2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இரவு நேரம்
உழைத்துக் களைத்த பறவை போல் உதகமண்டலம் கூட்டுக்குள் அடங்கி விட்டது. ஆங்காங்கே மட்டும் வீடுகளில் ஹோட்டல்களில் வெளிச்ச நட்சத்திரங்கள்.
அருண்குமார் தன் ஹோட்டல் மொட்டைமாடியிலிருந்து கீழே பார்த்தான்.
“ரொம்பக் கீழே இல்லை?” என்று பைத்தியக்காரத்தனமாக ஒரு எண்ணம் தோன்றியது. அப்படியிருப்பது தானே நல்லது? அப்போதுதானே மேலே போகலாம்?
தன்னையறியாமல் மேலே பார்த்தான். மூன்றாம் பிறைக்குக் கம்பெனியாக மினுக்கிய தாரைகள். நானும் இப்படி ஒரு நட்சத்திரமாக வானில் இருப்பேனா? பூமியில் மின்ன முடியாத பரிதாபங்களை வானில் எப்படி வரவேற்பார்கள்?
அருண்குமார் ஜானகியை நினைத்துக் கொண்டான். தன் குட்டி ஸ்டார் ஸ்ரீஜாவை நினைத்துக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் பொங்கியது. அவர்கள் அவன் கம்பெனி அனுப்பிய டூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஏன், இப்போதுகூட ஜானகி சொல்லிக் கொண்டிருக்கலாம், “அப்பா ரெண்டு நாளில் வந்துடுவார்டா!”. அப்பா வரவே போவதில்லை என்று புரிந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?
அழுவார்கள். அப்புறம் தேறுவார்கள். நாள்தோறும் உள்ள அலுவல்களும் வயிறும் அவனை ஒரு அழகான நினைவாக நிறுத்திவிட்டு அவர்களை முன்னே போக வைத்து விடும். நான்… என்னால் முன்னே போக முடியவில்லை. நான் ஒரு ஃபெயிலியர். நான் ஒதுங்கிக் கொண்டு பிறர்க்கு வழிவிட வேண்டும்.
அவன் கல்லூரியில் தங்கமெடல் வாங்கியவன். அது வாழ்க்கைக்குச் சிறிதும் உதவாது என்று புரியச் சில வருடங்களானது. முதல் இண்டர்வ்யூவிலேயே வேலை கிடைத்துப் பெற்றோர்களைப் பூரிக்கச் செய்தவன். அந்தச் சந்தோஷம் நிலைக்காது என்று புரிந்தபோது காலம் கடந்துவிட்டது.
அவனுக்குப்பின் வேலைக்கு வந்தவர்கள் பாராட்டுகளைக் குவித்தார்கள். வெறும் வாய்ப்பேச்சைக் கொண்டு மேலதிகாரிகளைக் கவர்ந்தார்கள். இவன் நாள்முழுவதும் உழைத்துக் கொட்டினாலும் ‘ஆவரேஜ்’ என்று கடந்துபோனார்கள். க்ளையண்ட்டுகளை வைத்துக் கொண்டு திட்டினார்கள்.
இருபதை இப்போதுதான் கடந்திருந்த ஒரு பெண், “வேலையில் ஸ்மார்ட்னஸ் வேணும் அருண்” என்று அவன் மேலதிகாரி நாற்காலியில் அமர்ந்து அவனுக்கு உபதேசம் செய்தாள். இதையெல்லாம் ஜானகிக்குத் தெரியாமல் மறைக்கப் படாதபாடு பட்டான்.
பெஞ்ச்சிங் என்றார்கள். ப்ராஜெக்ட் வரும்போது யூஸ் பண்ணிக் கொள்கிறேன் என்றார்கள். உள்ளே வரும், வெளியே செல்லும் நண்பர்கள்கூட அவனைக் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரனைப் பார்ப்பதுபோல அருவெறுப்பும் பரிதாபமும் ஒருசேரப் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை பேசாமல் கடந்தார்கள்.
முடிவில் இரண்டு மாதம் முன்பு வெடிகுண்டு வெடித்தது. “வேலை இல்லை, வெளியே போ” என்று நாகரீகமாகச் சிரித்துக் கொண்டே சொல்லப்பட்டது.
ஜானகியிடம் சொல்லப் பயம். அவள் ஏதாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்று. சத்தமில்லாமல் அலுவலகம் செல்பவன் போல் கிளம்பி, வேறு வேலை தேடினான். கிடைக்கவில்லை.
இந்த மாதம் ஸாலரி எங்கே என்று ஜானகி கேட்கும்போது உண்மையைச் சொல்லித்தானே ஆகவேண்டும்? அவள் முகத்தை அதற்குப்பின் தன்னால் நிமிர்ந்து பார்க்க முடியுமா? ஒரு மாதம் முடிந்ததும் லாக்கரிலிருந்த நகைகளை அடகு வைத்தான், அவளுக்குத் தெரியாமல். அடுத்த மாதம் வேலை கிடைத்ததும் மீட்டுக் கொள்ளலாமென்ற எண்ணம். நகைகள் இன்னும் அடகுக்கடையில் தூங்குகின்றன.
இதற்கிடையில் தங்கை கல்யாணம் என்று அப்பாவின் ஃபோன் வேறு. “பெரிய அண்ணா காசுமாலை போடறானாம். நீ என்னடா நகை போடப் போறே?” என்று தங்கை வாட்ஸப்பில் கேட்கிறாள். இங்கே அண்ணி நகையே அடகுக்கடையில் என்று சொன்னால் நம்புவாளா?
அருண்குமாருக்குப் பொத்துக் கொண்டு அழுகை வந்தது. நான் படித்ததெல்லாம் பழைய பஞ்சாங்கம் ஆகிவிட்டது. இன்றைய சாதனை இளைஞர்களோடு என்னால் போட்டி போட முடியாது. என்னால் அஸ்ஸர்டிவாகப் பேச முடியாது. அதிகாரம் செய்யத் தெரியாது. அதிகாரத்திற்கு ஜால்ரா அடிக்க வராது.
யோசிக்கத்தான் ஊட்டி வந்தான். அங்கே இருக்கும் அழகான பல இடங்களில் சுற்றினான். ஆனால் அவன் தங்கியிருந்த ஹோட்டல் மொட்டைமாடி அவனைக் கவர்ந்ததுபோல் வேறு எந்த இடமும் கவரவில்லை. இதோ, இன்று ஏறி நின்று விட்டான்.
எதிரே “ஹோட்டல் சொர்க்கம்” என்று அடுத்த கட்டிட நியான் அறிவித்தது. புன்னகைத்துக் கொண்டான். வருகிறேன்!
திடீரென்று எதிர்த்த கட்டிடத்தில் ஒளிச்சதுரம் தோன்றியது. எந்த அறையிலோ விளக்குப் போட்டிருக்க வேண்டும். அந்தச் சதுரத்திலேயே ஒரு இருள்… அந்த நிழல்… பெண்ணின் உருவம். அதன் கைகள் ஜன்னல் கண்ணாடியில் பதிவதையும் நகர்வதையும் அருண்குமார் பார்த்தான். பார்த்துக் கொண்டேயிருந்தான்.
=============
“அப்பாடி! வந்தீங்களா! கண்ணு பூத்துப் போச்சு அருண்” என்று வரவேற்றாள் ஜானகி.
மௌனமாகப் பையை நீட்டினான். கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டான்.
“அப்புறம் சொல்லுங்க. டூர் எப்படி இருந்தது?” என்று ஜானகி சாவகாசமாய்க் கேட்டபோது அவனால் தாங்க முடியவில்லை. உடைந்தான்.
“என்ன? என்னங்க? என்னாச்சு அருண்?” என்று அவள் பதறினாள்.
அருண் கண்களைத் துடைத்துக் கொண்டான். அமைதியாக ஆரம்பித்தான். அலுவலகப் பிரச்சனைகள் முதல் மொட்டைமாடி வரை சொல்லி முடித்தான்.
“அப்புறம்?” என்றாள் ஜானகி அழுதவாறே.
“அழாதே! அங்கே எதிர்த்த ஹோட்டல் ரூம்ல ஒரு பெண்ணோட நிழல் தெரிஞ்சது. கைகளைக் கண்ணாடியில் அழுத்திக்கிட்டு. ஜானகி! அந்தப் பெண்ணுக்கு என்ன ஆபத்தோ? எதனால் அந்த அறையில் அடைப்பட்டுக் கிடந்தாளோ? அந்த இரவில் யாருக்குச் செய்தி சொல்லப் பார்த்தாளோ? இல்லை, யாராவது பார்த்துக் காப்பாற்ற மாட்டாங்களாங்கற தவிப்பாய் இருக்குமோ? ஆனா… சுலபமா அவளுக்கு விடுதலை கிடைச்சிருக்கும், ஜன்னல் கண்ணாடியை மட்டும் திறந்துக்கிட்டு கீழே குதிச்சிருந்தா!
அவ குதிக்கலை ஜானகி! தப்பிக்கப் பார்த்தா! வாழப் பார்த்தா! தன் சோதனைகளை ஜெயிக்கப் பார்த்தா! மறுநாள் அவளைப் பற்றி விசாரிக்க முயற்சி செய்தேன். ஆனா அந்த அறையில் இருந்தவர்கள் காலி செஞ்சுக்கிட்டுப் போயிட்டாங்கன்னு மறுநாள் சொன்னாங்க. என்றாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. ஒருவிநாடி என்னை நானே பார்த்துக்கிட்டேன். வெட்கமா இருந்தது. சரி, முடிஞ்சவரை போராடி வாழ்வோம்னு முடிவு செய்து திரும்பி வந்துட்டேன்” என்றான் அருண்குமார்.
என்னென்னவோ சொல்ல நினைத்த ஜானகிக்குப் பேச்சு வரவில்லை.
“நீங்க வந்ததே போதும் அருண். நீங்க இருக்கறதே போதும் அருண்” எண்று இதையே மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
============================
அருண் மொட்டை மாடியிலிருந்து கீழே போனதும் ஹோட்டல் சொர்க்கத்தின் அந்த ஒளிச்சிதறல் ஜன்னலுக்குத் திரும்பப் போகலாமா?
“இது சரியா இருக்கா? இது சரியா இருக்கா?” என்று கேட்டவாறே கைகளை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தாள் அந்த அழகி. பாவாடை தாவணியில் பதின்ம வயது என்று நம்பவைக்க முயலும் மேக்கப்.
“சரியா இல்லை, இன்னும் கொஞ்சம் வளைந்து கொடு. இடதுபக்கமா முகத்தைச் சாய்ச்சுக்கோ” என்று சொல்லிக் கொண்டிருந்தார் அந்த சீரியல் இயக்குனர்.
கொஞ்ச நேரத்தில் அவர் வெளியே போனதும்,”ரொம்பப் படுத்தறார்மா” என்றாள் அவள்.
“சின்னத்திரையில் ரொமாண்ட்டிக் ஹீரோயின்னு பேர் வாங்கணுமா வேண்டாமா? சொன்னபடி நடி” என்றாள் தாயார்.
கலர் கலரான கனவுகளில் மிதந்தவாறே உறங்கி எழுந்து ரூமைக் காலி செய்து கிளம்பினார்கள் தாயும் மகளும், ஒரு உயிரைக் காத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளாமலே.
எல்லோரும் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும், நம்மைத் தானே பார்த்துக் கொள்கிறோம்!
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings