இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சிணையில் பாதி திருமண தினதன்றும், மீதியை திருமணம் முடிந்தும் தருவதாக சொல்லிவிட்டு, இன்னும் தரவில்லை என்ற கோபத்தில் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று செண்பகத்திற்கு இப்போது தான் புரிகிறது.
செண்பகம் சாப்பிடுவதற்கு சாப்பாட்டில் கை வைத்தால், “அவள் அம்மா வீட்டு சொத்து, அதான் உரிமையா சாப்புடுற” என்று சாடை காட்டி பேசுவாள் அவள் மாமியார்.
காலை விடிந்தது முதல் அந்தி சாயும் வரை வீட்டில் இருக்கும் அனைத்து வேலையும் செண்பகமே செய்து முடிப்பாள்.
இவள் தன் அம்மா வீட்டிற்கு போன் பேசியே பலநாள் ஆயிருக்கும். ஏனெனில், இவளிடம் போனே இல்லை. எப்போதாவது இவள் வீட்டுக்காரனின் போன் எடுத்து அவனுக்கு தெரியாமல் தான் பேசுவாள்.
அன்றைக்கும் தன் அம்மாவிடம் போன் பேசிட்டு இருக்கும் போது, சுரேஷ் வந்துவிட்டான். “யாருகிட்ட பேசினாய்? என்ன பேசினாய்?” என்று சந்தேக பார்வையில் கேள்விகளை துளைத்து எடுத்தான்.
இவள் கூறிய வார்த்தைகள் எதுவும் நம்பாத சுரேஷ் அவளின் தவடையில் ஓங்கி அறைந்தான். கடுஞ்சொற்களால் பேசி, “உன் அம்மா வீட்டுக்கு போய் தர வேண்டிய வரதட்சனையை வாங்கிட்டு அப்புறம் வீட்டுக்குள்ள வருவ” என்று சொல்லி வீட்டை விட்டு விரட்டி அடித்தான் சுரேஷ்.
வேறு வழி இல்லாமல் அழுது கொண்டே தன் அம்மா வீட்டிற்கு செல்கிறாள் செண்பகம்.
தன் மகளின் நிலைமை பார்த்து கதறி அழுதாள் பூமாரி. குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் நகையையும் தன் மகளுக்கு எடுத்துக் கொடுத்து, சமாதானத்தைக் கூறி அனுப்பி வைத்தாள் பூமாரி.
தன் அம்மாவிடமிருந்து பணத்தையும், நகையும் வாங்கிக் கொண்ட செண்பகம் தன் புகுந்து வீட்டிற்கு சென்றாள். இவள் கொண்டு வந்த பொருளுக்கு இரண்டு நாளைக்கு நிம்மதியாய் இருந்தாள் செண்பகம்.
மூன்றாவது நாள் மீண்டும் வரதட்சணை வாங்கிக் கொண்டு வருமாறு மாமியாரும், வீட்டுக்காரனும் அடி உதை என்று பலவகையில் கொடுமைகள் செய்தனர்.
செண்பகத்தின் அம்மா பூமாரி, ஒருவேளை உணவு உண்டு மறுவேலை உண்ணாமல் இரவும் பகலுமாய் கண்விழித்து வயலிலும், காட்டிலும் வேகாத வெயிலில் வேலைக்கு சென்று, தன் மகளுக்கு செய்ய வேண்டிய வரதட்சணைக்கு பணத்தை சேர்த்தாள்.
அன்றைய நாள் உலகத்துக்கு மட்டும் அமாவாசை இல்லை, செண்பகத்தின் வாழ்க்கையிலும் அதுதான் அமாவாசை.
இரவு 8 மணி இருக்கும். சுரேஷ் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு தள்ளாடி தள்ளாடி வீட்டிற்குள் நுழைந்தான். ஒரு ஓரமாக கூரை பாயை விரித்து படுத்திருந்த செண்பகத்தின் வயிற்றில் ஓங்கி உதைத்தான் ‘ஐயோ… அம்மா’ என்று அந்த வீதியே அதிரும்படி அழுகுரல்.
“போடி உன் அம்மா வீட்டுக்கு, சரியான பிச்சைக்கார குடும்பத்தில் பொண்ணு எடுத்தது என் தப்பு, எங்கடி பாதி வரதட்சணை”
‘இப்பதானங்க வாங்கிட்டு வந்தேன்’
“என்ன பத்து சவரம் வாங்கிட்டு வந்தியா”
“என் அப்பாவும் அம்மாவும் அடுத்த மாசத்துக்குள்ள எப்படியாவது மீதி வரதட்சணையை கொடுத்துடுவாங்க” என்று அழுதுகொண்டே சொன்னாள் செண்பகம்.
குடி போதையில் இருந்த சுரேஷ், செண்பகத்தின் தலைமுடியை பிடித்து இழுக்க வலியால் துடித்தாள் செண்பகம். வீட்டின் வெளியே சென்று பெரிய தடி ஒன்று எடுத்து வந்து, செண்பகத்தின் வயிற்றிலும், காலிலும், தலையிலையும் சரமாரியாக தாக்கினான் சுரேஷ்.
வலி தாங்க முடியாமல் வீட்டை சுற்றி சுற்றி ஓடினாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த செண்பகம் குடிபோதையில் இருந்த சுரேஷை வேகமாக தள்ளிவிட்டு அவன் கையில் இருந்த தடியை பிடுங்கினாள். அவள் முகம் சிவந்தது, கண்கள் துடித்தது, தன் மனதிற்குள் தைரியத்தை வரவைத்து கொண்டாள்.
“ஏன் இப்படி பணம் பணம்ன்னு அலையிறீங்க, ஆத்தாலும் புள்ளையும் சேர்ந்து என் வாழ்க்கையே கெடுத்துட்டீங்களே” என்று சொல்லி தன் கையில் இருந்த தடியை கொண்டு சுரேஷை அடிக்க ஓங்கினாள்.
அந்த நேரத்தில் அவள் மாமியாக்காரி அவ்விடம் வரவே “ஐயோ.. ஐயோ.. என் மகனை கொல்ல பார்க்கிறாளே…” என்று கத்திக் கொண்டு செண்பகத்தை எட்டி உதைத்தாள். அவள் கையில் இருந்த தடியையும் பிடுங்கி இவள் பங்குக்கு அவளை அடித்து உதைத்தாள்.
“அடி மாரியாத்தா தாயே… இதுக்கு நான் கல்யாணம் ஆகாம கண்ணி பொண்ணாவே இருந்திருக்கலாமே, நான் என்ன பாவம் செஞ்ச? இப்படி என்னை அணுஅணுவாய் சாவடிக்கிறதுக்கு பதிலா முழுசா சாவடிச்சுடு” என்று கதறி அழுதாள்.
விழுந்தவன் மீண்டும் எழுந்து, “என்னையே அடிக்கும் அளவுக்கு திமிர் வந்துருச்சா உனக்கு” என்று சொல்லி, தடியை கொண்டு செண்பகத்தின் தலையில் பலமாக தாக்கினான்.
மாட்டை அடிப்பது போல், அவன் வெறி அடங்கும் வரை அடித்தான். தலையிலிருந்து இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறியது. செண்பகத்தின் உடல் முழுவதும் இரத்த காயம். இந்த நிலையில் தன் அம்மாவையும், அப்பாவையும் நினைத்து பார்க்கிறாள். அவளின் கண்கள் மெல்ல மெல்ல மூடியது,
ஒன்னு…
ரெண்டு…
மூனு…
ஊரடங்கும் போது காத்தும் சேர்ந்து அடங்குவது போல இவள் மூச்சு காத்தும் அடங்கிடுச்சு, இதய துடிப்பு ஒலியும் மௌனமாச்சு.
மறுநாள் விடிந்தது.. தன் மகளுக்காக சேர்த்து வைத்த பணத்தையும், நகையும் எடுத்துக் கொண்டு செண்பகத்தின் அப்பாவும், அம்மாவும் செண்பகத்தை பார்ப்பதற்காக வருகிறார்கள். அவளுக்கு பிடித்த பலகாரத்தை சமைத்து கொண்டு, செண்பகத்திற்கு ஒரு பட்டுப் புடவையும், மாப்பிள்ளைக்கு பட்டுச்சட்டை வேட்டியையும் வாங்கி கொண்டு தன் மகளை பார்க்க ஆவலுடன் வருகிறார்கள்.
இனிமேல் தன் மகள் வாழ்க்கை நல்லபடியாய் அமையும் என்று கனவு கோட்டையை கட்டிக்கொண்டு இவர்கள் சந்தோசத்தில் வருகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் அந்த கனவு கோட்டை இடிய போகிறது என்று தெரியாமலே தன் மகளை பார்ப்பதற்காக வருகிறார்கள், இந்த வெகுளியான அம்மாவும், அப்பாவும்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings