மாதப் போட்டிக்கான பதிவு – நவம்பர் 2021
புதையல் எனும் வார்த்தை சொன்னவுடன், நினைவில் வரும் எழுத்தாளர் இந்திரா சொந்தர்ராஜனாகத் தான் இருக்க முடியும். இவருடைய புத்தகங்கள் உண்மையில் விசித்திரமானவை. சமூகக் கதையே ஆனாலும், அதில் ஒரு வரலாற்றுச் செய்தி இல்லாமல் இருக்காது
வைரமுத்துவின் எழுத்துக்களில் பெரும்பாலும் சங்க இலக்கியங்களின் சுவையை உணர முடியும். அது போலவே, இவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் சித்தாந்தத்தை தொட்டபடியே அமைத்திருக்கும். நா.பார்த்தசாரதியின் “மணிபல்லவம்” இளங்குமரனோடு, வாழ்க்கையின் பல நிதர்சனங்களை நிதானமாய் பயின்றேன்.
என் மனம், விறுவிறுப்பான மற்றும் அங்கங்கு கருத்துச் சுவை மிக்க நூல்களைத் தேடியது. அந்தத் தேடுதலுக்கு விடுதலை கொடுத்து, என்னை அவரின் படைப்புகளின் பேரில் சிறையில் அடைத்தார் இந்திரா சொந்தர்ராஜன்.
இவரின் படைப்புகளுக்கு முன்பு, இவரின் பெயர் மீதே எனக்கு ஓர் ஈர்ப்பு. எங்கு அந்தப் பெயரைப் பார்த்தாலும், நான்கைந்து முறை சொல்லிப் பார்ப்பேன். அடுத்து அவரின் மந்திர வாசல், நாயக்கர் மாளிகை, சொர்ண ரகசியம், தேடாதே தொலைந்து போவாய், அது மட்டும் ரகசியம் போன்ற புத்தகங்களின் தலைப்பில் எனக்கு அலாதி ஈர்ப்பு. இந்தத் தலைப்பை அவர் எவ்வாறு கதைக்கு ஒப்பிட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ளவே படிப்பேன்.
மெல்ல மெல்ல கதையின் கருவில் தொலைவேன். பின்பு, கதாப்பாத்திரங்களில் தொலைவேன். அனைத்திலும் மேலாக, அவரின் அனைத்து நூலிலும், குறைந்தபட்சம் ஒரு கதாபாத்திரமாவது திருநெல்வேலி பாஷையைத் தன் பேச்சு நடையாய் கொண்டிருக்கும். அந்தப் பாத்திரமே நிச்சயம் முத்திரைக்குரியதாக இருக்கும்.
“சொர்ண ரகசியம்” வாயிலாக நிறைய சித்தர்களின் வரலாற்றையும், அவர்கள் வாழ்வில் எந்த நிலையில் எல்லாவற்றையும் துறந்தார்கள் என்பதையும் ஆழமாய் தெரிந்து கொண்டேன்.
சதுரகிரி மலையைப் பற்றி கேள்வியுற்றிருக்கிறேனே தவிர, இவரின் இந்தப் புத்தகம் படித்த பிறகு, அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் என் நெஞ்சத்தில் எழுந்து விட்டது.
அருணகிரிநாதர் கிளியாய் உருமாறி பாரிஜாத மலரைக் கொண்டு வரச் சென்றார் என்பதும், அவர் திரும்பும் முன் அவரின் உடல் எரிக்கப்பட்டு விட்டது என்பதும் நமக்குத் தெரியும்.
எப்படி கிளியாக உருமாற முடியும் என்பது பற்றியும் அட்டமா சித்திகளில் அதுவும் ஒன்று என்பதையும் மிக அழகாக சொர்ண ரகசியத்தில் கூறியிருப்பார் எழுத்தாளர். அட்டமா சித்திகளில் ஒவ்வொரு சக்திக்கும் விளக்கமும், அது இலக்கியங்களில் எந்த கதாப்பாத்திரத்தால் பயன்படுத்தப் பட்டிருக்கிறதென்றும் விரிவாக எழுதியுள்ளார்.
இதையெல்லாம் படிக்கையில் என் கண்கள் வியப்புக் குறியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்று விடும்.
சதுரகிரி என்பது, நான்கு வேதங்களே மலையாக எழும்பியுள்ள இடமாம். மேலும், அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி பர்வத்தின் சில பாகங்கள் இந்த மலையில் சிதறிவிட்டதால், நுட்ப தாவரங்களும் இங்கு அதிகம். அங்குள்ள சித்தர்களின் முன்பு நாம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச முடியாது.
கதையும் சரி கருத்தும் சரி “அட்றா சக்க” என்பது போல ஒவ்வொரு நாளும் புதிரொடு முடித்து, புதிரொடு தொடங்கும் விதத்தை அவரால் மட்டும் தான் ஈடு கட்ட முடியும்.
“தேடாதே தொலைந்து போவாய்” என்பது இவருடைய சமூக நாவலில் ஒன்றாகும். கதையின் முதலில் பாத்திரங்கள் தொடர்பற்று இருந்தாலும், மெல்ல மெல்ல அதை ஒன்று சேர்த்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
முக்கியமாக, ஒரு பெண்ணுக்கு நிச்சயமான பிறகு, சம்பந்தம் செய்த வீட்டில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால், அந்த நிகழ்வின் விளைவை அந்தப் பெண் தான் அனுபவிக்கிறாள்.
பெண்ணுக்கு குறை ஏதும் இருந்தால், அவளை ஏற்றுக் கொள்ள வரும் ஆடவன், அவளைப் பரிதாபமாகவே காண்கிறான். இது போன்று, பெண்களுக்கு எதிரான சில சமூக செய்திகள் பற்றி ஆதங்கமாகக் கூறியுள்ளார் இந்திரா.
என்னைப் பாதித்த சில புத்தகளின் பட்டியலில் இவரின் மந்திர வாசலும் சொர்ண ரகசியமும் இடம் பிடித்து விட்டன. இந்த இரு நூல்களுக்குப் பிறகு, எல்லா ஞானத்தையும் போல் ஜோதிட ஞானமும் அவசியம் என்று தெரிந்து கொண்டேன்.
எல்லோரும் நினைக்கலாம், ‘நம் வாழ்வே முற்பிறவி பயன் தானே’ என்று. அந்த முற்பிறவி பயனை முன்பே ஒரு ஊகமாக அறிந்து கொள்ள உதவுவது தான் ஜோதிடம்.
இந்தக் காலத்தில் படிப்பு எங்கும் கிடைக்கும் ஒன்றாகி விட்டது. ஆனால், இன்றைக்கும் சித்தர் பெருமக்கள் பற்றியும் மந்திரம் ஜோதிடம் பற்றியும் ஞானம் உள்ளவர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். காரணம், இதைக் கற்றுக் கொள்ளவே பிராப்தம் வேண்டும் என்கிறார்கள்.
இவரின் படைப்புகளில் ஒவ்வொன்றைப் படித்த பிறகும், நான் என்னை ஒரு கதாபாத்திரமாக சித்தரித்துக் கொள்ள முயற்சி செய்வேன். சில சித்தர்கள் குறிப்புள்ள நூல்கள் படித்த பிறகு, அவர்களைப் பார்க்க ஆர்வம் கொண்டுள்ளேன்.
அவர் நந்திபுரத்தில் அழகான ஓர் எடுத்துகாட்டு சொல்லியிருப்பார். சாதரண மனிதர்களான நாம், மனதில் நிமிடத்திற்கு ஒன்று நினைத்துக் கொண்டே இருப்போம். மாறி மாறி நினைவலைகள் வந்து போய் கொண்டே இருக்கும் நம் மனம் எனும் கண்ணாடியால் பிறர் நினைப்பதை அவ்வளவு சீக்கிரம் யூகிக்க முடியாது.
காரணம், நம் மனக்கண்ணாடி தெளிவாக இருந்தால் தானே அதன் வழியாக, விழும் பிம்பத்தைத் தெளிவாகக் காண முடியும்.
சித்தர்கள் வரையில் இது சாத்தியம். மனதை ஏதாவது ஒரு வகையில் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் அமர்ந்து விடுகிறார்கள். அவர்கள் மனம் தெளிவான கண்ணாடி போல் இருப்பதால், எதிரில் நிற்கும் மனிதன் என்ன நினைத்தாலும் அதை யூகித்து விடுகிறார்கள். மனதை அடக்கினால், எதை வேண்டுமானாலும் வசம் பெறலாம் என்பதே நித்ய உண்மை.
கோடிக்கணக்கான உயிரணுக்களை ஒன்றாகச் சேர்த்து, அதற்கு மையமாக இதயம் கொண்டு ரத்தம், சதை, எலும்பு எனப் பெரும் பிரம்மாண்டமாக நாம் பிறப்பெடுக்கிறோம். இது ஓர் அதிசயம் தான். அதே சமயம், இது உண்மை மட்டுமல்ல நிதர்சனமும் கூட.
ஒரு மனிதன் எப்படி பிறப்பெடுக்கிறானோ, அதற்கு நேரெதிராக, அதாவது ஒரு சின்ன அணுவைப் போல அவன் மாற முடியும். (அணிமா-அட்டமா சித்திகளில் ஒன்று) இதுவும் உண்மை.
எப்படியெனில், சித்தன் என்பவன் இந்த அட்டமா சக்திகளைத் தன்னுள் அடக்கியவனாகிறான். சித்தர்களும் சாதரண மனிதனாக இருந்து தன் நிலையை உயர்த்திக் கொண்டவர்கள் தான்.
அவர்கள் பின் பற்றிய ஒரு சில விஷயங்களான தியானம், அமைதியாக இருத்தல் போன்றவற்றை சிறிதேனும் கற்றுக் கொண்டால் மனித குலம் கோவம், பொறாமை அற்று நிம்மதியாக வாழலாம்.
ஒருவன் பிறக்கும் போதே இறப்பு நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் இறப்பைக் காண்கையில், நம் மனம் நம்மையும் அறியாமல் “நான் சாஸ்வதம்” என்ற மாயையை எடுத்துரைக்க மறப்பதில்லை.
இவரின் புத்தக புதையலில் நான் கண்டெடுத்த செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்வு. நாம் சாஸ்வதமில்லை என்றாலும், நம் செயலுக்கு சாஸ்வதத் தன்மை உண்டு.
எப்படியெனில், திருவள்ளுவர் இல்லை ஆனால், திருக்குறள் படிக்கும் போதெல்லாம் அவரை நாம் நினைக்காமலா இருக்கிறோம்?
என் வரையில், நாம் இனி புதிது புதிதாக கற்றுக் கொள்வோம். அதில் வெற்றி கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து பயணிப்போம். அந்தத் தொடர்வையே அடுத்த தலைமுறைக்குத் தொடக்கமாய் தருவோம்….! அவர்களின் மரபணுக்களில் இருப்பதும் நாம் தானே…!
என்றும் நூல் நண்பியாய்,
நான் செந்தமிழ் சுஷ்மிதா
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
ஒவ்வொரு புத்தகமும் புதையல் என்பது நிதர்சனம்.தோழி..அருமையாக சொன்னீர்கள்.தாங்கள் கூறியதில்..எனக்கு பல உபயோகமாக உள்ளது.தாங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் அருமையான புத்தகங்கள்.அதில் சில நான் வசிக்கவில்லை.அவைகளை இனி வாசிக்க தூண்டிய தங்கள் கருத்து சிறப்பு..