2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை
அழகான அந்த கூட்டுக் குடும்பத்தின் அந்த ஓர் நாள் யாரும் எதிர்பாராதது போல விடிந்தது. டி.வியில் திரைகள் தெளிவில்லாமல் தெரிய, டிஷ்’ஐ சரி செய்யப் போனதில் மின்சாரம் தாக்கி உடனே மூர்ச்சையானான் நாகராஜன்.
இனி
“சொன்னேனே. கேட்டயா? மழை ஈரத்துல டி.வி. அவசியமான்னு கேட்டனே. கேட்டயா? ஏண்டா….. ராமகிருஷ்ணா , என்னடா ஆச்சு எம்புள்ளக்கு? கொஞ்சம் என்னன்னு பாருடா” என்று தன் தள்ளாத வயதிலும் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழமுடியாமல் அழுதாள் மன்னிம்மா.
“ஏன்னா….எழுந்திருங்கோ. எனக்கு பயமா இருக்கு. நம்ம பொண்ணுககிட்ட நான் என்னன்னு சொல்லுவேன்? என்னை ஏமாத்தீடாதீங்கோ” என்ற அருந்ததி அழுதபடியே தூணில் சாய்ந்து மூர்ச்சையானாள்.
அதற்குள் மெயின் ஸ்விட்ச் பாக்ஸை ஆஃப் செய்துவிட்டு வந்த ராமகிருஷ்ணன், சந்துரு சித்தப்பா உதவியுடன் நாகராஜனை மெதுவாக தூக்கியபடி நிறுத்த, அதற்குள் சத்தம் கேட்டு அருகிலிருந்து ஓடிவந்தவர்கள் கைத்தாங்கலாக நாகராஜனைப் பிடித்துக் கொண்டு வந்து கூடத்தில் படுக்க வைத்தனர்.
“என்னாலதான் அண்ணாவுக்கு இப்படி ஆயிடுத்து. நான் தான் எல்லாத்துக்கும் காரணம். இப்படியெல்லாம் நடக்கும்-னு நான் கனவுல கூட நெனச்சு பாக்கலையே. என்னை மன்னிச்சிடுங்கோ மன்னிம்மா ” என்று இராமகிருஷ்ணன் குற்ற உணர்ச்சியில் மன்னிம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.
“நடந்ததப் பத்தி பேசி இப்ப பிரயோஜனமில்ல. நீ முதல்ல டாக்டருக்கு இப்பவே ஃபோனைப் போட்டு வரச் சொல்லுப்பா. அப்பறம் மீதியைப் பேசிக்கலாம்” என்ற சந்துரு சித்தப்பா, பாபுவுக்கு விஷயத்தை உடனே தெரியப்படுத்தணும்” என்றார்.
உடனே ராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த டாக்டர் அருணாச்சலத்திற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்ல, அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்த டாக்டர், நாகராஜனை பரிசோதித்துவிட்டு “அதிக மின்சாரம் உடலில் பாய்ஞ்சதுல இதயத்துடிப்பு உடனே நின்னு போயிருக்கு. இறந்துட்டாரு. சாரி” என்றவர் மருத்துவமனைக்கு வந்து டெத் சர்ட்டிபிகேட் வாங்கிக் கொள்ளுமாறு இராமகிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.
அதற்குள் வந்திருந்தவர்கள், அருந்ததியின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கவும், நினைவுக்கு வந்தவள் “எம் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போயிருக்கா. கூட்டீண்டு வரணும்” என்று அழுதுகொண்டே சொல்லவும்,
“நாங்க போய் பிள்ளைங்களைக் கூட்டிகிட்டு வந்துக்கறோம். நீங்க எதைப் பத்தியும் யோசிக்காம இருங்க மாமி” என்றவர்கள்,
“ஐய்யரு, எப்பேர்பட்ட தங்கமான மனுஷன். சாதி சனம் பார்க்காம அத்தனை பேர் கிட்டயும் தாயா புள்ளயா பழகுவாரே. இந்த ஊருக்கே செல்லப் புள்ளயாயில்ல இருந்தாரு. இந்த வயசுல புள்ளய வாரிக் கொடுக்கற கொடுமை மன்னிம்மாவுக்கு வரவேண்டாம். அவங்களோட ஒவ்வொரு மகனும் இப்படி அல்ப ஆயுசுலயே இறந்து போறாங்களே. இந்த கடவுளுக்குத் தான் கண்ணு இருக்கோ, இல்லையோ?” என்று வேதனையுடன் பேசிக் கொண்டார்கள்.
இதற்கு நடுவே ‘அண்ணாவிற்கு உடம்பு முடியவில்லை ‘ என்று மட்டும் சொல்லி விட்டு பெட்ரோல் பங்க்கிலிருந்து பாபுவையும், பள்ளியிலிருந்து மகள்களையும் சில பேர் வீட்டிற்கு கூட்டி வந்தார்கள்.
வீட்டிற்கு வெளியே நின்ற கூட்டத்தைப் பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதெனப் புரிந்து கொண்ட பாபு, குழந்தைகள் இருவரும் தந்தை இறந்ததைக் பார்த்து அழுவதைப் பார்த்ததும் குழந்தைகளை நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.
பாபுவைக் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய சந்துரு சித்தப்பா, நீதான் இனி தைரியமா இருக்கணும் பாபு. குடும்பத்தைப் பொறுப்பா பாத்துக்கணும்” என்றார்.
“ஆண்டவா….. நான் என்ன குத்தம் பண்ணினேனோ தெரியலையே. என் ரெண்டாவது குழந்தையையும் இப்படி பறிகொடுத்துட்டு நிக்கறனே. பாபு, நடராஜனுக்கு உடனே விஷயத்தை சொல்லீடுடா. அப்பதான் அவன் கோயமுத்தூருலருந்து வரத்துக்கு சரியா இருக்கும்” என்று அழுதுகொண்டே சொன்னாள் மன்னிம்மா.
அருந்ததியும், குழந்தைகளும் அழுவதைப் பார்த்தவர்களின் கண்கள் குளமாகின. கோயில் குருக்களாக இருந்த நாகராஜன், கோயில் கடைத்தெருவில் இருந்து ஊர்ப் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல பெயரைச் சம்பாதிருந்தான். அதனால் ஊர்மக்கள் அனைவருமே இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.
பதிமூன்று நாள் காரியம் முடிந்ததும் அருந்ததியின் அண்ணா கிருஷ்ணன், “அருந்ததி, நீயும் குழந்தைகளும் என்னோட வந்துடுங்கோ. இனி நீ இங்க தனியா கஷ்டப்பட வேண்டாம். நான் கடைசிவரை உங்களைப் பாத்துக்கறேன்” என்றான்.
“தப்பா எடுத்துக்காதீங்கோண்ணா. மன்னியும், குழந்தைங்களும் இங்க தான் இருப்பா. நான் பாத்துக்கறேன். எனக்கு மன்னிம்மா எப்படியோ, அப்படிதான் மன்னியும். நீங்க ஊருக்கு கவலைப்படாம போய்ட்டு வாங்கோ. பசங்களுக்கு லீவ் விடறச்ச உங்காத்துக்கு அனுப்பி வைக்கறேன்” என்று சொன்ன பாபு மன்னிம்மாவைப் பார்க்க,
“கவலைப்படாத கிருஷ்ணா. ஒரு அண்ணனா உன் கவலை எனக்குப் புரியறது. ஆனா, என் பையன் இந்த உலகத்தை விட்டுப் போனாலும், அருந்ததி எப்பவும் எங்காத்து பொண்ணு தான். நீ தைரியமா கிளம்பு ” என்றாள் மன்னிம்மா.
தங்கையின் நிலைமையைப் பற்றிய கவலை இருந்தாலும், தங்கைக்கு புகுந்த வீட்டில் இருக்கும் ஆதரவை நினைத்து சற்றே மனநிம்மதி அடைந்தவன், “நீங்க சொன்னா சரி” என்றவன்,
“உடம்பைப் பார்த்துக்கோ. குழந்தைங்களைப் பாத்துக்கோ. நான் அடிக்கடி வந்து பாத்துட்டுப் போறேன்” என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்றான் கிருஷ்ணன்.
அதுவரை தன் வேலை, வீடு என்று மட்டும் இருந்த பாபு முழு குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான். வாழ்ந்தால் இப்படி ஒரு அண்ணன் தம்பி ஒற்றுமையுள்ள குடும்பத்தில் வாழவேண்டும் என்று ஊரே பேசிக் கொண்டது.
‘தன் கொழுந்தன்களை தான் பெற்ற பிள்ளைகளைப் போல பாசமாக வளர்த்தியதால், கடவுள் தன்னைப் போலவே ஒரு மருமகளையும் இந்த வீட்டுக்கு கொடுத்திருக்கிறார் என்று எண்ணி ஆனந்தமடைந்தாள் மன்னிம்மா.
ஆனால் வீட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்பு, நடுவில் சொந்தபந்தத்தின் நல்லது கெட்டது என வீட்டின் செலவுகளைச் சமாளிக்கத் திணறிய பாபு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை சமாளிக்க ஆரம்பித்தான்.
பின்பு வாங்கிய கடனுக்கு சம்பளத்தில் வட்டியைக் கட்டிவிட்டு, மீதி பணத்தில் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் போக, கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை வர ஆரம்பித்தது. பெட்ரோல் பங்கில் வேலை செய்த நேரம் போக, கோவில் பூஜை கைங்கரியத்தையும் செய்ய ஆரம்பித்தவனுக்கு வீட்டிலிருக்கும் நேரமே குறைவானது.
தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக கொழுந்தன் கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல், தன்னால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தானே ஒரு முடிவுகட்ட நினைத்தாள் அருந்ததி.
சமையல் வேலைகளை முடித்து விட்டு மன்னிம்மா கட்டிலுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், “மன்னிம்மா, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். ரமாவும் வெளிய போயிருக்கற இந்த நேரத்துல தான் இதைப் பேசவும் முடியும்” என்றாள்.
தன் மாட்டுப் பெண் ஏதோ முக்கியமாகச் சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மன்னிம்மா, “தாராளமா சொல்லும்மா” என்றாள்.
“பாபுவை என் கூடப்பிறந்த தம்பியா தான் நான் பாக்கறேன்னு உங்களுக்கே நன்னாத் தெரியும். அதனால, என்னோட இந்த முடிவை அவர் முன்னாடி தைரியமா என்னால சொல்லமுடியாது. நீங்க தான் இதை எப்படியாவது அவர்கிட்ட புரிய வைக்கணும் மன்னிம்மா” என்றவள்,
நம்ம குடும்பம் பெரிய குடும்பம். வரவா, போறவா அதிகம். உங்க பெரிய புள்ள கோயில் பூஜை, வைதீகம் -னு பாத்துண்டு இருந்ததால சமாளிச்சார். பாபு சின்னவர். அவருக்கு வர சம்பளத்துல அவர் குழந்தைகளையும் படிக்க வச்சுண்டு, என்னோட ரெண்டு பொண்ணுகளையும் பாத்துண்டு, இதுக்கு நடுவுல குடும்ப செலவுன்னு ரொம்ப கஷ்டப்படறார்.
அதனால நான் எங்கண்ணாவாத்துக்குப் போய் எனக்குன்னு ஏதாவது ஒரு வழியைப் பாத்துக்கலாம்-னு நெனக்கறேன்” என்று கண்கலங்க சொல்லும் போதே, நடுங்கிய கைகளோடு தன் மாட்டுப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டவள்,
“நீ என் மாட்டுப் பொண்ணு இல்லம்மா. எம் பொண்ணு . நம்ம குடும்பம் பெருசா வசதியில்லாத குடும்பமா இருக்கலாம். ஆனா, அந்த சோமேஸ்வரனோட அருள்-ல வாழற குடும்பம். அந்த கடவுள், என்னைக் கொண்டு போய் என் பையனை வாழ வச்சுருக்கக் கூடாதான்னு நான் தினமும் நெனக்காத நேரமில்ல. என்ன பண்றது?
ஜென்மா-ங்கறது அவாஅவா வாங்கீண்டு வந்த வரம். நடக்கற எதையும் நம்மால மாத்த முடியாது. அதனால கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நடக்கறத ஏத்துண்டு வாழ்ந்து தான் ஆகணும்-னு உன் மாமனார் சொல்வார். நீ சொல்றதுல இருக்கற நியாயம் எனக்குப் புரியறது. அவங்கிட்ட நான் பேசறேன்” என்றாள் மன்னிம்மா.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings