in ,

புது கொத்தனார் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ணிகண்டன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது பார்த்து வீட்டின் முன்புறத் தோட்டத்திலிருந்து வெளிப்பட்டார் மணிமாறன்.

‘ ஏம்பா மணி… நம்ம காம்பவுண்டு புட்டுக்கிட்டு விழுந்துச்சு, அதை சரி பண்ணனும். ஏதாவது கொத்தனார் இருந்தா பாருன்னு சொல்லியிருந்தேனே.. !… என்னப்பா ஆச்சு…. ‘  என்றார்.

அவனோ கொஞ்சம் சலிப்புடன், ‘ அப்பா, நானும் நாலஞ்சு பேர்கிட்டே சொல்லிப் பார்த்துட்டேம்பா,  ஒருத்தன் கூட வரமாட்டேன்கிறான். சின்ன வேலைதானேங்கறதால கூட இருக்கலாம். வேற யாராவது கிடைச்சா இழுத்துட்டு வந்துடறேன், அம்பது நூறு கூட கேட்டாலும் குடுத்துடலாம்பா, கொஞ்சம் பொறுங்க… ’ என்றுவிட்டு கிளம்பிப் போனான் அவன். 

மணிமாறனுக்குச் சலிப்புத் தட்டியது. ‘ என்ன மனுஷனுங்க இவனுங்க… ஒரு பெரிய கட்டிடம் கட்டனும்னா மட்டும்தான் வருவேன், சின்ன சின்ன ரிபேர் வேலைக்கெல்லாம் வரமாட்டேன்னா எப்படி ?  ச்சை… ’ சலித்துக் கொண்டே மறுபடியும் தோட்டத்துக்குள் நுழைந்துவிட்டார்.

xxxxxxxxx

ணிகண்டனை டிகிரி படிக்க வைத்து ஏதாவது வேலைக்கு அனுப்பிவிட்டால் தங்களது கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும் என்று மணிமாறனும் மங்களமும் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டார்கள். அவனும் அரசாங்க பரீட்சை எழுதி  வேலையும் வாங்கிவிட்டான்.

தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் கிராம அதிகாரியாக வேலை. விவசாயத்தில் ஒன்றும் வருவதில்லையே, பேசாமல் என்னுடனேயே வந்துவிடுங்கள் என்று அவர்களு தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.  வாடகை வீடுதான். ஆனால் பெரிய வீடு.  வீட்டைப் பார்த்த அவர்கள், பின்னால் மகனுக்கு கல்யாணமானாலும் கூட, இது தாராளமாக போதும், வீட்டை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது என்று நிம்மதிப் பட்டுக்கொண்டனர்..

அவனது அப்பா அம்மா முதலில் கிராமத்தை விட்டு வர மறுத்தார்கள். இவன்தான், அவர்கள் இதுவரை அவர்கள் பட்ட கஷ்டமெல்லாம் போதும், இனிமேலாவது வந்து வாழ்க்கையில் ரெஸ்ட் எடுங்கள் என்று பிடிவாதமாய் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

கிராமத்தில் சுறுசுறுப்பாய் வேலைகள் செய்துகொண்டிருந்த மணிமாறனால் சும்மா இருக்க முடியவில்லை.  எத்தனை நாட்கள்தான்  சாப்பிட்டுக்கொண்டும் காற்றாடிக்கடியில் படுத்துக் கொண்டும் கிடக்கமுடியும். வியாதியல்லவா பிடித்துக் கொள்ளும்.  

நல்லவேளையாய் வீட்டுக்கு முன்புறமும் பின்புறமும் அகன்ற காலி இடங்கள்.  பார்த்தார்,  உள்ளூர் கடைக்குப் போய்  கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தியெல்லாம் வாங்கி வந்தார். அவைகளைக் கொண்டு காலி இடத்தைக் கொத்திவிட்டு, கொஞ்சம் செம்மண்ணும் வாங்கிப் போட்டு கலந்து நிறவி, பாத்திக் கட்டி, கத்திரி, வெண்டை, தக்காளி எல்லாம் நடவு செய்தார்.  தொடர்ந்து கொஞ்சம் மழையும் பெய்யவே செடிகள் ஜெகஜோதியாய் வளர ஆரம்பித்துவிட்டன.

புல் பிடுங்கவும், நீர் விடவும், செடிகளுக்கு குச்சிக் கட்டவும் என்று அவருக்கு தொடர்ந்து வேலைகள் இருந்துகொண்டே இருந்தன.  அவைகள் வளர்ந்து வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் போதும் போதுமென்கிற அளவுக்கு கிடைத்தன.  அதிகப்படியான காய்கறிகளை அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்துவிடுகிறாள் மங்களம். யாரிடமும் காசு வாங்குவதில்லை. அதனால் நாளடைவில் கிராம அதிகாரியின் அம்மா என்ற அடையாளத்தில் எல்லோர் மனதிலும் பதிந்து போனாள். அக்கம்பக்கத்தினர் வரப் போக இருந்தார்கள்.

கடைசியாய் பெய்த மழையில்தான் காம்பவுண்டின் ஒருபகுதி உடைந்து விழுந்தது. ஏற்கனவே இரண்டு இடங்களில் விரிசல் விழுந்திருந்தன. அதைப் பார்க்கும்போதேல்லாம், எப்போது இடிந்து விழுமோ என்பது போலத்தான் பயந்துகொண்டிருந்தார் மணிமாறன்.  ஒருநாள் திடீரென்று பிடித்துக் கொண்டு விடிய விடிய கொட்டிய மழையால் காம்பவுண்டின் விரிசல் விட்டிருந்த பகுதி அப்படியே பிட்டுக்கொண்டு விழுந்துவிட்டது.

பத்து நாள் ஆகிவிட்டது.  காம்பவுண்டை எடுத்துக்கட்ட ஆள் கிடைக்கவில்லை.  மணிகண்டனிடமும் சொல்லிப் பார்த்தார், பலனில்லை. மங்களம்தான் ஒரு உபாயம் சொன்னாள்.

‘ மத்தவங்களை நம்பிக்கிட்டு ஏங்க உட்கார்ந்திருக்கீங்க… நாம கிராமத்துல பாக்காத வேலையா ?  தம்பிகிட்ட சொல்லி சிமெண்ட்டும் மணலும், கொஞ்சம் ஜல்லியும் வாங்கிவரச் சொல்லுங்க… கூடவே ஒரு காரைச் சட்டியும், பூச்சுக் கரண்டியும் வாங்கிட்டு வரச்சொல்லுங்க.  மண்வெட்டிதான் நம்மகிட்டேயே இருக்கு.  நம்மால காம்பவுண்டைக் கட்ட முடியாதா என்ன ?  சாயங்காலம் தம்பி வரட்டும் நானும் சொல்றேன் அவன்கிட்ட… ‘ என்றாள் மங்களம்.

விஷயம் கேள்விப்பட்ட மணிகண்டன் மறுக்கவில்லை. நம்ம வீட்டுக்காகத்தானே அப்பா வேலைசெய்கிறேனென்கிறார். அதுவும் அவர்களுக்கு இதெல்லாம் ஏற்கனவே செய்து பழக்கப்பட்ட வேலைகள்தானே என்ற எண்ணத்தில் அவர்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டான் அவன்.

வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு தானே வேலையில் இறங்கிவிட்டார் மணிமாறன். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை என்பதால் மணிகண்டனும் உதவிக்கு வந்தான்.  அவர்தான் மறுத்துவிட்டார்.

‘ தம்பி… உன் நகம் அழுக்குப் படக்கூடதுனுதான்டா உன்னை படிக்கவச்சு வேலைக்கு அனுப்பி வச்சோம்… நீ ஏன்டா சிமேன்ட்டுல கை வைக்கறே… இருக்கவே இருக்கா உங்கம்மா, எனக்கு ஒத்தாசை செய்வா, நீ போ… ‘ என்று அவனை அன்புடன் விரட்டிவிட்டார்.

அவருக்குத் தெரியும் சிமெண்ட்டும் மணலும் ஜல்லியும் எவ்வளவு கலக்க வேண்டும் என்று.  நல்லவேளையாக கொஞ்சம் பழைய செங்கற்கள் மாடிப் படிக்கட்டுக்கடியில் கிடந்தன. நன்றாக வெந்த கற்கள்தான். அவைகளையும் பொறுக்கிக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார்.

மூன்று மணி நேரம் ஆனது காம்பவுண்டை கச்சிதமாய் கட்டி பூசிமுடிக்க. கணவனும் மனைவியும் சேர்ந்தே வேலையை முடித்துவிட்டார்கள்.  நிமிர்ந்து பார்த்தார் மணிமாறன்.  ஒரு பரமதிருப்தி வந்து புகுந்து கொண்டது அவருக்குள்.

‘ இதை செஞ்சுக்குடுக்கத்தான் ரொம்ப அல்டாப்பு அடிக்கறானுங்க இவனுங்க… ‘ என்று தனக்குள் கறுவியும் கொண்டார் அவர்.

‘ போய் கைகாலெல்லாம் கழுவிக்கிட்டு வாங்க… சாப்பாடு சூடா இருக்கு, சாப்பிடலாம். தம்பி வேற சாப்பிடாம, சேர்ந்து சாப்பிடலாம்னு நமக்காக காத்துக்கிட்டிருக்கான்…. ‘ என்றாள் மங்களம்.

சாப்பிட்டுக்கொண்டே சொன்னார், மணிமாறன்,  ‘ பாரு… பத்து மணிக்கு ஆரம்பிச்சோம். ஒன்னு ஒன்னரைக்கெல்லாம் வேலை முடிஞ்சுடுச்சு… இந்த வேலையை செஞ்சு குடுக்க எந்தப் பயலும் வரமாட்டேனுட்டான்… வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்கறதுக்கு, இப்படி வேற யார் வீட்டிலேயாவது ரிப்பேர் வேலை பண்றதுனா கூட போய் நானே செஞ்சு குடுத்துட்டு வந்துடுவேன்… பொழுதும் போகும்… ’ என்று சிரித்தார்.

‘ அப்பா… இதுக்காகவா உங்களை கிராமத்துலேர்ந்து கூட்டிட்டு வந்தேன்… பேசாம சாப்பிட்டுக்கிட்டு தூங்கிகிட்டு ரெஸ்ட் எடுங்கப்பா போதும்… பொழுது போகலைனாத்தான் இருக்கவே இருக்கு தோட்டம். அதுல போயி வேலை பண்ணுங்க… ‘ என்று செல்லமாய் கண்டித்தான் மணிகண்டன்.

‘ தம்பி…நானும் தோட்டத்துலே எவ்வளவு நேரம்தான் வேலைக் பாக்க முடியும்… நாற்காலில உட்கார்ந்தே இருந்தாலும் சூடு எறிடுது. கொஞ்சம் காலாற நடந்து போயிட்டு வந்தாதான் நல்லாயிருக்கு.  அப்படியே நடந்து போயிட்டு யாராவது,  சின்ன சின்ன வேலைகளுக்கு ஆள் வேணும்னு சொன்னா செஞ்சு குடுத்துட்டு வந்துடுறேன்… இதென்ன ரொம்ப சிரமமான வேலையா என்ன… தெரிஞ்ச வேலையை செய்யப்போறோம், பொழுதும் போனமாதிரி இருக்கும், சின்னச் சின்ன செலவுகளுக்கு பணம் கிடைச்சமாதிரியும் இருக்கும்… ’ என்று சிரித்தார்.

சாயங்காலம் பக்கத்து வீட்டுக் காரர் காம்பவுண்டை எட்டிப் பார்த்துவிட்டு, ‘ ஐயா, சூப்பரா இருக்கே. கொத்தனார் நம்பரை கொடுங்க, என் ஆபீஸ்ல ஒருத்தர் அவங்க வீட்டு சுவத்துலே கொஞ்சம் விரிசல் விட்டிருக்காம், அதை கொத்திவிட்டு பூசிவிட ஆள் இருந்தா சொல்லுங்கன்னு கேட்டிட்டே இருந்தார்… ‘ என்றார்.

சிரித்தார் மணிமாறன். ‘ அதுக்கென்ன… அவரோட அட்ரஸ் குடுங்க, நான் வந்து செஞ்சு குடுத்துடறேன்…’ என்று சிரித்தார். கூடவே விவரத்தையும் விளக்கினார். 

இப்போது அவருக்கு நிறைய கிராக்கிகள், கையில்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முற்றும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. செய்யும் தொழிலே தெய்வம்
    கைதொழில் ஒன்றை கற்றுக்கொள். கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

பிணக்கு (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

நாய் ஸார் – (சிறுகதை ) நாமக்கல் எம்.வேலு