in ,

முள்ளங்கி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில்  புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

அம்மா கூப்பிட்டார்கள்.

‘ராஜூ இங்கே வா. எதிர்த்த வீட்டு மாமி ஐநூறு ரூபா கைமாத்து  கேட்டிருந்தாங்க. அப்போ என்கிட்டே சில்லறை இல்லாததால மாத்தி வைக்கறேன் மாமி, அப்புறமா வந்து வாங்கிக்கோங்கனு சொல்லியனுப்பிச்சிட்டேன். இதோ, இந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக்கிட்டு போய் சில்லறையா மாத்திக்கிட்டு வா, போ…‘ என்று விரட்டினார்கள்.

நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். எந்த கடையில் போய் கேட்டால் கையை விரிக்காமல் கொடுப்பான் என்று யோசித்தபடி ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே நடந்தேன்.

மிக்ஸி ரிப்பேர் கடை, பெட்டிக் கடை, இஸ்த்ரி கடை, சலூன், பரோட்டா ஹோட்டல், அலுமினிய பாத்திரக் கடை, மளிகை கடை…. சட்டென நின்றேன்.

மளிகை கடையில் கண்டிப்பாக தருவார்கள் என்று என் உள்மனது சொல்லவும் சைக்கிளை நிறுத்தி விட்டு போனேன்.  அண்ணாச்சி மளிகையில் எல்லாமே கிடைக்கும். மளிகை சாமான்களை பெரும்பாலும் இங்கேதான் வாங்குவேன். காய்கறிகளும் இங்கே கிடைக்கும்.

ஒரு பையன் ஓடியோடி பொட்டலம் கட்டிக் கொண்டிருந்தான். அண்ணாச்சி அப்போதுதான் சாப்பிட்டிருப்பார் போல, உள்ளேயிருந்து வாயையும் கையையும் துடைத்துக் கொண்டு ஏப்பம் விட்டபடி வந்து கல்லாவில் உட்கார்ந்தார்.

‘அண்ணாச்சி கோவிச்சுக்காமா ஒரு ரெண்டாயிரத்துக்கு சில்லறை குடுங்களேன்’  என்றேன்.

‘தம்பி கோவிச்சுக்காம நீங்க ஏதாவது சாமான் வாங்குங்க. சில்லறை தர்றேன்‘ என்று அவரும் நக்கலாய் பதில் சொன்னார்.

அண்ணாச்சி வியாபார நோக்கத்திலேயே எல்லாத்தையும் பார்ப்பார், அது எனக்கும் தெரியும். இப்படி செய்கிறாரே என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டாலும், சில்லறை இல்லாமல் போனால் அம்மா வேறு ‘உனக்கு ஒரு சில்லறை வாங்கக் கூட துப்பில்லை’ என்று திட்டுவார்களே என்று யோசித்தபடி கடையில் இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டே வந்தேன்.

வெங்காயம், தக்காளி, காய்கறிகளில் வந்து என்  பார்வை நின்றது. சட்டென நேற்று அப்பாவை அம்மா திட்டிக் கொண்டிருந்தது இப்போது ஞாபகத்தில் வந்து நின்றது.

‘இப்படி காய்ஞ்சு போன முள்ளங்கியை யாராவது வாங்கிட்டு வருவாங்களா… தழையோட இருந்தாதானே ஃப்ரெஷா இருக்கும். அந்த சின்ன நுணுக்கம்கூட உங்களுக்கு இல்லை. உங்களை கட்டிக்கிட்டு வாழணும்னு என் தலை எழுத்து… வேறே காய் எதுவும் வேற வீட்டிலே இல்லை. சரி போங்க, இதையே சாம்பார் வைக்கறேன். தின்னுங்க. எல்லாம் என் தலையெழுத்து… ‘

கடையில் பிரம்பு கூடையில் பச்சை பசேலென்று தழைகளுடன் ஒரு கோணி சாக்கை விரித்து வைத்து அதன்மேல் முள்ளங்கியை அடுக்கிவைத்து தண்ணீரும் தெளித்து வைத்திருந்தார்கள்.

‘இதை வாங்கிட்டு போய் அம்மாவை அசத்த வேண்டும்‘ என்று முடிவு செய்தபடி தழை ஃப்ரெஷாய் உள்ள மூன்று முள்ளங்கிகளை எடுத்துக் கொடுத்து,  ‘அண்ணாச்சி இதை எடை போடுங்க, பிடிங்க நோட்டு, கொடுங்க மீதி சில்லறை’ என்றேன்.

எடை போட்டுவிட்டு ‘ இருவது ரூபா தம்பி, பை இருக்கா ‘ என்று அவர் கேட்க

‘பை இல்லை கொடுங்க கையிலேயே பிடிச்சிக்கிட்டு போறேன்’ என்று சொல்லி முள்ளங்கியையும் அவர் கொடுத்த மீதியையும் வாங்கி சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு திரும்பினேன்.

வீட்டை நெருங்கி சைக்கிளை ஸ்டேன்ட் போடும்போது அம்மாவின் சத்தம் கேட்டது.

‘ஏங்க உங்களுக்கு அறிவே கிடையாதா… நேத்து காஞ்சிப்போன முள்ளங்கியை வாங்கிட்டு வந்திருக்கீங்களேனு சத்தம் போட்டேன், நிஜம்தான். அதுக்காக இன்னிக்கும் பிரஷா இருக்குன்னுட்டு முள்ளங்கியே வாங்கிட்டு வந்திருக்கீங்களே, என்னத்தைச் சொல்ல.. வேற காய்கறிகளே உங்க கண்ணுலே படலையா…. ஒரு பீர்க்கங்காய், ஒரு முருங்கைக்காய், ஒரு வெண்டைக்காய்… ஒன்னு சரியில்லைன்னு சொன்னா மறுநாளும் அதையேத்தான் வாங்கணுமா… சரி போங்க, என் முன்னால நிக்காதீங்க.  இன்னிக்கும் வேற காய் எதுவும் வீட்டிலே இல்லை, நேத்திக்கு முள்ளங்கி சாம்பார், இன்னிக்கு முள்ளங்கி புளிக்குழம்பு. நாளைக்கும் இதையே வாங்கிட்டு வாங்க, முள்ளங்கில புதுசா ஏதாச்சும் பண்ண முடியுமானு கூகுள்ல தேடிப் பார்க்கறேன்.  எல்லாம்  என் தலை எழுத்து’

ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போனேன். நாமும் முள்ளங்கியை கொண்டு போய் கொடுத்தால் நம்மையும் அம்மா வறுத்தெடுத்து விடுவார்கள், பேசாமல் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு, சட்டென அந்த மூன்று முள்ளங்கிகளையும் வெளியே இருந்த கார்பொரேசன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு உள்ளே போனேன்.

பணத்தை வாங்கிய அம்மா எண்ணிப் பார்த்து விட்டு,  ‘ஏன்டா இருபது ரூபா கம்மியா இருக்கு‘ என்று கேட்க,

‘அம்மா ஏதாவது வாங்கியே தீரனும், அப்போதான் சில்லறை தருவேன்னான் கடைக்காரன், சரி வெயிலுக்கு இதமா இருக்குமேன்னு ஒரு மோர் குடிச்சிட்டு மீதி சில்லறை வாங்கிட்டு வந்தேம்மா’ என்று சமாளித்தேன்.

‘சமர்த்து… என் புள்ளையாச்சே… இப்படித்தான் சமர்த்தா இருக்கனும்பா உங்கப்பாவுக்கு புத்தி சொல்லு’ என்றபடி அம்மா நகர, அதே நேரம் எதிர்த்த வீட்டு மாமி உள்ளே வந்தார்கள் கையில் நான் வீசிஎறிந்த முள்ளங்கியுடன்.

வரும்போதே ’பொன்னி, நல்லா ஃப்ரெஸ்ஸாதானே இருக்கு முள்ளங்கி. ஏன் ராஜூ இதை குப்பைத்தொட்டில வீசினான்‘ என்று சொல்ல ‘தப்பிச்சு ஓடுடா தங்கராஜூ’ என்று நான் பின்னங்கால் பிடரியில் பட ஓட ஆரம்பித்தேன்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    லோகன் (குறுநாவல் – பாகம் 3) – சின்னுசாமி சந்திரசேகரன்

    நேரம் நல்ல நேரம் ❤ (சிறுகதை) – Writer Susri, Chennai