பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலைகளைக் கூறியும், தரத்தினைக் கூறியும் கூவும் குரல்களுக்கு மத்தியில், சேகரின் ஏழாம் எண் கடையில் மாத்திரம் அதிக அரவமின்றி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
காரணம் அவன் கடையில் காய்கறிகளின் விலையும், தரமும் நியாயமானதாகவே எப்போதும் இருக்கும். அதனால் அவன் கடைக்கு விளம்பரமும் தேவை இருக்கவில்லை.
சேகருக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் அவன் கடை ஏலத்தில் எடுத்த நாளின் இருந்து, அதாவது கடந்த நான்கு வருடங்களாக உள்ளனர். சேகர் மற்ற கடைக்காரர்களைப் போல யாரையும் வலிந்து கூப்பிடுவதில்லை. அதனால் மற்ற கடைக்காரர்களுக்கு இடையே எழும் போட்டிச் சண்டை இவனுக்கு யாருடனும் நடந்தது இல்லை.
சூழ்நிலைக்கேற்ப விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று இவனுக்கு அறிவுரை கூறி, இவனை மாற்ற முயற்சி செய்து தோற்றுவிட்ட சககடைக்காரர்கள், இவன் எப்போதும் தேற மாட்டான் என்று சலிப்படைந்து விட்டு விட்டார்கள்.
அதே சமயம், வரும் நபர்கள் புதிதாக வருபவர்களாக இருந்தாலும், பழைய வாடிக்கையாளர்களாக இருந்தாலும் இவன் கடையில் ஒரே மாதிரி ட்ரீட்மெண்ட்தான்.
இப்படி எல்லாம் நேர்மையாளனாக இருந்த சேகருக்கும் ஒருநாள் சோதனை வரத் தான் செய்தது, அந்த சோதனை மங்களம் மாமி ரூபத்தில் வந்தது.
அவன் கடைக்கு ரெகுலர் கஸ்டமர் மங்களம் மாமி. ஒரு அமாவாசைக்கு முதல் நாள், சேகரிடம் வந்து வேண்டிய காய்கறிகளின் லிஸ்ட்டைக் கொடுத்து விட்டாள் மாமி. சேகரும் எதார்த்தமாக எந்தப் பொருளும் விட்டுப் போகாமல் வாங்கி வைத்து விட்டான்.
அந்தப் பொருள்களில் இருபது தலைவாழை இலைகளும் அடக்கம். மாமி இலை கிழியாமல் இருக்க இடுப்பில் குழந்தையைப் போல அணைத்து எடுத்துப் போவதை பதினேழாம் எண் கடையில் வாழை இலை மொத்த வியாபாரம் செய்யும் சோமு பார்த்ததால் வந்தது உரசல்.
அந்த மார்க்கெட்டில் எழுதாத விதி ஒன்று உண்டு. அதாவது மொத்த வியாபாரமாக ஒரு கடையில் விற்கும் ஒரு பொருளை, சில்லறை வியாபாரிகள் விற்கக்கூடாது.
உதாரணமாக வெங்காயம், வாழைஇலை, உருளைக் கிழங்கு போன்ற பொருட்கள் மாத்திரமே விற்கும் கடைக்காரர்களின் பொருட்களை, சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் விற்கக்கூடாது.
சோமுவும் சேகரும் நண்பர்கள் என்றாலும் கூட, சேகர் மன்னிப்பு கேட்கும் வரை சோமு விடவில்லை. தவறுக்குப் பிராயச்சித்தமாக தன் வாடிக்கையாளர்களில் ஓரிரண்டு கல்யாண பார்ட்டியை சோமுவின் கடையில் வாழை இலை வாங்க சேகர் அனுப்பிக் கொடுத்தவுடன் இருவரும் மீண்டும் நட்பானார்கள்
“பரிமளம் டைப்பிங் இன்ஸ்ட்டியூட்” என்ற பெயர்ப் பலகைக்குப் பக்கத்தில் “ஜெராக்ஸ்” என்ற பலகையும் வைக்கப்பட்டிருந்தது. உள்ளே வரிசையாக டேபிளின் மேல் வைக்கப்பட்டிருந்த டைப்பிங் மெசினில் பெண் பிள்ளைகள் உட்கார்ந்து தட்டச்சு பழகிக் கொண்டிருந்தனர்.
தன் முன் இருந்த கம்ப்யூட்டரில் ஒரு கண்ணும், பழகும் பெண்களின் மேல் ஒரு கண்ணும் வைத்துக் கொண்டிருந்தாள் பரிமளம்.
ஆரம்பித்த நாட்களில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், நாளாக நாளாக எல்லா நேரமும் எல்லா மெசின்களும் இயங்கும் வகையில் பெண்கள் வரத் தொடங்கி விட்டனர்.
அதனால் அவள் நடத்தும் அந்த இன்ஸ்ட்டூட்டிற்கு ஓரளவு வருமானம் வந்து கொண்டிருந்தது, கூடவே ஜெராக்ஸ் தொழிலும் நன்றாக நடந்து வந்தது.
வருமானம் வந்தாலும் வராவிட்டாலும் அவளிடம் எப்போதும் ஒரே கட்டணம் தான், தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடு இல்லை.
ஒரு பெரியவர் தயக்கத்துடன் எதிரே வந்து நின்றார். அவருடன் மீசை அரும்பு விட்டுக் கொண்டிருக்கும் வயதில் ஒரு பையன், ஒன்பதாவதோ பத்தாவதோ படிக்கலாம்
“இந்த பையன் டைப்பிங் படிக்கணும், சேர்த்துக்கறியாம்மா” தயக்கம் வார்த்தைகளிலும் இருந்தது.
“அப்பா… இங்க பெண்களுக்கு மாத்திரம்தாப்பா சொல்லித் தர்றோம்”
பரிமளாவுக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தாலும், அவளின் கொள்கையை அவள் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை
“சின்னப் பையந்தாம்மா… சேர்த்திக்கலாமே?” என்றார் தயக்கத்துடன்.
“இல்லீங்கப்பா… பையன்களை சேர்த்துக் கொள்வதில்லை. வேணுன்னா டவுனில் வேலன் இன்ஸ்ட்டிடூட்டில் கேட்டுப் பாருங்க..”
“இல்லம்மா அது தூரம், பரவால்ல விடும்மா” ஏமாற்றத்துடன் திரும்பினார் பெரியவர்.
இப்படி நிறையப்பேர் அவளிடம் கேட்டு விட்டார்கள். அவள் தவிர்த்ததற்குக் காரணம், ஆணும் பெண்ணும் அந்த இடநெருக்கடியில் அமர்வது வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுத்து விடும் என்பது தான்.
இளம் பெண்கள் வந்து போவதால் விடலைப் பையன்களின் தொல்லையும் இருக்கத் தான் செய்தது.
ஒரு முறை மூன்று பையன்கள் வந்து நின்று ஒரு கையில் வரைந்த பெண்ணின் படத்தைக் கொடுத்து ஜெராக்ஸ் எடுக்கச் சொன்னார்கள். பையன்களின் பார்வைகள் டைப்பிங் பழகிக் கொண்டிருந்த பெண்களையே சுற்றிக் கொண்டிருந்தன.
இவர்களை சீக்கிரம் அனுப்புவதற்காகவே வேகமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து, “இரண்டு ரூபாய்” என்றாள் பரிமளம்.
நக்கல் பார்வையுடன் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான் அவன்.
“சில்லரை இல்லைங்க”
“பரவாயில்லீங்க, தினம் வந்து ஜெராக்ஸ் எடுத்து கழிச்சுடறோம்”
இதுவும் நக்கல் தான்.
நிலைமை சரியில்லை என்று உணர்ந்தவுடன், பரிமளாவின் கை இயற்கையாக கம்ப்பியூட்டரின் கீழே வைத்திருந்த செல்போனில் கலீம் என்ற பெயரை அழுத்தியது.
அடுத்த சில நொடிகளில் பையன்களுக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் வந்து நின்று பரிமளாவைப் பார்த்து, “என்னம்மா?” என்றான்.
“இல்லண்ணா… இரண்டு ரூபாய்க்கு இரண்டாயிரம் கொடுக்கறாங்க”.
புரிந்து கொண்ட கலீம், “சில்லறையக் கொடுத்திட்டுப் போங்கப்பா” என்றான்.
“நீங்க யாருங்க அதைச் சொல்ல?” என்றான் ஒருவன் தெனாவெட்டாக.
அடுத்த கணம் ‘பளார்’ என்ற சப்தமும், கேள்வி கேட்ட பையன் கன்னத்தைத் தடவுவதும் ஒரு சேர நடந்தது.
சப்தத்தைக் கேட்டு அடுத்துள்ள கடைகளில் இருந்து கடைக்காரர்கள், “என்ன கலீம்?” என்று வரத் தொடங்கினர். கூட்டம் கூடுவதைக் கண்ட விடலைகள், நழுவத் தொடங்கினர்.
“டேய்… ரெண்டு ரூபாய் கொடுத்திட்டுப் போ” அப்போதும் காசு வாங்காமல் விடவில்லை பரிமளம்.
திருதிருவென்று விழித்துக் கொண்டு இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு நழுவினான் ஒருவன்.
கலீம் பரிமளாவின் அண்ணனின் பள்ளித்தோழன். இன்ஸ்ட்டிட்டூடிற்குப் பக்கத்தில் செருப்புக் கடை வைத்திருந்தான். அந்த ஏரியாவில் காவல்நிலையம், அரசு அலுவலகங்களில் செல்வாக்குள்ளவன்.
பரிமளாவிற்கு அந்தப் பகுதியில் மிகப் பலமாகவும், பாதுகாவலாகவும் இருக்கும் உடன் பிறவாதவன் கலீம்.
மாலை மூன்று மணியளவில் தன் வீட்டின் முன் வந்து நின்ற காரின் சப்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தாள் பார்வதி. அவளின் அண்ணன் குழந்தைவேலு காரிலிருந்து இறங்கி வந்தார். பணக்கார அண்ணனின் திடீர் விசிட் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“வாங்கண்ணா… வீட்டில் அண்ணி, சுகந்தி எல்லோரும் நல்லா இருக்காங்ளா?” என்றவாறு உட்காருவதற்கு சேரை எடுத்துப் போட்டாள் பார்வதி.
“எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா… சேகர், பரிமளா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“இருக்காங்க அண்ணா… சேகர் மார்க்கெட் போயிருக்கான். பரிமளா இன்ஸ்ட்டிடூட்டில் இருப்பா”
மேலும் சில பல உரையாடல்களுக்குப் பின் மெயின் பாயிண்டுக்கு வந்து விட்டார் குழந்தைவேலு.
“சரிம்மா… வந்த விசயத்தைச் சொல்லி விடுகிறேன். சுகந்திக்கு கல்யாணம் செய்யலாம் என்று இருக்கிறேன். ஒரே பொண்ணு. பத்து நிதி நிறுவனம் வைத்துள்ளேன், காசுக்கு குறைவில்லை. எனக்குப் பிறகு இதை நிர்வகிக்க நேர்மையான நல்ல பையன் வேண்டும். அதுதான் நம்ம சேகரை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறேன். உன் அபிப்ராயம் எப்படிம்மா?”
“அண்ணா… உங்களுக்கே தெரியும். இவங்க அப்பா இறந்த பிறகு நான் யாருடைய உதவிக்கும் நிற்காமல் வீட்டு வேலை செய்து மீதமிருக்கும் நேரத்தில் ஊதுபத்தி உருட்டி இருவரையும் படிக்க வைத்து இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.
இவர்களுக்கு படிப்போடு கூட நான் சொல்லி வளர்த்தது என்ன தெரியுமா அண்ணா? உழைத்துப் பிழைக்க வேண்டும், நேர்மையாக. சேர்க்கும் பணம் நம் உழைப்பில் வந்ததாக இருக்க வேண்டும், மற்றவர்களின் கண்ணீரில் வந்ததாக இருக்கக்கூடாது என்பதுதான்.
உங்க வீட்டுக்கு அவன் மருமகனாக வந்தால் உங்கள் நிதி நிறுவனத்தை நடத்த வேண்டும். அது நான் சொல்லி வளர்த்த கொள்கைக்கு முற்றிலும் முரணானது. அவனுக்கு நல்ல வசதியான வாழ்க்கை கிடைக்கும், ஆனால் அது திருப்தியானதாக இருக்காது. மன்னிச்சிடுங்க அண்ணா, சுகந்திக்கு நல்ல மாப்பிள்ளை கண்டிப்பாக கிடைப்பான்”
தங்கையின் குணம் தெரிந்து எழுந்து நின்றார் குழந்தைவேலு.
‘நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்ளா?’ என்பது போல ஒரு பார்வையை வீசி விட்டு காரை நோக்கி நடந்தார்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings