in

படைப்பின் பிழையா நாங்கள்? (சிறுகதை) – ✍ திருமதி.ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

படைப்பின் பிழையா நாங்கள்? (சிறுகதை)

அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ள் நடமாட்டமே இல்லாத தெரு ஒன்றில், கண்களில் கண்ணீருடன் தான் வரும் பாதையை திரும்பிப் பார்த்துக் கொண்டே அனல் பறக்கும் வேகத்தில் ஓட்டத்தைப் பிடித்தாள் ஒரு பெண் மூச்சிரைக்க ஓடி வந்து கொண்டிருந்தவள், திடீரென்று அவள் செல்லும் வழியிலிருந்த ஒரு கூரை வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். 

முன் பின் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்ததைப் பார்த்ததும், “யாரும்மா நீ?” என்று வீட்டின் உரிமையாளர் கேட்க, இரு கைகளைக் கூப்பி வேகமாக அவருடைய கால்களில் விழுந்து, “ஒரு பத்து நிமிஷம் மட்டும் அமைதியா இருங்கம்மா. நான் எல்லாம் விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லுறேன்” என்று கெஞ்சியதும் உதவிக் கேட்டவளின் நிலையைப் பார்த்து மௌனமாக இருந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.

தன் வீட்டை நோக்கி உதவித் தேடி நாடி வந்தவளை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஒளியிழந்த கண்களோடு முகத்தில் வழியும் கண்ணீரோடு தலையிலும் கையிலும் ஆங்காங்கே சில இரத்தக் காயங்களுடன் காணப்பட்டாள்.

அவளைப் பார்த்ததுமே, ஏதோ மிகப்பெரிய ஆபத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளப் போராடிகிறாள் என்பது மட்டும் அவருக்கு நன்றாகத் தெரிந்தது.

பத்துப் பதினைந்து அடியாட்கள் சிலர், கைகளில் கத்தி மரக்கட்டைகள் போன்ற பல ஆயுதங்களுடன் “ஏய்! அங்க தேடிப் பாருங்கடா”  என்று கூச்சலிட்டுக் கொண்டே அந்த வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருப்பதை கூரையின் ஓட்டைகளின் வழியாக பார்த்தவளுக்கு, இதயத்துடிப்பெல்லாம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

பயத்தில் முகமெல்லாம் வியர்த்து விறுவிறுத்து தொண்டையில் எச்சில் கூட விழுங்க முடியாமல் தொண்டைக் குழி அடைத்துக் கொண்டது.

சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த ரவுடிக் கும்பல் அவ்விடத்தை விட்டுக் கடந்து சென்றதை அறிந்ததும் பெருமூச்சு விட்டாள்.

“யாரும்மா நீ?  இந்த ரவுடிப் பசங்க உன்னை எதுக்கு துரத்துறாங்க”

விம்மி விம்மி அழுது கொண்டே தன்னைப் பற்றிய விவரம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறத் தொடங்கினாள்.

“என்னோட பேருக் கார்த்திகாம்மா. என்னுடைய அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை. என்னுடைய அப்பா அம்மா திருமணமாகி பத்து வருஷம் கழிச்சு தான் நான் பிறந்தேன். பல கோவிலுக்குச் சென்று தவமிருந்து என்னைப் பெற்றதால் கண்ணிமை போல அவ்வளவு பாதுகாப்பாவும் அன்பாவும் பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க.

நான் பிறந்ததுல இருந்தே பையன மாதிரி சட்டை போட்டு தான் பழக்கம். ஏழாவது வகுப்பு படிக்கும் வரை எனக்கு ஒன்னுமே தெரியல. ஆனால் நாட்கள் கடந்து செல்லச் செல்ல எனக்கு கையில வளையில் போடனும், தலையில பூ வைக்கனும், மஞ்சள் பூசிக் குளிக்கனும், பாவடை தாவணிப் போட்டு அழகுப் பார்க்கனும்னு ஆசை வர்ற ஆரம்பிச்சிருச்சு.

ஒரு நாள் என்னுடைய சித்தப்பா பொண்ணுக்கிட்டஅவள் பயன்படுத்துற எல்லாம் பொருளையும் வாங்கிட்டு வந்து பொண்ணு மாதிரி ட்ரஸ் மேக்கப்லாம் நான் போட்டுப் பார்த்தேன். அதைப் பார்த்த  என்னுடைய அப்பா, கோபம் வந்து வேகமாக ஓங்கி அடிச்சுட்டாங்க.

நான் உடனே ஓடிப்போய் அம்மா முந்தானைய பிடிச்சு அழ ஆரம்பிச்சுட்டேன். அப்பா வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றதும் “அம்மா அப்பா எதுக்கும்மா என்ன அடிக்கிறாங்க?”னு கேட்டேன்

“நீ பையனா இருந்திட்டு பொண்ணுங்க மாதிரி ட்ரஸ் போட்டதால அப்பாவுக்கு பிடிக்கல கார்த்திக். பசங்களாம் இப்படி பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணிக்க ஆசைப்படுவாங்களா? நீயே சொல்லு”னு கேட்டாங்க

“அதாம்மா நானும் கேக்குறேன். எனக்கு மட்டும் ஏன் பொண்ணுங்க மாதிரி டிரஸ் மேக்கப் செய்யனும்னு தோணுது? அப்போ நான் பையன் இல்ல தானே” அப்படினு சொன்னதும் அம்மாவும் என்னை இனி இப்படி பேசுவியானு அடிச்சுட்டாங்க.

அம்மாவாது என்னுடைய நிலைமையப் புரிஞ்சுக்குவாங்க நினைச்சா, அவுங்களும் என்ன ஏதுனு விசாரிக்காம தினமும் திட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

வருஷம் போகப் போக என்னுடைய மார்பகம் எல்லாம் பெருசாகி வெளிய தெரிய ஆரம்பிச்சிருச்சு. இந்த விஷயம் தெரிந்த என்னுடைய அப்பாவும் அம்மாவும் உடனடியா ஆஸ்பத்திரில கொண்டு போய் அட்மிட் செஞ்சுட்டாங்க. டாக்டருடைய ஆலோசனைப்படி எனக்கு ஆப்ரேஷன் செய்ய முடிவு எடுத்தாங்க.

முதல் வருஷம் ஆப்ரேஷன் பண்ணுவாங்க, மறுவருஷம் பார்த்தா மறுபடியும் மார்பகம் வெளியத் தெரிய ஆரம்பிக்கும். இது போல தொடர்ந்து நடந்து கொண்டே இருந்துச்சு. நித்தமும் வலி தாங்க முடியாம துடியாத் துடிச்சேன்.

நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் என்னுடைய வலியும் வேதனையும் அவுங்களுக்குப் புரியவே இல்ல. நான் மைனருங்கறதால என்னால வீட்டிலிருந்து தப்பிச்சுப்  போகவும் முடியல.

அப்படி ஒரு தடவ தப்பிச்சுப் போக முயற்சி செஞ்சு வசமா மாட்டிக்கிட்டேன். சரினு பல்லக் கடிச்சு ஒவ்வொரு முறையும் ஆப்ரேஷன் வலியையும் மனவேதனையும் சகிச்சுப் பொறுத்துக்கிட்டேன்.

இனி அவுங்களுக்கு ஏத்த மாதிரி நடுச்சா தான் நம்மளால இந்த வீட்டுல உயிர் வாழ முடியும். மேஜர் வயசு வரும் வரைக்கு நடிப்போம்னு ப்ளான் போட்டு என்னுடைய நாடகத்தை தொடர்ந்தேன்.

நான் நடித்ததைப் பார்த்து, அவுங்களுக்கு என் மேல எந்தவித சந்தேகமும் வரல. என்னுடைய அப்பா அம்மாவும் நான் பழைய மாதிரியே மாறிட்டேனு நம்பிட்டாங்க.

நான் காத்திருந்த எனக்கான நேரம் வந்ததும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துட்டேன். யாருடைய கண்ணுக்கும் படாத இடத்துக்கு போயிரனும் நினைச்சு என்னை மாதிரியே பிறந்து பெற்றோர் ஆதரவு இல்லாதவுங்கள பற்றிய தகவலை எல்லாம் விசாரிச்சு அவுங்களோட சேர்ந்து என்னுடைய வாழ்க்கையை நான் புதுசா வாழ ஆரம்பிச்சேன்ம்மா.

யாருடைய தொந்தரவும் இல்லாம வாழ்க்கை நிம்மதியா போய்க்கிட்டு இருந்தது. நான் வீட்டை விட்டு வெளியே வந்து இரண்டு வருஷமாச்சு.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி மறுபடியும் என்னைத்  தேடி என்னுடைய அப்பா அம்மா வீட்டுக்குக் கூப்பிட வந்தாங்க. நல்லவுங்க மாதிரி நடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் ஒரு ரூம்ல என்னை அடைச்சு வச்சு கொலை செய்யப் பார்த்தாங்கம்மா.

“நான் தான் இனி இங்க வரமாட்டேனு சொல்லிட்டேனே, ஏன் இப்படி என்னை அடச்சு வச்சு சித்தரவாதைப் பண்ணுறீங்க?” 

“நாங்க சொல்லுற படி நடந்தா, நீ சந்தோஷமா உயிரோட வாழ முடியும். இல்லைனா பெத்த பிள்ளைனு கூடப் பார்க்காம சோத்துல விஷம் வச்சு கொலை செஞ்சிருவோம் மிரட்டுனாங்க”

“நம்ம ஜாதி ஜனம் எல்லாம் எங்களப் பார்த்து கேவலமா பேசுறாங்க, எல்லாத்துக்கும் காரணம் நீதானு ஓங்கிப் பளார்னு அறைஞ்சுட்டாங்கம்மா” என்று கதறி அழுகத் தொடங்கி விட்டாள் கார்த்திகா.

“மறுபடியும் முட்டி மோதிப் பிழைச்சு ஓடி வந்துட்டேன்ம்மா. நாங்க இப்படி பிறந்ததுக்கு நாங்க எப்படிம்மா பொறுப்பாக முடியும்? இந்த சமுதாயத்துல எத்தனை பேரு என்னை மாதிரி பெத்தவுங்க ஆதரவு இல்லாம தனியா கஷ்டப்படறாங்க தெரியுமாம்மா.

எங்கள மாதிரி அவதாரம் எடுத்த கடவுளை மட்டும் வழிபடும் மக்களுக்கு, நாங்க மட்டும் தீண்டத்தகாத மனுஷங்களாத் தெரியுறதுக்கு காரணம் என்னம்மா? கடவுளோட படைப்பின் பிழையாம்மா நாங்க?

இனிமேல் இப்படி ஒவ்வொரு நாளும் உசுருக்கு பயந்து என்னால ஓட முடியாதும்மா. இப்போவே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து என்னுடைய உயிருக்குப்  பாதுகாப்பு கேட்க போறேன்ம்மா.

என்னை ஒதுக்கி தள்ளுனவுங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழ்ந்து காட்டனும் நினைச்சு பல கனவோடும் இலட்சியத்தோடும் முன்னேறிச் செல்ல விரும்பும் எங்க ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டுல மட்டும் தான் பிரச்சனை இருக்கும்னு நினைச்சு வீட்டை விட்டு வெளியே வந்தா, அவுங்க படுத்துனப் பாட்டுக்கும் மேல இந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் சிலர் எங்களப் பாடுபடுத்துறாங்க.

இந்த மக்களோட மனசுல எங்களைப் பற்றிய பல தவறான எண்ணங்கள் ஓடுறத திருத்தி எழுதுவதற்கு நான் முன்னுதாரணமா இருந்து வாழ்ந்து காட்டனும்மா. என்னை மாதிரி தனியா கஷ்டப்படறவுங்களுக்கு சிறந்த வழிகாட்டியா மாறி அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி  அவர்களுக்கான வழியைக் காட்டப் போறேன்” என்று மனதில் உள்ள மனகுமுறல் அனைத்தையும் கொட்டித் தீர்த்துக் கதறி அழுதாள் கார்த்திகா.

கார்த்திகாவின் கதையைக் கேட்டு மனம் உருக்குலைந்த அந்தப் பெண், கார்த்திகாவை வேகமாகக் கட்டியணைத்து “நானும் உன்னைப் போல ஆதரவற்ற திருநங்கை தான் கார்த்திகா” என்றார்.

“கவலைப்படாதே கார்த்திகா! இந்த சமுதாயம் நம்மைப் பார்க்கும் பார்வையை மாற்றுவோம். நமக்கும் உணர்வுகள், ஆசப் பாசங்கள் இலட்சியங்கள் உண்டு என்பதைச் சேர்ந்தே வாழ்ந்து காட்டுவோம். நமக்காக நாம் தான் போராட வேண்டும்” என்று கூறினார்.

இந்த சமுதாயத்தில் இவர்களைப் போன்ற பல திருநங்கைகளும் திருநம்பிகளும் பெற்றோர்களின் ஆதரவில்லாததால் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக பலரிடம் கையேந்தி நிற்கும் சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவாவிட்டாலும் சரி, அவர்கள் மனம் நோகும்படியான செயலை ஒருபோதும் செய்யாதீர்கள். அவர்கள் படைப்பின் பிழையில்லை. அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத உணர்வற்றவர்கள் தான் உண்மையில் படைப்பின் பிழை.

அவர்களுக்கான வழியை நோக்கி முன்னேறிச் செல்ல அவர்களுக்குத் தெரியும். அவர்கள் செல்லும் வழிக்கு குறுக்கே யாரும் தடையாக வராமல் இருந்தால் மட்டும் போதும். அவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. மிகவும் உயர்ந்த சிந்தனைகள் மிகுந்த பதிவு.சொல்ல முடியாத துயரங்களை மனதில் சுமக்கும் ஆதரவற்ற உள்ளங்களுக்கு மருந்தாக தங்களின் பதிவு சகோதரி 💐💐.

நினைவுகள் இனியவை (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 26) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்