in

நாயம் (சிறுகதை) – ✍ ரகுநாத் சத்யா

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சிட்டி பஸ்ஸிலிருந்து இறங்கியபோது சரியாக மணி ஏழரை. அலுவலக சீனியர் ஒருவரது மகனது திருமண ரிசப்ஷன். சந்தித்து நீண்ட நாட்களாகி விட்ட வெளியூர் நண்பர்கள் எல்லாம் வருவதாகச் சொல்லி இருந்தார்கள்.

ஏழு மணிக்கு எல்லோரும் சந்தித்து ஒன்றாக மேடையேறி போட்டோ எடுத்துக் கொள்வதாக திட்டம். ஏழு மணிக்கே வந்திருக்க வேண்டும். பஸ் நம்பரில் ஏற்பட்ட குழப்பத்தில் இரண்டு பஸ் தவற விட்டதால் அரை மணி நேரம் லேட் ஆகி விட்டது. 

போன் அடித்தது. “ஹரி, எங்கடா இருக்க.. எல்லாரும் வந்தாச்சு. உனக்குதான் வெயிட் பண்றோம்.”

“பஸ் ஸ்டாப்புல இருக்கேண்டா. இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்””

மேப்பை பார்த்தான், ரிசப்ஷன் நடக்கும் ஹோட்டலுக்கு  பஸ் வந்த வழியிலேயே எட்டு நிமிட நடை காட்டியது. பேசாமல் ஆட்டோவில் போய் விடலாமா. ஆட்டோக்காரர் நூற்று இருபது ரூபாய் கேட்டார்.

“அம்மாடியோவ். எட்டு நிமிடம் நடக்குற தூரத்துக்கு இவ்ளோ ரூபாயா. பேசாமல் நடந்துடலாம்”

நடக்க ஆரம்பித்தான். பத்து நிமிடத்துக்கு மேல் நடந்தும் ரோட்டின் இடது பக்கத்துக்கு க்ராஸ் செய்வதற்கான வழியினையே காணோம். நெடுக நடுவே மூன்றடி உயரத்துக்கு ஒற்றைக்கல் தடுப்புச் சுவர். எதிரில் வந்த ஒருவரைப் பிடித்து  நிறுத்தினான்.

“ரோட்டை க்ராஸ் செய்ய வழி எங்கே இருக்கு””

“அப்படிலாம் எதுவும் வழி இல்லை.  தாண்டித்தான் குதிக்கணும்””

“டூவீலரெல்லாம் எப்படித் திரும்பும்?””

“பஸ் ஸ்டாப் தாண்டி ரெண்டு நிமிஷம் நடந்தால் க்ராஸ் பண்ணலாம்””

“பஸ் ஸ்டாப் எங்கே இருக்கு?””

“அதோ அந்தாண்ட இருக்கு”” கையை நீளமாக நீட்டி அவன் இறங்கிய இடத்தைக் காட்டினார்.

முடிந்தது கதை. மணி ஏழே முக்கால். இன்னும் திரும்ப பத்து நிமிடம் நடந்து.. அதற்கு எதிர் திசையில் பத்து நிமிடம் நடந்து…. கடவுளே. பேசாமல் ஆட்டோவில் போய் விடலாம். அங்கே நூற்றிருபது  என்றால் இங்கு நூற்றைம்பது கேட்பார்கள். வேறு வழியில்லை.

பக்கத்தில் ஒரு ஆட்டோவையும் காணோம். போக்கு ஆட்டோக்களைக் கை காட்டினான். எல்லாம் பயணிகளுடன் இருந்தன.

“என்னா ஆட்டோ தேடுறியா. இங்க எதுவும் கெடைக்காது. பஸ் ஸ்டாப்புக்குதான் போகணும்”” அவரே மீண்டும் வலிய வந்து  சொன்னார்.

ஆனது ஆகட்டும். கொஞ்சம் வேகமாக நடந்தால் எட்டு பத்துக்கெல்லாம் போய் விடலாம். எல்லாரும் கிளம்பும் நேரமாக இருக்கும். ஒரு ஹலோவாவது சொல்லலாம். வந்த வழியில் திரும்ப வேர்க்க விறுவிறுக்க நடக்க ஆரம்பித்தான்.

பஸ் ஸ்டாப்பைக் கடந்து ரோட்டை க்ராஸ் செய்து மண்டபம் செல்லும் வழியில் திரும்பியதும், முன்னெச்சரிக்கையாக கூகுள் மேப்பை ஆன் செய்து வைத்துக் கொண்டான். 900 மீட்டர் தாண்டி இடப் பக்கத்தில் என்று காட்டியது..

‘900 மீட்டரா.. அங்கேயே உட்கார்ந்து விடலாம் போல’ அசதியாக இருந்தது.  இங்கேயும் ஆட்டோ எதுவும் இல்லை. 

ஒரு வழியாக நடந்து நடந்து அந்த இடப்பக்க சாலையினை அடைந்தான். சாலையினைப் பார்த்தால் ஒரு திருமண ரிசப்ஷன் நடக்கும் பெரிய ஹோட்டல் இருப்பதைப் போலவோ, நிறைய வாகனங்கள் வந்து போகும் சாலையினைப் போலவோ தெரியவில்லை.

ஆனால் மேப்போ அப்படித்தான் போக வேண்டும் என்று சத்தியம் செய்தது. வேறு வழியில்லாமல் அதன் பேச்சைக் கேட்டு திரும்பினான். சாலை அங்கங்கு அழுது வடியும் தெருவிளக்குகளுடன், கொஞ்சம் இருளோ என்றுதான் இருந்தது. அங்கங்கே  பள்ளங்களில் மழை நீர் தேக்கம்.

கூகுள் சொன்ன வழியில் வலது இடது, வலது இடது என்று மூன்று முறைகள் திரும்பினான், ஒரு வழியாகக் கொஞ்சம் தூரத்தில் உயரமான மரங்களில் அலங்கார விளக்குகள் தெரிந்தன. ஆர்க்கெஸ்ட்ரா சத்தமும்  கேட்டது. அப்பாடி வந்தாச்சு என்று நிம்மதி அடைந்தான்.

ஆனால் பக்கத்தில் ஹோட்டல் வாசல் அடையாளமே தெரியவில்லை. கொஞ்சம் முன்னே போனதும் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. கட்டடத்தின் முன் கம்பி, மணல் ஜல்லி எல்லாம் சாலையை அடைத்துக் கொண்டு குவிந்திருந்தது. 

அதைத் தாண்டி செல்வதற்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு மூன்று பேர் நின்றிருந்தனர்.  இவன் பக்கத்தில் போனதும், “எங்கே போகணும்?”” என்றனர்.

“அந்த ஹோட்டலுக்குப் போகணும்.”

“அதுக்கு இப்படி போக முடியாது. இது ஹோட்டலோட பின் பக்கம் காம்பவுண்டு. இந்தப் பக்கம் கேட்லாம் கிடையாது. இதைத் தாண்டி போறதுக்கு ரோடும் கிடையாது. மெயின் ரோட்டுக்குப் போய்தான் லெப்ட்ல திரும்பிப் போகணும்”

தூக்கி வாரிப் போட்டது. திரும்ப மெயின் ரோட்டுக்குப் போகணுமா,  கிட்டத்தட்ட இன்னும் ஒரு கிலோ மீட்டராவது நடக்கணும் போலருக்கே. மேப்பைப் பார்த்தான். வேலை முடிந்த திருப்தியுடன் Destination  arrived  என்று இளித்துக் கொண்டிருந்தது.

இந்நேரம் நண்பர்கள் கிளம்பக் கூட செய்திருப்பார்கள். எவனாவது அழைத்திருந்தால் சொல்லியிருக்கலாம். யாரும் கூப்பிடவில்லை. நாமே சொல்லி விடலாம்.  இரண்டு மூன்று நம்பருக்கு அழைத்துப் பார்த்தான். ஆர்கெஸ்டரா சப்தத்தில் யாருக்கும் காதில் விழுந்திருக்காது போல. ஒருவரும் எடுக்கவில்லை. எப்படியும் நமக்காகக் காத்திருப்பார்கள்.

வேறு வழியின்றி திரும்பி நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் சென்று முதல் திருப்பத்தில் வலதுபக்கம் திரும்பியபோது பக்கத்து ரோட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். ஜீன்ஸ் பேண்டும் முழங்கைக்கு கீழ் மடித்து விட்டிருந்த முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள்.

சாதாரண நேரமாக இருந்திருந்தால், நின்று அல்லது மெதுவாக நடந்து அவளின் எல்லா அழகையும் ரசித்திருப்பான். இப்போது மூட் இல்லை. மிகவும் வேர்த்து வழிந்து கொண்டிருந்ததால் கர்சீஃப் எடுத்து முகத்தை அழுந்தது துடைத்துக் கொண்டு அவளைத் தாண்டி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவனைத் தாண்டி வேகமாகத் தாவி, பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே திரும்பி அவன் மேல் பாய்ந்தது. சப்த நாடியும் ஒடுங்கி வெலவெலத்துப் போனான். 

“ச்ச்சூ ச்ச்சூ, போ போ” என்று விரட்டினான்.

அந்த நாய் நீட்டிய அவன் கையைக் குதறி விடுவது போல பற்களைக் காட்டி சீறிக் கொண்டு உறுமியது. அவன் இரண்டு தோள்களின் மீதும் கால்களை வைத்துக் கொண்டு முகத்துக்குப் பக்கத்தில் முகம் வைத்துப் பார்த்தது. அந்தப் பெண் நாயை என்னவோ பெயர் சொல்லிக் கூப்பிட்டாள். நாய் அவனை விட்டு விட்டு வேகமாக அவளிடம் போய் வாலாட்டியது.

“ஏங்க மேடம், நாயை இப்படியா ஃப்ரீயா விடுவீங்க. தெருவுல போறவங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா, கடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்”  அவளிடம் சத்தம் போட்டான்.

அவள் ஏதோ சொன்னாள். சரியாக காதில் விழவில்லை. அதற்குள் அந்த நாய் திரும்பிப் பார்த்துக் குரைத்துக் கொண்டே மீண்டும் இவன் மீது பாய்ந்து உறுமியது. அவள் திரும்ப ஏதோ பெயர் சொல்லிக் கூப்பிட்டாள். நாய் இவனை விட்டு இறங்கி கொஞ்சம் முன்னே சென்றது.

“இதெல்லாம் மனித உரிமைகளுக்கு எதிரான செயல் மேடம். உங்க ஏரியான்னா என்ன வேணா செய்வீங்களா. இப்ப நான் போறதா, வேணாமா”

“சார், நான் சொன்னது உங்களுக்குக் காதில் விழவில்லையா. அது எங்க நாயில்லை, ஸ்ட்ரீட் டாக். நான் அதைக் கன்ட்ரோல் பண்ண முடியாது””

நாய் இவனைத் திரும்பிப் பார்த்து உறுமியது. வாயை மூடிக் கொண்டான். அவள் பொய் சொல்வது போல் தெரிந்தது.  நாயைப் பார்த்தால் தெரு நாய் போல இல்லை. கழுத்தில் நல்ல தரமான பட்டை தெரிந்தது. மூன்றடிக்கு மேல் நீளமும் நல்ல உயரமும் இருந்தது.  

அவனுக்கு அதன் ஜாதியெல்லாம் தெரியவில்லை. ஏதோ குட்டியாக புசு புசு என்று முடியுடனும் கோலிக் குண்டு ஒட்டி வைத்தது போல் கண்களும் இருக்கும் நாய் பொமரேனியன் என்று  கேள்விப் பட்டிருக்கிறான்.

மற்றபடி அவனுக்கு நாய் என்றால் பொதுவாக நாய்தான். இந்த நாய் நிச்சயம் மிக உயர்ந்த ஜாதி நாய் போல தெரிந்தது. நிச்சயம் வீட்டு நாய்தான். ஆனால் எதுவும் பேச முடியாது. சத்தம் கேட்டால் வந்து குதறி எடுத்து விடும். நாயிலும் கூட ஆதிக்க வர்க்கத்திற்குக் கோபமும் வெறியும் அதிகம் போல. பயந்து கொண்டே அடுத்த அடி எடுத்து வைத்தான்.

“இடது புறம் சாலையில் திரும்பவும்”. திடீரென்று கூகுள் பெண் அலறினாள். போனின் மீது தவறுதலாக கை அழுத்தி மேப் திரும்ப உயிர் பெற்றிருக்கும் போல. முன்னே சென்று கொண்டிருந்த நாய் சத்தம் கேட்டு திரும்பி வேகமாக இவன் மீது பாய்ந்தது. குரல் கூட எழும்ப முடியாமல் மலைத்து நின்றான்.

அந்தப் பெண்மணி ஸ்டைலாகத் திரும்பி, “பைரவ், கம் ஹியர்” என்றாள். நாய் இறங்கி அவளிடம் சென்று வாலாட்டியது. திரும்ப இவனிடம் வந்து குரைத்தது.

“பைரவ், அங்கிள் பாவமில்லையா, போடா கண்ணா, போ””

இவனும் பெயர் சொல்லி அழைத்து நாயை சமாதானப் படுத்தினான். நாய் இவனை விட்டு வேகமாக எதிர்ப் பக்கம் போய் தரையில் முகர்ந்து பார்த்தது.

அவனுக்குக் கண்கள் இருட்டுவது போல் இருந்தது. எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம். மெயின் ரோடு வர இன்னும் எவ்வளவு தூரம் இந்த நாயிடம் இருந்து எப்படி தப்பிக்கப் போகிறோம். எதுவுமே தெரியவில்லை. இங்கிருந்து இன்று வெளியே போக முடியுமா என்பதே கேள்விக் குறியாக இருந்தது.

இப்படியே நாய் பத்தடிக்கு ஒருமுறை  முன்னால் செல்வதும், திடீரென்று திரும்பி அவன் மேல் பாய்ந்து மிரட்டுவதுமாகவும் இருந்தது. குரைப்பு சத்தம் குறைந்து விட்டது. உறுமல் மட்டும் அப்படியே இருந்தது.

இப்போது அவன் யோக நிலைக்கு வந்து விட்டான். பயம், அலறல் எல்லாம் போய் விட்டது. ஒவ்வொரு முறை பாயும்போதும் அவனும் பைரவ், பைரவ் என்று கொஞ்சுவதும் கெஞ்சுவதுமாக இருந்தான்.  நடுநடுவே ஓம் நமோ பைரவா போற்றி என்று எப்போதோ கேள்விப்பட்ட மந்திரத்தைச் சொல்லிக் கொண்டான். 

அந்தப் பெண் தனக்கு இதில் எதுவும் சம்பந்தமில்லை என்பது போல் மிகவும் இயல்பாக நடந்து கொண்டிருந்தாள். மெயின் ரோடு செல்வதற்கான தெரு வந்தது போலிருந்தது.

திடீரென்று எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதற்குக் காரணம் இவன்தான் என்பது போல  பைரவ் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே வெறி பிடித்ததுபோல் இவன் மேல் வேகமாகப்  பாய்ந்தது.

விரக்தி நிலை விலகிப் போய் திடீர்ப் பதட்டத்தில் அலறிக் கொண்டே பின்னால் சாய்ந்து, விழுந்து விடாமலிருக்க அங்கிருந்த காம்பவுண்ட் கேட்டின் மேல் கையை வைத்தான். இதற்காகவே காத்திருந்தது போல் அந்த வீட்டின் உள்ளிருந்து  ஒரு நாய் ஆக்ரோஷத்துடன் குரைத்துக் கொண்டே கேட்டை நோக்கி சீறி வந்தது.

ஒரு மைக்ரோசெகண்ட் தாமதித்திருந்தாலும் இவன் கையைப் பிடித்துக் குதறியிருக்கும். எப்படி எடுத்தான் என்று தெரியவில்லை. சரிந்து கொஞ்சம் தள்ளிச் சென்று, கீழே விழும் நிலைக்குச் சென்று சமாளித்து நின்று கொண்டான்.

அந்த நாயைப் பார்த்ததும் பைரவின் கவனம் திசை திரும்பியது. இவனை விட்டுவிட்டு அந்த வீட்டு நாயிடம் கொஞ்சுவது போல் வாலை ஆட்டிக்கொண்டு கேட்டை முகர்ந்து கொண்டிருந்தது.

அந்த அம்மாள் இதனைக் கவனிக்கவில்லை போல. அவள் பாட்டுக்குக் கொஞ்ச தூரம் நடந்து விட்டாள். இவனும் பயத்துடன் தயங்கித் தயங்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்தான். முன் பக்கம் கடித்தால், கையினை வைத்துத் தடுத்துக் கொள்ளவாவது முடியும். பின்பக்கம் வாய் வைத்தால் அவ்வளவுதான்.

நடக்க நடக்க ஒரு வெறி வந்தது. ‘நெடும்புனலுள் வெல்லும் முதலை’ திருக்குறள் ஞாபகம் வந்தது. மெல்ல மெல்ல பேண்ட் பெல்ட்டை வெளியில் தெரியாமல் உருவி, கையில் சுற்றி வைத்துக் கொண்டான்.  நல்ல தடிமனான தோல் பெல்ட். பக்கிள்சும் நல்ல கனம்தான். 

திரும்பிப் பார்த்தான். திடீரென்று இவன் நினைவு வந்ததாலோ, நடுவில் தடுப்பை வைத்துக் கொண்டு கொஞ்சுவது பிடிக்காததாலோ, பைரவ் திரும்பி வேகமாகத் தாவி உறுமிக் கொண்டே வந்தது.

தயாராக நின்று கொண்டு அது மூன்றடி பக்கத்தில் வரும்போதே பெல்ட்டைச் சுழற்றி பக்கிள்ஸ் அதன் முகத்தில் படுவது போல் அத்தனை நேர வெறியினையும் சேர்த்து  வேகமாக வீசினான்.

மிகவும் நெருக்கத்தில் இருந்ததால் குறி கொஞ்சம் தவறி முகத்தில் படாமல் முதுகின் மேல் வேகமாகப் பட்டது. எதிர்பாராமல் திடீரென விழுந்த அடியில் அதிர்ந்து போன அந்த மாண்புமிகு பைரவர், அத்தனை நேரம் உயர்ந்த ஜாதிக்கான திமிரில் கம்பீரமாக உறுமிய வாள் வாள் கனத்த குரல் போய்,  ஒரு நோய் வாய்ப்பட்ட தெருநாயின் வீல் வீல் என்ற பரிதாபமான குரலில் கண்டபடி ஊளையிட்டுக் கொண்டே தெருவின் உடபுறம் வேகமாக ஓடி மறைந்தது.

“என்ன சார், கொஞ்சம் கூட மனுஷத்தனம் இல்லாம இப்படிப் பண்ணியிருக்கீங்க. அது வாயில்லா ஜீவன் இல்லையா”

இப்படி நடக்கும் என்று சிறிதும் நினைத்திராத அந்தப் பெண்மணி தன்னுடைய மெல்லிய நாகரிகமான குரலை மறந்து கத்த ஆரம்பித்தாள்.

“என்னம்மா விளையாடுறீங்களா, வாயில்லா ஜீவனா. இத்தனை நேரம் அது பண்ணின நாய்த்தனத்தைப் பார்த்துக்கிட்டு தானே வந்தீங்க. திடீர்னு மனுஷத்தனத்தைப் பத்தி பேசுறீங்க””

“அது உங்களை பயமுறுத்ததானே செஞ்சது கடிச்சுதா.  போலீஸ்லயோ, பீட்டாலயோ கம்பளைண்ட் குடுத்தா என்ன நடக்கும் தெரியுமில்ல.. தைரியமிருந்தா உள்ளேயே அடிச்சிருக்க வேண்டியது தானே””

“கூப்பிடும்மா, இப்பவே கூப்பிடு. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். பயமுறுத்திச்சாம்ல., ஏன், இந்த ஏரியா முழுக்க உனக்கும் அந்த நாய்க்கும்தான் சொந்தமா, உனக்கோ அந்த நாய்க்கோ தைரியமிருந்தா இங்க ரோட்டுல வந்து யாரையாவது பயமுறுத்த வேண்டியதுதானே””

இவனும், அத்தனை நேர ஆத்திரத்தை சேர்த்துவைத்து உளறலாகக் கத்தினான்.

“இன்னா பிரச்சினை இங்க. ஒரே சத்தமா இருக்கு”” கடையை ஏறக்கட்டிக் கொண்டிருந்த சைக்கிள் கடைக்காரர் பக்கத்தில் வந்தார்.  நடந்ததைச் சொன்னான்.

“அதானே, நல்லாருக்குதே கத. நாய்க்கொரு நாயம். மனுஷனுக்கொண்ணா. என்னம்மா அக்கிரமமா இருக்கு” 

‘இதற்கு மேல் நின்றால் வம்பாகிவிடும்’ என்பது போல் அந்தப் பெண் வேக வேகமாக உள்ளே நடக்கலானாள். 

ரிஸப்ஷனுக்குப் போகும் எண்ணத்தை எப்போதோ கைவிட்டிருந்த அவன் அந்த சைக்கிள் கடைக்காரரைப் பார்த்து கேட்டான்.

“அண்ணா, பஸ் ஸ்டாப்புக்கு எப்படிப் போகணும்?”

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குரங்கு புத்தி (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்

    நாயம் (சிறுகதை) – ✍ ரகுநாத் சத்யா