in ,

நேரம் நல்ல நேரம் ❤ (சிறுகதை) – Writer Susri, Chennai

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில்  புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

இன்னிக்காவது சக்சஸ் ஆறதா பாப்போம். 6.30 மணிக்குள்ள குளிச்சு, இருக்கறதுல நல்ல டிரஸ் மாட்டிண்டேன். கண்ணாடி முன்னால என் முகத்தை சரி செய்து கொண்டிருந்தேன். அப்பா ஹால்ல உக்காந்து டி.வீ.யை அலற விட்டுண்டிருக்கார். தினம் இதே வேலை 7.30க்கு தானே தமிழ் நியூஸ், அப்பா என்னடான்னா 6.30க்குள்ளே ரெடியாகி டி.வீ். முன்னால உக்காந்துடுவார்.

இதோ யாரோ ஒரு ஜோசியர் நம்ம நேரம் காலத்தை விலாவரியா அலசிண்டிருக்கார். காதுல கட்டாயமா பாய்ந்தது அந்த குரல்,

“சோபக்கிருது வருடம், ஆவணி மாதம், பதினொன்றாம் தேதி,திங்கள் கிழமை”. அந்த குரல் தலைக்குள் நுழைந்து என்னவோ செய்தது. உள்ளே திரும்பி போறப்ப, டி.வீ.ல இருந்து,

“கடக ராசிக் காரர்களே” அவர் குரல் கணீரென கூப்பிட்டது,

ஆமாம் எனக்கு கடக ராசிதான். என்ன சொல்லப் போறார், ஒரு பயமும், ஆர்வமும் தொற்றியது, கதவோரமாய் வந்து நின்றேன் கைல சீப்போட.

“உங்கள் ராசிப்படி இன்றைய தினம் நீங்கள் அழுததை நினைத்து சிரிக்க வைக்கும், சிரித்ததை நினைத்து அழவும் வைக்கும். கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்னு சிந்திச்சிட்டே இருப்பீங்க”.  ஆமாம் கொஞ்சம் சரியாத்தான் சொல்றார்.

மேலே கொஞ்சம் ஆர்வத்தோட செவி மடுத்தேன். “சுக்ராதிபதி 4ம் இடத்தில் அமர்ந்திருந்தாலும், அஷ்டமத்து சனி உக்கிரமாய் உக்காந்திருக்கார், அதனால உங்களை அலைய வச்சு அழவச்சு பாக்கறது சனியோட வேலை, ஆனா அதையும் மீறி சுக்கிரன் பலமா உக்காந்திருக்கறதனால இன்றைய நாள் நல்ல நாளாகவே அமையும்”.

என்னையும் அறியாமல் நிம்மதி பிறந்தது, புன்னகையுடன் கண்ணாடிக்கு முன்னால திரும்ப வந்து தலை வாரிக் கொண்டேன்.

இந்த நியூஸ் முடியறதுக்குள்ளே வெளியே கிளம்பிடணும், அப்பதான் அப்பா டி.வி. தவிர வேற எதையும் பாக்க மாட்டார், இல்லைன்னா அவரோட ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டுதான், வெளியே போக முடியும்.

கால்ல ஷூ மாட்டறப்ப, இன்றைய நல்ல நேரம் காலை 9 லிருந்து 10 வரைனு ஜோதிட முனைவர் சொல்றது கேட்டது. அடுத்து அவர் வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் ஜோதிட முனைவர்’ன்றப்ப, “அம்மா போயிட்டு வரேன்”னு சொல்லி வாசப் படியை தாண்டிட்டேன்.

இவ்வளவு சொன்னேனே நான் யாருனு விவரம் சொல்லலையே. நான் வெங்கடேசன், இன்ஜினியரிங் படிச்சிட்டு மூணு வருஷமா வேலை கிடைக்காம சுத்திண்டிருக்கேன்.

சென்னைதான், திருவல்லிக்கேணில வீடு. அப்பா கைலாசம், ரிடயர்ட் ஹெட்மாஸ்டர் கார்பரேஷன் ஸ்கூல்ல இருந்து. பென்ஷன் வரதனால வாழ்க்கை ஓடறது. அம்மா அமிர்தவல்லி கட்டுக்கோப்பா குடும்பம் நடத்த தெரிஞ்ச பெண்மணி. அவ்வளவுதான் குடும்பம்

ராயப்பேட்டைல ஒரு மல்டி நேஷனல் சாஃப்ட்வேர் கம்பெனில இன்னிக்கு இன்டர்வ்யூ. ஏழுமலையானே இந்த வேலையாவது கிடைச்சா அப்பா, அம்மாக்கு பாரமா இல்லாம இருப்பேன். சட்டைப் பையை தொட்டுப் பாத்துண்டேன், போன வாரம் அம்மா கொடுத்த பணத்துல இன்னும் 300 ரூபா மிச்சம் இருக்கு.

பைல பணம் பாத்தவுடனே வயித்துல பசி தோணித்து. அதிகம் யோசிக்காம ரத்னா கபேல நுழைஞ்சேன். டிபன், காபி ஆனாதானே புத்துணர்வோடஇன்டர்வ்யூ அடெண்ட் பண்ண முடியும்னு நானே சமாதானம் பண்ணிண்டேன்.

மெதுவா நடந்து அண்ணா சமாதிகிட்ட இருக்கற பஸ் ஸ்டாண்ட் போயிட்டேன். காலைல இந்த பீச்சை ஒட்டி நடக்கறது கூட மனசுக்கு ஒரு புத்துணர்ச்சிதான். நடக்கறப்பவே ஏதேதோ எண்ணங்கள். என் பேட்ச்ல படிச்சவங்கள்ல முக்கால்வாசி பேர் வேலைல இருக்காங்க.

நாங்க ஒரு நாலஞ்சு பேர்தான் இப்படி வேலை கிடைக்காம, அந்த டி.வி. ஜோதிடர் சொல்ற நல்ல நேரம் இப்பவாவது நடக்குமா பாப்போம். எனக்கு சிரிப்பு வந்தது நமக்கும் மெதுவா இந்த ஜோசியம், ஜாதகத்துல நம்பிக்கை வந்துடும் போல இருக்கே.

காலியா நின்ன பஸ்ல ஏறிண்டேன், கொஞ்ச நேரத்துல அவசரமா ஓடி வந்த ஒரு பெண் ஜன்னல் பக்கம் முன்னால இருந்த என்னை பாத்து, “சார் இந்த பஸ் ராயப்பேட்டை போகுமா?”னு கேட்டா.

கொஞ்ச நேரம் அந்த அழகான வேர்வை வழிந்த முகத்தை பார்த்து பேச்சு வரலை. சுதாரித்துக் கொண்டு “போகும் மேடம்”னேன்.

இந்தக் கால மாடர்ன் உடை இல்லாம பளிச்னு அழகான புடவைல வந்திருந்தாள் அந்தப் பெண். கைக்குட்டையால் வேர்வையை துடைத்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய மனசை கஷ்டப் பட்டு கட்டுப்படுத்தினேன்

சென்னையின் சந்து பொந்தெல்லாம் நுழைந்து கடைசியில் ராயப்பேட்டை அடைந்தது அந்த மாநகர பஸ். இப்ப பஸ்ல கூட்டம் அந்த பெண்ணை பாக்க கூட முடிலை, ஒரு வழியா நான் இறங்கி நின்னேன். கொஞ்ச நேரத்தில் கூட்டத்தை கிழித்துக் கொண்டு அவளும் இறங்கினா. அனிச்சையா ஆடைகளை திருத்திக் கொண்டே என்னை பாத்து புன்னகை செய்தாள்.

அருகில் வந்து அந்த காகிதத்தை காட்டினாள், “இந்த அட்ரஸ் எப்படிப் போகணும் தெரியுமா?”

“இன்டர்வ்யூவா, நானும் அதே இடத்துக்குதான் போறேன், வாங்க போகலாம்”

ஜாஸ்தி தூரமில்லை பக்கத்துலதான். நடந்து அந்த நெடிந்துயர்ந்த கட்டிடத்தின் 6வது மாடிக்கு போய் காத்திருந்த 15 பேருடன் நாங்களும் உக்காந்தோம். சுவற்றில் கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. ஜோதிட முனைவர் சொன்ன நல்ல நேரம்.

10 நிமிட காத்திருப்புக்கு பின் “வெங்கடேசன்”னு அழைப்புக்கு நான் எழுந்தேன். உள்ளே போகு முன் அந்த பெண் என்னைப் பாத்து “ஆல்த பெஸ்ட்” சொன்னா.

உள்ளே 4 பேர் கொண்ட பேனல். ஏதேதோ கேட்டார்கள். தெரிந்ததை சொன்னேன்.

“ஏன் மூணு வருஷமா வேலை எதுவும் பாக்கலை”னு கேட்டாங்க.

சிரித்துக் கொண்டே “என் நேரம் இதுவரை வரலை, இப்பதான் வந்திருக்கு போல”ன்னேன்.

“ஓகே மிஸ்டர் வெங்கடேஷ் வெளியே வெயிட் பண்ணுங்க.”

ஓ பாதி கிணறு தாண்டிட்டேன் போல. வெளியே வந்து அவர்கள் காட்டிய வேறொரு அறையில் அமர்ந்தேன். ஏற்கனவே அங்கு ரெண்டு பேர். இன்னொரு பத்து நிமிடத்தில் மற்றுமொரு பெண், 4 பேர் ஆச்சு. எத்தனை வேகன்சியோ தெரியலை.

கடைசியா அந்த பெண் அறையில் நுழைந்தவுடன் என் மனம் சாந்தி அடைந்தது. ஒரு அறிமுக புன்னகையுடன் என் அருகே வந்து அமர்ந்தாள்.

“என் பேர் வெங்கடேசன் பி.இ.மெக்”னேன்.

அந்த பெண் சிரித்துக் கொண்டே “தெரியும் உங்களை உள்ளே கூப்படறப்ப கேட்டேன்”

“உங்க பேர் சொல்லலையே”

“நான் வைஷாலி, பி.எஸ்சி. கம்ப்யூட்டர்.”

இப்ப ஒரு முடியிழந்த எழில் தலையார் வெளில வந்து எல்லாரையும் இன்னொரு விஸ்தாரமான குளிர்சாதன சொகுசு அறைக்கு அழைத்துச் சென்றார். வாசலிலேயே ‘மேனேஜிங் டைரக்டர் செல்வரங்கன்’னு போர்டை பாத்தேன். அழைத்துச் சென்றவர் மரியாதையுடன் கதவை தட்டி உள்ளே நுழைந்தார். நாங்கள் ஐவரும் பின்னாலேயே.

சுழல் நாற்காலியில் கம்பீரமாய் சிரிக்கும் எம்.டி.யை பாத்து, “சார் இந்த 5 பேர் நம்ம டெக்னிகல், ஹ்யூமன் ரிசோர்ஸ் டீம் செலக்ட் பண்ணின பேட்ச்”

“ஓ குட் கங்ராசுலேஷன்ஸ் பிரண்ட்ஸ், நாம சேந்து உழைப்போம் இது இனிமே உங்க கம்பெனி. குறை சொல்ல இடம் வைக்க மாட்டேன், எதுவாயிருந்தாலும் என்னை அணுகலாம். ஆல் த பெஸ்ட். புதன் கிழமை நல்ல நேரத்துல இருந்து உங்க வேலையை தொடரலாம்.”

அவ்வளவுதான், நம்ப முடியலை. 5 பேருக்கும் வேலை சேர்தலுக்கான ஆர்டர் வெளியே கொடுக்கப்பட்டது. வேற வேற வேலை வேற வேற சம்பள பேக்கேஜ், ஆனால் எல்லாருக்கும் திருப்தி. வைஷு எனக்கு வாய் கொள்ளா சிரிப்புடன் கை கொடுத்தாள்.

“வாங்களேன் ஒரு காபி சாப்பிடலாம்” தைரியமா கூப்டேன். மெட்ராஸ் காபி ஹவுஸ்ல  ரெண்டு காபி,  உக்கார ஒரு சின்ன பென்ச். ஒட்டிதான் உக்காரணும்.

ஒத்தரை ஒத்தர் தெரிஞ்சிக்க கொஞ்ச நேரம். வைஷுவோட ஊர் பாலக்காடு. இங்கே திருவல்லிக்கேணில அத்தை வீட்ல அவ அப்பாவும், அவளுமா வந்திருக்காங்க. சனிக்கிழமை திரும்ப போக பிளான். இப்ப புதன்கிழமையே ஜாயின் பண்ணணும்ன்றதாலே அப்பாவை கன்வின்ஸ் பண்ணணும்.

“அம்மா வேலை கிடைச்சாச்சு, நாப்பதாயிரம் ரூபா சம்பளம் அம்மா”

முகம் பூரா தாமரையா மலர “தெரியுண்டா, இந்த ஆவணில உனக்கு நல்ல நேரம் பிறக்கறதுனு சுந்தரேச குருக்கள் சொன்னார். வேலை மட்டுமில்லை கல்யாண யோகமும் கூட”

”போம்மா அதுக்கென்ன அவசரம்.”

“உங்கப்பாவுக்கு இப்பதான் ஃபோன் வந்தது, நம்ம தூரத்து சொந்தம், பாலக்காடுல வசதியான குடும்பம். அந்த பொண்ணோட அப்பா சாயந்தரம் நம்ம வீடு தேடி வரார். பொண்ணு பேரு கூட என்னவோ சொன்னாளே…. ம் வைஷாலி”

எல்லாம் நேரம்ன்றது நிஜம்தானோ

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முள்ளங்கி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 3) – முகில் தினகரன்