in

ஒரு ஊரில் ஒரு நிலவரசி (சிறுவர் நாவல் – பகுதி 2) – ✍ சியாமளா கோபு

ஜூலை 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

“தாயே எனக்கும் ஒரு குழந்தையைக் கொடுக்க வேண்டும்” என்று மண்ணில் விழுந்து அழுது புரண்டாள் பலாசுரனின் இரண்டாவது மனைவி மதிவதனா. அவளுடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்த காளி அவளுக்கும் சிறியதான ஒரு  தங்கப்புஷ்பத்தைக் கொடுத்தது. அவளும் அதை தங்கத்துடன் உருக்கி தேனுடன் கலந்து ஒரு மண்டலம் உண்பதற்கு தயார் செய்து தருவதற்காக ஒரு சேடிப்பெண்ணை பணிக்கு அமர்த்தியிருந்தாள்.

அந்த சேடியை ஆசைக்காட்டி தங்கப்புஷ்பத்தை களவாடி கொண்டு வந்து கொடுக்க வைத்தாள் ரேணுகா. அதையும் சேர்த்து தானே உண்டதனால் ரேனுகாவிற்கு பிறந்த மகாசுரன் ரெண்டத்தனை பலவானாகப் பிறந்தான். அந்த தங்கப்புஷ்பத்திற்குப் பதில் வேறு ஒரு தங்கபுஷ்பத்தை தயார் செய்து கொடுத்தாள். அதை சேடி மதிவதனாவிற்கு கொடுத்து வந்தாள். அவளுக்கும் ஒரு ஆண் குழந்தைப் பிறந்து பகாசுரன் என்ற பெயரில் வளர்ந்து வந்தது.

வானத்துக்கும் பூமிக்குமாக உயரத்துடன், அரை பூமிப்பந்தின் அளவிற்கு பெருத்த தேகமாகவும், கலங்கரை விளக்கின் பிரகாசமான ஒற்றை விளக்கைப் போன்ற நெற்றியின் கீழே எரிகின்ற ஒற்றைக் கண்ணையும், யானைத் தந்தங்களைப் போன்ற ஒவ்வொரு பல்லும், ரத்தத்தைப்போன்றுசெக்க சிவந்த கண்களும் உறுத்து விழிக்கும் பார்வையாகவும், ஒவ்வொரு கையும் காலும் ஒரு யானை அளவிற்கு பருத்தும்பலமாகவும் இருந்த அந்த மகாசுரனை காண்போர் யாராயிருந்தாலும் பயப்ப்படும்படியான தோற்றத்தில் அசுரனாகவே வளர்ந்தான்.

வளரும் காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியினால் மிகுந்த பெருத்த தேகத்தை கொண்டவனாதலால் அவனுடைய பிறப்பிடம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே தன்னுடைய சுரனாட்டுடன் சேர்த்து மீத ஆறு மலைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான். அங்கே வசித்துக் கொண்டிருந்த பூர்வக்குடிகளை தன்னுடைய பலத்த பராக்கிரமம் மிகுந்த ஆகிருதியால் பயமுறுத்தி துரத்தி விட்டான். அது இந்திரனாக இருந்தாலும் சரி, ஏன் அந்த யமதர்மனாகவே இருந்தாலும் சரி தான்.

தன்னுடைய உழைப்பில் உண்ணாமல் அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி உண்பவர்கள் சுயநலம் கொண்டவர்களாகவும் சோம்பேறித்தனத்தில் ஊறியவர்களுமாகத் தானே இருப்பார்கள்! அதுபோல மகாசுரனும் பருத்த தன் தேகத்தை தூக்கி உழைத்திட சோம்பேறித்தனம் கொண்டவனாக ஆனால் மற்றவர்களை விட அதிகளவில் உண்பவனாக இருக்கவே அடுத்தவரை பயமுறுத்தி அடித்து பிடுங்கி உண்டு அரக்கத்தனத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஊர் மக்கள் விளைவிக்கும் பயிர்களையும் காட்டில் வாழும் மிருகஜீவனகளையும் தின்று முடித்தவனுக்கு  இனி மேல் தின்பதற்கு ஒன்றுமில்லாமல் போனது.

மலைகளின் உச்சியில்படுத்தே கிடக்கும் மகாசுரனால் எழுந்து போய் தனக்குத் தேவையான உணவை தேடி உண்பது இயலாது. அதனால் அந்த பக்கம் வருவோர்போவோரிடம் மிரட்டி எதையாவது வாங்கி உண்பான்.

“சும்மா கிடந்த கோழிக்கு தீனியைப் போடுவானேன். தீனியை தின்னுப்புட்டு கோழி கொண்டையை ஆட்டிக்கிட்டு நம்மை கொத்த வருவானேன்” என்பதைப் போல தனக்கு படியளந்தவர்களையே பிடித்து தின்னத்தொடங்கவும் அந்த பக்கமாக யாரும் வருவதோ போவதோ இல்லை. ஆள் நடமாட்டமற்று போயிற்று அந்த பிரதேசம்.

எனவே தினமும் அதிகாலையில் வானத்தில் கிழக்கே உதித்து நாள் முழுவதும் தன் பாதையில் நகர்ந்து மாலையில் மறைவதற்கென்றுமேற்கே வரும் அந்த சூரியப்பந்தை லபக்கென்று ஒற்றைக் கையால் பிடித்து லாவகாமாக உண்டு விடுவது அவன் வழக்கம். ஒரு முழு சூரியனை ஒரே வாயில் உண்டு, அந்த உண்டமயக்கத்தில் நாள் முழுவதும் படுத்தே கிடப்பது அவனுக்கு வாடிக்கையாகிப் போனது.

சூரியக் குஞ்சுகளை உண்டு வந்ததினால் சூரிய பகவான் கோபமுற்று அவன் தலைக்கு மேலே வந்து நின்று அவனை ஒரு உக்கிரப்பார்வைப் பார்த்தார். ஆனால் தன் ஒரு கையினால் சூரியனை மறைத்து விட்டான் மகாசுரன். சூரிய பகவானும் நின்று பார்த்து விட்டு இவன் கொஞ்சம் கூட அசையாமல் படுத்துக் கிடக்கிறானே, இவனை நம்மால் ஒன்றும் செய்திட இயலவில்லையே என்று கவலையுற்றவராக தன் தேரில் ஏறி சூரிய உலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே வந்த அக்கினி பகவான் “என்ன சூரியனாரே, எங்கே இவ்வளவு சோகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

“என்னெவென்று சொல்வேன் அக்கினியாரே?” நீண்ட பெருமூச்சு விட்டார் சூரியனார்.

“இவ்வளவு சோர்வாக ஒருபோதும் உம்மை நான் பார்த்ததேயில்லையே!” வியப்புடன் கேட்டார்.

“ஆம். எல்லாம் இந்த மகாசுரனால் வந்தது”

“யார், அதோ அந்த மலையின் மீது எந்நேரமும் படுத்துக் கிடக்கிறானே அவனா?”

“ஆம்.”

“அடடா, என்ன செய்தான் அவன் உம்மை?”

“தினந்தோறும் என் குழந்தைகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து இந்த பூமிப்பந்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது”

“அது தான் தெரிந்த விஷயமாயிற்றே. நீர் இல்லாவிட்டால் இந்த பூமியில் ஒரு புல்லு பூண்டு முளைக்குமா? அல்லது முளைத்தாலும் பிழைக்குமா?”

“ஆனால் தினம் என் குழந்தைகளை அந்த மகாசுரன் ஒரே வாயில் லபக்கென்று தின்று விடுகிறானே”

“அட, இதென்ன அநியாயமாக இருக்கு”

“அதைக் கேட்கப் போனேன். அவன் எதையாவது சட்டை பண்ணினால் தானே”

உடனே அக்கினியார் கோபம் கொண்டார். ”என்ன திமிரு அந்த மகாசுரனுக்கு. இரும். நான் போய் அவனை என்னவென்று கேட்கிறேன்” சொன்ன வேகத்தில் விரைந்தார் அந்த மலையை நோக்கி. தன்னுடைய படை பரிவாரங்களுடன்.

“ஏய் மகாசுரா, எத்தனை ஆணவம் உனக்கு? சூரிய குஞ்சுகளை தினந்தோறும் பிடித்து உண்டு விடுகிராயாமே. உனக்கே இது அடுக்குமா? இனி அதுப் போல செய்யாதே”

“போமய்யா அப்பால். வந்து விட்டார் உபதேசம் செய்வதற்கு.”

“ஏய், யாரிடம் பேசுகிறாய் என்று புரிகிறதா உனக்கு?”

“நன்றாகத் தெரிகிறது. நீர் அக்கினி தானே. நானே குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறேன். அருகில் வாரும். சற்றே குளிர் காய்கிறேன்”

“என்னவொரு எகத்தாளம்” சட்டென்று அவன் மேல் அக்கினியார் நெருப்பு ஜுவாலையாக பாய்ந்தார். ஆனால் அதை விட வேகமாக தன் வாயைத் திறந்து பெருமூச்செடுத்து ஊதினான் மகாசுரன். பட்டென்று அக்கினியார் அவிந்து போனார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சூரியனார் மீண்டும் சோகமாகிப் போனார். தோல்வியுற்று திரும்பிக் கொண்டிருந்தவரை எதிர் கொண்டது வருணன் தான். அதே கேள்விகள். சூரியனாரின் அதே பதில்கள். இப்போது அக்கினியாரின் தோல்வியும் சேர்ந்து கொண்டது.

இப்போது வாயு பகவானின் முறை. அவனும் தன் பங்குக்கு மகாசுரனை வெற்றிக் கொள்ள புறப்பட்டு வந்து அவனை நோக்கி தன் பலம் கொண்ட மட்டும் ஊதினான். ஆனால் மகாசுரனோ சற்றே திரும்பினார் போல் படுத்துக் கொள்ளவும் அவன் முதுகில்பட்ட காற்று அவனை புரட்டி தள்ளிடபலனற்று திரும்ப வாயு பகவானின் வாயிற்குள்ளேயே போய் விட்டது.

மூவரின் புலம்பலைக் கேட்ட வருணர் கொந்ததளித்துப் போனார். “டேய் அசுரா,

என்னவொரு ஆணவம்? பஞ்ச பூதங்களான எங்களையே இப்படி செய்தாயே. இரு. உன்னை செய்கிறேன் என்று பார்”

நேரே போய் மகாசுரன் முன் நின்றார். “ஏய் மகாசுரா, அத்தனை தூரத்திற்கு உனக்கு திமிராகிப் போயிற்றா? சூரியக் குஞ்சுகளை பிடித்து உண்பாயோ! எங்கே என்னிடம் வந்து பார். நான் யார் என்று காட்டுகிறேன்”

“நன்றாக. நீ வருணர் தானே. வாரும் அருகில். நீண்ட நாட்களாக தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே உம்மை முழுங்கி விடுகிறேன்” கொஞ்சமும் அசையாமல் படுத்தவாக்கிலேயே வருணபகவானை முழுங்கி விட முயன்றான் மகாசுரன்.

ஆனால் இது என்ன! மற்ற மூவரை ஓட விட்டதைப் போல இந்த வருணனை ஒன்றும் செய்திட இயலாதவாறு வருணரின் படைகளான மேக கூட்டங்கள் கறுத்து இடி இடித்து அவனை ஒரு சேரத்தாக்கத் தொடங்கியது. விடாது பெய்த அடாத மழையினால் அவன் படுத்திருந்த இடத்தின் கீழே இருந்த பூமி நெகிழ்ந்து சரிந்து சமவெளியாக இருந்த இடம் பள்ளமாக போய் விட்டது. அவனால் அங்கே படுத்திருக்க இயலவில்லை. எனவே எழுந்தான்.

அவன் எழுவதற்கு காத்திருந்தார் போல  வாயு பகவானும் அங்கே வந்து தன் முழுபலத்தையும் உபயோகித்தான். பலத்த காற்று வீய், வீய் என்று வீசியது. மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தது. மேலே வானத்தில் இருந்து கொட்டிய மழை பூமியின் ஊற்றுக் கண்களை திறந்து விட  பூமியிலிருந்தும் நீர் வீரிட்டு கிளம்பியது.

பூமியின் மேற்பரப்பில் பெருகிய வெள்ளம் கீழே விழுந்து கிடந்த மரங்கள் ஆடு மாடுகள் என அனைத்தையும் மிதக்க வைத்து விட்டது. கனத்த சரீரமானதால் மகாசுரன் மிதக்கவில்லை. ஆனால் பெருவெள்ளத்தில் மகாசுரனால் ஒரே இடத்தில் நிலைத்து நிற்க முடியாமல் போனது. அவன் நிலை தடுமாறுகிறான் என்பதைக் கண்ட வருணனும் வாயுவும் தங்கள் பலம் கொண்ட மட்டும் அவனைத்தாக்கவே தன் பெருத்த சரீரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான் மகாசுரன்.

அவன் பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்த மூவரில் அக்கினி எல்லா மரங்களையும் தன் தீநாக்கினால் எரித்துக் கொண்டு வரவே மகாசுரனுக்கு ஒளிவதற்கு இடமில்லாமல் போய் கடைசியில் பூமிக்கு அடியில் போய் புதைந்து கொண்டான்.

சூரியனார் வாயு அக்கினியார் வருணர் என அனைவரும் மகாசுரனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக அவனை அந்த மலையுச்சியிலிருந்து கிளப்பியாயிற்று. இனி அங்கே படுத்துக் கொண்டு வருவோர் போவோரிடம் சண்டை இழுத்துக் கொண்டிருக்க மாட்டான். தொலைந்தான். என்று நிம்மதி அடைந்து அவரவர் தங்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.

 

புதுவயல் ஒரு அழகான சிறு கிராமம். ஆடு மாடு வளர்ப்பதும் விவசாயமும் தான் அங்கே பிரதான தொழில். கன்னியப்பனும் அவன் மனைவி மாரியம்மாளும் கிராமத்திற்கு  ஒதுக்குப்புறமாக ஒரு ஓலைக்குடிசையில் வசித்து வந்தனர். கன்னியப்பன் அந்த கிராமத்தாரின் மாடுகளை தினந்தோறும் அருகே இருக்கும் வயல்வெளியின் இறுதி வரை மேய்ச்சலுக்கு கூட்டி செல்வான். சமயத்தில் மாடுகள்காட்டின் முகப்பிலும் மேய்ச்சலுக்கு போவதுண்டு. அதை கண்டுபிடித்து ஒரு இடத்தில் கூட்டி சேர்த்து  மாலையில் மீண்டும் கிராமத்திற்கு அழைத்து வருவது தான் அவனுக்கு வேலை.

மிகவும் அருமையாக புல்லாங்குழல் இசைப்பான். அவன் இசை அந்த மாடுகளுக்கு அத்துப்படி. மாலையில் அவனுடைய குழலிசைக் கேட்டதும் அவைகள் எங்கே மேய்ந்து கொண்டிருந்தாலும் அவன் இருக்குமிடம் நோக்கி திரும்பத் தொடங்கி விடும். புல்லாங்குழல் இசைத்தவாறே ஒவ்வொரு மாட்டையும் அவரவர் வீட்டின் பின்புறம் விட்டு செல்வான். கிராமத்தினருக்கு தினம் மாலை இது பார்ப்பதற்கு ஒரு அருமையான காட்சி அது.

அன்றும் அதிகாலையில் முகம் கழுவி வயிறு முட்ட நீராகாரம் குடித்து விட்டு மீதமுள்ள பழைய சோற்றை பித்தளை அடுக்கு சட்டியில் போட்டுக் கொண்டான். பொரித்த கருவாடு இருக்கிறதா என்று சட்டி முட்டியை துழாவி எடுத்துக் கொண்டு குடிசையை விட்டு வெளியே வந்தான் கன்னியப்பன்.

சத்தம் கேட்டு கண் விழித்தமாரியம்மா “என்ன மச்சான், கிளம்பிட்டியா?” என்று கேட்டாள்.

“ஆமாம் புள்ள. நீ படுத்துக்க. நான் போயிட்டு வாறேன்”

“நீ வெளியே கிளம்பும் போது நான் எப்படி படுத்துக் கிடப்பது?” சொன்னவள் தன்னுடைய நிறைமாத வயிறுடன் தடுமாறி எழுந்து அவிழ்ந்திருந்த முடியை கொண்டையிட்டவாறே அவன் பின்னால் குடிசைக்கு வெளியே வந்தாள்.

“பத்திரமா இருந்துக்கோ புள்ளை. அம்மா நான் போய் வாறன். பார்த்துக்க. பத்திரம்” என்று நூறு பத்திரம் சொல்லிப் புறப்பட்டான்.

வழக்கம் போல மேய்ச்சலுக்கு மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டு அவன் வழக்கமாக அமரும் மரத்தின் அடியில் நிழலில் அமர்ந்திருந்தான். அவனோடு அவன் நண்பர்கள் செவந்தி கருப்பு இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

முதலில் ஆரம்பித்தவன் கருப்புத்தான். ”அண்ணே, அதோ அங்கன போனா புஷ்புஷு சத்தம் வருதுண்ணே”

“என்னடா இன்னைக்கு காலமே உன் கதையை ஆரம்பித்து விட்டாயா?” இது கன்னியப்பன்.

“இல்லப்பா, நானும் கூட என் ஆடுகளை தேடிக்கிட்டு போன போது இவன் சொல்றே இடத்தில சத்தம் வந்தது யாரோ மூச்சு விடராப் போல”

“என்னடா சொல்றீங்க?” கேட்டவன் இருந்த குழப்பத்தை தெளிவுப்படுத்தி விடும் நோக்கில் இன்னும் விவரித்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    நெஞ்சம் எழுதும் பாட்டு (சிறுகதை) – ✍ பீஷ்மா