in

பாட்டிமார் இல்லம் (சிறுகதை) – ✍ சுதா. மு

பாட்டிமார் இல்லம்

#ads – Amazon Great Indian Festival Deals 👇


மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

வளைந்து நெளிந்து கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பாதையின் இரு மருங்கிலும் பச்சைப் பசேலென காடுகள். அங்கே, மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருக்கும் மந்திகள். பேருந்து மேலே செல்லச் செல்ல, இதமாக வீசும் காற்று

“இறங்கறவங்க இறங்கலாம், வண்டி இங்க பத்து நிமிஷம் நிக்கும்” என்று கூறிக் கொண்டே, பேருந்திலிருந்து இறங்கிய கண்டக்டர், அருகிலிருந்த பெட்டிக் கடைக்குச் சென்றார்

“பாட்டி உச்சா வருது இங்க இறங்கலாமா” என ராமு கேட்க, அம்புஜம் பாட்டி மெதுவாக எழுந்து ராமுவின் கையைப் பிடித்து பேருந்திலிருந்து இறங்கினாள்

பெட்டிக் கடையிலிருந்து சிறிது தூரம் தள்ளிப் போய், “இங்க உச்சா இருடா” எனவும் 

“பாட்டி நானு இங்ஙன இப்படி நின்னுக்குறேன், பஸ்ஸுல இருந்து யாராவது பாக்காங்களானு நீ திரும்பிப் பாரு” என்று கூறிக் கொண்டே அந்தப் பக்கமாகத் திரும்பினான் 

பின் இருவரும் கடைப் பக்கம் வந்ததும், கம்மங்கூழின் வாசனை அவனது நாவில் எச்சில் ஊறச்செய்ய, பாட்டியின் கையை இறுகப் பிடித்து நிறுத்தினான் ராமு 

தன் பேரனின் மனதறிந்து, தன் சுருக்குப் பையிலிருந்த பத்து ரூபாயினை எடுத்து கடைக்காரனிடம் நீட்டினாள் பாட்டி. ராமுவின் வயிறு நிரம்பியது 

இருவரும் பேருந்தில் ஏறி தங்கள் இருக்கையில் அமர, மீண்டும் சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. காற்றின் தாலாட்டில் உறங்கிப் போனாள்  பாட்டி

வண்டி கிளம்பிய சற்று நேரத்தில், ராமுவுக்கு குடலைப் புரட்டுவது போல் இருக்க,  பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டான்.

“கடவுளே, டவுன்ல இறங்கியதும் அப்பா நிக்கனும்” என்று வேண்டிக் கொண்டே உறங்கிப் போனான்

திடீரென பாட்டி தட்டியெழுப்ப, தன்னுடைய ஊருக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்த ராமு, சட்டென்று எழுந்தான்

பேருந்திலிருந்து இறங்கியதும், ராமுவின் கண்கள் சுற்றும் முற்றும் பார்வையை வீசியது.

“அப்பாவ காணோமே பாட்டி, இங்ஙன தான நிக்கேனு சொல்லிச்சி” என்ற அவனது வார்த்தைகள், ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத் தெரிந்தது.

திடீரென அவனது முகம் ஆயிரம் விளக்குகள் ஒன்றாக எரிந்தது போல பிரகாசமானது. ஓடிச் சென்று தன் தந்தையை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான்

ஒரு வாரம் தன் தந்தையைப் பிரிந்த மகனுக்கு, ஒரு மாதம் பிரிந்து இருந்தது போன்ற ஏக்கமாகத் தெரிந்தது

அம்மாவின் கைகளிலிருந்த பையினை வாங்கிக் கொண்டு, “சாப்புட்டியாம்மா… அக்கா வீட்ல எல்லோரு நல்லா இருக்காங்களா?” என பெற்றவளிடம் கேள்வியை எழுப்பினார் ராமுவை பெற்ற தந்தை 

“நல்லா இருக்காங்கய்யா?” என அம்புஜம் பாட்டி கூற 

“வாம்மா கடையில ஏதாவது சாப்புட்டு போகலாம்” என்றான் மகன் 

“என்னய்யா அஞ்சு மணிக்கே சாப்பிட்டு என்ன செய்யப் போறேன், வீட்டுல போயி சாப்பிட்டுக்கிறேன்” என தாய் மறுக்க 

“அதுக்கில்லம்மா… வீட்டுக்குப் போனா… என் பொண்டாட்டியப் பத்தி தான் தெரியும்மேம்மா…” என்றவன் கூறியதும், மூவரும் உணவகத்திற்குள் நுழைந்தனர். மாலை நேரம் என்பதால் பரோட்டாவைத் தவிர வேறு உணவு இருக்கவில்லை 

ராமுவுக்கு மட்டும் பரோட்டா வாங்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் இருவரும் ஆளுக்கொரு டீயும் போண்டாவும் உண்டனர். அப்படியே வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொண்டு, டெம்போவில் ஏறி வீடு சென்றனர்

வீட்டிற்குள் நுழைந்ததும், “வாடா என் செல்லக்குட்டி” என்று அணைத்தபடியே, “ஒரு வாரத்துல எம்புள்ள ரொம்ப எளச்சு போயிட்டான், உங்கத்த வீட்ல உனக்கு சோறு குடுத்தாங்களாடா? பட்டினியாக் கெடந்த மாதிரில வந்திருக்கான்… இதுக்குத் தான் எம்புள்ளய எங்கயும் அனுப்ப மாட்டேனு சொன்னேன். இந்த வீட்டுல என் பேச்ச யாராவது கேட்டாத் தான. அம்மா பாத்துக்கிருவா, ஆட்டுக்குட்டி பாத்துக்கிருவானு சொல்லி அனுப்பி வச்ச” என ராமுவின் அன்னை மல்லிகா, வழக்கம் போல கத்தத் தொடங்கினாள்

அவளுக்கு சண்டை போட ஏதாவது காரணம் கிடைத்தால் போதும், நாள் முழுதும் பேசிக் கொண்டே இருப்பாள் 

“அம்மா அத்த என்னிய நல்லா தான் பாத்துக்கிருச்சி” என்று சொல்லிக் கொண்டே பையிலிருந்த விளையாட்டுப் பொருட்களை வெளியே எடுத்து வைத்தான் ராமு 

காய்கறிப் பையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் போன மல்லிகா, “என்ன அத்த, உங்க புள்ள கறி கிறி ஒண்ணும் வாங்கலையா?” என்று கேட்டாள்

“ஆமா, வாங்கியாந்தா மட்டும் எங்கம்மாவுக்கு வச்சி குடுக்குற மாதிரி தான் கேப்பா” என வாய்க்குள்ளேயே முனகினான் ராமுவின் தந்தை இராஜேந்திரன்

மல்லிகா எந்த பதிலையும் எதிர்பார்த்து கேள்வி கேட்கவில்லை என்பது அம்புஜம் அறிந்தது தான். ஆகவே, காதில் வாங்காதது போலவே இருந்தாள்

“எந்திரிச்சதுல இருந்து வேலையே இன்னும் தீரல அத்த. வீட்ல எரிக்க விறகு இல்லைனு விறகுக்கு போயிட்டேன். தல கனமா இருக்குது அத்த, உடம்பெல்லாம் வலி. உங்க கையால கசாயம் வச்சி குடுத்தீங்கன்னா நல்லாருக்கும்…” என்று இழுத்தாள்.  

மல்லிகாவிற்குத் திருமணமாகி எட்டு வருடங்களாகி விட்டது. அவளது ஒவ்வொரு சொல்லுக்கான அர்த்தமும் நன்கு புரிந்து கொண்டவள் அம்புஜம்

கடந்த ஏழு வருடங்களாகவே சம்பளமில்லாத வேலையாளாகத் தான் அந்த வீட்டில் நடத்தப்பட்டு வந்தாள் அம்புஜம். வீட்டு வேலை செய்வது, பேரப்பிள்ளையை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, பின் மாலை மீண்டும் அவனை வீட்டுக்கு அழைத்து வருவது என அனைத்து வேலைகளையும் அம்புஜம் தான் செய்தாக வேண்டும்.

கசாயம் போடுவதற்காக சமையலறைக்குள் நுழைய, அங்கு பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படாமல் ஆங்காங்கே கிடைக்கக் கண்டாள். குடங்களில் தண்ணீரில்லை

அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு, கசாயத்தை தன் மருமகள் கையில் கொண்டு போய் கொடுத்தாள். ஒரு கையில் டி.வி.ரிமோட் மற்றொரு கையில் கசாயம் வைத்த டம்ளருடன் மெத்தை இருக்கையில் சாய்ந்தாள் மல்லிகா. மீண்டும் சமயலறைக்குள் நுழைந்தாள் அம்புஜம்

மகள் வீட்டில் நீண்ட நாட்கள் தங்கியிருப்பதை விரும்பாதவள். என்ன தான் துன்பங்களும் துயரங்களும் இருந்தாலும், மகன் வீட்டிலேயே உயிர் போக வேண்டும் என்று நினைப்பவள் அம்புஜம்.

மகனுக்கும் தன் தாய் மீது பாசம் அதிகம் தான். மனைவியை எதிர்த்துப் பேச முடியாமல் மௌனம் காப்பவன், மனைவிக்குத் தெரியாமல் பெற்றவளுக்கு உதவி செய்வான்

ஒரு சில நாட்கள் மது அருந்தி விட்டு அம்மாவுக்காகத் தன் மனைவியிடம் சண்டை போடுவான்.

அம்புஜம் எவ்வளவு தான் வேலை செய்தாலும், ஒரு வேளை சாப்பாடு மட்டும் தான். அதிலும் சில நாட்கள் பழைய கஞ்சி தான் கொடுப்பாள் மருமகள். தேநீர் மட்டும் அடிக்கடி குடித்துக் கொள்வாள்

சர்க்கரை தீர்ந்து போகிறது என்று மல்லிகா சண்டை பிடித்ததிலிருந்து, சர்க்கரை போட்டு தேநீர் அருந்துவதையும் குறைத்துக் கொண்டாள். வெற்றிலை பாக்கு அவளுக்கு உணவு போலாயிற்று.

“நம்ம பய வாழ்க்கையே இவ கையில சிக்கி படணும்னு தான் விதிச்சிருக்கு போல” என்று எண்ணி அடிக்கடி கவலைப்பட்டுக் கொள்வாள்.

ஊரிலிருந்து வந்ததிலிருந்தே அம்புஜத்திற்கு இருமல் அதிகமாக இருந்தது. இரவில் இருமல் இன்னும் அதிகரிக்க, அம்புஜத்திற்குப் பல இரவுகளும் உறக்கமற்ற இரவாகவே இருந்தது

அவளது இருமல் சத்தம் மல்லிகாவுக்கு எரிச்சலை ஏற்படுத்த, “இந்த கெழவிய கொண்டு போய் எங்கயாவது உட்டுட்டு வாங்க, சனியன் செத்துத் தொலையவும் மாட்டேங்குது. இதால ராத்திரியெல்லாம் தூங்கந்தான் கெடுது. எப்பப்பாரு லொக்கு…லொக்கு…னுட்டு” என்று புலம்பிக் கொண்டே திரிந்தாள் 

இவளது புலம்பல் தாங்காத இராஜேந்திரன், பெற்றவளுக்கு மருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். என்ன தான் மருந்து குடித்தாலும், இருமல் குறைந்தபாடில்லை. இருப்பினும் வீட்டு வேலைக்கு ஒன்றும் குறைவில்லை.

தன் மாமியாருக்கு வேறு ஏதேனும் நோய் வந்திருக்கக் கூடுமோ என்ற ஐயத்தில், தன் பிள்ளையை அம்புஜத்திடம் சேர விடாமல் தடுத்தாள் மல்லிகா. ராமுவை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேலையைத் தானே செய்யத் தொடங்கினாள்.

அம்புஜத்திற்கு வேறு ஏதேனும் பெரிய வியாதி இருந்தால் அவ்வளவு செலவையும் நாமே செய்ய வேண்டி வருமே என்றெண்ணியவள், தன் கணவனிடம் “உங்க அம்மாவ கொஞ்ச நாளைக்கு உங்க அக்கா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு வாங்க” என்று அடிக்கடி தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள்

மல்லிகாவால் தன் அம்மாவுக்கு வேறு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்றெண்ணியவன், அம்மாவின் துணிகளையெல்லாம் அள்ளி பெட்டியில் வைத்தான்

ஊரிலிருந்து காலையில் கிளம்பும் முதல் பேருந்தில் தன் அம்மாவை கூட்டிக் கொண்டு போனான். இரவு தன் அப்பா வரும் வரை உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ராமு.

அப்பாவை பார்த்ததும், “பாட்டி எங்கப்பா? அத்த வீட்ல உட்டுட்டு வந்துட்டியா?” என பிள்ளை கேட்க

“இல்லப்பா… உங்க பாட்டி மாதிரியே நிறைய பாட்டிமார் இருக்கிற இடத்துல உட்டுட்டுட்டு வந்துட்டேன்” என்றவனின் குரல், இயலாமையில் விம்மியது 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. ஒரு சில வீட்டில் மாமியார் மருமகளுக்கிடையே நடக்கும் எதார்த்தமான கதை. மருமகள்கள் மாமியாரை மாமியாரப்பார்க்காமல் வேற்று மனிதர்களாக சம்பளம் இல்லாத வேலைக்காரிகளாக, தொல்லைகளாக பார்ப்பதால்தான். முதியோர் இல்லம் அதிகரித்துக்கொண்டு வருகிறது நம் நாட்டில். கதாசாசிரியர் க்கு வாழ்த்துக்கள்

பள்ளி மாணவன் அருள் பாலகிருஷ்ணன் வரைந்த ஓவியங்கள்

முதியோர் தினம்  (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து