ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
சனிக்கிழமை மதியம், நால்வரும் மதிய உணவு சாப்பிட வட்டமாக அமர்ந்தனர். அப்போது வந்த ஒரு தொலைப்பேசி செய்தி, அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. உடனே பரப்பரப்புடன் உணவு உண்டு கிளம்பத் தயாராகினர்.
ஆளுக்கொன்றாக ‘பெட்ஷீட் வேணுமா? இல்ல டவல் எடுத்துக்கலாமா? இல்ல அட்டைப் பெட்டி எடுக்கலாமா?’ என்று பேசிக் கொண்டே, முடிவாக துவைத்து அழகாய் மடித்து வைத்திருந்த வெளீர் நிற போர்வையை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி காரில் அமர்ந்து ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புடன் பேசிக் கொண்டு சென்றனர்.
குழந்தைகளின் மகிழ்ச்சி பெற்றோரையும் ஆக்ரமித்துக் கொண்டது.
முக்கால் மணி நேரம் பயணித்து அழகான பெயர்ப்பலகை தாங்கிய ஒரு பெரிய கதவின் முன் நின்றனர். வாலிபரொருவரின் கையில் வெண்ணிற புசுபுசு உடம்பும் தலை ஆப்பிள் வடிவத்திலும் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு கையிலிருந்து இறங்க முயற்சித்துப் கொண்டிருந்தது ஒரு அழகான நாய்க்குட்டி.
அதை வளர்ப்பது குறித்து சொல்லிக் கொண்டே வாங்கிக் கொள்ளுமாறு கையை நீட்டினார். ஆர்வமிருந்தும் இதுவரை குட்டியை தூக்கி பழக்கமில்லாததால் பூஜா சற்று பின் வாங்க, கௌசிக் கையை நீட்டினான். எப்படி பிடிக்க வேண்டும் என்ற பாலபாடத்தை எடுத்து விட்டு பணத்தை வாங்கி கொண்டனர்.
33 நாட்களே ஆன குட்டியாதலால், முதல் தடுப்பூசி போடும் வரை வெளியே கூட்டி செல்ல வேண்டாமென்றும், இயற்கை உபாதை கழிக்க மட்டும் வெளியே கூட்டி செல்லுமாறும், இருவேளை பெடிகிரி மதியம் உப்பில்லா தயிர் சாதம் கொஞ்சமும் வைக்க சொன்னார். அடியில் கால் மிதியடி போட்டு படுக்க வைக்க சொன்னார்.
நன்றி கூறிவிட்டு காரிலேறி மடியில் போர்வையை விரித்து ஆசையுடன் கௌசிக் வைத்து கொள்ள அருகில் தங்கை பூஜாவும் அம்மா மீனாவும் அமர்ந்து கொண்டு வீட்டை நோக்கி பயணித்தனர்.
வீட்டிற்கு வந்து கீழே இறக்கி விட்டதும் ஒவ்வொருவரின் காலருகே சென்றது. கொஞ்சம் விளையாட்டு காட்டி விட்டு வீட்டு ஹாலில் புதிதாய் வாங்கியிருந்த கால் மிதியடி போட்டு அதில் படுக்க வைக்க, அறையை ஒரு சுற்று சுற்றி விட்டு தரையில் படுத்துறங்கியது.
பயணம் செய்த களைப்பு போலும். நன்றாக தூங்கி விட்டது. அதற்குள் கௌசிக் இரு அறைகளுக்கு செல்லும் வழியை தற்காலிகமாக அடைத்து வைத்து விட்டு, நடுவில் அமர்ந்து நாய்க்குட்டி தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே ஒளிப்படம் எடுத்தான்
சற்று நேரத்தில் கண் விழித்த குட்டியை, மொட்டை மாடிக்கு தூக்கி சென்று கீழே விட்டு விளையாடினர். இரண்டு நாட்களுக்கு முன் பாண்டிச்சேரி போய் வரலாமென பேசிக் கொண்டிருந்ததை நினைத்து கொண்டனர்.
கொரானா காலத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம், பிறிதொரு சமயத்தில் போய் கொள்ளலாமென விட்டதால் தான், இன்று நாய்க்குட்டி வாங்க முடிந்ததாக மகிழ்ச்சியும் அடைந்தனர்.
அதற்கென அழகான பாத்திரத்தில் கொஞ்சம் தயிர் சாதமும் இரவு சூடான நீரில் போட்டு ஊறவைத்த பெடிகிரியும் வைத்து சாப்பிடும் அழகை ரசித்தனர்.
அது வேகவேகமாக சாப்பிடுவதை தான் படித்த ‘ஓநாய் குலசின்னம்’ புத்தகத்தில் ஜென்சேன் ஓநாய் குட்டிக்கு உணவு வைக்கும் போது வேகமாக உண்ணும் காட்சி நினைவில் வருவதாக கூறினாள் மீனா.
கடந்த வாரம் தபாலில் வந்த பூனைக்குட்டி புத்தகம் இன்னும் வாசிக்காமல் இருப்பது நினைவில் வரவும், இந்த வாரத்திலாவது படித்து விட வேண்டுமென எண்ணி கொண்டாள்.
முகநூல் குழுவில் ‘மாதம் ஒரு எழுத்தாளர்’ வாசிப்பு போட்டி நடப்பதால், அந்த வாரம் கி.ரா அவர்களது புத்தகங்களை படிப்பதன் பொருட்டு வேறு புத்தகங்களை தொடவில்லை. சீக்கிரம் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் மற்ற வேலைகளை கவனிக்கலானாள்.
தினமும் நாய்க்குட்டியுடன் நன்றாக பொழுது போனது. பிள்ளைகளும் பொறுப்பாக பார்த்து கொண்டனர். குட்டிக் காலாக இருப்பதால், இயற்கை உபாதைக்கு கூட வெளியே அழைத்து செல்லவிடவில்லை பிள்ளைகள்.
“குழந்தை மாதிரி தானேம்மா, மிதியடியிலேயே போகட்டும், சுத்தம் செய்து கொள்ளலாம்” என்றனர்
அது எங்கே மிதியடியில் போயிற்று. ஹாலில் அதற்கு தோன்றிய இடமெல்லாம் போய் வைத்தது. கொரானா விடுமுறையால் பிள்ளைகளும் வீட்டிலிருந்தபடியால் ஒருவர் மாத்தி ஒருவராக சுத்தம் செய்து வீடு துடைத்து, வீட்டிலுள்ள அனைவருமே ஏதோவொரு விதத்தில் பார்த்து கொண்டனர்.
அதற்கொரு பெயர் வைக்க வேண்டுமே என இரண்டு நாட்களாக யோசித்து, முடிவில் நான்கு பெயர் செலக்ட் செய்து, அதிலிருந்து பெஸ்ட் 2 எடுத்து முடிவில் ‘ஆலிவ்’ என்ற பெயரை வைத்து மகிழ்ந்தனர்.
செல்லமாக “ஆலி ஆலி” என்றும் கூப்பிட்டனர் அந்த லேபரடார் நாய்க்குட்டியை. தடுப்பூசி போடும் வரை குளிக்க வைக்க வேண்டாமென, டவலால் வெதுவெதுப்பான நீர் கொண்டு துடைத்து விட்டனர்.
நான்கைந்து நாட்கள் கழித்து ஆலிவ் விளையாடுவது சற்று குறைந்தது. முடி கொட்ட ஆரம்பித்தது. சற்று கழிந்த மாதிரி ஆய் போயிற்று.
அப்பப்போ கூகுளில் விபரம் அறிவது போல் இப்பொழுதும் கூகுளில் தேடினான் கௌசிக். புது இடம் மாறுவதால் ஹோம் சிக் வந்து பின் இரண்டு நாளில் சரியாகி விடும் என சொன்னான்.
அடுத்த நாளும் இப்படியே இருக்கவும், டாக்டரிடம் எடுத்து சென்று காண்பிக்க, அவர் ஊசி ஒன்றை போட்டு ஒரு வாரத்திற்கு பெடிகிரி நிறுத்தி விட்டு குழந்தைக்கான செர்லாக் வாங்கி கரைத்து தரும்படி கூறினார்.
இரண்டு நாட்களாக அப்படி கொடுத்தும் சரியாகாமல் வாந்தியும் எடுக்க ஆரம்பித்தது. வேறு ஒரு டாக்டரை தேடி சென்றனர்.
அந்த டாக்டர் பரிசோதித்து விட்டு அதற்கு ‘பார்வோ வைரஸ்’ வந்திருப்பதாகவும் டிரிப்ஸ் இறக்க வேண்டுமென்றும் கூறினார். மனக்கவலையுடன் டிரிப்ஸ் இறக்கி கூட்டி வந்தனர்.
உடல் இளைக்க ஆரம்பித்து, இடத்தை விட்டு நகராமல் களையிழந்து காணப்பட்டது. அனைவரும் வருத்தப்பட்டனர். உணவு எடுத்துக் கொள்ள மறுத்தது. கீழே அமர்ந்தால் ஓடி வந்து மடியில் ஏறுவதும் செல்லமாக கடிப்பது போல் நக்குவதுமாக இருந்த ஆலி அமைதியாய் படுத்திருப்பதைக் கண்டு அனைவருமே கலங்கினர்.
துணியை பிடித்து இழுப்பதும் பொம்மைகளுடன் விளையாடுவதுமாக இருந்த ஆலி படுத்தே இருப்பதைக் கண்டு மீண்டும் மருத்துவரிடம் செல்ல அன்றும் ஒரு டிரிப்ஸ் இறக்கி மறுநாள் இன்னொன்று கொடுத்தால் சரியாகி விடுமென நம்பிக்கை கொடுத்தார்.
அதற்குள் கூகுளில் விபரம் அறிந்து அதாகவே மீண்டெழ வேண்டுமென்றும் அதன் நோய் எதிர்ப்புச் சக்தியை பொறுத்து குணமடையுமென்றான்.
கடிப்பது போல் வரும் ஆலியை, பூஜா செல்லமாக “நோ, நோ ஆலி” என்று மிரட்டுவது நின்று போயிற்று.
மற்றொரு டிரிப்ஸ் போட்டும் அன்று இரவில் மிக மோசமாக உடல் நிலை குன்றி விட்டு விட்டு கத்தி கொண்டே இருந்தது.
பூஜா அப்பா கரண் ஆலி வாடி வாடி என்று தான் கொஞ்சுவார். இப்போ அதை தூக்கி மடியில் வைத்து சீக்கிரம் சரியாகி வாடி, மாடியில் போய் விளையாடலாம் என்று ஏதேதோ சொல்லி தடவி கொடுத்து கொண்டிருந்தார்.
தூக்கமே வராமல் யாராவது ஒருவர் மாத்தி மாத்தி பார்த்து கொண்டனர். விடிகாலை 5.30 மணிக்கு வேகமாக குரல் கொடுத்து விட்டு தன் உயிரை விட்டது ஆலி.
‘அழுகை’ – அது ஒன்றே அப்பொது அனைவருக்கும் தேவைப்பட்டது. வீடே களையிழந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக ஏதோவொரு விதத்தில் ஆலி ஞாபகம் வருவதும் அழுவதுமாக கழிந்தது.
மனப்பாரத்துடன் புத்தகத்தையாவது படிக்கலாமென தரணி ராசேந்திரனின் ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ என்ற புத்தகத்தை படிக்க படிக்க மனப்பாரம் அதிகமாயிற்று.
செல்லப்பிராணியைப் பற்றிய கதை என்பதால், ஆலி நினைவு தொடர்ந்தது. கதை செல்ல செல்ல நாயைப் பற்றியும் வந்தது. கதையில் ஓரிடத்தில் நாய்க்கு வரும் பார்வோ வைரஸைப் பற்றியும் அது வந்தால் பிழைப்பது கஷ்டமென கூறி கருணைக் கொலை செய்வதாகவும் படித்தவுடன் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள் மீனா.
“புத்தகத்தை அப்பொழுதே படித்திருந்தால் பார்வோ பற்றி தெரிந்திருக்கும் தானே, நாமும் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குட்டியாக ஆலிவை எடுத்து வந்திருந்தால் இப்போது நம்முடன் இருந்திருக்கும் தானே” என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
“இல்லையென்றாலும் அதை எவருக்காவது விற்றுத் தான் இருப்பார்கள். நம்முடன் பத்து நாட்களாவது சந்தோசமாக இருந்ததை எண்ணி கவலையை விடு” என்றார் அவள் கணவர் கரண்.
‘கயிறு கொண்டு கட்டாமல், அதற்கென சிறிய அட்டைப் பெட்டியில் வைத்து அடைக்காமல், ஹால் முழுவதுமாக அதற்காகவே விட்டுட்டு நாம் ரூமுக்கு சென்றெல்லாம் உணவருந்தினோமே, அதன் வாழ்வு முடிந்ததென விடு நம்மால் முடிந்த அளவு காப்பாற்றத் தானே முயற்சித்தோம்’ என அவருக்கும் சேர்த்து சமாதானம் சொல்லிக் கொண்டார்.
இப்பொழுது 3 மாதங்கள் கழித்து வாங்குவதற்காக நல்ல லேபரடார் குட்டியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அம்மாவிடம் 90 நாட்களாவது பாலருந்தி, நோய் எதிர்ப்புச் சக்தி பெற்ற தடுப்பூசி போடப்பட்ட குட்டியை உங்கள் எவருக்கேனும் தெரிந்தால் அவர்களுக்குச் சொல்லுங்கள்.
ஒரு குடும்பமே ஆசையுடன் காத்திருக்கிறது நாய்க்குட்டியின் வரவை எண்ணி
⭐
#Ads – Kids Story Books – Deals from Amazon 👇
#Ads – Children Activity Stuff – Deals from Amazon 👇
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“சஹானா” சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் கதைகளை வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்
GIPHY App Key not set. Please check settings