in

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம் (சிறுகதை) – ✍ மரு. உடலியங்கியல் பாலா

பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம் (சிறுகதை)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

நீதி தவறாத மதுரை மன்னனிடம், “முத்தழகி” எனும் அந்த அழகிய பெண் தொடுத்த விசித்திர வழக்கால், அன்று பார்வையாளர் கூட்டம் அலைமோதியது! 

அரசன் கொலு மண்டபத்தில் நுழைந்ததும், மக்களின் சலசலப்பு அடங்கி பரிபூரண நிசப்தம் நிலவியது.

வழக்கமான அரசவை நடைமுறைகளுக்கு பின், வழக்கு தொடுத்த முத்தழகி, மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அவள் தோழி மலர்விழி, ஆகிய இருவரையும் அழைத்து.. “அம்மா முத்தழகி! உங்களது வழக்கு என்ன ?” என அரசன் வாஞ்சையுடன் வினவ

“மன்னர் மன்னா! உயிருக்கு உயிராக பழகிய என் பக்கத்து வீட்டு தோழி மலர்விழி, அவள் உறவினர் திருமணத்துக்கு செல்லும் பொருட்டு, என் வைர ஒட்டியாணத்தை இரவல் வாங்கி சென்றாள். அடுத்தநாள் கல்யாண பலகார மூட்டையுடன், அதை திருப்பி கொடுப்பாள் என நான் ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை. நான் பயந்து போய் அவளிடம் சென்று அதை திருப்பி கேட்டபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா மன்னா?” என்று கூறி விசும்பி விசும்பி அழ தொடங்கினாள் முத்தழகி.

மன்னன் அவளை ஆசுவாசப்படுத்தும் பொருட்டு, “அழாதே பெண்ணே! நீ சற்று அமைதியடை, ஜிகர்தண்டா வேண்டுமா? பருத்திப்பால் வேண்டுமா?” என்று அன்புடன், (தன் முன்னோர் கண்ணகியின் வழக்கில் தவறு செய்து மாட்டிக் கொண்டது நெஞ்சில் பயமுறுத்தி நினைவுறுத்த) அவளை சமாதானம் செய்ய முற்பட்டான்.

 அவளும் இதுதான் நல்ல வாய்ப்பு என்று, “ஜிகர்தண்டாவே கொடுங்கள் மன்னா, சிறிது பனிக்கூழும் அதில் சேர்த்து கொடுக்க சொல்லுங்கள் அரசே”என கூறி தன்னை அமைதிபடுத்தி கொண்டு அரண்மனை ஸ்பெஷல் ஜிகர்கர்தண்டாவை வாங்கி குடித்து, அதன் அலாதி சுவையால் ஈர்க்கப்பட்டு, இன்னும் ஒரு ரவுண்டு ஜிகர்தண்டா கேட்டு வாங்கி குடித்து மெல்ல பேசத் துவங்கினாள்.

“மன்னா… நான் இரவல் கொடுத்த ஒட்டியாணம் பிரசவத்தின்போது இறந்து போச்சு என இவள் அபாண்டமாக பொய் கூறுகிறாள். அது என் அப்பா எனக்கு ஆசையாக அணிவித்து அழகு பார்த்து, சீதனமாய் எனக்கு அளித்தது” என கூறி, மேலும் ஜிகர்தண்டா அருந்தும் ஆசையுடன் ஒப்பாரி வைக்க, மேலும் இரண்டு ரவுண்டு ஜிகர்தண்டா கிடைக்க பெற்றாள்.

மன்னன் மெல்ல குற்றம் சாட்டப்பட்ட மலர்விழி பக்கம் திரும்பி, சற்றே கம்பீரமான குரலில் அவளை பார்த்து, “முத்தழகி கூறுவது உண்மையா? பொய் சொல்லாமல், நடந்த உண்மையை மட்டும் சொல்” என்று அதட்ட

“ஆம் மன்னா, அவள் கூறுவது உண்மைதான். அவள் ஒட்டியாணம் பிரசவத்தில் இறந்து போனது முற்றிலும் உண்மைதான். நாங்கள் அதை காப்பாற்ற எவ்வளவு முயற்சி எடுத்தும், பலனளிக்காது போனதால், தாயும் சேயும் இறந்து விட்டனர் மன்னா” எனக் கூறி இவளும் தன் பங்குக்கு, ஜிகர்தண்டா கிடைக்கும் நப்பாசையில் ஒப்பாரி வைக்க துவங்கினாள்.

கோபம் கொப்பளிக்க, “என்ன சொல்கிறாய்! ஒட்டியாணம் கர்ப்பம் அடையுமா? பிள்ளை பேற்றில் இறந்து விடுமா? என்ன உளருகிராய், உண்மையை சொல்” என கடுமையாக கோபத்தில் கர்ஜித்தான்  மன்னன்.

மெல்ல அவள் நடந்த முழுக்கதையையும் விவரிக்கிறாள்

“மன்னா, நடந்தது அனைத்தையும் கூறி விடுகிறேன். தாங்கள் பொறுமையாக கேட்டு நல்ல தீர்ப்பை வழங்குங்கள். மூன்று மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டின் பெரிய வெள்ளி தாம்பூல தட்டு ஒன்று திருடு போய் விட்டது, எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.  அதை முத்து தான் திருடினாள் என்று, அதை அவள் விற்று காசு பெற்ற பொற்கொல்லன் மூலம் அறிந்து கொண்டேன்

நேரடியாக இதைப் பற்றி கேட்டு, என் சிநேகிதியை அவமானப்படுத்த எனக்கு விருப்பமில்லை. என்னைவிட வசதி படைத்த அவளுக்கு பாடம் புகட்ட ஒரு உபாயம் செய்தேன். அவளிடம் ஒருநாள், ‘என் செப்புக்குடம் ஓட்டை விழுந்து விட்டது, உன்னிடம்  உபரியாக ஒரு குடம் இருந்தால் இரவல் கொடேன்’ என்று நான் கேட்க, அவளும் உதவினாள்.

ஒரிரு நாட்கள் கழத்து அவளிடம் சென்று ‘முத்து ஒரு ஆச்சர்யம் பாரேன், நேற்றிரவு உன் குடம் அழகிய குட்டிக்குடம் ஒன்றை குட்டி போட்டது. இந்தா உன் குடமும் அதன் பளபளக்கும் குட்டியும்’ என்று நான் கொடுக்க, பேராசைக்காரியான அவள், ‘குடம் கூட குட்டி போடுமா என்பதை பற்றி யோசிக்காமல், தனக்கு ஒரு பொருள் இலவசமாக கிடைக்கும் நப்பாசையில்,  அப்படியே இரண்டு பொருளையும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.

இப்படியே நானும், பித்தளை அண்டா, வெள்ளி குடம், வெள்ளி கிண்ணி, சந்தன பேலா என சிலபல பொருட்களை இரவல் வாங்கி, அவை குட்டி போட்டதாக கூறி, ஒவ்வோரு பாத்திரத்துடனும் அது குட்டி போட்டதாக, அதனுடன் ஒரு சிறு பாத்திரத்தையும்  சேர்த்து திருப்பி கொடுக்க, அவள் என் செய்கையால் சந்தோஷித்தாள்.

அவளுக்கு பாடம் புகட்ட இதுதான் சரியான நேரம் என எண்ணி, விலை உயர்ந்த அவள் ஒட்டியாணத்தை இரவல் கேட்டேன். அவளும் ஒரு விலை உயர்ந்த குட்டி ஒட்டியாணம் கிடைக்கும் என ஆசைப்பட்டு அதை கொடுத்தாள். நான் ஒரிரு நாட்கள் கழித்து, அது பிரசவத்தின் போது இறந்து விட்டது! என்று கூறி அவளுக்கு சரியான பாடம் புகட்டினேன் மன்னா!  அவள் ஒட்டியாணம், என்னிடம்தான் உள்ளது! அதை உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன் அரசே!” என முழு சம்பவத்தையும் கூறி முடித்தாள்

“முத்தழகி… நீ பணக்காரியாய் இருந்தும் உன் அன்பு தோழியை ஏமாற்றி அவள் வெள்ளித்தட்டை திருடியது முதலாவது பெரிய குற்றம். அடுத்து, குட்டிபோட்டது என அவள் கொடுத்த சாமான்களை, பேராசையால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு வாங்கி கொண்டது இரண்டாவது பெரிய குற்றம். நியாயமாக பார்த்தால் உன்னை சிறையில் அடைக்க வேண்டும். நீ பெண் என்பதாலும், இது உன் முதல் குற்றம் என்பதாலும் உன்னை மன்னிக்கிறேன்.

மலர்விழி, முத்தழகி உன் வெள்ளித்தட்டை திருடியதற்கு அபராதமாக, அந்த ஒட்டியாணத்தை நீயே வைத்துக் கொள்ளலாம்!” என்று தீர்ப்பு கூற,  இப்போது மலருக்கு ‘டபுள் ஸ்பெஷல் ஜிகர்தண்டா’ வழங்கப்பட்டது!!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 11) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    வல்லபி ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை