எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தங்கள் ஊருக்கு வெளியூரில் இருந்து பிரயாணமாக வந்து வழியில் தங்கி தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் ஒரு மாதமாக அந்த ஊர் மக்கள் கூடுவதும் தங்கள் குறைகளுக்கு அவரிடம் தீர்வு கேட்டபடி கிடைக்கிறது என்றும் பேசுவதை கேட்டு அந்த ஊரில் இருந்த ஒருவன் முனிவரை தேடி வந்தான்
தவத்தில் இருந்த முனிவரை கண்டவன் அவரை அழைக்கலாம் என்று நினைக்கும் போது முனிவரிடம் இருந்து குரல் வந்தது
என்ன மகனே? என்னிடம் உனக்கு என்ன வேண்டும்? கேட்பதை கேள்
கண்களை திறக்காமலே தான் வந்ததை உணர்ந்தார் என்றால் நிச்சயம் இவரிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று ஊருக்குள் சொல்வது உண்மைதான் போல என்று நினைத்து கொண்டவன் தொடர்ந்தான்
வாழ்க்கையில் சில நாட்களாக தொடர் பிரச்சினைகள், சில பிரச்சினைகளை சமாளிக்க முடிந்தாலும் சில பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகிறேன், பிரச்சினைகளே இல்லாமல் வாழ ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டான்
அதை கேட்டதும் புன்முறுவல் செய்த முனிவர் அவனிடம் தூரத்தில் தெரியும் ஒரு பாதையை காட்டி
அதோ அந்த வழியாக செல், செல்லும் வழியில் உன் கண்களுக்கு தெரியும் கற்களை கையில் பொறுக்கி ஒரு துணியில் கட்டிக்கொள். ஒரு இடத்தில் பொறுக்கும் கல்லுக்கும் அடுத்த இடத்தில் பொறுக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு அதில் கிடைக்கும் கற்களின் எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் என்ன என்பதை வந்து என்னிடம் கூறுவாயாக! என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து கொண்டார்
சொன்னதை கேட்டுக்கொண்டவன் சிறிது நேரம் யோசித்து விட்டு மெல்ல அவர் காட்டிய திசை நோக்கி நடையை தொடர்ந்தான். வழியில் கிடைத்த கற்களை எல்லாம் தன் தோளில் கிடந்த துண்டை விரித்து பொறுக்கி கொண்டே சென்றவன் கடைசியாக நின்ற இடத்தில் நன்றாக பொழுது சாய்ந்து விட்டதை உணர்ந்து சேகரித்த கற்களை காலையில் கொண்டு சென்று கேட்போம் என்று வீட்டை நோக்கி நடந்தான்
மறுநாள் காலை பொழுது புலர்ந்ததும் யாரும் வருவதற்குள் சென்று விடுவது என்று முடிவு செய்து அவர் முன் முதல்நாள் சேகரித்து வைத்த கற்களோடு வந்து நின்றிருந்தான்
அவனை பார்த்த முனிவர் வா மகனே உனக்காக தான் நானும் காத்திருந்தேன், கொண்டு வந்த கற்களை கீழே கொட்டி விவரத்தை கூறு
புன்முறுவலோடு அவர் சொல்ல கையில் வைத்திருந்த துண்டை விரித்து கற்களை கீழே கொட்டி துண்டை உதறியபடி முனிவரிடம் திரும்பியவன் சொன்னான்
மொத்தம் 218 கற்கள் சேகரித்தேன். முதலில் கிடைத்த கற்கள் 2 என்றால் அதை தாண்டிய போது 3 அல்லது 4 என்றும் அடுத்தடுத்து செல்ல செல்ல எண்ணிக்கையில் 4,5,6 என்று எண்ணிக்கை கூடிக்கொண்டு தான் இருந்தது. ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்குமான தூர இடைவெளி 1 காத தூரம் 2 காத தூரம் என்ற அளவில் இருந்தது என்று சொல்லி முடித்தான்
அதுவரை அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டவர் சிரித்தபடி அவனை பார்த்து சொன்னார்
மகனே! இதுதான் உன் கேள்விக்கான பதில்
அவர் சொல்ல என்னவென்று புரியாமல் விழித்தவனிடம்
நீ பிரச்சினை என்று சொன்னதும் இப்படித்தான். முதலில் அளவில் சிறியதாக இருந்து கடக்க கடக்க அதை விட அதிகம் அதிலும் அதிகம் என்று போக போக அளவில் மாறுபடும். ஆனால் அதற்காக அந்த பாதை வேண்டாம் என்று வேறு பாதை சென்றாலும் வழிகளில் கற்கள் இருக்கும் அதில் மாற்றம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா? என்று கேட்க
அதுவரை கேட்டுக்கொண்டிருந்தவன் அவனறியாமல் ஆம் என்று தலையசைக்க முனிவர் தொடர்ந்தார்
கற்கள் தான் உன் பிரச்சினைகள், வேண்டாம் என்றாலும் வழியில் அவை கிடக்கும். கடந்து போக வேண்டிய கடமை மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அதை கடக்கும் போது கற்கள் மேல் நம் கவனம் இருந்தால் அவை குறுக்கே கிடந்தாலும் அது நம் காலை இடறாமல் நம்மை தற்காத்து கொள்ளலாம். பிரச்சினைகள் மேல் கவனம் கொள்ள வேண்டுமே தவிர பிரச்சினைகளே வேண்டாம் என்று கடக்க முடியாது என்பதை உணர்வாய் மகனே!
சொல்ல சொல்ல தனக்குள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்ததை உணர்ந்தவன் மறுமொழி பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்
இன்னும் கேள்! நீ பொறுக்கிய கற்களின் அளவுதான் உன் பிரச்சினைகளின் அளவு, தூரமும் அது போல தான். கிடைக்கும் கற்களை கையிலேயே எப்படி வைத்திருக்க மாட்டாயோ அப்படிதான் பிரச்சினைகளும். பிரச்சனை விதி என்றால் தூரம் தாண்டியதும் பிரச்சினைகளை தூக்கி எறிந்துவிட வேண்டும் என்பதும் விதி என்பதை உணர்ந்து தெளிந்து கொள்
அதுவரை கேட்டுகொண்டிருந்தவன் அவர் பேசி முடிக்க அவர் காலில் விழுந்து அழ ஆரம்பித்தான்
தனக்கான கேள்விகளுடன் அதற்கான பதிலை தேடி வந்து அதை விட கிடைப்பதற்கரிய ஞானம் கிடைத்ததை எண்ணி அவரையே கண் சிமிட்டாமல் பார்த்தவனிடம் முனிவர் சொன்னார்
செல் மகனே! உனக்கான பாதை உன்னை எதிர்நோக்கி இருக்கிறது, கற்களும் உனக்காக காத்திருக்கிறது. அதை சேகரித்து எங்கு வரை அதை சுமப்பது, எங்கு அதை வீசி எறிந்து விட்டு அடுத்த கட்டம் நோக்கி நகர்வது என்ற வழியை தேடி புறப்படு இறைவன் துணை இருப்பான் என்று ஆசீர்வதித்தவரிடம் இருந்து விடைபெற்று மலர்ந்த முகத்தோடு கிளம்பியவனை பார்த்த முனிவர் வானத்தை நோக்கி சிரித்தபடி சொன்னார்
எல்லாம் அவன் செயல்
எழுத்தாளர் செந்தில் செழியன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
-முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings