in ,

பச்சோந்திகள் (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

அந்த வேலிமேல் ஊர்ந்து கொண்டிருக்கும் பச்சோந்தியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன். சமீபத்தில் மழை பெய்து இருந்ததால், வேலியும் அதன் மேல் குவியலாய்ப் படர்ந்திருந்த கோவைக்கொடியும் பச்சை நிறம் கொண்டு அந்தப் பச்சோந்தியின் நிறத்தோடு ஒன்றிப்போயிருந்தன. பச்சோந்தியின் அசைவில் இருந்துதான் அதன் இருப்பை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இதுவே சிறு வயது ராஜேந்திரனாக இருந்திருந்தால், இந்நேரம் கல்லடி பட்டு பச்சோந்தி நாலு குட்டிக்கரணம் அடித்துப் பறந்திருக்கும். ஆனால் இந்த நாற்பது வயதில் அவன் வாழ்ந்த வாழ்க்கையும், படித்த நூல்களும் அவனுக்கு நிறையப் பாடங்களைக் கற்பித்துக் கொடுத்திருந்தன‌. மற்ற உயிர்களின் வலி, பசி போன்ற மென்மையான‌ உணர்வுகளை காலம் அவனுக்குப் பாடமாக‌ சொல்லிக் கொடுத்திருந்தது.

மிக மெதுவாக‌ இடம் பெயர்ந்த பச்சோந்தி, த‌ன் தலையைத் திருப்பி அவனை உற்றுப் பார்த்தது. திரும்பிய அந்தத் தலையின் கோணமும், அதன் சுழலும் இரண்டு கோலிக்குண்டு போன்ற கண்களும் அவனைப் பார்த்து நையாண்டி செய்வது போலவே இருந்தது.

அவனின் பார்வை பச்சைப் பசேல் என்றிருந்த அந்தத் தோட்டத்தை ஒரு முறை வட்டமிட்டது. அப்பா அம்மாவின் உழைப்பின் அடையாளம் அந்த ஐந்து ஏக்கர் தோட்டம் முழுவதும் பரவிக் கிடந்தது. மின் மோட்டார் உள்ள அந்தக் கிணற்றில் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பியிருக்கும்.

தோட்டத்துக் கிணற்றிலிருந்து சற்றுத் தள்ளிக் கட்டப்பட்டிருந்த மாடி வீடு அவன் அப்பா உள்ளூர் மேஸ்திரியை வைத்துக் கட்டியது. கீழே மட்டும் கட்டாமல், அப்பா மேலே மாடியிலும் ஒரு வீடு எதற்குக் கட்டினார் என்பது இன்று வரை ராஜேந்திரனுக்குப் புரியாத புதிராகவே இருந்த‌து.  ஒரு வேளை அவனுக்குக் கல்யாணம் முடிந்து குடும்பத்தோடு வந்து தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காக கட்டியிருக்கக் கூடும்.

நான்கு வருடங்களுக்கு முன்பு வேலுச்சாமி தன் மனைவி தேவானையோடு அவனைப் பார்க்க தோட்டத்துக்கு வந்த போது இப்படித்தான் பச்சோந்தியின் பார்வை போல‌ அவர் பார்வை இருந்தது. தலையைத் திருப்பாமல், விழிகளை மாத்திரம் இடது புறமும், வலது புறமும் திருப்பித் திருப்பி அவர் பார்த்தது அவனுக்கு வினோதமாகப்  பட்டது. அது அவரின் இயல்பு போலும் என்று ராஜேந்திரன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அம்மாவும், அப்பாவும் சொல்லி வைத்தாற்போல் ஆறு மாதத்துக்குள் ஒருவர் பின் ஒருவராக‌ மறைந்த பின், தோட்டத்தை என்ன செய்வது என்று யோசனையில் இருந்த போதுதான் வேலுச்சாமி தன் மனைவி தேவானையுடன் வந்திருந்தார்.

‘தம்பி… சொந்த ஊர் பொள்ளாச்சிங்க. என்னோட மூணு தங்கச்சிக்சிகளுக்கும் கல்யாணம் செய்து கொடுத்ததில் கொஞ்சம் கடன் ஆகிப்போச்சுங்க. இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும் வித்து கடனை அடைச்சிட்டு, பிழைப்புக்காக நம்ம ஊருக்கு வந்தமுங்க.  நானும் தேவானையும் இப்ப விவசாய‌ கூலி வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கறம்ங்க. பரம்பரையா விவசாயம் செய்து வந்தவங்க நாங்க. நீங்க டவுனில வேலையில இருக்கறதா சொன்னாங்க. உங்க நிலத்தை கந்தாயத்துக்கோ, குத்தகைக்கோ குடுத்தீங்கன்னா விவசாயம் செய்யலாமுன்னு தேவானை சொல்லுச்சுங்க. அதுக்குத்தான் கேட்டுட்டுப் போகலாம்னு வந்தமுங்க…’ என்றார் தயக்கத்துடன்.

அவரை நிமிர்ந்து பார்த்தான் ராஜேந்திரன். தோராயமாக அவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். உழைக்கும் உடல் என்பதை உருண்டு திரண்டிருந்த அவரது கைகளும் கால்களும் சொல்லியது. கை வைத்த பனியனும், மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியுமாக இருந்தார். தலையில் வெள்ளைத் துண்டை உருமாலாக்கி கட்டியிருந்தார்.

அவரது மனைவி தேவானை கிராமத்துப் பெண்களுக்கே உரித்தான‌ எட்டு முழப் புடவையை உடுத்தி, வெற்றிலை வாயுடன் கணவனுக்குப் பின்னால் மறைவாக நின்று கொண்டிருந்தாள்.  அவனின் அம்மா கட்டுவது போல‌ புடவையின் பின்புறம் கொசுவம் வைத்துப் புடவை கட்டியிருந்தார்.

கணவனை ஒட்டி நின்றுகொண்டிருந்த‌ தேவானை ஒவ்வொரு முறையும், கால் மாற்றி கால் மாற்றி நிற்கும்போது, அவரின் கொசுவம் இடது புறமும் வலது புறமும் ஊஞ்சலாடியது.

இந்த இடத்தில் ராஜேந்திரன் த‌ற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு போட்டித் தேர்வு எழுதியதன் மூலம் ஒரு வருடத்தில் அவனுக்கு அரசு வேலை கிடைத்து விட்டது.

அந்த ஒரு வருட இடைவெளியில் அப்பா அம்மாவுடன் சேர்ந்து முழுமையாக விவசாய வேலை பார்த்தபோதுதான் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தான் ராஜேந்திரன். உழைப்பின் விளைவை உணவு தானியமாக‌ கண் முன் பார்க்கும்போது ஏற்படும் நிறைவு அவன் மனதில் மகிழ்ச்சியையையும் திருப்தியையும் உண்டாக்கியது.

அவர்கள் நிலத்தில்  சுகாதாரமாக விளைந்த காய்கறிகளை சமைத்து உண்ட போது கிடைத்த திருப்தி அளவிட முடியாததாக இருந்தது. அப்போது அவன் எடுத்த முடிவுதான், எந்தக் காரணத்திற்காகவும் விவசாய பூமியையும், விவசாயத்தையும் விட்டு விடக்கூடாது என்பது.

‘நீங்க நாளைக்கு இதே நேரத்துக்கு வர்ரீங்களா.. விவரமா பேசிக்கலாம்..’ என்றான் ராஜேந்திரன் வேலுச்சாமியையும் தேவானையையும் பார்த்து.

‘சரிங்க தம்பி…. நாளைக்கு வர்றமுங்க‌ ‘ என்று பெரிதாக, பொள்ளாச்சிக்கே உரித்தான‌ ஒரு கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினார்கள் இருவரும்.

நேரில் பேசுவதைப் போலவே போனிலும் கத்திப் பேசினான் சுப்பிரமணி என்கிற மணி. ராஜேந்திரனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த உள்ளூர் கிராமத்து நண்பன். கல்லூரிக்குப் போக வசதி இல்லாததால் இப்போது விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

‘அட அவங்களா? பொள்ளாச்சியிலிருந்து நம்ம ஊருக்கு பொழைக்க வந்தவங்கடா… வந்து ரெண்டு வருச‌ம் ஆச்சு. இதுவரைக்கும் ஒண்ணும் குத்த‌ம் சொல்லும்படி அவங்க நடத்தை இல்ல. விவசாய வேலை எல்லாம் தெரிஞ்சவங்க ரெண்டு பேரும். அவ்வளவுதான் அவங்களைப் பத்தி எனக்குத் தெரியும். மற்றபடி உன் நிலத்தை குத்தகைக்கு விடுவதை நீதான் முடிவு செய்யணும்.  நா வேணுமின்னா பேசி விட‌ நேரில வரட்டா?’ என்றான்.

‘வேண்டாம்டா… நானே பாத்துக்கறேன்..’ என்றான் ராஜேந்திரன்.

‘இப்ப வித்தா கூட உன்னோட தோட்டம் நல்ல விலைக்குப் போகும். பேசாம வித்துட்டு வர்ற காசை வெச்சு டவுனில ராஜா மாதிரி இருக்கலாமேடா? உனக்கும் நாப்பது வயசாவுது. கல்யாணமும் பண்ணிக்கல.. இப்ப நீ சரின்னு சொன்னா கூட நாளைக்கே விக்கலாம். வாங்கறதுக்கு  ஆளுங்க ரெடியா இருக்கறாங்க. என்ன சொல்றே?’ என்றான் மணி படபடவென்று.

‘அந்தப் பேச்செல்லாம் வேண்டாம். வைடா போனை’ என்று ராஜேந்திரன் கடுகடுத்தவுடன்

‘நீதான் யார் பேச்சையும் கேக்க மாட்டயே…. சரி .. போனை..வைக்கிறேன்’  என்று முடித்தான் மணி.

அடுத்த நாள் சொல்லிய நேரத்திற்கு வந்தனர் வேலுச்சாமியும், தேவானையும். முதல் நாளை விட இருவரின் முகமும் பளிச்சென்று நம்பிக்கையோடு இருந்ததாகப் பட்டது ராஜேந்திரனுக்கு.

‘நான் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசுகிறேன். டவுனிலிருந்து மாசம் ஒரு முறை அல்லது இரண்டு மாசத்துக்கு ஒரு முறை வந்து, இரண்டு மூன்று நாட்கள் இங்கே தங்கிச் செல்வேன். மாடியை நான் உபயோகித்துக் கொள்கிறேன். கீழ் வீட்டில் நீங்கள் இருந்து கொள்ளலாம். வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம். அடுத்ததாக, நீங்கள் விவசாயம் செய்யத் தேவையான பொருட்களுக்கும், விதை மற்றும் உரம் போன்ற முதலீடுகளுக்காகவும் தேவையான தொகையை நானே முதலில் கொடுத்து விடுகிறேன். நெல்லோ, கடலையோ, கரும்போ விளைந்த பிறகு நீங்கள் எனக்குத் தர வேண்டிய குத்தகைப் பணம் கொடுத்தால் போதும். புரிஞ்சுதுங்களா?’ என்றான் ராஜேந்திரன்.

அவன் சலுகை கொடுக்கக் கொடுக்க‌ கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவரின் முகமும் மேலும் பிரகாசம் பெற்றன. இது அவர்களுக்குக் கொடுக்கும் சலுகை என நினைக்காமல், அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்கு, தான் உயிர்நீர் பாய்ச்சுவதாக நினைத்துக் கொண்டான் ராஜேந்திரன்.

‘ரொம்ப நன்றிங்க தம்பி… உங்க தோட்டத்தை எங்க தோட்டமாட்ட நல்லா பாத்துக்கறங்க..’ என்றார் வேலுச்சாமி பணிவுடன்.

முதன் முதலாக தேவானை பேசினார், ‘தம்பி…நீங்க இங்க தங்கியிருக்கிற எல்லா நாளும் நாந்தான் சாப்பாடு செய்து கொடுப்பேன்.  மறுக்கக்கூடாது’  என்றாள் உரிமையுடன்.

கொஞ்சம் யோசித்துவிட்டு சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜேந்திரன், ‘சரிங்க…’.

அடுத்த மூன்று மாதம் அலுவல் காரணமாக கிராமத்துக்கு வர முடியவில்லை ராஜேந்திரனுக்கு. வந்து பார்த்தபோது, தோட்டம் பார்ப்பதற்கு ரம்மியமாகவும், உயிரோட்டத்துடனும் இருந்தது. ஒரு புறம் மின்மோட்டார் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்க, கடலைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் வேலுச்சாமி.

தோட்டத்தில் ஏதோ காய் பறித்துக் கொண்டிருந்த தேவானை அவனைக் கண்டவுடன் வேகமாக வந்தவர், ‘வாங்க தம்பி… டீ போடட்டுங்களா இல்ல காபி போடட்டுங்களா?’ என்று வரவேற்றார்.

கொஞ்ச நேரத்தில் டீ சுடச்சுட அவனின் மாடி அறைக்கு வந்தது. டீயை ரசித்துக் குடித்துக் கொண்டே மாடியில் நின்று பார்த்தபோது அவனின் ஐந்து ஏக்கர் தோட்டம் பசுமை மண்டி பார்ப்பதற்கு நேர்த்தியாக இருந்தது. ஒருபுறம் இளம் பெண்களின் வழவழப்பான‌ மேனியைப் போல நெல் நாற்றுகள்  புடைத்தெழுந்து கொண்டிருந்தன.

தெற்குப் பகுதியில் இருந்த கடலைச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலுச்சாமியின் உருவம் இங்கிருந்த பார்க்க கொஞ்சம் சிறியதாகத் தெரிந்தது. கீழே தேவானை சமையல் செய்யும் ஒலி குக்கர் விசிலுடன் சேர்ந்து பாடல் போல் ஒலித்துக் கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்தச் சூழ்நிலை அவன் கற்பனையில் கண்டதைப் போலவே நிஜத்தில் இருப்பதைப் பார்க்க மனசுக்கு நிறைவாக இருந்தது.

கிளம்பும்போது வேலுச்சாமி தயக்கத்துடன் வந்தார்.  கையில் இருந்த ஒரு துண்டுச் சீட்டை அவனிடம் நீட்டினார். பென்சிலில் தமிழில் தப்புத் தப்பாக எழுதியிருந்த அந்த சீட்டில் ஏழாயிரம் ரூபாய்க்கான செலவுப் பட்டியல் இருந்தது.

‘என்னங்க இது?’ என்றான் ராஜேந்திரன் புரியாமல்.

‘தம்பி…மெயின் வாய்க்காலில் இருந்து நம்ம தோட்டத்துக்கு வர்ற வாய்க்கால் புல் மண்டி புதர் போலக் கிடந்தது. அதனால தண்ணி சரியா வர்லீங்க.. வாய்க்காலை ஆட்களை வைத்து புல் சீவி  சரி செய்ய செலவாச்சுங்க… அப்புறம் நம்ம தோட்டத்துக்கு நாலு புறமும் உள்ள முள்வேலி காய்ஞ்சு போய் விழுந்துவிட்டதால் வெளியிலிருந்து ஆடு மாடுகள் உள்ளே வர ஆரம்பிச்சுடுங்க.. புதிசா வேலி போட கொஞ்சம் செலவாச்சுங்க… அப்புறம் வரப்பெல்லாம் மண் சரிஞ்சு போய் நடக்க முடியாம கெடந்துச்சுங்க… அதைச் சரி செய்ய கொஞ்சம் செலவாச்சுங்க… செலவு கணக்கு விவரமா அந்த சீட்ல இருக்குதுங்க…’ என்றார்.

அவர் சொன்ன செலவுகள் எல்லாம் நியாயமானதாகவே இருந்தன.  இருந்தாலும் மனசு பொறுக்காமல் கேட்டான், ‘நாந்தான் எழுபதாயிரம் ரூபாய் குடுத்துட்டுப் போய் இருந்தேனே?’.

‘தம்பி நீங்க கொடுத்தது விதை நெல், விதைக்கடலை வாங்கவும், நாற்று நடவு கூலி, உழவுக்கு வந்த டிராக்டர் கூலி, உரம் வாங்க அப்படி இப்படின்னு எல்லாம் சரியாப் போச்சுங்க…’ என்றார் வேலுச்சாமி.

மனசில்லாமல் கையில் இருந்த காசில் ஏழாயிரம் ரூபாயை எண்ணிக் கொடுத்து விட்டு கிளம்பினான் ராஜேந்திரன்.

அலுவலகத்தில் தொடர்ந்து அதிக வேலை இருந்ததால், அடுத்தமுறை இரண்டு மாதம் கழித்துத்தான் கிராமத்துக்கு வர முடிந்தது அவனுக்கு. தோட்டத்தில் நெற்பயிர்கள் கதிர் விட்டு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன.

வேலுச்சாமியும், தேவானையும் மிளகாய்த் தோட்டத்தில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தனர். வழக்கம்போல‌  தோட்டத்து வேலியை ஒட்டி நான்கு புறமும் சுற்றி வந்தான் ராஜேந்திரன்.

போன முறை வந்த போது வேலியோரத்தில் நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள் சில இப்போது இல்லாமலிருந்தன. தெற்கு வேலிக்கருகில் வந்தபோது பக்கத்துத் தோட்டத்து லோகநாதன் வேலிக்கருகில் வந்து கிசுகிசுப்பாகச் சொன்னான்,

‘அண்ணா… உங்க தோட்டத்து வேலியில் முளைத்திருந்த நான்கு பெரிய வேப்ப மரங்களை உங்க ஆள் வேலுச்சாமி எட்டாயிரம் ரூபாய்க்கு மர வியாபாரிக்கு விற்றிருக்கிறார். உங்ககிட்ட சொன்னாரா?’.

கிராமத்தில் இது போன்ற போட்டுக் கொடுக்கும் வேலைகள் சகஜமாக நடக்கும் என்பது ராஜேந்திரனுக்கு தெரியும். அதுவும் பொது வேலி உள்ள பக்கத்துத் தோட்டம் என்றால் சொல்லவே வேண்டாம்.

விட்டுக்கொடுக்காமல் லோகநாதனுக்கு பதில் சொன்னான் ராஜேந்திரன், ‘ம்.. அதெல்ல்லாம் வந்த உடனே வேலுச்சாமி கணக்கு சொல்லிட்டார் லோகு’.

இந்த முறை கிளம்பும்போதும் கையில் ஒரு துண்டுப் பேப்பருடன் வந்தார் வேலுச்சாமி. பேப்பரில் இருந்த‌ பென்சில் கிறுக்கல் ஆறாயிரம் ரூபாய் என்று காண்பித்தது.

‘தம்பி…திடீர்னு மின்மோட்டார் தண்ணி எடுக்கலைங்க. அப்புறம் மெக்கானிக்கை கூட்டி வந்து மோட்டார் காயில் கட்டும்படி ஆயிட்டுதுங்க…..ஃபுட் வால்வ் வேற மாத்துச்சுங்க….’ என்றார்.

‘எங்கிட்ட போனில் சொல்லிட்டு செஞ்சிருக்கலாமே?’ என்றான் பொறுக்காமல். இதுவரை மரம் வெட்டிய கணக்கு சொல்லவில்லை என்பதும் அவன் மனதில் ஓடியது.

‘மோட்டார் பழுதானவுடன் பயிர் எல்லாம் தண்ணி இல்லாம வாடத் தொடங்கிருச்சுங்க தம்பி.. மெக்கானிக்கை பிடிக்கறதே பெரும் பாடா போச்சு..’ என்று பாட்டுப் பாடத் தொடங்கினார். இதற்கு மேல் விளக்கம் கேட்க அவனுக்குப் பொறுமை இல்லை. எந்தக் கேள்விக்கும் ஒரு பதில் வைத்திருப்பார் என்று தோன்றியது.

எதுவும் பேசாமல் ஆறாயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டுக் கிளம்பினான் ராஜேந்திரன். கடைசி வரை மரம் வெட்டிய கணக்கு வரவே இல்லை என்பது அவன் ஞாபகத்தில் வந்து போனது,

அடுத்த முறை ராஜேந்திரன் கிராமத்துக்கு வந்த‌ போது நெல் அறுவடை முடிந்து விட்டிருந்தது.  நிலக்கடலையும் பறிக்கப்பட்டு வியாபாரிக்குப் போட்டு பணமாக்கப் பட்டிருந்தது.

கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது அப்போதுதான் தெரிந்தது ராஜேந்திரனுக்கு. இந்த முறை தேவானையின் சமையலில் ருசி குறைந்திருந்தது அவன் நாக்குக்குத் தெரிந்தது. தேவானையின் கவனிப்பிலும் ஒரு அலட்சிய பாவம் உணர முடிந்தது. மாடியில் நின்று அடுத்த வேளாண்மைக்குத் தயாராய் இருந்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வேலுச்சாமி வந்தார்.

‘கிணற்றின் சுவர், படிக்கட்டு எல்லாம் இடிந்து விழுந்து இரண்டு ஆள் ஆழத்திற்கு கிணற்றுக்கு அடியில் சேற்று மண் சேர்ந்து விட்டதுங்க… சேறு ஃபுட்வால்வில் அடைத்துக் கொண்டதால், மோட்டார் தண்ணீர் எடுக்கலீங்க. கடைசில கிணற்றில சேறு எடுத்து படிக்கட்டு கட்ட நிறைய செலவாயிடுச்சுங்க..’ என்று பேப்பரை நீட்டினார்.

இந்த முறை துண்டுச் சீட்டு ஒன்பதாயிரம் கணக்குக் காட்டியது. பொறுமையை இழந்த ராஜேந்திரன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான், ‘அதெல்லாம் இருக்கட்டுங்க… இந்த வருட கந்தாயம் இன்னும் குடுக்கலியே நீங்க?’

‘இந்த வருடம் வரவுக்கும் செலவுக்கும் சரியாப் போச்சுங்க தம்பி. நெல்லுக்கும், கடலைக்கும் போட்ட முதலுக்கும், உழைச்ச உழைப்புக்குமே கட்டி வந்துச்சுங்க. நல்லா வெளஞ்சா மாத்திரம் கந்தாயம் குடுத்தாப் போதும்னு நீங்கதானே தம்பி சொன்னீங்க?’ என்று அவனை மடக்கினார்.

கந்தாயம் கொடுக்க முடியாது என்பதை நாசூக்காக மறுத்த அவரின் சாமர்த்தியம் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக அவருக்கு சலுகை கொடுத்ததற்காக‌ தன்னைத்தானே நொந்து கொண்டான்.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மெதுவாகக் கேட்டான், ‘வேப்ப மரம் எட்டாயிரம் ரூபாய்க்கு வித்து இருக்கிறீங்க. அந்தக் கணக்கு எனக்கு இதுவரை சொல்லவே இல்லையே ஏன்?’

‘தம்பி…உங்ககிட்ட யாரோ பொய் சொல்லி இருக்கறாங்க. மரத்து நிழல் வேளாண்மைக்கு இடைஞ்சலா இருந்தது. அதனால மரத்தை வெட்டச் சொன்னேன். வெட்டுக் கூலிக்கும், அதை எடுத்துச் செல்லும் வண்டி வாடகைக்கும் பணம் கொடுப்பதற்குப் பதிலாக இருந்த மரத்தை எடுத்துப் போகச் சொல்லி விட்டேன். அதற்கு பணம் ஒன்றும் வாங்கவில்லை… அவ்வளவுதான்’  என்றார் பிசிறில்லாமல்.

‘இதுவரை எண்பத்து மூணாயிரம் ரூபாய் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கந்தாயமும் நீங்க கொடுக்கல. இப்ப ஒன்பதாயிரம் ரூபாய் வேணுக்கறீங்க. நீங்க காட்டற கணக்கு நம்பற மாதிரியே இல்லை. நீங்க தோட்டம் போட ஆரம்பிச்சதில் இருந்து எனக்கு செலவுதாங்க… இது சரி வராது. நீங்க வீட்டையும், தோட்டத்தையும் காலி பண்ணிட்டு கிளம்புங்க… நா வேற ஆள் பார்த்துக்கறேன்’  என்றான் எரிச்சலுடன்.

‘அப்படியெல்லாம் நீங்க சொன்ன உடனே போக முடியாதுங்க… குடுக்கறதெல்லாம் குடுத்தாதான் போக முடியும்..’ என்று முணுமுணுத்துக் கொண்டே வேகமாக இறங்கிப் போனார் வேலுச்சாமி.

‘அந்த ஆளு கிணற்றில் சேறு எடுத்த கூலியைக் குடுத்தாத்தான் போவேன்கறாண்டா..’ என்றான் மணி மாடியில் ராஜேந்திரன் அறையில் சிகரெட்டை ஊதிக்கொண்டே. பஞ்சாயத்துப் பண்ண போன் பண்ணி வரச்சொல்லியிருந்தான் ராஜேந்திரன் அவனை.

‘போலீசில் சொல்லலாமா?’ என்றான் ராஜேந்திரன்.

‘சீச்சீ.. நீ ஒரு அரசாங்க ஊழியன். இவனுக்காகவெல்லாம் அந்த லெவலுக்கு இறங்க வேண்டாம். நாம கெளரவம் பாக்காம இந்த மாதிரி ஆட்களை கழட்டி விடுவதுதான் புத்திசாலித்தனம். பணத்தைக் கொடுத்து அனுப்பிடலாம்’  என்றான்.

சிரித்துக் கொண்டே மேலும் சொன்னான், ‘அந்த அம்மா புருசனை விட கில்லாடி. ஒன்பதாயிரம் ரூபாயோடு நீ சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மூவாயிரம் ரூபாயும் சேர்த்து பில் குடுத்திருக்குது..’.

அன்று மாலையே வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினர் வேலுச்சாமியும், தேவானையும். தேவானையின் கொசுவம் அவள் நடக்கும்போது அங்கும் இங்கும் அசைந்துகொண்டே செல்வதை மாடியிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான் ராஜேந்திரன்.

பக்கத்திலிருந்த வேப்ப மரத்தில் லேசான‌ அசைவு தெரிந்தது.  ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு பச்சோந்திகள் ஒரு கிளையில் ஊர்ந்து கொண்டிருந்தன.  இலைப் பகுதியில் இருக்கும்போது பச்சை நிறத்துக்கும், கிளைப்பகுதிக்கு வரும்போது மரக்கலருக்கும் அவை மாறியது ராஜேந்திரனுக்கு வியப்பூட்டியது. அந்தப் பச்சோந்திகளைப் பார்க்கும் போது வேலுச்சாமியும், தேவானையும் நினைவுக்கு வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

‘பாவம்டா குழந்தைவேலு…’ என்றான் மணி.

புரியாமல் அவனைப் பார்த்த ராஜேந்திரனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் ‘நம்ம ஊரு குழந்தைவேலு வீட்டுக்குத்தான் குடி போறாங்க ரெண்டு பேரும். வீட்டைக் காலி செய்யும்போது எவ்வளவு பணம் கேட்பாங்களோ அவன்கிட்ட…’ சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தான்.

அவன் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு வேப்ப மரத்தில் உட்கார்ந்திருந்த குருவிகள் படபடவென சிறகடித்துப் பறந்தன.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விறலியர் நடனம் (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 6) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை