டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
‘நாங்க ஜீன்ஸ் பேன்ட் தான் போட்டாக்க நீங்க வேட்டியத்தான் பார்ப்பீங்க’ என்ற பழைய பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருந்தது. மங்களத்தின் கைபேசி அழைத்தது. போனில் மங்களம் யாருடனோ பேசினாள்.
“என்னது இந்த வாரம் சந்திக்க சொல்லலாமா? எங்க? கோவில்? இல்ல ஹோட்டலா?” எனப் பேசிக் கொண்டே போனாள்.
போனை வைத்தவுடன், “அம்மா மாரியாத்தா, சக்திக்கு இந்த வாரமாவது வரன் தகையணும்” என வேண்டினார். மங்களத்தின் மனதிற்குள் எண்ணங்கள் உருண்டோடின.
இப்ப எல்லாரும் மாடர்ன் ஆயிட்டாங்க என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு வரன் பார்க்கும் போது கேட்கப்படும் கேள்விகள் இருக்கே……..அப்பப்பா.
சக்தி என் வயிற்றில் இருக்கும் போது, நான் மிகவும் விரும்பிப் பார்த்த தொலைக்காட்சித் தொடர் சக்தி 1990. அதிலிருந்த சக்தியின் வீரமும் தைரியமும் என்னை ஈர்த்தது. அதனால் தான் பிறந்த என் குழந்தைக்கு, சக்தி என்றே பெயரிட்டேன்.
அந்த சக்தியை போலவே இந்த சக்திக்கும் தைரியம் மட்டுமல்ல, நேர்மையும், வாய் துடுக்கும் ஜாஸ்தி….ஏகப்பட்ட வரன்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கண்டிப்பாக இந்த வரன் முடிந்து விடும் என்றே தோன்றும்…ஆனால் கடைசியில் தடையாக நிற்பது என்னவோ சக்தியின் வாய்தானோ?
இப்படித்தான் போன மாதம் வந்த வரனிடம், சமையல் பற்றி வாயைக் கொடுக்க, “உனக்கு சமைக்கத் தெரியுமா?” என சக்தியைக் கேட்க
பதிலுக்கு “தெரியாது” என நேர்மையாக சக்தி சொல்ல (உளற)
“ஊர் உலகமே லாக்டவுனில், சமைக்க பழகியாச்சு… இன்னும் சமைக்கக் கூடத் தெரியாதா?” என திருப்பி அந்த வரன் கேட்க, பேச்சு முற்றி வரனும் முறிந்தது.
காலம் மாறினாலும் கேட்கப்படும் கேள்விகள் மாறுவதில்லை..
சென்ற வாரம் வந்த வரன் இப்படித்தான் சக்தியிடம், “கல்யாணத்திற்கு பிறகு , உங்க அம்மா, அப்பா எங்கு இருப்பார்கள்” எனக் கேட்க,
“இதென்ன? அவங்க இஷ்டம். எங்க வேணாலும் இருப்பாங்க” என சக்தி பதிலடி கொடுக்க, அவர்கள் நழுவிக் கொண்டு போனார்கள்.
“வரும் வாரம் என்ன நடக்கப் போகிறதோ?”… தன் 32 வயது பையன் சக்திக்கு இன்னமும் பெண் கிடைக்கவில்லையே என வருந்தி யோசித்துக் கொண்டிருந்தாள் மங்களம்.
(முற்றும்)
வித்தியாசமாக இருந்தது உங்களின் கதை சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் அருமையாக இருந்தது உங்கள் சிறுகதை எழுதிய எழுத்தாளர் சசிகலா ரகுராமுக்கு எனது வாழ்த்துக்கள்