2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை:
அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்ட அழகி மயிலுவின் ரெக்கார்டு டான்ஸ் கொண்டுவந்திருந்தார்கள். இரண்டு ஆட்டக்காரிகள் தயாராக இருக்க ஒருத்தி மட்டும் தலைவரின் வீட்டுக்கு பிரத்தியேகமாக டான்ஸ் ஆட கூட்டிப் போயிருந்தார்கள். அந்த ஒருத்தி வந்தால்தான் ஆட்டத்தை ஆரம்பிப்போம் என்று மற்ற இவர்களும் சொல்லிவிட்டார்கள். தலைவரோ அவளை ஏற்கனவே அனுப்பிவிட்டதாக சொல்லிவிட்டார். சில கலகக் காரர்கள் மேடை லைட் என்று அடித்து நொறுக்கியதால், ஒரு ஆட்டக்காரிக்கு காயம் ஏற்பட்டது. பொறுமையிழந்த ஒரு ஆட்டக்காரி போலீஸுக்கு போன் போட்டுவிட்டாள்.
இனி
கயிற்றுக்கட்டிலில் காலை நீட்டிப் படுத்த தர்மலிங்கம் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டார்.
மர நாற்காளியில் உட்கார்ந்திருந்தார் தர்மலிங்கம். மேஜை மேல் சாராய பாட்டிலும் கொத்துக்கறியும் ஆறிக் கிடந்தன. மடியிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் கட்டை எடுத்து ஆட்க்காரியிடம் நீட்டினார்.
‘ மயிலைவிடவும் ரொம்பவே அழகாயிருக்கே. உன் பேர் என்ன ’ என்றார்.
கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே, ‘ மின்மினி ‘ என்றாள்.
‘ ஓ, என்னை சொர்கத்துக்கு கூட்டிட்டு போக வந்த மினி பஸ்ஸா நீ….’ என்று சொல்லிவிட்டு, ‘ ஹெ…ஹெ…ஹே… ‘ வென்று சிரித்துக் கொண்டார்.
அந்த சிரிப்பில் இருந்து வெளிப்பட்ட சாராய நெடி அவளை பயமுறுத்தினாலும் அவர் கொடுத்த பணக்கட்டு அவளைக் கட்டிப் போட்டது. பணக்கட்டை வாங்கி தனது தோற்பையில் திணித்துக் கொண்டாள்.
உடனே எழுந்து அவளது கையைப் பிடித்து இழுத்தார்.
‘ மினி… மயிலுதான் எப்போவும் இந்தத் தலைவரை மகிழ்விப்பா… இப்போ முதல் முதலா நீ வந்திருக்கே… நல்லதா ஒரு கேசட் போடச் சொல்றேன் ஆடு. அதுக்கு முன்னால, இந்தா இதைக் கொஞ்சம் இறக்கிக்கோ ‘ என்றுவிட்டு ஒரு சாராய பாட்டிலை அவள் கையில் திணித்தார். திணிக்கும்போது அவளது கையை கொஞ்சம் அழுத்தியே கொடுத்தார்.
‘ஐயா… எனக்கு இதுலெல்லாம் பழக்கம் இல்லே… கேசட்டை போடுங்க… நான் டான்ஸாடிட்டு கிளம்பிடறேன்… ’ என்றாள்.
‘ஐயையோ… என்ன பாப்பா அவசரம்… கொஞ்சம் இரு ‘ என்றுவிட்டு கிளாசில் மிச்சம் இருந்த சாராயத்தை மடக்கென்று ஒரே மூச்சில் குடித்து முடித்து லொட்டென மேஜை மேல் வைத்தார்.
பண்ணயாள் மாயாண்டியிடம் சைகையால் ஏதோ சொன்னார். அவன் டேப்ரெக்கார்டரில் ஒரு கேசட்டை போட்டான். ஒரு ஹிந்தி பாட்டு ஒலித்தது. அவர் ஜாடைக்காட்ட கதவை சாத்திக்கொண்டு வெளியே போய்விட்டான் மாயாண்டி.
மினி மெல்ல மெல்ல ஆட்டம் போட்டு குத்து குத்தென்று குத்தினாள். சாராயம் கொடுத்த மயக்கத்தைவிட மினியின் பருவமேனி உசுப்பேத்தியதால் மயக்கத்தின் உச்சத்திற்குப் போன தர்மலிங்கம் தானும் எழுந்து ஆடினார். ஆடிக்கொண்டே மின்மினியை இறுகக் கட்டி பிடித்தார்.
xxxxxx
போலீஸ் ஜீப் உறுமிக்கொண்டு வரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார் தர்மலிங்கம். ஓவராக உள்ளே போயிருந்த சாராயம் குமட்ட ஆரம்பித்தது. கண்கள் சொக்கிப் போய் எதுவுமே கண்களுக்கு சரியாய் தெரியவில்லை. மெல்ல கதவிடுக்கில் பார்த்தார். காக்கிச் சட்டைக்காரர்கள் போல தெரிந்தது. பயம் வந்தது… வியர்வை வடிந்தது.
‘ போலீஸ் ‘ என்றன அவரது உதடுகள்.
அவசரமாய் சாராய பாட்டில்களை எடுத்து தூர வைக்க முற்பட்டார். ஆனால் தள்ளாட்டம் அவரை வேலை செய்யவிடாமல் தடுத்தது. அதற்குள் கதவை இடியாய் இடித்தார்கள் போலீஸார். மெல்ல தள்ளாட்டத்துடன் போய் கதவைத் திறந்தார்.
‘ஐயா, மன்னிச்சுக்கங்க… இங்கே டான்ஸ் ஆடச் சொல்லி மின்மின்னு ஒரு டான்ஸ்காரியை கூட்டிட்டு வந்தீங்களாம். அவங்க இன்னும் திரும்பி வரலையாம்… எங்கே அவங்க… எங்களோட அனுப்பி வைங்க…’
‘ஸார் என்ன சொல்றீங்க… அவங்களை மாயாண்டி அப்போவே கார்லே கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்தானே… ’
‘அங்கே வரலை சார்… வந்திருந்தா எங்களுக்கு ஏன் கம்ப்ளைண்ட் வருது… சரி, மாயாண்டிங்கறது யார்… ’
‘எங்க பண்ணையாள்…’
‘சரி, எங்கே அவரைக் கூப்பிடுங்க…’
‘அ…வ..ன்.. ஊருக்கு கிளம்பிப் போயிட்டானே, இப்போத்தான் போனான்… ’
இன்ஸ்பெக்டர் மற்ற மூன்று கான்ஸ்டபிளுக்கும் ஜாடைக் காட்டினார். அவர்கள் அங்குமிங்கும் தேட ஆரம்பித்தனர்.
‘ஸார்…இங்கே ஒரு தோல்பை கிடக்குது சார்… ’
திடுக்கிட்டார் தர்மலிங்கம்…’அடடா… பாவம் அந்தப் பொண்ணு கைப்பையை இங்கேயே வெச்சிட்டு போயிருச்சு போல… அதான் பையைத் தேடிட்டு எங்கேயோ அலையிது போல, இன்னும் அங்கே வரலை போல… ’ என்று உளற ஆரம்பித்தார்.
கான்ஸ்டபிள் பையைத் திறந்தார். ஒரு ஐம்பது ரூபாய் கட்டு மேலாகத் தெரிந்தது. மற்றபடி உள்ளே எல்லாம் பெண்கள் உபயோகிக்கும் அலங்காரப் பொருட்கள் இத்யாதி இத்யாதி… ஒரு கான்ஸ்டபிள் உள்ளே தேடிக்கொண்டிருக்க மற்ற இரண்டு கான்ஸ்டபிள்களும் வெளியே ஓடி தேடினர்.
‘ஸார்… கரெக்டா சொல்லுங்க… அந்தம்மாவோட பை இங்கே இருக்க அவங்க மட்டும் எங்கே போனாங்க அந்தம்மா… அவங்களை என்ன பண்ணினீங்க… ’ என்றார் இன்ஸ்பெக்டர்.
‘நீங்க என்ன என்னை சந்தேகமா பார்க்கறீங்க… நான் இந்த ஊருக்கு தலைவர் தெரியுமில்லை. இந்த ஊருலே பெரிய பண்ணையார். இந்த ஊரே நாட்டாமைன்னு என்னை கையெடுத்து கும்பிடுவாங்க… ’ நா குழறியது தர்மலிங்கத்துக்கு.
இன்ஸ்பெக்டரும் அங்கே இங்கே தேடினார். வெளியேயும் போனார். அதற்குள் ஒரு கான்ஸ்டபில் அரக்க பறக்க ஓடிவந்தார்… ‘சார் இங்கே ஓடிவாங்க…’ என்றார்.
எல்லோரும் ஓடினார்கள் கான்ஸ்டபிள் பின்னாலேயே. தர்மலிங்கமும் தள்ளாடியபடியே நடக்க முடியாமல் அப்படியே சரிந்தார்.
xxxxxx
மயக்கத்தின் உச்சத்திற்குப் போன தர்மலிங்கம் தானும் எழுந்து ஆடினார். ஆடிக்கொண்டே மின்மினியை இறுகக் கட்டிபிடித்தார்.
உடனே ஆட்டத்தை நிறுத்திய மினி உதறிக்கொண்டு விலகி, ‘ஐயா, எனக்கு டான்ஸ் ஆடனும்னு மட்டும்தான் சொல்லி அனுப்பினாங்க மயிலு. நீங்க இப்படியெல்லாம் தப்பா நடக்கக் கூடாது… எனக்கு இதெல்லாம் பிடிக்காது….‘ என்று கதவருகே ஓடினாள்.
‘என்னடி ரொம்பத்தான் சிலுத்துக்கறே… இந்த ஊருல எப்போ திருவிழா போட்டாலும் எப்படி கண்டிப்பா ரெக்கார்டு டான்ஸ் நடக்குமோ அப்படி நடக்கற டான்ஸ்க்கு முன்னாடி மயிலு எண்ணையை சந்தோசப்படுத்திட்டுத்தான் மேடையே ஏறுவா… நான் முழுக்கட்டா அஞ்சாயிரம் எதுக்கு குடுத்தேன். இந்த ஆட்டத்துக்கு மட்டும்னு நினைச்சியா… மத்த எல்லா…….த்துக்கும்தான்… வாடி…’ என்றபடி அவளை மறுபடியும் இழுத்து அணைக்க முற்பட, அவள் அவரை இரண்டு கைகளாலும் தள்ள, அவரோ அவளைப பிடித்து இழுக்க, தடுமாறியவள் மல்லார்ந்து சாய, ஓரமாய் நின்றிருந்த தேங்காய் உரிக்கும் கம்பி அவளது முதுகில் பாய்ந்தது. ரத்தம் பீறிட்டது.
அலறிக்கொண்டு வெளியே ஓடி மாயாண்டியை கூப்பிட்டார். உள்ளே வந்த அவனும் அலறினான். ‘சரி தூக்கிட்டுப் போயி புதைச்சிடு… புதைச்சிட்டு வந்து சுத்தமா துடைச்சிடு… ’ என்றார். அவன் அவளை அலேக்காகத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு பின்பக்க காட்டுக்குள் போய்விட்டான்.
கொஞ்ச நேரத்தில் திரும்பிய மாயாண்டி கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
‘ஏன்டா… கரெக்டா புதைச்சிட்டியா… நல்ல மூடிட்டியா… யாருக்கும் பார்த்தா சந்தேகம் வராதே… ’
‘ஐயா, மூடிட்டு ஒரு தென்னங்கன்றையும் அதுமேல நட்டுட்டு நாலுகுடம் தண்ணியும் ஊத்திட்டேன். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது…’
‘சரி சரி… மசமசன்னு நிக்காதே… முதல்லே ரத்தம் போறமாதிரி துடை. அப்புறம், இந்தா இதுல ரெண்டு கட்டு இருக்கு. மொத்தம் பத்தாயிரம். எடுத்துக்கிட்டு எங்கேயாவது போய் தலை மறைவாயிடு… முடிஞ்சா உங்க ஊருக்கே போய்டு.. நான் சொல்லியனுப்பறேன், அப்போ வந்தா போதும்… ஓடு… ஓடு… ’
xxxxxx
எல்லோரும் அங்கே ஓடிப்பார்த்த இடத்தில் புதியதாய் குழிதோண்டி ஊன்றப்பட்டிருந்த தென்னம்பிள்ளைக்கருகில் மண்ணுக்குள்ளிருந்து ஒரு கைக்குட்டை எட்டிப் பார்த்தபடி இருந்தது.
‘அடப்பாவி…. இந்த நாயி ஒழுங்கா புதைக்கா போயிட்டானே… ‘ அந்த போதையிலும் உள்ளுக்குள் புலம்பினார் தர்மலிங்கம்.
இன்ஸ்பெக்டர் ‘அதை மெல்ல இழுய்யா ‘ என்றார்.
‘ஸார் லேடீஸ் கைக்குட்டை சார்…’ என்றார் கான்ஸ்டபிள்.
மெல்ல தள்ளாடி தள்ளாடி அங்கே வந்து சேர்ந்திருந்த தர்மலிங்கம் ஓட முயன்றார். இன்ஸ்பெக்டர் டக்கென அவரை இழுத்துப் பிடித்துக் கொண்டார்.
‘யோவ் இந்த இடத்தைத் தோண்டுங்கய்யா… ’ என்றார் இன்ஸ்பெக்டர்.
டான்ஸர் மின்மினியை கொலை செய்த குற்றத்திற்காக இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் தர்மலிங்கம்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings