பேசி விடு என்னிடம்.
உன் புறக்கணிப்பை விட
உன் மௌனம் என்னைக் கொல்கிறது.
நீ புறக்கணித்தது
என்னை மட்டுமல்ல,
என்னுள் இருக்கும்
உன்னையும் சேர்த்து தான்!
ஆம் பேசி விடு என்னிடம்.
இயங்காத குழுவில்
வெளியேறாமல் இருப்பதும்
உனக்காக.
உன் நாட்டு கடிகாரப்படி
நான் இங்கு உறங்காமல்,
உன்னிடமிருந்து வரும்
பொதுவான செய்திகளை
எனக்காக அனுப்பியுள்ளாய் என
நினைக்கும் என்னை
இதற்கும் மேலே கொல்லாதே.
ஆம் பேசி விடு என்னிடம்.
உன் நினைவுகள் அனைத்தும்
ஆனந்த பைரவியில் ஆரம்பித்து
முகாரியில் முடிகின்றன.
ஆம் பேசி விடு என்னிடம்.
சாஹித்ய அகடேமியே அங்கீகரித்தாலும்,
நீ வாசிக்காமல் முழுமையடைவதில்லை
எனது கவிதை.
என் மன வீணையை மீட்டும்
தந்தி நீ!
மனதில் உள்ள
அன்பை வெளிப்படுத்தாததும்
ஒரு வித வரி ஏய்ப்புதான்.
ஆம் பேசி விடு என்னிடம்.
தொட்டு விடும் தூரத்தில்
நீ இல்லாது போனாலும்
எட்டிப் பார்க்கும் இடத்தில்
நான் இல்லாது போனாலும்
நீ பேசுவது
கேட்டுக் கொண்டே இருக்கிறது
உன் வாட்சப் டிபி வழியே.
நிஜம் நானிருக்க
நீ என்னிடமே பேசலாமே!
ஆம்
சீக்கிரம் பேசி விடு
என்னிடம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings