in ,

நந்தகுமாரா (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நள்ளிரவு பன்னிரண்டு மணி. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அஸ்வின் காதருகே யாரோ பேசும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான். கண்களைத் தேய்த்துக் கொண்டு மொபைலில் மணி பார்த்தான்.

‘மணி 12 தான் ஆகுது. ச்சே, யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்துதே, கனவா?’

மனதுக்குள் நினைத்தபடி திரும்பிப் படுத்து மறுபடியும் தூக்கத்தைத் தொடர்ந்தான். சற்று நேரத்தில் மீண்டும் காதருகே யாரோ அழைக்கும் சத்தம்.

“இளவரசே, நந்த குமாரரே, இன்னும் என்ன உறக்கம்? சந்திராபுரி உங்களுக்காகக் காத்திருக்கிறது. விழித்துக் கொள்ளுங்கள்.”

அஸ்வின் மீண்டும் திடுக்கிட்டு விழித்து நன்றாகக் கண்களைத் தேய்த்து அக்கம்பக்கம் பார்த்தான். அருகில் யாரும் இல்லை. இருந்தாலும் இருட்டைப் பார்ப்பதற்கே அவனுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. கைகளால் படுக்கையின் அருகே தடவிப் பார்த்தான். யாரும் இல்லை.

மொபைலில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து அறை முழுவதும் வெளிச்சம் பரவவிட்டு தேடிப் பார்த்தான். அறையில் யாரும் இல்லை என்றவுடன்தான் சற்று நிம்மதியாக மூச்சு வந்தது. மெல்ல எழுந்து அறையின் லைட்டைப் போட்டு, தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

‘என்னடா இது வம்பா இருக்கு. வேலையெல்லாம் முடிச்சுட்டு நைட் நிம்மதியா தூங்கலாம்னா, யாரோ பக்கத்துல வந்து பேசற மாதிரியே இருக்கு. இது கனவா இல்ல, எனக்கு அப்படித் தோணுதா?

யாரோ அரசர் காலத்துல பேசற மாதிரியே பேசினாங்களே. அப்போ கண்டிப்பா கனவாகத்தான் இருக்கும். ஜன்னல், கதவு எல்லாம் சாத்தியிருக்கு. ஏசி ஓட்டிட்டிருக்கு. அப்படியிருக்கும் போது ரூமுக்குள்ள யார் வந்து பேசப் போறாங்க. கனவாத்தான் இருக்கும்.’

தனக்குத் தானே பேசி சமாதானம் செய்து கொண்டு, மீண்டும் தூங்குவதற்குத் தயாரானான். ஆனாலும் இப்போது லைட்டை அணைப்பதற்கு அவனுக்கு தைரியம் வரவில்லை. அப்படியே வெளிச்சத்தில் படுத்துக் கொண்டு, போர்வையை முகம்வரை இழுத்து மூடிக் கொண்டு தூங்குவதற்கு முயற்சி செய்தான்.

அவன் கண்ணை மூடிய சற்று நேரத்தில் எரிந்து கொண்டிருந்த லைட் அணைந்தது. போர்வைக்குள் கண்ணை மூடியிருந்தாலும், லைட் அணைந்த வித்தியாசம் அஸ்வினுக்குத் தெரிந்தது.

‘எப்படி லைட் தானா ஆஃப் ஆகும்?’ யோசித்துக் கொண்டே போர்வையை மெல்ல நகர்த்தி, கண்களால் இருட்டுக்குள் தேடினான். இதயத்துடிப்பு எகிறிக் கொண்டிருந்தது.

இருட்டில் எதிர்புறச் சுவரில், நெடுநெடுவென்று ஒரு குதிரை. அதன்மேல் ஒரு போர் வீரன். மீண்டும் அதே குரல்.

“நந்தகுமாரரே, நீர் ஒரு இளவரசர் என்பதை மறந்து இப்படி உறக்கத்தில் கிடக்கிறீர். உறங்கிக் கொண்டிருந்தால் உம்முடைய நாடு உம் கையை விட்டுப் போய்விடும். உமக்குத் துணையாய் நான் இருக்கிறேன். போர் உடைகளைப் போட்டுக் கொண்டு, உம்முடைய வீர வாளை எடுத்துக் கொண்டு விரைவில் தயாராகுங்கள். ம்ம்ம், தாமதித்தால் ஆபத்து சூழ்ந்து கொள்ளும்.”

அஸ்வினுக்கு, அவன் இதயம் அதன் இடத்தை விட்டு நகர்ந்து தொண்டையில் வந்து அடைத்தது போல் ஒரு இம்சையான உணர்வு. கண்ணை இமைக்காமல் சுவரில் நெடுநெடுவென்றிருந்த உருவத்தையும், குரலையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏசியின் குளுமை அறை முழுவதும் பரவியிருந்தாலும், அஸ்வினுக்கு வியர்த்துக் கொட்டியது. நாக்கு வறண்டு, தொண்டை வரை அந்த வறட்சி பரவி, பின் அடிவயிறு வரை பரவியது போல் ஒரு உணர்வு. வாயைத் திறந்து ஏதாவது பேசலாம் என்பதற்குக்கூட வழியில்லாத அளவுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அஸ்வினைப் பார்த்து மீண்டும் அந்தப் போர்வீரன் எச்சரிக்கை செய்தான்.

“நந்தகுமாரா, நீ இளவரசன் என்பதை மறந்து இப்படி சோம்பேறியாக மாறுவாய் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை. உன்னை நம்பியிருந்தால் நாடு நம் கையை விட்டுப் போய்விடும். பொறுப்பாக இந்த நாட்டை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற அரச கட்டளையை நிறைவேற்றவே உன்னை இதுவரை மதித்துப் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இப்படி சோம்பேறியான உன்னை நம்பி இந்த நாட்டை இழக்க நான் தயாராக இல்லை. ஒழிந்து போ. உன் போன்ற சோம்பேறிகளுக்கு நாட்டில் இடமில்லை.”

பேசிக் கொண்டே அந்தப் போர்வீரன் சட்டென்று வாளை உருவி அஸ்வினை நோக்கிச் சுழற்றினான். பேயறைந்தது போல் உட்கார்ந்திருந்த அஸ்வின், சட்டென்று தலையணையை எடுத்து தனக்கு முன்னால் நீட்டி பிடித்துக் கொண்டான். காற்றைக் கிழித்துக் கொண்டு வாள் வரும் சத்தம் நன்றாகக் கேட்டது.

பயத்தில் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அஸ்வின், அப்படியே மயங்கிப் போனான்.

எவ்வளவு நேரம் அப்படி மயக்கத்தில் இருந்தான், பின்பு எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்த அஸ்வினுக்கு, இரவில் தான் கண்டது கனவா, நனவா என்று இப்போதும் குழப்பமாக இருந்தது.

ஆனாலும் அந்த பயமும், படபடப்பும் மட்டும் அடங்கவே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணி பார்த்தான். காலை 7 மணி.

“இவ்வளவு நேரமா தூங்கியிருக்கேன்? தூங்கினேனா, இல்ல மயக்கத்தில் இருந்தேனா?நைட் நான் பார்த்தது கனவா இல்லை நிஜமா?”

புலம்பிக் கொண்டே சட்டென்று அருகில் இருந்த தலையணையை எடுத்துப் பார்த்தான். அதில் நெடுக ஒரு கோடு போல் கிழிந்திருந்தது. உள்ளே இருந்த பஞ்செல்லாம் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. பயத்தில் தலையணையைத் தூக்கி வீசினான்.

‘அப்போ நைட் நான் பார்த்தது நிஜமா? யார் அந்தப் போர் வீரன்? அவன் எப்படி என் ரூமுக்கு வந்தான்?’

தலையைப் பிடித்து குலுக்கிக் கொண்டவன், சட்டென்று மேஜைமேல் தேடினான். அங்கே இருந்த போர்வீரன் பொம்மையைக் காணவில்லை. தன் அறை முழுவதும் தேடிப் பார்த்தான். எங்குமே கிடைக்கவில்லை.

நேற்றுதான் ஆன்ட்டிக் கேலரியில் இருந்து அவனுக்கு மிகவும் பிடித்திருந்த குதிரை மேல் இருக்கும் போர்வீரன் பொம்மையை வாங்கி வந்திருந்தான். இப்போது தான் அது அவனுக்கு ஞாபகம் வந்தது.

‘நேத்து கடைல இருந்து வாங்கிட்டு வந்த அந்த பொம்மை தான் நைட் என்கிட்ட பேசிச்சு. பொம்மை எப்படிப் பேசும்? ஏதோ நந்தகுமாரா சந்திராபுரின்னு அந்தப் போர்வீரன் சொன்னானே. அப்போ அந்த பொம்மைக்கு ஏதோ வரலாற்று பின்னணியோட சம்பந்தம் இருக்கா.’

எதையும் தீர்மானமாக முடிவெடுக்க முடியாமல் பயத்திலும், குழப்பத்திலும் திணறினான். திடீரென ஏதோ முடிவு செய்தவனாக, வேகமாக எழுந்து குளித்து, தயாரானான்.

ஆஃபீசுக்குப் போவதற்கு முன் நேராக நேற்று போர்வீரன் பொம்மையை வாங்கிய ஆன்ட்டிக் கேலரிக்குப் போனான். அது பழங்காலப் பொருள்களை வைத்திருக்கும் ஒரு கடை. எல்லாம் புராதனமான பொருள்கள். அங்கே இருக்கும் எல்லா பொருட்களும் விற்பனைக்கல்ல. ஒருசில பொருட்களை மட்டுமே அலங்காரத்திற்காக, ஷோகேஸில் வைப்பதற்காக விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

அப்படி இருந்தவற்றில், நேற்று தேடி எடுத்து அந்தப் போர்வீரன் பொம்மையை வாங்கி வந்திருந்தான். அது ஒரே ஒரு பொம்மைதான் நேற்று கடையில் இருந்தது. இப்போது அந்த பொம்மை வீட்டில் இல்லை. கடையில் இருக்கிறதா எனப் பார்த்து விடும் ஆர்வம் அஸ்வினுக்கு.

அஸ்வின் கடைக்குள் நுழைந்து, நேற்று அந்த போர்வீரன் பொம்மை இருந்த அதே இடத்தை, சற்று தள்ளி நின்று பார்த்தான். அதே போர்வீரன் பொம்மை இப்போது அங்கே இருந்தது.

தூக்கி வாரிப் போட்டது அஸ்வினுக்கு.

‘நேத்து 1500 ரூபாய் கொடுத்து இந்த பொம்மையை நான் வாங்கிட்டுப் போனேன். அந்த பொம்மை எப்படி மறுபடியும் இங்கே வரும்? இதை கடைக்காரர்கிட்ட சொல்லி பணத்தைத் திரும்ப வாங்கவும் முடியாது. என்ன செய்யறது?’

அஸ்வின் தனக்குள்ளாகவே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அந்த போர்வீரன் பொம்மை மெதுவாக ஆடியது. குதிரை குளம்படிச் சத்தம் அஸ்வினின் காதுகளுக்குக் கேட்டதும், ஓரமாக ஒதுங்கி நின்று அந்த பொம்மையைப் பார்த்தான்.

“நந்தகுமாரா, நீ இன்னும் உயிரோடு தான் இருக்கிறாயா? நேற்று போருக்கு நீ வரவில்லை. நான் தனியாகப் போரிட்டு, எதிரியை வீழ்த்தி, நாட்டை பத்திரமாக மீட்டு விட்டேன். இப்போது நாட்டை உரிமை கொண்டாட வந்திருக்கிறாயா? போருக்கு உதவாதவன் நாட்டுக்கு மட்டும் எதற்கு? இனி நீ இளவரசனும் இல்லை, இந்த நாடு உனக்கும் இல்லை. நான்தான் அரசன். இன்று இரவு உன்னை கவனித்துக் கொள்கிறேன்,” என்று கொஞ்சம் தணிந்த குரலில் பேசியது.

அது பேசியது வேறு யாருக்கும் கேட்டது போல் தெரியவில்லை. கடைக்குள் இருந்த ஒரு சிலர் இதை எதையுமே கண்டுகொள்ளாதது போல், அவரவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்ப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

‘அப்படின்னா இந்தப் போர்வீரன் பேசறது எனக்கு மட்டும்தான் கேக்குதா? மறுபடியும் நைட் வீட்டுக்கு வந்துருமா? இது என்னடா இது தொல்லையாப் போச்சு. அழகா இருக்கேன்னு ஒரு பொம்மையை வாங்கி வீட்ல வச்சா, அது இவ்வளவு பெரிய ஆபத்தில் முடியுமா?

நான்தான் அந்த இளவரசன்னு அந்த பொம்மை நினைச்சுட்டு இருக்கு. அதை இல்லைன்னு சொல்லிட்டா அது என்னைத் தேடி வராதில்ல.’

திடீரென்று தோன்றிய இந்த சிந்தனையால், மொபைலை எடுத்து காதில் வைத்துக் கொண்டு அந்த பொம்மையின் அருகே போனான்.

“நான் நந்தகுமார் இல்லை. என் பேர் அஸ்வின். நீங்கள் நினைக்கும் நந்தகுமார் நான் இல்லை. என் பெயர் அஸ்வின். எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை. உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன். நீங்களும் என்னைத் தேடி வராதீர்கள்,” என்று ஃபோனில் யாருடனோ பேசுவது போல் பேசினான். ஆனாலும் இவன் பேசுவது அங்கிருக்கும் மற்றவர்களுக்குக் கேட்கும் அல்லவா? அதுவும் இப்படி அரசர் காலத்தில் பேசுவது போல் பேசியதால், அஸ்வினை கேலியாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

ஆனால் அதையெல்லாம் யோசித்து, கவலைப்படும் நிலையில் அஸ்வின் இல்லை. எப்படியாவது தப்பித்தால் போதும் என்பதற்காகத்தான் இந்த சிறு முயற்சி. ஃபோனை வைக்கும் முன் மீண்டும்,

“என் பெயர் நந்த குமார் இல்லை. என்னுடைய பெயர் அஸ்வின்,” என்று அந்த போர்வீரன் பேசுவது போலவே பேசினான்.

“அப்படியா? உனக்கு நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லையா? பிழைத்துப் போ. மீண்டும் என் கண்ணில் பட்டால் உன் உயிர் தப்பாது. நினைவில் வைத்துக் கொள்.”

“நாடும் வேண்டாம், அரச பதவியும் வேண்டாம். நான் சந்நியாசம் எடுத்துக் கொள்ளப் போகிறேன்.”

சொல்லி விட்டு, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து நேராக வீட்டிற்குத் திரும்பினான். திக் திக் நிமிடங்களின் படபடப்பில் இருந்து மீளாமல் எப்படி ஆஃபீஸ் போவது?

வீட்டிற்கு வந்து அறைக்குள் பயத்துடன் முடங்கிக் கொண்டான்.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆணாதிக்கமா பெண்ணடிமையா? (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

    பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி