2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை
நாகராஜன் இறந்த பிறகு அருந்ததியின் வாழ்க்கை கேள்விக் குறியாகிறது. தன்னைச் செதுக்கும் பயணத்துக்குத் தயாராகும் அருந்ததி.
இனி
“அவர் போன பின்னாடி வாழ்க்கையே இல்லண்ணு யோசிக்கும் போதெல்லாம், குழந்தைங்க தான் என் கண்ணுக்கு முன்னாடி தெரிவா. எல்லாம் விதின்னு சொல்றது சுலபம். ஆனா ஒவ்வொரு நாளைக் கடக்கறதும் ஒரு யுகமாத் தெரியும்.
என்னை மாதிரியே மாதிரி ஒரு நிலைமை இவ்வளவு சின்ன வயசுலயே உனக்கும் வந்துருக்க வேண்டாம். ஆனா, நீ உன் சொந்தக் கால்ல நின்னு உன் குழந்தைகளை ஒரு நிலைக்கு கொண்டு வரணும்னு நெனக்கற பாரு. அது நல்ல விஷயம். காலம் மாறீண்டு வரது. தப்பில்ல.
ஆனா, எப்பவும் நீ இந்தாத்து பொண்ணுதான். அதை மட்டும் மறந்துடாத அருந்ததி” என்று சமாதானப் படுத்தினாள் மன்னிம்மா.
வீட்டுக்கு வந்த பாபு சாப்பிட்டு முடித்தவுடன், மெல்ல பேச்சை ஆரம்பித்து விஷயத்தைக் கூறினாள் மன்னிம்மா. தன்னைக் கொஞ்சம் கூடத் தவறாக நினைக்காத மன்னியை நினைத்து கண்கலங்கினான் பாபு.
“ஏம்மன்னி இந்த முடிவெடுத்தேள்? நான் பாத்துக்க மாட்டேன்னு முடிவு பண்ணீட்டேளா?” என்று கேட்கவும்,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்களும் எவ்வளவு பொறுப்பை தான் எடுத்துப்பேள். இங்க இருக்கற திருச்சிக்கு தான போறேன். அடிக்கடி வந்து போனாப் போறது. நீங்களும் எல்லாரையும் முடிஞ்சபோது கூட்டீண்டு வாங்கோ” என்று சொன்னாள் அருந்ததி.
ஊரிலிருந்து வந்த அருந்ததியின் அண்ணா, பாபுவுடன் தனிமையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
திருமணமான நாள் முதல் கணவனில்லாமல் ஒரு நாள் கூட பிறந்தகத்துக்கு தனியாக செல்லாத அருந்ததி, தன் இரு பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு தன் அண்ணாவுடன் பிறந்தவீட்டுக்குக் கிளம்பிச் சென்றாள்.
அது நாள் வரை அருந்ததியுடன் சகோதரி போலவே இருந்து விட்டதால் திடீரென மன்னி அருந்ததி வீட்டைவிட்டு கிளம்பிப் போனது ரமாவுக்கு வருத்தமாக இருந்தது.
“ஏம்மா என்னவோ போல இருக்க? என்னன்னு சொன்னாத் தான தெரியும்?” என்ற மன்னிம்மாவிடம்,
“என்ன சொன்னாலும் நீங்க மன்னியை அவா பொறந்தாத்துக்கு அனுப்பியிருக்கக் கூடாது. அப்ப ஆத்துக்காரர் போய்ட்டார்-னா நமக்கு புகுந்தவீடே இல்லையா?” என்றாள் கோபமாக.
“அட பைத்தியமே. அப்படீன்னு யார் சொன்னா? அம்மா இல்லாத இந்த வீட்டுக்கு நான் கல்யாணமாகி வந்தப்ப என் நாத்தனார், கொழுந்தன்மார்கள் எல்லாரும் ரொம்ப சின்ன பசங்க. என்னை மன்னிம்மான்னு அம்மா ஸ்தானத்துல வச்சுதான் பார்த்தா. இன்னைக்கும் பாக்கறா. என் பொறந்தாத்துல இருந்ததை விட இங்க தான் அதிகம் இருந்திருக்கேன். அப்படி இருக்க, நான் என் மாட்டுப் பொண்ணை மனசார அவளோட பொறந்தாத்துக்கு அனுப்புவேனா?” என்றவளிடம்,
“அப்படீன்னா, மன்னிகிட்ட இங்கயே இருக்கச் சொல்லி சொல்லியிருக்கலாமே?” என்றாள் விடாப்பிடியாக.
“அருந்ததிக்கு இப்ப ஒரு தனிமையும், தெளிவும் தேவை. கணவனே உலகம்-னு வாழ்ந்துண்டு இருக்கும் போது எதுவும் தெரியாது. ஆனா, அவர் போனதுக்கப்பறம் நாம தனியாகிவிட்டோம்-ங்கறத ஏத்துக்கறதுக்கே ரொம்ப மனதைரியம் வேணும்.
காலம் மாறீண்டு வரது. ரெண்டு பொண்ணுகளையும் யாரோட உதவியுமில்லாம தானே தன் உழைப்பு-ல கொண்டு வரணும்னு அருந்ததி நெனக்கறா. அதுக்கு முதல்ல சம்பாத்தியம் வேணும். ஒரு வேலையைப் பார்த்துண்டு, வருமானத்தைத் தேடீண்டு தன் கால்ல அவளை நிலை நிறுத்தீண்ட்டான்னா, குடும்பம் தன்னால மேல வந்துடும்.
ஊரே நன்னா இருக்கணும்னு பூஜை பண்ணினவன் என் பையன். அவன் குடும்பத்தைக் கடவுள் விட்டுடுவானா. வாழ்க்கை-ங்கறது ஒரு வட்டம். கீழ இருக்கற சக்கரம் மேல வந்துதான ஆகணும்” என்ற மன்னிம்மா தன் அனுபவத்தைக் கொண்டு சிறிய மாட்டுப் பெண் ரமாவுக்குப் புரியவைத்தாள்.
அண்ணாவின் இறப்பு பாபு- வை வெகுவாகவே பாதித்தது. பெட்ரோல் பங்க் முதலாளி தன் பெட்ரோல் பங்க்கை வேறொருவருக்கு விற்கப் போவதாகவும், தன்னிடம் வேலை செய்தவர்கள் எல்லோரும் வேறு நல்ல வேலையைப் பார்த்துக்கொண்டு இந்த வேலையை விட்டு நின்றுவிடும் படியும் கேட்டுக்கொண்டார் .
“என்னண்ணே…..முதலாளி ஏதேதோ சொல்றார். உண்மையா?” என்று கேஷியர் சுகுமாரிடம் விசாரிக்க,
“ஆமாப்பா. அவர் பொண்ணை ஃபாரின்-ல கட்டி கொடுத்துட்டார். இவருக்கப்பறம் இந்த பொறுப்பெல்லாத்தையும் அவங்க இந்தியா வந்து பார்க்கப் போறதில்லயாம்.
இவருக்கும் வயசாகறதுனால இருக்கற சொத்துபத்து எல்லாத்தையும் வித்துட்டு ஊர்பக்கமா இருக்குற தோட்டத்து வீட்டுக்கு போயிடலாமுன்னு சொல்லிகிட்டு இருக்காரு” என்றவர்,
“வரப்போற புது முதலாளி யாரை வேலைல வச்சுப்பாரு, வச்சுக்க மாட்டாருன்னு யாருக்குத் தெரியும். அதுதான் நம்மகிட்ட முன்னாடியே சொல்லி வைக்கறாரு. வரப்போற புது முதலாளி, சொந்தக்காரங்க தெரிஞ்சவங்கன்னு யாராவது வேலை கேட்டா, முதல்ல அவங்களுக்கு தானப்பா வேலை கொடுப்பாரு” என்றார் சுகுமார்.
பாபுவுக்கு, தன் நிலையை நினைத்து தனக்கே வேதனையாக இருந்தது. பாபு நீண்டகாலமாக அந்த பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து கொண்டிருப்பவன்.
சென்னை-ல வேலை இருக்கு. வந்துடுடா. அந்த கிராமத்துல இருந்தா பெருசா மேல வளரமுடியாதுடாவென்று நண்பர்கள் அழைத்தபோதெல்லாம்,
‘ரொம்ப வருஷமா வேலை செய்யற இடம். நம்ம மேல நம்பிக்கையா இருக்கும் போது சட்டுனு அப்படியெல்லாம் விட்டுட்டு வந்துட முடியாது’ என்று பதிலளித்து வெளியூரிலிருந்து வந்த நல்ல வேலைகளையெல்லாம் உதறித் தள்ளியவன் பாபு. வீட்டிலோ, கடைசி வரை அண்ணனோடு பெற்ற பிள்ளை போலவே இருந்துவிட்டான்.
இப்போது வயதும் கூடிவிட்டது. ஒரு வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலையைத் தேடுமளவிற்கு குடும்ப சூழ்நிலையும் இல்லை. வாங்கிய கடனையும் திருப்பித்தரவும் முடியாத சூழ்நிலை.
ஒரு நாள் பேச்சு வாக்கில், “உங்களுக்கு உங்க குடும்பத்தையும் சமாளிக்க முடியல. உங்களை நம்பி இருந்தவங்களையும் சமாளிக்க முடியல” என்று மன்னி அருந்ததி பிறந்த வீட்டுக்குச் சென்றதைப் பற்றி ரமா எதேச்சையாக குத்திக் காட்டிப் பேசிவிட,
“நீதான் பணம் வேணும், பணம் வேணும்னு சொல்லி சொல்லி என்னை பைத்தியக்காரனாவே ஆக வச்சுட்ட. ஒரு பெட்ரோல் பங்க்ல வேலை செய்யறவனுக்கு எவ்வளவு சம்பளம் வருமோ அதுல தான் குடும்பம் ஓட்ட முடியும். அதை வாங்கிக் குடு, இதை வாங்கிக் குடுன்னா, நான் மட்டும் எங்க போவேன்?” என்றவன்,
பொறுப்புகளிலிருந்து விலக முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் அவசரப்பட்டு மனம் நொந்த வேளையில் திடீரென ஒரு நாள் விஷத்தை வாங்கிக் குடித்து தற்கொலை செய்து கொண்டான் பாபு. குடும்பமே இடிந்து போய் உட்கார்ந்தது.
பிறகு பெரியவன் கணேசனுடைய மகன் ரகு தன் போலீஸ் வேலையை விட்டுவிட்டு கோயில் பூஜையை சித்தப்பாவிற்குப் பிறகு ஏற்றுக்கொண்டு, நங்கவள்ளிக்கே குடும்பத்தோடு வந்துவிட்டான்.
நாட்கள் செல்லச் செல்ல, ரகு குடும்பத்தைச் பார்த்துக் கொண்டான்.
“நீ எப்பவேணாலும் என்னை நங்கவள்ளிக்கு வந்து பாத்துட்டு போ. ஆனா இங்கயே வந்து குடும்பத்தோட இருக்கணும்னு முடிவெடுக்காதப்பா. இந்த வீடு உன்னையும் விடாது. நீ ஒருத்தனாவது எனக்கு மிஞ்சணும்னு தான் அந்த கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்” என்று தன் மூன்றாவது மகன் நடராஜனிடம் வருத்தப்பட்டாள் மன்னிம்மா.
ஒருநாள் கோவிலில் ரகு பூஜையை முடித்து விட்டு வந்த பக்தர்களுக்கு பிரசாதத்தைக் கொடுத்துக் கொண்டிருக்க, “இங்க நாகராஜ குருக்கள்-னு ஒருத்தர் இருந்தாரே. அவர் இல்லையா? ” என கேட்டபடியே ஒரு கேரள நம்பூதிரி வந்தார்.
“நாகராஜன் எங்க சித்தப்பா தான். ஆனா, அவர் இறந்து ஆறுமாதம் ஆறது. நீங்க யார்-னு தெரிஞ்சுக்கலாமா?” என ரகு விசாரிக்க,
“நான் நாராயணன் நம்பூதிரி. எனக்கு உங்க குடும்பத்தை நன்னாவே தெரியும். பரம்பரை பரம்பரையா சிவன் கோவிலுக்கு பூஜை பண்ணணும்-னு சங்கல்பம் எடுத்துண்டு பண்ணீண்டு வர குடும்பம் நீங்க. உங்க தாத்தா, அப்பா யாரா இருந்தாலும் கேரளா வந்தா எங்காத்துல தங்கீட்டு தான் எல்லா இடத்துக்கும் பூஜைக்கு போவா.
கோயமுத்தூர் ஐயப்பன் கோவில்-ல நவசண்டி யாகம் பண்ணறதுக்குத் தான் நான் வந்தேன். ஊருக்கு கிளம்பலாம்ன்னு நெனச்சப்போதான், “நங்கவள்ளி சிவன் கோவிலுக்கு போயிட்டு போ”-ன்னு ஏதோ உள்ளுக்குள்ள தோண, இங்க கிளம்பி வந்தேன்” என்று இரு குடும்பத்துக்குள்ள நட்பைச் சொன்னார் நாராயண நம்பூதிரி.
அதற்குள் நம்பூதிரி கோயிலுக்கு வந்து விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு வந்த தர்மகர்த்தா, நாகராஜ குருக்கள் இறந்த விஷயத்தையையும், குடும்பத்தின் நிலைமையையும் நம்பூதிரிக்கு விளக்கினார்.
வருத்தப்பட்ட நாராயண நம்பூதிரி ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்துவிட்டு, “நங்கவள்ளி சோமேஸ்வரர் சௌந்தரவல்லி தாயார் இவா குடும்பத்தை எப்பவும் கைவிடமாட்டா” என்று தீர்க்கமாய்ச் சொன்னார்.
ரகுவிடம் நடந்த அனைத்தையும் கேட்டுக்கொண்ட நம்பூதிரி மறுநாள் காலை வீட்டுக்கு வருவதாகவும், குடும்பத்தில் கோத்திரக்காரர்கள் (ஒரு குல வேர்கள்) அனைவரும் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings