அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“சுஜா! என்ன சொல்ற? பொங்கலுக்கு ஊருக்கு போவோமா?”
“பொங்கலுக்கு இன்னும் மூணு மாசமிருக்கு. இப்போ ஏன் ஆரம்பிக்கிறீங்க?”
“நாளைக்கு ட்ரெயின் டிக்கெட் ஓபன் ஆகுது சுஜா”
ஊரிலிருந்து அப்பா வந்திருக்கும் வேளையில் திவாகர் இந்தப் பிரச்சனையை கிளப்புவது எரிச்சலாக இருந்தது சுஜாதாவிற்கு. அப்பா முன்னிலையில் சண்டை போடக் கூடாது என்று அடக்கி வாசித்தாள்.
“போன வருஷமே நாம போகலை சுஜா. இந்த வருஷமாவது அப்பா, அம்மாவுடன் பொங்கலை கொண்டாடிட்டு வருவோம்”
“திவா… உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது. கிராமத்துல வசதியும் கிடையாது ஒன்னும் கிடையாது, வீடு கழுவி, கோலம் போட்டு, வெளியில அடுப்புக் கட்டி வச்சு, பொங்கலிட்டு, ஓலைய போட்டு எரிச்சு, கண்ணெல்லாம் சிவந்து போயிடும். அப்பப்பா வேலை நிறைய இருக்கும்”
“இதை பெருசா சொல்றியே சுஜா.. நாங்க சின்ன பிள்ளையா இருக்கிற காலத்துல பொங்கல் ஒரு பெரிய திருவிழா போல நடக்கும். எங்க குடும்பம் மட்டுமில்லாம, பெரியப்பா, சித்தப்பா குடும்பம் எல்லோரும் ஆச்சி வீட்டுக்கு வந்திடுவாங்க. கதை பேசிகிட்டே அம்மா, சித்தி எல்லாரும் பொங்கல் சமையலுக்கு காய்கறியே ரெண்டு மணி நேரம் நறுக்குவாங்க. நாங்க பிள்ளைங்க எல்லாம் ஜாலியா விளையாடுவோம். ஆச்சி 5 படியரிசி பொங்கலிடுவா… ரெண்டு படி அரிசி சர்க்கரைப் பொங்கலே செய்வா. பூஜைக்கு அப்பா 25 தேங்காய் உடைப்பார். ஒரு கட்டு கரும்பு சாமி படையலுக்கு வைப்போம். பனங்கிழங்கு வேகற வாசமே ஜோரா இருக்கும். மறுநாள் பொங்கச் சோறுதான் மூன்று வேளையும் சாப்பாடு.
பிள்ளைகளுக்கு அம்மா தோசை சுட்டு தருவா. அத்தைங்க எல்லாம் அவங்கவங்க வீட்ல பொங்கல் கொண்டாடிட்டு, சாயங்காலம் தாத்தா வீட்டுக்கு வருவாங்க. எப்படி வீடு கலகலப்பா இருக்கும் தெரியுமா?” குழந்தைப்பருவ இனிய நினைவுகளில் மூழ்கியவனாய் திவாகர் கூற, முகம் சுழித்தாள் சுஜா.
இவ்வளவையும் கூடத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நடராஜனுக்கு மாப்பிள்ளையின் ஆதங்கம் புரிந்தது. அவர் வளர்ந்த போதும் பொங்கல் அப்படித்தான் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அவர் மனைவி, சுஜாவின் அம்மா, பிடிவாதக்காரி. யாரோடும் ஒட்ட மாட்டாள். சண்டை போட்டுவிட்டு தன் அம்மா வீட்டிற்கு மகளையும் கூட்டிக் கொண்டுப் போய் விடுவாள். சில வருட பொங்கல் மட்டுமே கிராமத்துக்கு வருவாள். வந்தாலும் யாரோடும் ஒட்ட மாட்டாள். மகளையும் ஒட்ட விட மாட்டாள். உறவின் அருமை தெரியாமலே சுஜா வளர்ந்ததால் தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்.
“ஏன் திவா.. பழைய கதைய ஆரம்பிச்சிட்டீங்களா? ரெண்டு நாள் லீவு கிடைக்கிது. இங்கே கொண்டாடினா எந்த டென்ஷனும் கிடையாது. கேஸ் அடுப்பிலேயே பொங்கல் ஈஸியா வச்சிடலாம். குக்கர் பொங்கல்.. ஈசியா முடிஞ்சிடும். அப்புறம் ரிலாக்ஸ்டா டிவி பார்த்துகிட்டிருக்கலாம். இப்படியே கிருஷ் போரடிக்குதுன்னு சொன்னா ஏதாவது மால் போயி 2 மணி நேரம் விளையாட விட்டு கூட்டிட்டு வந்திடலாம்”
“சுஜா! இதெல்லாம் ஒரு பொங்கலா? டிவியும், மாலும் எப்போதும் தான் இருக்கே. கிராமத்துக்குப் போனா கிருஷ் என்ஜாய் பண்ணுவான். போன தடவை போனப்ப நல்லா என்ஜாய் பண்ணினான். இப்ப 8 வயசாகுது.. நல்ல விவரம் தெரிஞ்ச பையன். அவனுக்கு அந்த சூழல் ரொம்ப பிடிக்கும். அப்பாவும், அம்மாவும் பாவம் பேரன் அவங்க கூட வந்து இருக்கணும்னு எவ்வளவு ஆசைப்படுவாங்க”
ஹாலில் இருந்து எழுந்து வந்த நடராஜன், “சுஜா! மாப்பிள்ளைதான் ஆசைப்படுறாருல்ல போயிட்டு வாம்மா. இந்த பட்டணத்து பரபரப்புக்கும், இரைச்சலுக்கும், கிராமம் ஒரு மாறுதலா இருக்கும். பெரியவங்களும் பண்டிகையை தனியா கொண்டாடுறதுக்கு பிள்ளையோட கொண்டாடுவது சந்தோஷமா இருக்கும். முன்ன மாதிரி வீடு ஜேஜே’ன்னு உறவுக்காரங்களால நெறைஞ்சிருக்காட்டியும், வீட்டுப் பிள்ளைகளாவது வந்தாத் தானே நல்லாயிருக்கும்” என்றார்.
“நீங்க பேசாம இருங்கப்பா! எப்போதும் நீங்க உங்க மாப்பிள்ளைக்குத் தான் சப்போர்ட் பண்ணுவீங்க. என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பிள்ளையோட பொங்கல் கொண்டாடும்னா அவங்க இங்க வர வேண்டியது தானே! எங்களை ஏன் வரச் சொல்லி இம்சைப்படுத்தறாங்க. இதுல மறுநாள் மாட்டுக்கு வேற பூஜைனு கூத்தடிப்பாங்க. பழைய பஞ்சாங்கங்கள்.. இந்த பழங்காலத்து கதையெல்லாம் விட்டுட்டு எப்பத்தான் மாறப் போறாங்களோ?”
“பண்டிகை நாளில் எல்லோரும் சேர்ந்திருக்கிறது ஒரு தனி மகிழ்ச்சிதானேம்மா! காலப்போக்கில இதெல்லாம் குறைஞ்சு போச்சு… இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு நம்ம கலாச்சாரத்தை எடுத்து சொல்றதுக்கு ஆளே இருக்காது”
“காலத்துக்கு ஏற்றபடி மாறணும். சௌரியத்த விட்டுக் கொடுத்துட்டு அங்க போய் பண்டிகை கொண்டாடணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா?”
“சுஜாதா… அப்படியெல்லாம் பேசாதேம்மா! உங்க அம்மா உறவுகளே வேணாம்னு வாழ்ந்துட்டு, கடைசி நாட்களில யாருமே இல்லாம தனியா இருந்துட்டு போய் சேர்ந்தா. இதுவே நாலு பேர் வேணும்னு வாழ்ந்திருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது. யாராவது கூட இருந்து கவனிச்சிருப்பாங்க. அவள மாதிரியே நீயும் வாழாதே. உன் ரெண்டு நாள் கஷ்டம் பெருசுன்னு நினைக்கிறதை விட, உன் மாமியார் மாமனாருக்கு ரெண்டு நாள் சந்தோஷம் கொடுக்கிறோம்னு நினை. அடுத்தவங்களை சந்தோசப்படுத்தி தானும் சந்தோசமா வாழ்வதில்தான் வாழ்க்கையோட அர்த்தமே இருக்கும்மா”
திவாகர் நேரமாகி விட்டது என்று ஆபீஸ் கிளம்பி போய் விட்டான். கிருஷ் ஸ்கூலுக்கு போய் விட்டான். சுஜாதா எரிச்சலோடு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
கிரிஷ்சுக்கு இங்கே இருந்தால் தான் பொழுது போகும். கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவான். பென் ட்ரைவில் பதிவு பண்ணி வைத்திருக்கும் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பான். பிரண்ட்ஸ் கூட விளையாடுவான் என்று எண்ணிக் கொண்டாள்.
மதியம் சாப்பிடும் போது மகளும் உம்மென்று இருப்பதை கவனித்தார் நடராஜன்.
“அப்பா! கிரிஷ் வரட்டும் அவன் என்ன சொல்றான்னு கேட்டு முடிவு செய்வோம்” என்றாள் சுஜா.
மாலையில் கிரிஷ் பள்ளியிலிருந்து வர, நடராஜன் அவனை பக்கத்தில் அமர்த்தி, ஷு… யூனிஃபார்ம் எல்லாம் மாற்றி விட்டார். சுஜாதா தோசை சுட்டு எடுத்து வர, கதை சொல்லி ஊட்டி விட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்த வேலை. நல்ல நீதிக் கதைகளையும், புராணக் கதைகளையும் சொல்லுவார். கிரிஷ் அவற்றை ஆவலுடன் கேட்பான்.
சுஜா மகனிடம், “கிரிஷ்! உங்கப்பா பொங்கலுக்கு தாத்தா பாட்டி வீட்டுக்குப் போகணும்னு சொல்றாரு! உனக்கு இங்கேதான் பொழுது போகும்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாரு”
“ஹை… கிராமத்துக்குப் போறோமா… ஜாலிதான்!”
சுஜாதா இதை எதிர்பார்க்கவில்லை.
“அம்மா! இங்க ஒரே போர்.. எப்ப பாரு டிவி.. கேம்ஸ். தாத்தா வீட்டுக்கு போனா தோட்டத்தில் விளையாடலாம். தாத்தா பம்பு செட்டுக்கு குளிக்க கூட்டிட்டுப் போவாரு… ஜாலியா ஆட்டம் போடலாம். அப்புறம் கன்னுகுட்டி, மாடு, கோழியெல்லாம் இருக்கும். பாட்டி பலகாரமெல்லாம் செஞ்சு தருவாங்க. தாத்தா கூட பல்லாங்குழி விளையாடுவேன். தாத்தா போன தடவை கரும்பு தோட்டத்துக்கு கூட்டிட்டு போயி கரும்பு வெட்டி கொடுத்தாரு. எவ்வளவு ஜாலியா அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டேன்”
மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போக… சுஜாதா வாயடைத்து நின்றாள். அவளுக்கு எட்டிக்காயாய்க் கசந்த அந்த ரெண்டு நாட்கள் தன் மகனுக்கு இத்தனை இனிய நினைவுகளைக் கொடுத்திருக்கிறது என்று நினைத்தாள்.
“பார்த்தாயா சுஜா உன் மகன் சந்தோஷத்தை… கிராமம் அவனுக்கு எவ்வளவு சந்தோஷமான அனுபவங்களை கொடுத்திருக்கிறது. உன் அம்மாவைப் போலவே நீயும் இருக்காதே! இருக்கும் இடத்தில் உள்ள சந்தோஷத்தை அனுபவிக்க கத்துக்கோ! மனிதர்களுக்கு, அதுவும் பெரியவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக்கம்மா. அப்போது தான் உன் புருஷனுக்கும் மகனுக்குமே உன் மேல மதிப்பு வரும்” என்றார் நடராஜன்.
மாலை திவாகர் வீடு வந்ததும், “திவா! நாளைக்கு டிக்கெட் ஓபன் ஆனதும் ஊருக்கு போறதுக்கு டிக்கெட் போட்டுடுங்க… பொங்கலுக்கு ஊருக்கு போவோம். ஆனால் ரெண்டு நாள் வேண்டாம், கூட ரெண்டு நாள் லீவு போட்டு நாலு நாள் இருந்துட்டு வருவோம்” என்ற சுஜாதாவை ஆச்சரியமாக பார்த்தான் திவா.
(முற்றும்)
கடந்த கால நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்தும் அருமையான சிறுகதை .