in

நிலாவின் அம்மா (சிறுகதை) – ✍ வித்யா குருராஜன், புதுச்சேரி

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பெரிய வங்கியின் இயக்குனர்களில் ஒருத்தியான லலிதா, வழக்கமான வேலை நாளினை முடித்துவிட்டுச் சோர்வாய் வீட்டுக்கு வந்தாள். சி.ஏ முடித்த திறமைசாலி அவள். பெரிய பொறுப்புக்குத் தன் புத்திக்கூர்மையால் சிறு வயதிலேயே உயர்ந்துவிட்டவள் அவள்.

மாலை அவள் பணிமுடித்து வீடு திரும்புகையில் வழக்கமாக வீட்டில் வயதான மாமியார் சாவித்திரியும், 4 வயதாகும் மகள் நிலாவும், நிலாவைப் பகலெல்லாம் வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளும் பணியில் இருக்கும் நானி யோகாவும் தான் இருப்பார்கள்.

அன்று அத்தி பூத்தது போல் அவள் கணவர் ரகுவும் இருந்தார். இருவரும் கருத்தொருமித்த தம்பதியர் தான். ரகுவும் ஒரு பெரிய கம்பெனியில் ஆடிட்டர். வருமானத்துக்குப் பஞ்சமே இல்லை.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, மிகவும் மகிழ்ச்சியான குடும்பம் தான். ஆனால் உண்மையில் அப்படி அல்ல. நிலா ஆட்டிசம் நிலையில் உள்ள குழந்தை. 4 வயதாகியும் அவள் இன்னும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பள்ளிக்கு அனுப்பாமல் நானி போட்டு வீட்டில் தான் வைத்திருக்கிறார்கள்.

நிலாவின் நிலை கண்டு லலிதாவும் ரகுவும் வருந்தாத நிமிடங்களே இல்லை. ஆனால் சாவித்திரியின் பார்வை, இருவரும் பணத்திற்குத் தரும் முக்கியத்துவத்தைப் பிள்ளைக்குத் தரவில்லை என்பதுவே.

ரகுவின் சம்பாத்தியம் போதும், நாம் வீட்டில் இருந்து நிலாவைப் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனம் இல்லாமல் லலிதா இருக்கிறாள் என்பதே அவளைப் பற்றிய சாவித்திரியின் பார்வை. ஆனால் உண்மையில் லலிதா வேலைக்குப் போவதற்கான காரணம் இரண்டு.

  1. ஆட்டிசம் நிலை குழந்தைகளில் சிலர் எவரேனும் ஒருவரிடம் மிகுந்த ஈடுபாடு கொள்வர். அப்படித்தான் இந்த நானி யோகா மீது நிலாவுக்குப் பற்று அதிகம். யோகாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் ஏங்கிப்போய்விடுவாள். அதனால் தான் யோகாவை பெரிய தொகை ஊதியமாகத் தந்து நானியாக வைத்திருக்கிறாள். பகலெல்லாம் நிலா யோகாவுடன் தான் இருக்க விருப்பப்படுகிறாள். அதற்குத் தடையாய் இருக்க வேண்டாம் என்று தன் மனம் வலித்தாலும் மகளுக்காக வழி விட்டு வேலைக்குப் போகிறாள் லலிதா.
  2. சிறு வயதில் இத்தகைய உயர் பொறுப்பும் பதவியும் கிடைப்பதே பெரிய விஷயம், சராசரிப் பெண்ணாய் இல்லாமல் சமாளிக்கும் பெண்ணாய் இரு என்று கணவர் ரகு தந்த ஊக்கத்தினால் வேலையில் தொடருகிறாள் லலிதா.

அன்று மாலை பணிமுடித்து வீடு வந்து சேர்ந்த லலிதாவை நிலா, யோகா, சாவித்திரி, ரகு நால்வரும் அதீத மகிழ்வுடன் வரவேற்றனர். சாவித்திரி பாயசமெல்லாம் செய்து வைத்திருந்தார்.

மகிழ்ச்சிக்குக் காரணத்தை லலிதா கேட்டபோது, “நிலா இன்னிக்கு முதல் முறையா அம்மான்னு சொல்லிட்டா!!” என்று யோகா ஆத்மார்த்த மகிழ்ச்சியோடு சொன்னாள். அனைவரும் கைதட்டி குதூகலமாய்க் கத்தினர்.

அவளைப் பேச வைப்பதற்காய் மாதக்கணக்கில் பிரும்ம பிரயத்தனம் நடந்தது. அதுவே அவர்கள் இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைவதன் காரணம். ஆனால் அதைக் கேட்ட லலிதா முகத்தில் மகிழ்ச்சியின் எந்த அறிகுறியும் இல்லை!

கவலை ரேகையைப் படரவிட்டுக் கொண்டு, “அப்படியா..” என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு உள்ளே சென்று விட்டாள். சாவித்திரி, ரகு, யோகா மூவருக்கும் ஒரு மாதிரி ஆனது.

மாமியார் சாவித்திரி மனதுக்குள் பொருமினார். ‘[நிலா பேசுவாளான்னு பேசிருக்கா. இவளப் பாரு! கொஞ்சம் கூட சந்தோஷம் இல்ல. இவளுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு. வேலைய கட்டிக்கிட்டு அழ தான் லாயக்கு. குழந்தை மேல பாசமும் அக்கறையும் துளியும் இல்ல’ என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தார். அவரின் பார்வையில் லலிதா ஒரு அக்கறையற்ற சிறப்புத்தாய்.

யோகாவோ லலிதாவின் ரியாக்‌ஷனைக் கண்டு நொந்து போனாள். நிலா பேசியதில் யோகாவுக்கும் பெரியபங்கு உண்டு. அவள் ஆட்டிசம் பிள்ளைகளைக் கையாளுவதில் பிரத்தியேக பயிற்சி பெற்றவள்.

கடந்த சில மாதங்களாக ஸ்பீச் தெராபியின் படி பயிற்சிகள் அளித்து, பாராட்டத்தக்க வகையில் முயற்சிகள் செய்து ஒருவழியாய் முதல் வார்த்தையினை வாயிலிருந்து வெற்றிகரமாய் வரவழைத்துவிட்டாள் யோகா. அதற்கு சிறு பாராட்டு கூட தெரிவிக்காமல் லலிதா சென்றது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.

‘எத்தன செஞ்சாலும் திருப்திப்படுத்த முடியாத ஜீவன்’ என்பது போல் யோகா லலிதாவைப் பார்த்தாள்.

கணவர் ரகுவோ, நிலா ஒரு வார்த்தை பேச மாட்டாளா என்று எப்படியெல்லாம் இவள் ஏங்கினாள், எத்தனை வேண்டினாள், ஆனால் எந்த சந்தோஷத்தையும் காணுமே, வங்கியில் ஏதேனும் பிரச்சினையோ என்று நினைத்தார். மனஉளைச்சலில் இருக்கிறாளோ என்பதுபோல் லலிதாவை ரகு பார்த்தார்.

இப்படி மூவரும் மூவிதமாய் லலிதாவைப் பார்க்க, லலிதாவோ நேராக தன் அறைக்குச் சென்று தாழிட்டாள். அங்கிருந்த ஜன்னல் வழி தோட்டத்தில் தனக்கு நெருக்கமான ஒரே பொம்மையான அந்த கோழிக்குஞ்சு பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலாவைப் பார்த்துச் சத்தமில்லாமல் ஓவென்று அழுதாள்.

தான் உயிரையே வைத்திருக்கும் மகள் நிலா, பேசுவாளா என்று பேசியிருக்கிறாள்! முதல் வார்த்தையாக “அம்மா..” வென்று சொல்லியிருக்கிறாள். ஆனால் அவள் அம்மாவென்று அழைத்தது தன்னைப் பார்த்து இல்லையே என்று நினைத்து மனமொடிந்து தான் போனாள் லலிதா! அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை!

மனைவி என்ற இடத்தைக் கூட ஒரு பெண்ணானவள் விட்டுக் கொடுத்து விடுவாள். ஆனால் அம்மா என்கிற இடத்தை எத்தனை கஷ்டம் வந்தாலும் ஒரு பெண்ணால் விட்டுக் கொடுக்கவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாதல்லவா! ஆனால் லலிதாவின் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பாக இருக்கிறதே!

தெரிந்தே அவள் தன் தாய்மையைப் பகிரும் சூழலும் நிர்பந்தமும் வந்துவிட்டதை எண்ணி நொந்தாள். மனம் புழுங்கியது. எப்படி அவளால் சிரித்து மகிழ முடியும்? கடவுளைச் சபித்தது அந்த தாயின் மனம். அழுகைக்கு அணை கட்ட இயலவில்லை.

அவளின் உணர்ச்சி வெடிப்புகளை உணராமல், பொறுப்பற்ற தாயாக சாவித்திரியும், திருப்தி அடையாத எஜமானியாக யோகாவும், மன உளைச்சல் கொண்டவளாக ரகுவும் அவளைப் பார்த்தார்கள். பார்வைகள் பலவிதம்!! ஆனால் நிஜம் ஒரே விதம் தான் அல்லவா!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கல்யாணமாம் கல்யாணம் (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன் 

    அகதி (சிறுகதை) – ✍ கற்பகம்.செ, சென்னை