இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏன் உங்களுக்கு இந்த வீட்டில் இருக்க பிடிக்கலையா” என்றாள் பூங்குழலி.
‘வருஷம் முழுக்க இங்கேயே இருக்க சொன்னா கூட இருப்பேன்’ என்று பதில் சொன்னவள் தொடர்ந்து பேசலாயினாள். ’இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அமைதியான வீடு, அன்பான மனுசங்க, இதெல்லாம் பிடிக்காதுன்னு சொல்ல முடியுமா’
“அப்புறம் என்னங்க உங்களுக்கு பிரச்சனை” என்றாள் பூங்குழலி.
‘எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை பூங்குழலி, உங்க அண்ணா, எங்க அப்பா அம்மாவின் விருப்பத்தோட என்ன நடந்தாலும் நான் அதை ஏத்துக்குவேன்’ என்றாள் செண்பகம்.
“உங்க அப்பா, அம்மாவும் என் அண்ணாவும் சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு” என்று பூங்குழலி சொன்னதும் செண்பகத்தின் முகத்தில் அல்லியும் மல்லியும் பூத்துக் குலுங்கியது.
எப்படியோ செண்பகத்தை சம்மதிக்க வச்சாச்சு இனி அண்ணாவை சம்மதிக்க வைக்கிறது தான் பெரிய வேலை என்று எண்ணியவள் செண்பகத்தை படுக்க சொல்லிவிட்டு தன் அண்ணன் அறைக்குள் சென்றாள் பூங்குழலி.
கட்டலில் அமர்ந்தபடி போன் பார்த்துக் கொண்டிருந்த வசந்தகுமார் பூங்குழலி வருவதை பார்த்து தொலைபேசியை வைத்துவிட்டு, ‘வாமா பூங்குழலி என்ன இந்த நேரத்துல வந்திருக்க ஏதாவது முக்கியமான விஷயமா’
“ஆமாம், அண்ணா இது ரொம்ப முக்கியமான விஷயம் தான் என்று சொல்லியபடி தன் அண்ணனின் அருகில் அமர்ந்தாள் பூங்குழலி.
“அண்ணா எனக்கு நீ ஒரு சத்தியம் செய்து தரணும்” என்றாள் பூங்குழலி.
‘சத்தியமா எதற்கும்மா’
“அண்ணா நான் என்ன சொன்னாலும் அதை நீ கேக்கணும்”
‘நீ சொல்லி நான் எப்போதாவது மாட்டேன்னு சொல்லி இருக்கேனா’
“இல்ல அண்ணா, இது ரொம்ப பெரிய விஷயம்”
‘எவ்வளவு பெருசா இருந்தாலும் நீ கேட்டு நான் மாட்டேன்னு சொல்ல மாட்டேன், என்ன வேணுமோ கேளு’
“நீ கல்யாணம் பண்ணிக்கணும் அண்ணா”
‘என்ன சொல்ற பூங்குழலி, எனக்கு கல்யாணமா, உனக்குத்தான் கல்யாணம் பண்ணி வைக்கனும் ஆனா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றே’
“உனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து இருக்கேன் அண்ணா, அந்த பொண்ணை உனக்கும் புடிச்சிருந்தா நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றாள் பூங்குழலி.
‘நான் நல்லா இருக்கணும், என் வாழ்க்கையில நல்லது நடக்கனும் என்று நீ நெனச்சு இதெல்லாம் நீ செய்யுற, ஆனா இது சரிவராது’
“அண்ணா நான் காலம் முழுக்க உன் கூட இருக்க போறது இல்ல, எனக்கு கல்யாணம் ஆனா இங்கிருந்து மாமியார் வீட்டுக்கு போக போறேன் நீ மட்டும் தான் தனியா இருப்ப, எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி நீ கல்யாணம் பண்ணிக்கணும்”
‘சரிம்மா பொண்ணு யாருன்னு சொல்லு’
“பொண்ணு வேறு யாரும் இல்லை நம்ம செண்பகம் தான்” என்றாள் பூங்குழலி.
‘அவங்களே கல்யாண வாழ்க்கையை வெறுத்து போயி இருக்காங்க இப்போ அவங்க கிட்ட போயி என்னை கல்யாணம் பண்ணிக்கங்க என்று சொன்னா அவங்க என்ன நினைப்பாங்க என்னை பத்தி’
“அண்ணா அவங்க கிட்ட இத பத்தி பேசிட்டேன். அவங்க அப்பாவும் அம்மாவும் சம்மதிச்சா அவங்களும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க”
‘கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சா கூட அவங்க அப்பாவும் அம்மாவும் சம்மதிக்கணுமே! அவங்க சம்மதிக்கல்லனா?’ வசந்தகுமார் இப்படி சொன்னதும் தன் அண்ணாவுக்கும் சம்மதம் என்று புரிந்து கொண்டாள் பூங்குழலி.
“பொண்ணு வாழ வெட்டியா இருக்கிறது விட வேறு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க தான் பெத்தவங்க நினைப்பாங்க” என்றாள் பூங்குழலி.
‘அதுவும் சரிதாம்மா.. நீ இதெல்லாம் போட்டு குழப்பிக்காத, போய் நிம்மதியா தூங்கு, இத பத்தி அப்புறம் பேசலாம் என்றான் வசந்தகுமார்.
இருவரின் சம்மதத்தையும் வாங்கிய பூங்குழலி மன மகிழ்ச்சியுடன் தூங்க சென்றாள்.
மறுநாள் விடிந்தது….
காலை வேளை உணவு முடித்த பிறகு செண்பகம், பூங்குழலி, வசந்தகுமார் என மூவரும் காரில் ஏறி செண்பகத்தின் வீட்டிற்கு புறப்பட்டனர்.
செண்பகத்தின் வீட்டு வாசல் முன் கார் வந்து நின்றது. வாசல் பெருக்கிக் கொண்டிருந்த பூமாரி நிமிர்ந்து பார்த்தாள். முதலில் இறங்கிய பூங்குழலியை பார்த்த பூமாரி யாராக இருக்கும் என்று யோசிக்கும் போதே வசந்தகுமாரும் செண்பகமும் அடுத்தடுத்து காரிலிருந்து இறங்கியதை பார்த்த பூமாரி வேகமாக ஓடி சென்று தன் மகளைக் கட்டி அணைத்து கொண்டு அழுதாள்.
செண்பகத்திற்கும் தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. மூவரையும் உள்ளே அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்தாள் பூமாரி. வீட்டின் ஒரு ஓரத்தில் போர்வை போர்த்தியபடி படுத்திருந்தார் செண்பகத்தின் அப்பா.
‘அப்பாக்கு என்னாச்சு, ஏன் படுத்திருக்காரு உடம்புக்கு ஏதாவது முடியலையா’ என்று கேட்டுக்கொண்டே தன் அப்பாவின் அருகே சென்று அமர்ந்தாள் செண்பகம்.
அப்பாவின் கையைப் பிடித்தாள், உடல் சூடாக இருப்பதை உணர்ந்து நெஞ்சுப் பகுதியில் கை வைத்துப் பார்த்து காய்ச்சலாக தான் இருக்கும் என்று உறுதி செய்தாள்.
‘என்னம்மா அப்பாக்கு இப்படி சுரம் அடிக்குது’
“நீ இல்லாம போன இந்த ரெண்டு நாளா உன்னை நினைச்சு நினைச்சு அவருக்கு சுரம் வந்துடுச்சு” என்று சொல்லிக் கொண்டே வசந்தகுமாருக்கும், பூங்குழலிக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தாள்.
செண்பகம் தூங்கிக் கொண்டிருந்த தன் அப்பாவை எழுப்பினாள். கண் விழித்த செண்பகத்தின் அப்பா செண்பகத்தை பார்த்தவுடன், அந்த சுரத்தில் கூட எழுந்து அமர்ந்து கொண்டார்.
“உனக்கு என்ன ஆச்சு… நீ எங்க போன” என்று பேச தொடங்கியவர், அவர்கள் சுரேஷ் வீட்டிற்கு வந்தது அங்கு அவமானப்பட்டது என எல்லாத்தையும் சொல்லி முடித்தார்.
தன் அப்பாவும், அம்மாவும் அவமானப்பட்டதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டாள்.
‘இவங்க ரெண்டு பேரும் யாரும்மா?” என்று வசந்தகுமாரையும் பூங்குழலியும் பற்றி செண்பகத்திடம் கேள்வி எழுப்பினாள் பூமாரி.
இந்தக் கேள்விக்கு வசந்தகுமார் பதில் சொல்ல ஆரம்பித்தான். “நான் வசந்தகுமார் SI. என்று ஆரம்பித்தவன் நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.
எல்லாவற்றையும் கேட்ட பூமாரி ‘செண்பகம் நீ இவ்வளவு கஷ்டப்பட்டியா?’ என்று பூமாரி செண்பகத்தை அணைத்து கொண்டாள்.
‘என் பொண்ணு வாழ்க்கை இப்படி நாசமா போச்சே, கேடு கெட்டவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி என் பொண்ணு வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே’ என்று தன் மகளைப் பார்த்து அழுதாள்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings