7 வருடங்களுக்கு முன் பழனி பாத யாத்திரையின் 4ம் நாள். எங்களுக்கு அதுதான் முதல் வருடம். கூட வந்தவர்களுக்கு இரண்டாம் வருடம். எப்படியோ தக்கி முக்கி நடந்து மினி டோர் வண்டியில் லிப்ட் கேட்டு கொஞ்சம் தூரம், பஸ்சில் ஏறி கொஞ்சம் தூரம்னு அலங்கியம் வரை முருகன் எப்படியோ கூட்டிட்டு போயாச்சு.
கூட வந்தவர்களோ “பாத யாத்திரைனா நடந்து வரணும். இப்படி லிப்ட் எல்லாம் கேட்டு போகக் கூடாது”னு. அது முதல் தடவை எனக்கும். என்னால முடிந்த வரை நடந்தேன். விவரமில்லாமல் வழியில் குளிரும் என தடிமனான போர்வைகள், ஸ்வெட்டர், மப்ளர் எல்லாம் இரண்டு செட். ஆரம்பத்தில் அவரவர் பை அவர அவரிடமே இருந்தது.
நீ பஸ்சில் தானே போற என் பையையும் எடுத்துட்டு போ என்று கணவர் அவர் பையை என்னிடம் கொடுத்து விட்டார். ஆனால் நடந்து போகும் போதும் அவர் பை என்னிடமே இருந்தது. இரண்டு பைகள், நடுவில் யாராவது தண்ணீர் பிஸ்கட் கொடுத்தாலும் என்னிடமே கொடுக்கப்பட்டது. இத்தனையையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து சென்றேன்.
பழனிக்கு இருபது கிலோ மீட்டர் முன்னே என்னையும் கூட வந்த ஒரு சிறுமியையும் மினி டோர் வண்டியில் ஏற்றி கோவிலுக்கு முன் இறக்கி விட சொன்னார்கள். நானும் தப்பிச்சன்டா சாமினு வண்டில ஏறிட்டேன். இப்போ கூட வந்தவங்க எல்லார் பையும் என்னிடந்தான்.
நானும் கோவிலுக்கு பக்கமா போய் இறங்கி சுத்தி பார்த்ததில் நல்லதா ஒரு ரைஸ் மில் இருந்தது. அங்க இருக்கறவங்ககிட்ட விவரத்தச் சொல்லி அவங்கெல்லாம் வருகிற வரை இங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்கிறோம் என அனுமதி பெற்று போனையும் சார்ஜ் போட்டேன். போன் சார்ஜ் இல்லாததால் கூட வந்தவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஒரு வழியாக நாங்கள் இருக்குமிடத்தை தெரிவித்து விட்டேன். அதற்குள் அவர்களும் நாங்கள் தனியாக இருப்போமென்று பஸ்சில் வந்து விட்டார்கள். என் கணவரோ என்னை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். (அது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் அன்றைக்கு மிக ஆவேசமாக இருந்தார்.)
உன்னால் அவர்கள் விரதமும் கெட்டு விட்டது. பாதியில் விட்டு விட்டு பஸ்சில் வருகிறார்கள். அதுவும் அவர்கள் எங்கள் பக்கத்து வீடு வேறு. இதையே ஒரு வருடமும் சொல்லிக் காட்டப் போகிறார்கள் என திட்டு விழுந்துக் கொண்டிருந்தது.
அவர் சொல்வதிலும் உண்மை உள்ளது. கூட வந்த அந்த அக்கா ஒரு சண்டைக் கோழி. அவரிடம் பேசி ஜெயிக்க முடியாது. ஒரு வழியாக அந்த ரைஸ் மில்லிலேயே குளித்து முடித்து ஒரு வழியாக மலையேறினோம். ஆனால் என் வீட்டுக்காரர் முகம் மட்டும் பார்க்க எனக்கு பயமாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் கடித்து குதறப்படும் நிலையிலேயே நான் இருந்தேன்.
ஒரு மூன்று மணி நேரம் 50 ரூ கட்டண வழியில் நின்று கொண்டிருந்தோம். அந்த மூன்று மணி நேரம் நான் அடைந்த மன உளைச்சலுக்கு அளவேயில்லை. அழுது கொண்டேயிருந்தேன். கூட வந்த அக்காவோ, போச்சு எல்லாம் போச்சு. ராஜ அலங்காரம் பார்க்க முடியாது. எனக்கு ஆண்டி அலங்காரம் பார்த்தா ஆவாது. ஒரே கஷ்டமா வரும். ஆண்டி அலங்காரம் பார்த்த வருசம்தான் என் மவனுக்கு மேலுக்கு முடியாம போச்சுனு புலம்பல்.
மத்த நேரமா இருந்தால் அந்த முருகன் வந்து மலை மேல் நின்னதே ஆண்டியாய் தான்னு பதில் சொல்லிருப்பேன். உடனே எங்க ஊட்டுக்காரர் முறைப்பாரேன்னு சும்மா இருந்திட்டேன்.
இப்பதான் கூட்டம் மெல்ல நகருகிறது. எனக்கு உள்ளுக்குள் உதறல்.
“முருகா! நீ எப்படி வேணா எனக்கு தரிசனம் தா! நீ எந்த ரூபத்தில் இருந்தாலும் எனக்கு ஒன்றுதான். ஆனால் இந்த பக்கத்து வீட்டுக்காரி உன்னால்தான் என்று என்னை கை நீட்டி ஒரு சொல் சொல்லிவிட அனுமதிக்காதே” என வேண்டிக் கொண்டேன்.
அப்படியே மெல்ல நகர்ந்து பக்கவாட்டில் திரும்பினால் என் அப்பன், சுவாமி, தேவரின் தெய்வம் ராஜஅலங்காரத்தில் கொள்ளை கொள்ளும் அழகுடன். உணர்ச்சிப் பெருக்கில் அழுதே விட்டேன். வெளியில் வந்தால் தங்கத்தேரில் முருகன் என்னைப் பார்த்து குறும்பாக சிரிக்கிறான்.
“என்ன வைஷ்ணா இப்ப ஓகே வா” என்று பின் வெள்ளிச்சப்பரத்தில் முருகன் தரிசனம் முடித்து மலை இறங்கும் போது பக்கத்து வீட்டு அக்கா பின்வருமாறு கூறினார்.
“வைசால தான் நாம ராஜ அலங்காரம், தங்கத் தேர், வெள்ளிச் சப்பரம் பார்த்தோம். நாம நடந்து வந்திருந்தோம்னா இப்பதான் உள்ள வந்திருப்போம். ராஜ அலங்கரம் பார்த்திருக்க முடியாது” என்றார்.
இதே போல் அடுத்த இரண்டு வருடங்களும் எண்ணற்ற அனுபவங்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings