இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என்ன தான் வெளிப்பார்வைக்கு இருவரும் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றினாலும், இருவரின் மனத்தினுள்ளும் சில பல விஷயங்கள் எரிந்து கொண்டு தான் இருந்தன.
அதிலும் தமிழினிக்கு என்னவானது என்று தெரியாமல் யாதவும், அருஞ்சுனையனின் போர் முடிவு என்னவானது என்று புரியாத ஜானவியும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தனர்
ஒருவருக்கான விடை மற்றவரிடம் இருக்கிறது என்று தெரிந்த போதும் கூட, முன்ஜென்மத்தில் நடந்த கசப்பான அனுபவத்தினால், அடுத்தவரின் மன சஞ்சலத்தை தீர்க்க முயலாது, தாங்கள் அனுபவித்த.. .அனுபவிக்கும் வலியை மட்டுமே பெரிதாக நினைத்திருந்தனர்
இதில் இருவர் பக்கமும் நியாயமும் இருக்கிறது தவறும் இருக்கிறது. ஆனால் அதை ஒப்புக் கொள்ளத் தான் இருவருக்கும் மனமில்லை.
இறுதியாக ஆதித்யன் அவர்களின் கடிகாரத்திலிருந்த கோப்புகளையெல்லாம் தனது மடிக்கணினிக்கு மாற்றியவள், அதை வாசிக்க ஆரம்பித்தாள்.
வாசிக்க வாசிக்க, இந்தக் கதையின் ஆரம்பப்புள்ளி அவளுக்குப் புலனாகியது.
ஆம்… ஆதித்யன் இங்கே மலையூரில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு முன்பாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் தமிழகத்தின் வடகிழக்கில் உள்ள ஒரு கிராமம்.
அங்கு ஒரு கோவிலை அகழ்வாய்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு கல்வெட்டும் அது சம்மந்தமான செப்பேடுகளும் அவருக்குக் கிடைத்தது.
அதனை மேலோட்டமாகப் பார்த்தவருக்கு, அதில் ஏதோ பெரிய விஷயம் ஒளிந்திருப்பதாகத் தோன்றவே, அதனை மேலும் ஆராய்ந்தவருக்கு, சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது.
அது.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிம்ம நாட்டில் இருந்து மழவர் நாட்டுக்கு ரணசிங்கன் படையெடுத்துச் சென்ற போரினைப் பற்றிய ஆவணங்கள் அதில் இருந்தது
மழவர் நாடு என்பது, மலையூர் தான் என்பது ஆதித்யனுக்கு ஏற்கனவே தெரிந்து தான் இருந்தது. ஆனால் அது அவ்வளவு புராதனமான இடமாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்கவில்லை. அதனால் அவருக்கு அப்பொழுது மலையூருக்கு வந்து அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கவில்லை
ஆகவே, தான் ஏற்கனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இடத்திலேயே மேலும் பல விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார்.
அந்த விபரங்களில், மழவர் நாட்டின் அரசன் அருஞ்சுனையன் ஒரு வினோதமான ஆயுதம்.. ஆயுதம் என்பதை விடப் பயங்கரமான சேதம் விளைவிக்கும் வெடிபொருளை உருவாக்கும் திரவம் ஒன்றை கண்டறிந்திருப்பதாக குறிப்பு இருந்தது
அந்த ஆயுத பலம் மட்டும் அவன் பெற்றிருந்தால், ஏற்கனவே பேரரசனாக இருக்கும் அவன், இனி எவராலும் எதிர்க்க இயலாத மாபெரும் சக்தியாக மாறிவிடுவான் என்பதை, அருஞ்சுனையனுக்கு எதிராக அவன் அருகிலேயே இருக்கும் ஒருவன் மூலம் அறிந்தான் ரணசிங்கன்
அந்தக் கருப்பு ஆட்டின் உதவியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்தான் ரணசிங்கன். ஏனெனில், சிம்ம நாடு மழவர் நாட்டின் கீழே இருக்கும் ஒரு சிற்றரசு. அதன் அரசனுக்கு மழவர் நாட்டின் கீழே அதற்குக் கப்பம் கட்டிக் கொண்டு அடிமையாக இருப்பது பிடிக்கவில்லை.
அவனை எதிர்த்துப் போரிடலாம் என்றால், அதற்கான படைபலம் அவனுக்கு இல்லை. அதனாலேயே அவன் இப்படி ஒரு குறுக்கு வழியை யோசித்தான் ரணசிங்கன்
அதாவது மழவர் நாட்டில் இருக்கும் அந்தக் கருப்பு ஆட்டிடம், அவன் சிம்ம நாட்டுக்கு உதவி புரிந்தால், மழவர் நாட்டை இரண்டாகப் பிரித்து ஒரு பாகத்திற்கு ரணசிங்கன் அரசனாகவும், மற்றொரு பாகத்திற்கு அடுத்தவன் அரசனாகவும் ஆகிவிடலாம் என வாக்குறுதி அளித்தான்.
மழவர் நாட்டை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த மற்றவனும், மகிழ்வுடன் அந்த சதியில் கை கோர்த்தான்
அதன்படி மழவர் நாட்டின் ஆயுதக் கிடங்கில் அப்பொழுது தான் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த அந்தத் திரவம் அடங்கியிருந்த குடுவையைக் கைப்பற்றி ரணசிங்கனிடம் அந்த இன்னொருவன் அளிப்பதாகவும், அந்த ஆயுதத்தின் ஒரு பகுதி.. அது போல நிறைய ஆயுதங்கள் தயாரிக்கச் சோதனைக்காக எடுத்துக் கொள்வதாகவும்.. மற்றொரு பகுதியைக் கொண்டு மழவர் நாட்டுப் படையின் மீது போர் தொடுத்து அருஞ்சுனையனை அடிமைப்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டது.
அப்படி ராஜதந்திரமாகச் செய்த போரில் அருஞ்சுனையன் தோற்கடிக்கப்பட, அவன் கூட்டத்தில் இருந்த கருப்பு ஆட்டின் துரோகத்தையும் ஒடுக்கி மொத்த மழவர்நாட்டையும் ரணசிங்கன் ஜெயித்தான் என்றும், ஆனால் அடுத்து வந்த சில தினங்களிலேயே மழவர் நாட்டில் வெடித்த மக்கள் புரட்சியில் ரணசிங்கன் இறந்தான் என்றும், அந்தச் செப்புப் பட்டயத்தில் கூறப்பட்டிருந்தது.
ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க, ஜானவிக்கு தன் முன்ஜென்ம நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழத் துவங்கியது.
இன்னும் ஏதேதோ ஆதித்யனின் வாய்ஸ் ரெக்கார்டிங்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்க, அதெல்லாம் அருஞ்சுனையனுக்கு நேர்ந்த கொடுமையின் பாதிப்பில் பின்னால் சென்று விட, அதை அப்படியே விட்டு விட்டு ஓடிச் சென்று யாதவை கட்டிக் கொண்டாள் ஜானவி.
திடீரென்று மனைவி வந்து அணைத்துக் கொள்ளவும், என்ன ஏதென்று புரியாத யாதவ், “ஏய் ஜானு.. என்னாச்சுடா?” என வினவினான்
அதற்குப் பதிலாய் எதுவும் கூறாது, தனது மடிக் கணினியை எடுத்துக் காண்பித்தாள் அவள்.
அதைப் படித்தவனுக்கு முன் ஜென்ம நினைவுகள் கண்முன் வர, அவன் முன்னர்பட்ட ரணம் இன்னமும் வலிப்பது போல் உணர்ந்தான்
அதைக் கண்ணுற்ற ஜானவி, இப்படிப்பட்ட துரோகத்தைத் தன் கணவன் அனுபவித்தானே என வேதனையுற்றாள். ஆனால் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது தான், ஒன்றை கவனித்தான் யாதவ்
அது என்னவென்றால், அந்தக் குறிப்பில் மழவர் நாட்டைச் சேர்ந்த கருப்பு ஆடு ‘ஒருவன்’ என இருந்தது தான். ஆனால் யாதவுக்குத் தான் தெரியுமே, மழவர் நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் இரண்டு துரோகிகளின் வன்மம் தான் என்று.
ஆனால் இந்தக் குறிப்பிலோ ஒரே ஒரு கருப்பு ஆடு என்று தான் இருந்தது. ஆனால் இப்போதைக்கு ஜானவியிடம் எதுவும் கேட்க வேண்டாமென எண்ணிய யாதவ், மடிக்கணினியியில் வேறு ஏதேனும் விவரம் கிடைக்குமா என ஆராய்ந்தான்
அப்பொழுது அதில் அருஞ்சுனையன், ரணசிங்கன் என தனியாகப் புகைப்படத்தொகுப்பு இருக்க, அதைத் திறந்தவன் அதிர்ந்தான்.
ஏனென்றால், அதில் நிஜமாகவே அருஞ்சுனையன் மற்றும் ரணசிங்கனுடைய பழங்கால ஓவியம் வரையப்பட்டு, , அதில் ஆதித்த்யனின் சிறு குறிப்புடன் அது சேமிக்கப்பட்டிருந்தது
அதில் இருந்த அருஞ்சுனையனின் உருவம், இப்போதைய யாதவின் உருவத்திற்கு அப்படியே ராஜ வேடம் போட்டது போல் இருக்க, “அப்ப ஆதி சாருக்கு நான் தான் அருஞ்சுனையன்னு தெரிஞ்சுருக்குமா?” என யோசித்தான்
யாதவ் திரும்பி தன் மனைவியை அழைத்து அதைக் காட்ட முனைய, அதே நேரம் திடீரென கதவைத் திறந்து மூச்சிரைத்தபடி அறைக்குள் வந்தாள் மாதுரி.
வந்தவள் வேகவேகமாக, “ஜானு… இன்னைக்கு உங்க சைட்ல ஏதோ எலும்புக்கூடு கிடைச்சுதுனு கேள்விப்பட்டேன். அது.. அது.. அப்பாவோடது இல்ல தான?” என்றாள் கண்ணில் நீருடன்
பின்னோடு குகன் மற்றும் யாதவின் மற்ற நண்பர்களும் அந்த அறைக்குள் நுழைந்தனர்
திடீரென்று அத்தனை பேரும் அங்குக் குழுமிவிட, இதை எதிர்பார்க்காத யாதவும், ஜானவியும், தங்கள் ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என அஞ்சினர்.
அதனால் அவர்கள் இருவரும் பதிலேதும் பேசாமல், மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பார்வையை விளங்கிக் கொள்ள இயலாமல் மற்றவர்கள் விழித்தனர்
“என்னாச்சு…” என்று சந்தேகத்துடன் கேட்டுக் கொண்டிருக்கையில் மாதுரியின் பார்வை மடிக்கணினியுடன் இணைக்கப்பட்டிருந்த ஆதித்யனின் கடிகாரத்தின் மீது படிந்தது.
அது தன் தந்தையின் கைக்கடிகாரம் என்பதை உணர்ந்த மாதுரி, “இது.. இது அப்பாவோட வாட்ச் தான?” என கேட்டபடி அதனை எடுக்கப் போனாள்
அது கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கக் கண்டு கணினியை பார்த்தவள், மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானாள்.
யாதவிடம் திரும்பியவள், “யாதவ் யாரிது? உன்ன மாதிரியே இருக்கே. ஆனா, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வரைஞ்ச ஓவியம் மாதிரி இருக்கு, அதுவும் ஏதோ ராஜா மாதிரி இருக்கு?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்
அதைக் கேட்ட மற்றவர்களும் அடுத்த கணம் கணினியின் அருகே குழுமினர்.
அந்தப் புகைப்படத்தின் மேல் அருஞ்சுனையன், மழவர் நாடு என்று ஆதித்யனின் கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க, “இது ஆதி சாரோட கையெழுத்து தான? அப்போ அவர் தான் இந்த ஓவியத்தைப் போட்டோ எடுத்து அதை இந்தக் கடிகாரத்துல சேமிச்சு வச்சிருந்தாரா? ஆனா இந்த வாட்ச பார்த்தா சாதாரணப் பழைய கால வாட்ச் மாதிரி தெரியுது. ஆனா இது ஸ்மார்ட் வாட்ச்சா?” என கேள்வி எழுப்பினான் மகிழவன்
அவனைத் தொடர்ந்த விபின், “மழவர் நாடுன்னா… அது நம்ம ஜானுவோட ஊரான மலையூருன்னு கேள்விப்பட்டிருக்கேன். அப்போ அருஞ்சுனையன், மழவர் நாட்டோட அரசனா? ஆனா அவன் எப்படி உன்ன மாதிரியே இருக்கான்?” என்றான்
ஜானவியும் யாதவும் இது எதற்கும் பதில் பேசாது மௌனம் காத்தனர்
“ஹேய்… என்ன’ண்ணா? நாங்க எல்லாரும் கேட்டுட்டுருக்கோம். நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க? தயவுசெஞ்சு நாங்க கேட்கற கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வாட்ச் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது? இந்த அருஞ்சுனையன் எப்படி உங்கள மாதிரி இருக்கான். நம்ம வீட்டுல நடக்கற இத்தனை குழப்பத்துக்கு யார் காரணம்?” என்று உடலெல்லாம் பதறக் கேட்டாள், யாதவின் தங்கை சாதனா
“இங்கப் பாருங்க, நீங்க கேட்கற எல்லாக் கேள்விக்கும் எங்ககிட்ட பதில் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்போ என்னால சொல்ல முடியாது. நான் சொன்னாலும் உங்களால அத நம்ப முடியாது. தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க” என்ற யாதவ், கணினி மற்றும் கடிகாரத்துடன், ஜானவியையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றான்.
அவர்களை தடுத்த குகன், “இங்க பாருங்க யாதவ்… உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாச்சும் பிரச்சனைனா நாங்க யாரும் தலையிட மாட்டோம், அது உங்க பெர்சனல். ஆனா, உங்க ரெண்டு பேரோட உயிருக்கும் ஆபத்துனு தெரிஞ்சப்புறம் எங்களால விலகி நின்னு வேடிக்கை பாக்க முடியாது. ப்ளீஸ் சொல்லுங்க.. இங்க என்ன தான் நடக்குது?” எனக் கேட்டான்
அக்கறையுடன் ஒலித்த குகனின் வார்த்தைகளை மீறி செல்ல இயலாமல் நின்றான் யாதவ்
இப்போதைக்கு விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று எண்ணியவன், “இங்க வேண்டாம், இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்” என்றவன்
மாதுரியிடம் திரும்பி, “மாது, நீ பயப்படற மாதிரி எதுவும் நடக்கல. அந்த எலும்புக்கூடு உன் அப்பாவோடதில்ல. அது… அது…. இன்னொருத்தரோடது” என ஜானவியைப் பார்த்துக் கொண்டே கூறினான் யாதவ்
யாதவின் பதிலில் சமாதானமானவர்கள் விடைபெற்றுச் செல்ல,”நாம உண்மையை சொல்லித் தான் ஆகணும்னு நினைக்கறேன் ஜானு” என்றான். அதைக் கேட்டு மௌனமாய் தலையசைத்தாள் ஜானவி
இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(தொடரும்… வெள்ளி தோறும்)
GIPHY App Key not set. Please check settings