எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னங்க.. மாடி வீட்ல வாடகைக்கு இருக்குதே கௌதம் தம்பி.. அவங்க அடுத்த வாரம் வீட்டை காலி பண்றங்களாம்.. ஆஃபிஸ் போகும்போது சொல்லிட்டு போச்சு..”
ஹவுஸ் ஓனர் கந்தசாமியின் மனைவி கோமளா சொல்ல.. “ஒரு வாரத்திலயா..? ரெண்டு மாசம் முன்னாடி சொல்லணும், இல்லைனா ரெண்டு மாசம் வாடகையை கழிச்சிக்கிட்டு தான் அட்வான்ஸ் திருப்பி தருவோம்னு சொல்லிட்டியா..?” என்று கறார் கந்தசாமி கேட்டார்.
ஆமாம், அவர் வீட்டுக்கு வாடகைக்கு வருபவர்களுக்கும் தெரியும், வாடகை விஷயத்தில் அவர் எவ்வளவு கறார் என்று. ஆனால் மற்ற விஷயங்களில் நீக்கு, போக்கு கொண்டவர் தான்.
அவரையும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை, வீட்டு வாடகை வருமானமும், போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியும் தான் அவர் குடும்பத்தை ஓட்டுவதற்கு உதவி செய்கின்றன.
‘இவன் வேற மார்ச் மாசம் காலி பண்ணனும்னு சொல்றான்.. அடுத்து மே மாசம் ஸ்கூல் ரீ-ஓபன் சமயத்துல தானே மறுபடி வீடு வாடகைக்கு போகும்…? இவன்கிட்ட ரெண்டு மாசம் வாடகையை உறுதியா பிடிச்சு வைச்சுக்கிட வேண்டியதுதான்’ என கந்தசாமி நினைத்தார்.
இரவு கௌதம் திரும்பி வரும்போது, அதற்காகவே காத்திருந்து கௌதம் மாடி ஏறுமுன்னால் வழி மறித்தார்.
“தம்பி..”
“சொல்லுங்க..ய்யா..”
“நீங்க அடுத்த வாரம் வீட்ட காலி பண்ணப் போறதாக..”
அந்த வாக்கியத்தை வேண்டுமென்றே முடிக்காமல் விட்டார்.
“ஆமாங்க..ய்யா..”
“ஏதும் அவசரமோ..?”
“ஆஃபீஸ் டிரான்ஸ்ஃபர் தான்.. போட்டா போய்த் தானே ஆகணும்.. “
அவன் கவர்மென்ட் ஆஃபீஸில் வேலை செய்வது அவருக்கும் தெரியும். அதனால் தான் நம்பி வாடகைக்கு விட்டிருந்தார்.
“இல்ல.. குடும்பத்தையும் உடனே கூட்டிட்டு போய்டுவீங்களா?.. எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர்..? அங்கே போய் வீடு பாக்கணுமே..?”
“பெங்களூருக்கு டிரான்ஸ்ஃபர்.. என் பொண்ணை அடுத்த வருஷம் கே ஜி கிளாஸ் வேற சேக்கணும்.. இப்பவே போய்ட்டா ஸ்கூல் அட்மிஷன் கொஞ்சம் ஈசியா இருக்கும்னு நினைக்கிறேன்..”
“ஒரு வாரத்துல அங்கே வீடும் பார்த்துடுவீங்களா..?”
“அங்கே இருந்து டிரான்ஸ்ஃபர் ல போறவர் வீட்டை ஏற்கனவே பேசிட்டேன்..”
“சரி தம்பி.. உங்களுக்கே தெரியும்.. வாடகை ஒப்பந்தத்தில
சொன்ன படி ரெண்டு மாச வா..ட..கை..”
அவர் பேச்சை முடிக்கும்முன்பே ..
“அது ஒன்னும் பிரச்னை இல்லை.. நீங்க ரெண்டு மாச வாடகை கழிச்சிட்டே அட்வான்ஸ் திருப்பிக் கொடுங்க..” என்றான் கௌதம்.
அதற்கு மேல் பேசுவதற்கு கந்தசாமிக்கு எதுவில்லை.
***
மறுநாள் மாலை.
“ஏங்க.. அந்த தம்பி தான் வீட்டை உறுதியா காலி பண்றோம்னு சொல்லியாச்சே.. டூ லெட் போர்ட் எதுவும் தொங்கவிடலயா?..”
கோமளா ஆரம்பித்தாள்.
“நம்ம வீட்டை வேறு ஆளுக்கு வாடகைக்கு பேசியாச்சு..”
“அப்டியா?.. என்கிட்ட சொல்லவேயில்லை?.. இன்னும் ரெண்டு மாசத்துக்கு வீடு வாடகைக்கு போகாதுனு சொல்லிக் கிட்டு இருந்தீங்களே..?”
“ரெண்டு மாசத்துக்கு மட்டும் வாடகைக்கு போயிருக்கு..”
“ரெண்டு மாசம் மட்டும் எந்த குடும்பம் வரும்?”
மனைவி ஆச்சரியமாக கேட்டாள்.
“குடும்பம் இல்லை.. கட்சிக்கு..”
“கட்சிக்கா..?”
“ஆமா.. நம்ம UVW கட்சி மாவட்ட செயலாளர் பார்த்திபன் இருக்காருல.. அவரு தான் கேட்டாரு.. ஏப்ரல்ல தேர்தல் முடியும் வரை ரெண்டு மாசத்துக்கு வீடு கேட்டார்.. தேர்தல் பிரசாரத்துக்கு அவங்க கட்சி ஆளுக வந்து போறதுக்கு வேணுமாம்…”
“…..”
“அவங்க தலைமை அலுவலகத்தில இருந்து வர துண்டு பிரசுரம், கொடி, போஸ்டர் எல்லாம் ஏரியா வாரியா பிரிச்சிக் குடுக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்குவாங்களாம்..
ரெண்டு மாச வாடகையையும் மொத்தமாவே குடுத்திட்டாங்க..”
என்று சொன்னவர்..
“இதை அந்த கௌதம் தம்பியிடம் சொல்லாதே.. ரகசியமாய் வச்சுக்கோ.. அவன் கிட்டயும் ரெண்டு மாச வாடகைப் பணத்தை வாங்கிட்டு தான் விடுவேன்..”
என்று பெருமையாக சொன்னார் கந்தசாமி.
***
பாவம்.. துண்டு பிரசுரத்தோட கோடிக் கணக்கில பணமும் வரப் போவுது.. என்ற விஷயம் அவருக்குத் தெரியாது.
அதில் சில கோடிகள் பிடிபட்டு, பிடிபட்டவர்கள் சொன்ன வாக்குமூலப் படி மீதியை கைப்பற்ற கந்தசாமி வீட்டுக்கு போலீஸ் வந்ததும், அவரது வீடு தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸாக திரும்பத் திரும்ப காண்பிக்கப் பட்டதும் தனிக் கதை.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings