in ,

பெரியவனும் பெரியாளும் (சிறுகதை) – செல்வம். T

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சிவராத்திரி திருவிழாவிற்கு வீட்டில் உள்ள எல்லாரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். “ஏலே பெரியவனே நீ இன்னும் ரெடியாகலையா”? என்று அம்மா அதட்டிக் கேட்டாள்.

“நான் சின்னையா கூட தான் வருவேன். நீங்க போங்க” என்று அம்மாவிற்கு மறுமொழி கூறினான். “இவங்க கூட யார் போரது.. இம்சை பிடிச்சவங்கே” என்று தனக்குதானே கூறி கொண்டான் பெரியவன்.

பெரியவன் என்று அறியப்படுகிற அழகருக்கு ஏழு வயது ஆகிறது. அழகர் என்ற பெயரை முழுதாய் வீட்டில் அழைத்தவர் யாருமில்லை. வீட்டில் தலைச்சான்பிள்ளை என்பதால் பெரியவன் என்பதே பெயராகி போனது.

பாண்டி சின்னையா கூட திருவிழாவிற்கு அல்லது வெளியூர் செல்வது என்றால் பெரியவனுக்கு கொள்ளை பிரியம். பொய்யமலை திருவிழாவிற்கும், அத்திப்பட்டி திருவிழாவிற்கும் அவருடன் சென்றபோது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால் இந்த முறையும் சின்னையாவுடன் பயணம் செய்ய கிளம்பிவிட்டான். விவரம் தெரிந்த பிறகு முதன்முறையாக குலதெய்வம் கோவிலுக்கு..

சின்னையாவும் பெரியவனும் பேரையூர் செல்லும் பேருந்தில் ஏறி சின்னகட்டளையில் இறங்கினார்கள். அங்கிருந்து ஒத்தையடி பாதை வழியாக நடந்துதான் கோயிலுக்கு செல்ல முடியும். சின்னையாவின் தோள்பட்டையில் ஏறி போர்வீரன் குதிரையின் இருபுறம் காலிட்டு அமர்ந்து சவாரி செய்வதுபோல அமர்ந்து கொண்டான். சின்னையாவின் தலைமுடி குதிரையின் கடிவாளம் ஆனது..

ஒத்தையடிப்பாதையில் இருபுறமும் இவர்களுடன் சீமகருவேல மரங்கள் நகர்ந்து கொண்டிருந்த வேளையில், சூரியன் ரத்த சிவப்பாய் தன் மறைவிற்கான அறிகுறியை காட்டிக் கொண்டிருந்தான்.

“சின்னையா இப்ப நாம போற இடத்தில இருக்க சாமியை ஏன் கும்பிடணும்”? என்று முதல் கேள்விக் கணையைத் தொடுத்தான்.

“பெரியவனே… இந்த சாமிதான் நம்ம குடும்பத்துக்கே குலசாமி. அதனால இத கும்படுறோம்”.

“இந்தச்சாமி மருத மீனாட்சிய விட பெரிய சாமியா”? என்று அடுத்த கேள்வி…

“நம்ம குலசாமினா நம்ம வீட்ல வாழ்ந்த ஒருத்தரை சாமியா கும்பிடறதுடா.. நம்ம சொந்தத்துக்கு எல்லாம் காவல் தெய்வம் நம்ம குடும்பத்தை காக்கிற இந்த சாமிதான்யா… அதானல இதத்தான் முதல்ல கும்பிடணும். சாமியில பெரிசு சின்னது கிடையாது மவனே. இதுவும் நமக்கு மீனாட்சி மாதிரிதான்டா..” என அவர் பதிலளித்து நடைபயணத்தை தொடர்ந்த வேளையில் முயல் குட்டிகள் இரண்டு அவர்கள் சென்ற ஒத்தையடி பாதையில் குறுக்கும் நெறுக்குமாய் ஓடிக்கொண்டிருந்தது.

“அப்ப மீனாட்சியம்மன் மாதிரி பெரிய கடவுளா? அப்படியா?” என்று குதூகலித்தான். சூரியன் தன் நித்திரைக்கான ஏற்ப்பாட்டில் முனைப்புக்காட்டி முழுவதுமாக இருளை பரப்பிக் கொண்டிருந்த வேளையில் கோயிலை அடைந்தனர்.

சுற்றியும் வெள்ளாமையை வெற்றி கொண்ட கரிசல் காடுகளிடையே சுற்றுச்சுவர்கள் எதுவுமில்லாமல் மேடையா? மண்டபமா என ஆராய்ச்சி செய்து அறிந்துகொள்ளும் வகையில் ஓரிடத்தில் அமைந்திருந்தது கோயில்.

முன்பே சென்றிருந்த அழகரின் வீட்டார் மண்டபத்திற்கு அருகில் இடத்தை பிடித்து வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சமுக்காளத்தை விரித்து தற்காலிக தங்கும் இடத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

“என்ன இன்னும் சாமி கும்பிடலையா” என்று கேட்டான், அழகர்.

“சாமி பெட்டிய தூக்கிட்டு இன்னும் வரலை. வந்ததும் கும்பிடுவோம்” என்றாள், அவனின் அன்னை. பெட்டிக்குள்ள இருக்கிற சாமியை பார்க்கிற ஆவலில் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமானது அழகருக்கு.

“மீனாட்சியம்மன் கோயில்ல சாமிய பக்கத்தில இருந்து பாக்க முடியாது. தூரத்திலதான் பாக்கமுடியும். ஆனா இங்க சாமிய பெட்டியில வெச்சு தூக்கிட்டு வரும்போது எப்டியும் பக்கத்திலிருந்து பார்த்து விட வேண்டும்” என ஆசை வார்த்தைகளை தனக்குத்தானே பேசிக்கொண்டான். கோயிலை பற்றி பல கேள்விகள் கேட்டுக் கொண்டே அழகர் தூங்க தொடங்கினான்.

சிறிது நேரத்திற்கு பிறகு சலசலப்பு கேட்டு கண்களை கசக்கியபடியே எழுந்தான் அழகர். “சாமி வந்திட்டிருக்கு” என்ற குரல் நாலாபுறமும் கேட்க தொடங்கியது. தூரத்தில் தீவட்டி ஏந்தியவர்களின் உருவம் மங்கலாய் தெரிய தொடங்கியது. மனித நடமாட்டத்தின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது.

பெட்டி தூக்கி வந்தவருக்கு காவலாளியாக ஒருவர் உக்கிரமாய் கம்பு சுத்தி ஆடி வந்து கொண்டிருந்தார். இதையெல்லாம் முதன்முறையாக காணும் பெரியவனுக்கு அதிசயமாக இருந்தது. மாலை அலங்காரம் செய்திருந்த சந்தனம் பூசிய பெட்டியை வானம் பாரத்த மண்டபத்தை மூன்று முறை சுற்றி இறக்கி வைத்தனர்.

அதன் பிறகு, முதிர்ந்த வயதுடைய பெண் ஒருவர் அரற்றிய ஓலத்துடன் ஆடிக் கொண்டிருந்தார். அவரின் காலில் பய பக்தியுடன் நெடுஞ்சாண்கிடையாய் வீழ்ந்து அனைவரும் ‘துணூறு’ (திருநீறு) வாங்கி இட்டுக் கொண்டனர்.

“சித்தப்பு ஏன் எல்லாரும் இந்த பெரியம்மா கால்ல விழுகிறாங்க”? என்று அடுத்த கேள்விக் கணையைத் தொடுத்தான்.

“இவங்க தான்டா நம்ம சாமியாடி.. இவங்க மேலதான் சாமி வந்து இறங்குது.” என்றார் சித்தப்பு

“அப்ப இவங்களும் சாமி மாதிரிதானா?” அடுத்த கேள்வி.

“ஆமாண்டா சாமியாடும்போது சாமி இவங்ககூட தச்சுருவா வந்து பேசும்” என்று சின்னையா பதிலளித்தார்.. “இவங்களை பார்த்து கும்பிட்டுக்க” என்று கூறினார்…

சிறிது நேரத்திற்கு பிறகு மண்டபத்திற்கு அருகில் கும்பலாய் கூட்டம் கூடி ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபடும் சத்தம் கேட்டது… “ஒவ்வொரு தடவையும் இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு, இந்த தடவை இரண்டுல ஒன்னு பார்த்திரணும்” என்று மண்டபத்தின் வலது பக்கத்தில் பெரிதாக தான் வைத்திருந்த மீசையை முறுக்கிக் கொண்டு பெருசு ஒன்று கருவியது.

“எப்பா எல்லாரும் ஒரு தகப்பன் மக்கதானா.. யாரு முத மரியாதை வாங்குனா என்னாயா?” என்று சாமியாடிய பெரியம்மா கூறியதை சிறிதும் பொருட்படுத்தாமல் இருசாராரும் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“சாமியா இருக்கிற பெரியம்மா பேச்சை கூட யாரும் மதிக்கலை” என ஆச்சர்யம் அடைந்தான் அழகர்.

சிறிது நேரத்துக்கு முன் காலில் விழுந்தவர்கள் இப்போது கண்டு கொள்ளவில்லை என்ற வியப்பு அவனுக்கு. சாமி பெட்டிக்கு பக்கத்தில் பூசாரியும் காவலாக கம்பு சுத்தி வந்தவரும் தங்கள் கையை கட்டிக்கொண்டு நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்து வெள்ளையுஞ் சொள்ளையுமா கழுத்தில் கட்டை செயின் போட்டிருந்த ஒருத்தர் “சாமிய அப்புறம் கும்பிட்டுக்கலாம், முதல்ல இந்த பிரச்சனையை பைசல் பண்ணுங்க”. என்று கனத்த குரலில் கையில் கட்டியிருந்த மைனர் செயினை சரி செய்தவாறே கனைத்தார்.

“எப்பா! உங்க பிரச்சனையை அப்புறம் வச்சுக்கங்க முதல்ல பூசையை முடிச்சுட்டு அப்புறம் உங்க பஞ்சாயத்த வச்சுக்கங்க” என்று மெலிதான குரலில், வாழந்து கெட்ட குடும்ப பெரியவர் ஒருவர் தன் பரம்பரை வரலாற்றின் எச்சத்தின் இருப்பாக தான் இருப்பதை பதிவு செய்தார்.

அதற்கு வெள்ளையுஞ் சொள்ளையுமா இருந்தவர், “என்னைய மீறி எவனாவது சாமிய கும்பிட வந்தீங்கனா அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது என்று உறுமினார்.” அவருக்கு பின்னால் நாலைந்து கைத்தடிகள் சினிமா பட வில்லனுக்கு பின்னால் நிற்பவர்கள் போல நின்றனர்.

யாரும் அவருக்கு பதில் சொல்ல முடியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருந்து நிசப்தம் நிலவிய நேரத்தில், “சின்னையா இவர் காலில விழுந்து எல்லாரும் கும்பிடுங்க, சாமிய மத்தவங்க கும்பிடனுமா, வேணாமானு தீர்மானிக்கிற இவர்தான் சாமியை விட பெரியாளு” என்று சின்னையாவின் கை பிடித்து இழுத்து சத்தமாய் பெரியவன் எழுப்பிய குரலுக்கு ஒத்து ஓதுவது போல அடித்த காற்றில் கோவில் மணி அசைந்து ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சீதை தேடும் ராமன் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    தாய்மை (கவிதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.