2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நித்யா கதவை திற… எவ்வளவு நேரம் தான் ரூமுக்குள்ளேயே அடைஞ்சுகிட்டிருப்ப. வெளியே வா.. வந்து சாப்பிடு”
அம்மாவின் குரலில் எரிச்சலூட்டியது… பதில் சொல்ல பிடிக்காமல் படுத்துக் கிடந்தாள் நித்யா.
கதவை தட்டிய அம்மா திரும்பத் திரும்ப கூப்பிட… எரிச்சலுடன், “சாப்பாடும் வேணாம்… ஒண்ணும் வேணாம். போம்மா.. ஒருவேளை சாப்பிடாட்டா என்ன? ஒன்னும் செத்துப் போயிட மாட்டேன்.. எரிச்சல் படுத்தாத போ” வார்த்தைகள் கடுமையாய் வந்து விழுந்தன.
“ஏண்டி புரிஞ்சுக்க மாட்டேங்குற! நீ பிடிவாதம் பிடிக்கிறதால என்ன ஆகப்போகுது… ஒன்னும் நடக்கப் போறதில்ல. தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் பொறுமையாக் கேளு”
ஒரு வாரமாக அம்மாவுக்கும், மகளுக்கும் நடக்கும் பனிப்போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு வசந்தி கீழே இறங்கினாள். நித்யாவின் பிடிவாதம் அவளுக்கு தெரிந்தது தானே.
நித்யா ஆர்.எஸ்.என் கல்லூரியில் பொறியியல் கடைசி வருட மாணவி. அவள் கூட படிக்கும் கோகுல் அவளுடைய மிக நெருங்கிய நண்பன்… பள்ளியிலும் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். நட்பின் பிடி இறுக, அது காதலாக மலர்ந்தது.
இருவரும் ஒருவர் இல்லாமல் ஒருவரில்லை என்கிற அளவுக்கு அன்பை வளர்த்துக் கொண்டார்கள். அம்மாவிடம் காதலை மறைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை நித்யா. தானாக தெரிகிற போது தெரிந்து கொள்ளட்டும் என்ற அளவிலேயே நினைத்து வந்தாள்.
கோகுலை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வருவாள் நித்யா. வசந்தியிடம் கோகுல் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பான். சிலசமயம் வசந்தி வற்புறுத்தினால் சாப்பிடக்கூட செய்வான். வசந்தியும் மகள் நட்பை தப்பாக நினைக்கவில்லை. ஒருவேளை இருவருக்குள்ளும் காதல் இருக்குமோ என்ற எண்ணம் கூட வசந்திக்கு வந்தது.
அப்படியே அது காதலாக இருந்தாலும் என்ன தப்பு. இருவருக்குள்ளும் நல்ல நட்பு, புரிதல் இருக்கிறது. தன் மகள் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்தாள்.
நித்யாவின் அப்பா இருந்தால் தான் பயப்பட வேண்டும். அவர் கண்டிப்பாக வேற்றுஜாதி பையனை ஏற்றுக்கொள்ள மாட்டார். கொஞ்ச நாட்களாகவே ஏதோ இனம்புரியா கவலை வசந்தியின் மனதை அரித்து வந்தது.
இதைப் பற்றி நித்யாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது… நித்யாவே ஒருநாள் பேச்சை ஆரம்பித்தாள்.
“அம்மா, நானும் கோகுலும் பல வருஷம் நல்ல பிரண்ட்ஸ்.. எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவனும் என் மேல உயிரையே வச்சிருக்கான். நாங்க இரண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்டா எங்க லைப் நல்லா இருக்கும். நீ கோகுல் பேரண்ட்ஸ்கிட்ட பேசணும், கோகுலும் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன்னு சொன்னான்”
வசந்தி இதை எதிர்பார்த்து இருந்தாலும், என்ன சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. கோகுல் நல்லவன்தான், நித்யாவுக்கு பொருத்தமாகத்தான் இருப்பான். ஆனால் அவன் அப்பா அம்மா இதற்கு சம்மதிக்க வேண்டுமே, சிறுகவலை மனதில் எழுந்தது.
நித்யாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். அவர் உயிரோடு இருந்தால் அடுத்த ஜாதியில் திருமணம் செய்ய விட மாட்டார். வீடே ரணகளம் ஆகிவிடும். அதேபோல் கோகுல் அம்மா, அப்பாவும் இருந்தால்.
அந்த தடவை கோகுல் வந்தபோது மெதுவாக, “தம்பி நீங்க என்ன வகுப்பைச் சேர்ந்தவங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்கலாமா என்று நினைத்தாள் வசந்தி. அதைக் கேட்பதற்கு அவளுக்கு கூசியது.
‘எது எப்படி இருந்தாலும் கோகுலின் பெற்றோரை போய் பார்த்து பேசி அவர்கள் கருத்தையும் தெரிந்து கொள்ளலாம்… ஆட்சேபனை இருந்தால் அவர்கள் சொல்லட்டுமே அதற்குள்ளே எதற்கு குழம்ப வேண்டும்’ என்று யோசித்தாள் .
கோகுல் அன்று வந்தவன் பேசிக் கொண்டிருக்கும்போது, “ஆன்ட்டி எங்க அம்மாவ நீங்க பார்க்கலையே. இதோ பாருங்க” என்று செல்போனில் அம்மா படத்தை காண்பிக்க… அப்படியே அதிர்ந்து போனாள் வசந்தி.
“இவங்களா உன் அம்மா?” தடுமாறியவள் வாயடைத்துப் போனாள். மிகப்பெரிய அதிர்ச்சி மனதில் வந்தமர்ந்தது.
அதன் பிறகுதான் அவள் நித்யாவிடம் அவளுடைய காதலை கைவிடச் சொல்லி கெஞ்ச ஆரம்பித்தாள்.
“வேண்டாம் நித்யா, கோகுல மறந்துடு. அவன் எப்போதும் போல உனக்கு நண்பனாகவே இருக்கட்டும். நீ அவனை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படாத… அது நல்லதல்ல”
“ஏம்மா திடீர்னு மாறிட்ட. நேத்து வரைக்கும் கோகுல்கிட்ட நல்லாதானே பேசிகிட்டிருந்த அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு தானே சொன்ன. இப்ப ஏன் திடீர்னு அவன் வேண்டாம்னு சொல்ற?”
“எல்லாத்துக்கும் காரணம் இருக்கு நித்யா, தயவுசெய்து வேண்டாம். இந்தக் கல்யாணம் நடக்காதுமா, நீயா ஆசையை வளர்த்துக்காத. நான் சொல்றதைக் கேளு”
“நீ காரணத்த சொல்லுமா. உன் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்?” வசந்தி மௌனம் சாதித்தாள். எப்படி சொல்லுவாள் பல காலத்திற்கு முன் நடந்ததை.
இனி நித்யாவிடம் மறைக்க முடியாது. மறைத்தும் பலனில்லை. பல வருடங்களுக்கு முன்னால் நடந்ததை கூற ஆரம்பித்தாள் வசந்தி.
“நித்யா நான் கல்யாணமாகி இந்த வீட்டிற்கு வந்தபோது என் நாத்தனார் சாருலதா… அதான் உன் அத்தை… கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். உன் அப்பா தன் தங்கை சாருலதா பேரில் உயிரையே வைத்திருந்தார். அவள் படிப்பை முடித்ததும் பெரிய இடங்களில் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்கக ஆரம்பித்தார். ‘பரமேஸ்வரன் தங்கை கல்யாணம்னா சும்மாவா ஊரே அதிரும்’ என்பார் ஆசையோடு.
அப்போதுதான் இடி விழுந்தது போல் நடந்தது அந்த நிகழ்ச்சி. பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாப்பிள்ளை அந்தஸ்தான வீட்டுப் பையன். கண்ணுக்கு அழகாக எக்கச்சக்க வசதியோடு நன்றாகவும் படித்திருந்தான். உன் அப்பா அவன் தான் தன் தங்கைக்கு பொருத்தமான மாப்பிள்ளை என்று முடிவே பண்ணிவிட்டார்.
பெண் பார்க்கும் படலம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால் சாரு முகத்தில் சந்தோஷம் இல்லை. நாங்கள் அதை பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த வீட்டில் உங்கப்பா வச்சதுதான் சட்டம். அவரை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. ஊரே அவரைப் பார்த்து பயப்படும் போது வீட்டினர் பயப்படாமல் இருக்க முடியுமா?
ஆனால் சாரு மனதிற்குள் எதையோ வைத்து தவிப்பது எனக்கு புரிந்தது. ஆனால் அன்றைய சூழலில் உங்கப்பாவுக்கு பயந்துகிட்டு நானும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.
மறுநாள் காலை விடிந்தது. சாருவை காணவில்லை. எல்லோரும் தேடிய போது அவள் அறையில் மேஜையின் மேல் இருந்த ஒரு கடிதம் விபரத்தை எங்களுக்கு தெரிவித்தது. சாரு தன்னுடன் படிக்கும் ஒரு வேற்று ஜாதி பையனைக் காதலித்து இருக்கிறாள். அவனையே கல்யாணமும் செய்து கொண்டாள்.
அண்ணனுடைய கோபத்திற்கு பயந்து, அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று ஊரை விட்டு ஓடிப் போனாள். தன் கீழ் வேலை பார்க்கும் ஆட்கள் ஜாதிமாறி திருமணம் செய்ய நினைத்தாலே உங்க அப்பா அவர்களை அடித்து நொறுக்கி விடுவார். அப்படி இருக்கும்போது பாசம் வைத்த சொந்த தங்கை.. அவளுக்காக மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்த நிலையில் அவள் வேறு ஒருவருடன் ஓடிப்போய் விட்டாள் என்றால் சும்மா விடுவாரா. அவர் மனது கொதித்தது.
நானும், உன் பாட்டியும் பயந்து நடுங்கினோம். சாரு கதி என்ன ஆகுமோ என்று கவலையாக இருந்தது. இவரிடம் அவளோ அவள் கணவனோ சிக்கினால், இவருக்கு இருக்கும் கோபத்தில் என்ன செய்வார் என்று தெரியாது. அவள் இவர் கண்ணில் படாது நல்லபடியாக வாழ வேண்டுமென்று நாங்கள் எல்லா இஷ்டதெய்வத்தையும் வேண்டிக் கொண்டோம்.
உன் அப்பாவும் ஒவ்வொரு ஊராக தங்கையைத் தேடி ஆட்களை அனுப்பினார். கல்லூரியிலும் விசாரித்தார். அவர்கள் தெளிவாக, அவர்களுடைய சர்டிபிகேட் எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு போய் விட்டதாக கூறினார்கள். அது மேலும் அவர் கோபத்தைக் கிளப்பியது. ஒவ்வொரு நிமிடமும் சாரு இவரிடம் மாட்டி விடுவாளோ என்று பயந்து கொண்டிருந்தேன்.
வருடம் ஒன்றாகியும், அவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. என் மனதில் ஒருவித நிம்மதி பிறந்தது. எங்கேயோ அவள் நன்றாக இருக்கட்டும். அவளைப் பற்றி பேசுவதை மறந்து அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்த வேளையில் தான் மும்பையில் ஒரு ஹாஸ்பிட்டல்ல டாக்டரா இருந்த உங்க பாட்டியோட அண்ணன் மகன் சபரி போன் பண்ணினான்.
அவன் சாருவை பார்த்ததாகவும் “அவள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள்… தற்சமயம் குழந்தை உண்டாகி இருக்கிறாள்” என்று அவன் கூறிய போது நானும் உன் பாட்டியும் சந்தோஷத்தில் மிதந்தோம்.
அதேநேரம் உன் அப்பாவுக்கு தெரியக்கூடாது என்று எங்கள் முகத்தில் எந்தவித மாற்றத்தையும் காண்பித்துக் கொள்ளவில்லை அவளைப் பற்றி பேசுவதைக் கூட ஜாக்கிரதையாக தவிர்த்தோம்.
அப்படி இருந்தும் சாருவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற சந்தோஷ செய்தியை சபரி உணர்ச்சிவசப்பட்டு ஆர்வமாக எங்களிடம் சொல்ல போன் பண்ண… உன் அப்பா பேர்லல் போன்ல இதை கேட்டுட்டார். எங்களிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவர் .ஆட்களை கூப்பிட்டு மும்பைக்குப் போகச் சொல்லி அந்த ஆஸ்பத்திரி பெயரையும் கொடுத்து இவர்கள் போட்டோவையும் கொடுத்தார்.
பதறித் துடித்தோம் நானும் உன் பாட்டியும். எங்கள் இருவரையும் கண்காணித்தபடி உங்கப்பா வீட்டிலேயே இருந்தார். அவரை மீறி சபரிக்கு போன் பண்ண முடியவில்லை. அப்போது வேலை பார்த்துக் கொண்டிருந்த அமுதாவிடம் விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி அத ஒரு டிபன் பாக்ஸில் போட்டு, உங்கப்பாவுக்கு தெரியாமல் என் அண்ணன் வீட்டுக்கு கொடுத்தனுப்பினேன். அதில் அவரிடம் எப்படியாவது சபரிக்கு போன் பண்ணி சாருவையும் அவள் கணவனையும் காப்பாற்ற சொல்லிக் கேட்டிருந்தேன்.
அண்ணனும் பெரும் முயற்சிக்குப் பிறகு சபரியிடம் விஷயத்தைச் சொல்லி விட்டார். ஆனால் அதற்குள் உன் அப்பாவின் ஆட்கள் மும்பை போய் விட்டனர்.
சபரியும், பிரசவத்தில் சாருவும், குழந்தையும் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியில் எல்லோரையும் சொல்லச் சொல்லி விட்டு, அவளை வெள்ளை துணியில் சுற்றி அவர்கள் கண்ணெதிரே ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்ற அவர்கள் அதை நம்பி விட்டார்கள்.
ஆனால் சாருவின் கணவன் விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு முன், அவர்கள் கையில் சிக்கி விட்டார். ஆஸ்பத்திரி எதிரிலேயே அவரை அடித்துப் போட்டு கத்தியால் குத்தி விட்டு… நல்லவேளையாக அந்த நேரத்தில் ஒரு போலீஸ் வேன் வர ஓடிப் போய் விட்டனர் .
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த உன் மாமாவை சபரி தான் ஆட்களை வைத்து முதலுதவி பண்ணி காப்பாற்றி தன் மருத்துவமனையில் அவர் உயிருக்கு பாதுகாப்பு கிடையாது என்று பூனேயில் தன் நண்பன் மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக் கொள்ள சொன்னான்.
அவர்களும் உன் மாமாவை எப்படியோ பிழைக்க வைத்து விட்டாலும், முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தால் ஒரு கால் செயலிழந்து அவர் நடக்க முடியாமல் போனதாக பின்னர் கேள்விப்பட்டு ரொம்ப வருத்தப்பட்டோம். அதன் பிறகு சாருவும் அவள் கணவனும், குழந்தையும் எங்கோ வடக்கே போய் விட்டதாக ஒரு நண்பன் மூலம் சபரி சொல்லி அனுப்பினான்.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவும்பாங்க. அது மாதிரி ஜாதி வெறி புடிச்ச உங்க அப்பா பண்ணுன அக்கிரமத்துக்கெல்லாம், அவரால பாதிக்கப்பட்டவங்க அவர கொலை பண்ணிட்டாங்க. நிறைய விஷயம் உனக்கு விபரமும் தெரியாது நாங்களும் அத உன்கிட்ட விளக்கி சொல்லல.
இப்ப சொல்லு உங்க அத்தை எப்படி உன்ன அவ மருமகளா ஏத்துக்குவா. அவ பயந்து பயந்து தலைமறைவாக வாழ்ந்ததற்கு, அவ புருஷன் சக்கர நாற்காலியில முடங்குனதுக்கு எல்லாத்துக்குமே உங்க அப்பாதான் காரணம். அவருடைய ஜாதி வெறி புடிச்ச மிருகத்தனம் தான் காரணம். அந்த கவலையில உங்க பாட்டியும் போய் சேர்ந்துட்டாங்க.
சாரு எதுக்குமே வரல…அம்மா மட்டுமல்ல, அண்ணா செத்ததுக்கு பிறகும், அவள் இதுவரை இங்க வர நினைக்கல. உங்க அத்தையை விடு… கோகுலுக்கு இது தெரியவரும் போது அவங்க அப்பா அம்மாவை நிம்மதியா வாழ விடாத உங்க அப்பா மேல எவ்வளவு கோபம் வரும். அதுக்கப்புறம் உன்னை ஏற்றுக் கொள்வான்னு நினைக்கிறாயா?
முடிஞ்சு போச்சுன்னு நினைச்ச அத்தியாயம் திரும்ப வரும்னு நினைக்கல.. கோகுல் சாருவோட பையனா இருப்பான்னு நான் நினைச்சு கூட பாக்கல, எனக்கே இது மிகப்பெரிய அதிர்ச்சி. அப்படி இருக்கும்போது சாருவுக்கு அது எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.”
அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் நித்யா.
“அண்ணி” வாசலில் சாருவும், அப்பாவை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு கோகுலும் உள்ளே வந்தனர்.
“சாரு” என்று ஓடிவந்த வசந்தி, அவளை கட்டிக் கொண்டாள். சாரு அவளை தடுக்கவில்லை.
“சாரு நீ என்ன வெறுக்கலையா? உனக்கு என் மேல கோபம் இல்லையா? நீ எப்படி இவ்வளவு நாள் கழிச்சு இந்த வீட்டுக்கு வந்திருக்க. இந்த ஜென்மத்தில் உன்னை சந்திப்போம்ன்னு நினைக்கவே இல்லை” என்று உணர்ச்சிவசப்பட்டவள் கண்ணில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் வழிந்தது.
“அண்ணி அழாதீங்க! நீங்க எப்பவுமே ஆரம்ப காலத்தில் இருந்தே என் மேல அன்பைத்தான் பொழிஞ்சீங்க. நீங்களும் அம்மாவும் தவிச்ச தவிப்பு எனக்கு தெரியும். இவருக்கு இப்படி ஆனத கேள்விப்பட்டு நீங்களும் அம்மாவும் துடிச்சு போனத எனக்கு சபரி அத்தான் சொன்னாரு.. மொதல்ல உங்க மேல கோவமா இருந்தேன். உங்க ரெண்டு பேருடைய நிலைமையை யோசிச்சு ரொம்ப வருத்தப்பட்டேன். நித்யாவைப் பத்தி கோகுல் சொன்னான். ஆனா அவ என்னோட அண்ணன் மகளா இருப்பான்னு நான் நினைக்கல”
“சாரு… உங்க அண்ணன் உனக்கு பண்ணினது மிகப்பெரிய கொடுமை. ஜாதி வெறி பிடிச்சு அலைஞ்சாரு. எத்தனை பேருடைய உயிர, வாழ்க்கைய பறிச்சிப்பாரு.. அதனால அவரு கொலையாகி செத்தப்ப நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடலை. எத்தனை பேருடைய கண்ணீருக்கு காரணமாய் இருந்திருக்காரு”
“நீங்க சொன்ன மாதிரி முதல்ல எனக்கு ஒரு வேகமும் ஆத்திரமும் வந்தது நிஜம் தான். அண்ணன் எங்களை நல்லபடியா நிம்மதியா வாழ விடல. இவரை காப்பாத்த எவ்வளவு போராடி இருப்பேன், கோகுலை நல்லபடியாக வளர்க்க எவ்வளவு போராடி இருப்பேன் என்பதெல்லாம் எனக்கு தான் தெரியும். ஆனா எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்ல அண்ணி, அண்ணன் செஞ்சதுக்கு நீங்க என்ன செய்வீங்க”
மேலும் கோகுலுக்கு இந்த ஊர்ல காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சதும்… நானும் இவரும் உங்கள பார்க்க வரணும்னு துடிச்சோம். ஆனால் இந்த வருஷம் ஆஸ்திரேலியா போக வேண்டியது இருந்ததால் உங்கள பாக்க முடியல. இப்ப போனவாரம் தான் திரும்பி வந்தோம். கோகுல் எல்லா விபரத்தையும் சொன்னாள் .
அத்தையின்னு தெரியாம உங்ககிட்டயும்.. அத்தை பொண்ணுன்னு தெரியாமல் நித்யாகிட்டயும் பழகிட்டான். அதுதான் ரத்த பந்தம் என்பது. நாங்க அவனுக்கு நித்யாவை அறிமுகப்படுத்துவதுக்கு பதிலா அவன் எங்களுக்கு நித்யாவை அறிமுகப்படுத்தி பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துட்டான். அதற்கு மேல எங்களால ஊர்ல இருக்க முடியல.. உடனே என் மருமகளையும் உங்களையும் பார்க்க ஓடி வந்துட்டோம்”
பிரமை பிடித்தவள் போல் இருந்த நித்யாவை சாரு அணைத்துக் கொண்டாள். அவள் பிடியிலிருந்து விலகி, நித்யா தன் மாமா கால்களில் விழுந்தாள், “மாமா எங்களை மன்னிச்சிடுங்கள் எங்க அப்பாவுடைய கொடுமையான செயல்னால தான் உங்களுக்கு வாழ்க்கை பூரா இப்படிப்பட்ட நிலைமை. நீங்களும் அத்தையும் சந்தோஷமா வாழ வேண்டியத எங்கப்பா கெடுத்திட்டாரு. அதுக்கு நாங்க உங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்றதுன்னு தெரியல. நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் அதை எடுத்துக்கிறேன்” என்றாள் அழுதபடியே. நித்யாவிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தையை வசந்தி கூட எதிர்பார்க்கவில்லை.
வசந்தி : “தம்பி! நீங்களை மன்னிச்சிடுங்கள். நித்யா சொல்லுவது சரிதான். உங்களுடைய அன்புக்கு நாங்கள் கொஞ்சமும் தகுதியாக இல்ல. கோகுல் யாருன்னு தெரியாம பழகிட்டோம்”
சாருவின் கணவன் ராம், “இருங்க.. இருங்க.. எதுக்கு இப்படி எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு பேசுறீங்க! அவர் ஒருத்தர் பண்ணின தப்புக்கு நீங்களெல்லாம் என்ன செய்வீங்க? கோகுல் இங்க காலேஜ்ல சேர்ந்ததுமே நான் அவன் அம்மாவுக்கு தெரியாம நித்யாவை பத்தி அவன்கிட்ட சொன்னேன்”
“சாரு பிறந்த வீட்டுக்குப் போக முடியலையேன்னு மனசுக்குள்ள எவ்வளவு வருத்தத்தை வச்சிருக்காங்கிறது எனக்கு தெரியும். கோகுல், நித்யா, சேர்ந்து வாழ்ந்தா அதைவிட பெரிய சந்தோஷம் அவளுக்கு கிடையாது. வாழ்க்கையில இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு அது ஒரு மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்ன்னு தோணுச்சு! அந்த சந்தோஷத்தை அவளுக்கு கொடுக்கணும் தான் நானும் கோகுலும் ரகசியத்தை காப்பாத்துனோம்”.
“என்ன உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று சாரு கணவனை முறைத்தாள்
“இரும்மா இப்ப உங்க அண்ணிய பார்த்ததும் ரெண்டு பேரும் எவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் பேசினீங்க, இது முன்னாலேயே தெரிஞ்சா இந்த சஸ்பென்ஸ் திரில் கிடைக்குமா எங்களுக்கு”
“கோகுல் நீ பாவம்டா நானும் உங்க அம்மாவும் காதலிச்சப்ப ஒவ்வொரு நாளும் திக் திக்ன்னு இருந்தது தெரியுமா? உங்க மாமாவுக்கு பயந்துகிட்டு சினிமா மாதிரி ஒவ்வொரு ஊரா ஓடி எஸ்கேப் ஆகி… இதயத்தில் தில் வேணும். உங்க காதல் கொஞ்சம் சப்புன்னு தான் முடிஞ்சு போச்சு! அது ஒன்னு தான் எனக்கு லேசாக வருத்தம் .”
“அப்பா என்னால் எல்லாம் உங்களை மாதிரி ஓட முடியாது.. பேசாம நித்யாகிட்ட இன்னொரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோன்னு பை சொல்லிட்டு போயிருப்பேன். “
எல்லோரும் இருப்பதை மறந்து , “சொல்லிடுவியா? நீ மட்டும் அப்படி சொல்லிடுவியா?” என்று நித்யா அவனை நாலைந்து அடி செல்லமாய் போட
“என்னம்மா நித்யா! எங்க வீட்டுக்கு வர ரெடியா? மிச்சம் மீதி அடியெல்லாம் எங்க வீட்டுக்கு வந்தபிறகு போடு”
எல்லோரும் சிரிக்க ரொம்ப நாளைக்கு பிறகு அந்த மாளிகை கலகலவென சிரிப்பை அணைத்துக் கொண்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings