம் கேட்பார்கள். அதுவோ வீட்டில் இருக்கிறது.

யோசித்தான். காத்திருக்க காத்திருக்க பெரியம்மாவுக்கு சந்தேகப் பொறி தட்டலாம். எழுந்து வந்துவிடலாம். அவனது கிரிமினல் மூளையில் ஒரு மின்னல். 

நேராக வீட்டுக்குப் போய், செக் புக்கை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் இதே பேங்க்கின் இன்னொரு கிளைக்குப் போய் அங்கே பணத்தை எடுத்துவிடலாம். இப்போதைக்கு மெல்ல கம்பி நீட்டி விடலாம் என்று முடிவு செய்து கொண்டு திரும்பினான்.

புன்னகைத்தபடி பெரியம்மாவிடம் வந்தவன், ‘ பெரியம்மா.. அவங்க பார்த்துக்கிட்டிருக்காங்க… அதுக்குள்ளே நான் ஒரு டீ குடிச்சிட்டு வந்துடறேன்… உங்களுக்கும் டீ வாங்கிட்டு வர்றேன்… சாப்பிட வடையும் சேர்த்து வாங்கிட்டு வரட்டுமா… ‘ என்றான். அவள்  சைகையால் மறுத்தாள்.

மடமடவென எதிரே இருந்த டாஸ்மாக் கடைக்கு ஓடினான். அங்கே நிறுத்தி வைத்திருந்த தனது மொபெட்டை எடுத்தான். பறந்தான்.

பேங்க்கிற்குள் படபடப்புடன் நுழைந்தான். செக்கைக் கொடுத்தான்.

‘ உங்க கணேஷபுரம் கிளைல நகை அடமானம் வச்சு லோன் போட்டிருக்கேன்… அந்தப் பணத்தை எடுக்கணும்… ‘ என்றான்.

‘ சங்கிலி உஷார்… நார்மலா இரு… அவங்களுக்கு சந்தேகம் வந்துடாதபடி நடந்துக்க… ‘  அவனது உள்மனது எச்சரித்தது.

‘ ஸார்… இன்னும் பணம் கணக்கில ஏறலை… வெயிட் பண்ணுங்க… ‘

காத்திருந்தான். காத்திருந்தான்.

மணி இரண்டு நெருங்கிக்கொண்டிருந்தது. எல்லோரும் சாப்பிடப் போய்விட்டால் அப்புறம் அரை மணிநேரம் வேஸ்ட்டாகிப் போகுமே.

‘ சங்கிலி யாருங்க… ‘

குரல் கேட்டு நிமிர்ந்தான். கவுண்டரில் இருந்துதான் கூப்பிட்டிருந்தார்கள்.

‘ பணம் வந்திடுச்சு… டோக்கன் வாங்கிக்கங்க… ‘ டோக்கனைக் கொடுத்தார் கிளார்க்.  நிம்மதி பெருமூச்சு விட்டபடி திரும்பிப் போய் உட்கார்ந்தான். கையில் உஷாராக பெரிய பை ஒன்றை எடுத்து வந்திருந்தான். அதை ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டான்.

அவனது டோக்கன் நம்பர் முப்பது. டிஸ்ப்ளேயில் இருபத்தேழு காட்டியது. அப்படியென்றால் இன்னும் இரண்டு பேர்தான். அடுத்து நம்முடையதுதான் என்று பரவசப் பட்டுக்கொண்டான்.

இன்னும் சிலநிமிடங்களில் நாம் லட்சாதிபதி… பை நிறைய பணம். எடுத்துக் கொண்டு மதுரை கன்னியாகுமரி என்று ஓடிவிடவேண்டியதுதான்…

அடுத்த ஐந்தாவது நிமிடம் மூன்று போலீஸ் காரர்கள் திபுதிவுவென்று உள்ளே நுழைந்து சங்கிலியை விலங்கு போட்டு இழுத்துக் கொண்டு போனார்கள்.

‘ செக்கை டெபிட் பண்ண சிஸ்டம் விடலை… அதனால, கணக்கை பிளாக் பண்ணியிருக்காங்களோனு நினைச்சு அந்த பிராஞ்ச்சுக்கு போன் போட்டோம்… அப்போதான் தெரிஞ்சுது இந்தாள் ஒரு பெரியம்மாவோட நகையை நைஸா பேசி தன்னோட பேர்ல அடமானம் வச்சிட்டான்னு. இடையில அந்தம்மா நகை ஆசாரிக்கிட்டே போயி புலம்பியிருக்கு. உடனே அவங்க  கணக்கை பிளாக் பண்ணிட்டு போலீஸ்க்கு தகவல் சொல்லிட்டாங்க. பணம் எடுக்க ஆள் வந்தா பிடிச்சலாம்னு காத்திட்டிருந்திருக்காங்க.  நாங்க போன் போட்டதும்… இந்தாள் இங்கே இருக்கானு தெரிஞ்சு, விஷயத்தையும் எங்ககிட்டே சொல்லிட்டு, அந்தாள் மேல ஒரு கண்ணு வச்சுக்கங்க… விட்டுடாதீங்கன்னு சொல்லிட்டு டான்னு வந்து இழுத்துக்கிட்டும் போயிட்டாங்க…. ‘

நகை லோன் அதிகாரி இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காத்திருக்கிறாள் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    புது மொபைல் ஃபோன் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு